புதன், 9 ஜனவரி, 2013

தருமம் தலைகாக்கும்/71/ 13.1.2012

தருமம் தலைகாக்கும்/71/ 13.1.2012 ‘தருமம் தலைகாக்கும்’ பழமொழி நம் முன்னோர்கள் செய்த தரும காரியங்களின் பயனாக பிறந்திருத்தல் வேண்டும். நம் முன்னோர்கள், தருமத்தின் உண்மையைத் தெரிந்து அதைக் கடைப்பிடித்து வாழ்ந்ததால், அவர்கள் சொல்லி வைத்த வார்த்தை இன்றும் அழியாமல் இருக்கிறது. தருமத்தை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் செயல்களும்,ஈட்டப்படும் பொருள்களும், பேசப்படும் பேச்சுகளும் என்றும் அழியாது. தருமமுள்ள இடத்தில் எல்லா நலங்களும் இருக்கும். தருமவழி நிற்போர் இறைவன் வழி நிற்போராவர். தருமவழி கடைப்பிடிப்போர், எந் நிலையில் இருப்பினும், எத்துன்பத்துக்காளாயினும், எவ்வகைச் சிறுமை அவரைத் தொடரினும், அவருக்கு ஆபத்து விளையாது. இவ்வுண்மையை அறிந்தே ’தருமம் தலைகாக்கும்’ என்று சொல்கிறார்கள். தருமம் யாவரையுமே காக்கும். எப்போது எனில், தருமத்தை நீ காக்கவேண்டும். அப்போது தருமம் உன்னை காக்கும். தருமம் கடைபிடிப்பதனால் மேலே சொன்ன பலன்களைவிட, இன்னொரு முக்கியமான நன்மையும் இருக்கிறது. அதற்கு ஒருசிறிய விளக்கம்: ஒரு நாட்டின் நாணயம் மற்ற நாட்டில் செல்லாது. ஒரு நாட்டில் உள்ளவர் அடுத்த நாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தால், அவரிடம் உள்ள நாணயம் அனைத்தையும் எடுத்துச் செல்ல இயலாது. இந்த சூழ்நிலையில், அவருக்குத் தெரிந்த பக்கத்து நாட்டுக்காரர் இவருடைய பணத்தை வாங்கிக்கொண்டு அந்த நாட்டில் செல்லுபடியாகும் நாணயத்தைக் கொடுத்தால் எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும்? அது போல, நாம் இந்த பூமியில் கொண்டுள்ள பணமும் சொத்தும் மேல் உலகத்தில் செல்லுபடி ஆகாது. அங்கு எது செல்லுபடியாகும் என்றால், இங்கு நாம் செய்யும் நற்காரியமும் தர்மங்களும்தான்! எப்படி மற்ற நாட்டு மனிதனின் உதவி அவருக்கு தேவைப்பட்டதோ, அதே போல் மேல் உலகமான சொர்க்கத்தை அடைவதற்கு கடவுளின் அருள் தேவைப்படுகிறது. அதற்காக நாம் கடவுளை வழிபட வேண்டும். கடவுள் தான் இந்த உலகத்து ஜீவராசிகளின் சிருஷ்டிக்கு காரணகர்த்தா. அதுமட்டுமல்ல; நல்லதோ கெட்டதோ நாம் செய்யும் செயலுக்காக அது அளிக்கும் பலன்களுக்கும் அவர்தான் காரணம். ஆகையால் அவரை வழிபடுவதுதான் ஒருவழி. கடவுளை நாளும் வழிபட்டு, வாழ்க்கையில் தினமும் தர்மப்படி வாழ்ந்து, தானம், தர்மம் செய்து வாழ்ந்து வந்தால், நம் செய்தவற்றை புண்ணியமாக நம் கணக்கில் வரவு வைத்து, சொர்க்கத்தில் அதை செலவு செய்ய கடவுள் மகிழ்ச்சியோடு உதவுவார். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை செய்ய வேண்டும் என்பதை ‘நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.’ என்றும், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும். ‘அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை’ என்கிறார் வள்ளுவர். - தேவராஜன். *********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக