வியாழன், 9 மே, 2013

15 வகை திதிகள்/ 91/


15 வகை திதிகள்/ 91/ 2.6.2013/ இன்றைய தலைமுறை தமிழ் வருடப்பிறப்பு நாளில் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் கொண்டிருப்பதில்லை. அவர்களுக்கு பஞ்சாங்கத்தில் திதி பார்க்கத் தெரிவதில்லை. திதி எத்தனை, அவைகளை எப்படி தெரிந்து கொள்வது என்பதை தெரிந்து கொள்வதும் பக்தியின் ஓர் வகைதான்! திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள துõரம். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன், சூரியனிடம் இருந்து விலகி செல்வார். ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும். திதியை பவுர்ணமி அல்லது அமாவாசை நாளில் இருந்து கணக்கிடலாம். பிரதமை: அமாவாசை நாளிற்கு அடுத்த நாள் (திதி). பிரதம எனும் சொல் முதலாவது எனப் பொருள்படும். துவிதியை: ‘துவி’ என்றால், இரண்டு. இது அமாவாசை நாளிலிருந்து இரண்டாவது நாள் (திதி). திரிதியை: என்றால், மூன்று. அமாவாசை நாளிலிருந்து மூன்றாவது நாள் (திதி). சதுர்த்திதி: சதுர் என்றால் நான்கு. கடவுளின் நான்கு கரங்களை, சதுர்புஜம் என்பர். அமாவாசை நாளிலிருந்து நான்காவது நாள் (திதி). இது விநாயகருக்குரிய சிறப்பு நாளாகும். பஞ்சமி: பாஞ்ச் என்றால், ஐந்து. அமாவாசை நாளிலிருந்து ஐந்தாவது நாள் (திதி). சஷ்டி: சஷ்டி என்றால், ஆறு. முருகனுக்குரிய திதி. இதனால் தான் அவருக்கு ஆறு முகம்இருக்கிறது.அமாவாசை நாளிலிருந்து ஆறாவது நாள் (திதி). சப்தமி: சப்தம் என்றால், ஏழு. அமாவாசை நாளிலிருந்து ஏழாவது நாள் (திதி). அஷ்டமி: அஷ்ட என்றால், எட்டு. அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து எட்டாவது நாள் (திதி). திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி நாளில் அவதரித்ததால் இந்நாள் ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நவமி: ஒன்பதாம் திதி. அமாவாசை நாளிலிருந்து ஒன்பதாவது நாள் (திதி). ராமபிரான் நவமி திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் ராம நவமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தசமி: தசம் என்றால், பத்து. ராவணனை, தசமுகன் என்பர். அம்மாவாசை நாளில் இருந்து 10 வது நாள் திதி. ஏகாதசி: ஏகம் – தசம் என பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்பது, பத்து. இரண்டையும் கூட்டினால், 11. இது, 11ம் திதி. அமாவாசையிலிருந்து மற்றும் பவுர்ணமியிலிருந்து 11வது நாளாகும். மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது நல்லது. துவாதசி:அமாவாசை நாளிலிருந்து 12வது நாள் (திதி). திரயோதசி:அமாவாசை நாளிலிருந்து 13வது நாள் (திதி). சதுர்த்தசி: அமாவாசை நாளிலிருந்து 14வது நாள் (திதி). பூர்ணமான அமாவாசை அல்லது பவுர்ணமி ஆகியவை, 15ம் திதி. - தேவராஜன். *******************************

புதன், 8 மே, 2013

அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை/89/ 19.5.13/


அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை/89/ 19.5.13/ ஒரு பக்தனின் உண்மையான, உள்ளன்பான, முழுநம்பிக்கையான பக்திக்கு இறைவன் நிச்சயமாக அருள்பாலிக்கிறார். பிரகலாதனின் முழுநம்பிக்கையான பக்திக்கு மகா விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து காட்சியளித்தார். இதே போல, இன்னொருவருக்கும் அவர் நரசிம்மர் அவதார காட்சிகொடுத்துள்ளார். அந்தக் கதையைத் தெரிந்துகொள்வோமே! ஸ்ரீஆதிசங்கரரின் சீடர் ஸ்ரீ பத்மபாதர். அவருக்கு ஸ்ரீ நரசிம்ம மந்திரம் உபதேசிக்கப்பட்டது. அவர், சித்தி அடைய வேண்டி, ஒரு காட்டில் தனிமையில் அமர்ந்து ஜபம் செய்யலானார். காட்டில் தனிமையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தான் ஒரு வேடன். ‘சுவாமி, பயங்கர மிருகங்கள் இருக்கும் இந்தக் காட்டில் இப்படி தனியாக அமர்ந்திருக்கீங்களே! இங்கிருந்து போய்விடுங்கள்’ என்று எச்சரித்தான் அந்த வேடன். பத்மபாதரோ, ‘நான் ஒரு அதிசய மிருகத்தைத் தேடி வந்திருக்கிறேன். அது இங்கே தான் இருக்கிறது. அதைப் பிடிப்பதற்காக அமர்ந்திருக்கிறேன்’ என்றார். ‘இந்தக் கானகத்தில் எனக்குத் தெரியாத மிருகமா? நீங்கள் அடையாளம் சொல்லுங்கள், நான் பிடித்துத் தருகிறேன்’ என்றான். பத்மபாதரும், ’சிங்கத் தலையும் மனித உடலும் உள்ள விசித்திர மிருகம் அது ’ என்றார். ’நான் இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அதைப் பிடித்து வருகிறேன்’ என்று கூறிவிட்டுத் தேடப் புறப்பட்டான் வேடன். காட்டில் எங்கு தேடியும் அந்த மிருகம் கிடைக்கவில்லை. ‘அந்த தவசி உண்மையைத் தான் கூறுவார்’ என்ற நம்பிக்கை அவனுக்கு. ஆதலால் உணவின்றி, நீரும் அருந்தாமல் தேடினான். மாலையும் வந்தது. கிடைக்கவில்லை என்று அந்தத் தவசியிடம் எப்படிப் போய்ச் சொல்வேன், அவர் என்மீது நம்பிக்கை வைத்துக் காத்திருப்பாரே!!’ என்று வருத்தப்பட்டான். ‘அந்த மிருகம் கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட, எனக்கு மரணமே மேல்’ என்று சாகத்துணிந்து விட்டான் வேடன். அப்போது இடி இடிப்பதுபோல் பெருமுழக்கம் கேட்டது. ஆதிமூலமான இறைவன், ஸ்ரீ நரசிம்மர், வேடன் முன் தோன்றினார். ‘ வந்து விட்டாயா, உன்னை எங்கெல்லாம் தேடுவது?’ என்று கூறி, கொடிகளால் நரசிம்மரைக் கட்டினான். ’அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை’ யாக நரசிம்மர் சாதுவாக அவனுக்குக் கட்டுப்பட்டார். அவரை பத்மபாதரிடம் அழைத்துச் சென்று, ‘பாருங்கள், பிடித்து விட்டேன். நீங்கள் சொன்ன மிருகம் இதுதானா என்று பாருங்கள்’ என்றான். பத்மபாதருக்கு கொடிகளால் கட்டப்பட்டிருக்கும் பகவானைத் தெரியவில்லை. அவர் பிரமித்து நின்றிருந்த போது, நரசிம்மரின் கர்ஜனை கேட்டது. ‘முழு நம்பிக்கையுடன் தேடியதால், இவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். பக்தியில் சந்தேகம் கூடாது. இவனின் சம்பந்தம் இருந்ததால்தான் என் குரலையாவது கேட்கிறாய், காலம் வரும்போது நான் உனக்குக் காட்சியளிப்பேன் என்று கூறி மறைந்தார். இறைவன், தன்னையே கதி என்றிருப்போருக்குக் கட்டாயம் அருளுவான். - தேவராஜன். *******************************

பக்தியினிலே ஒன்பது வகை/90/ 26.5.2013/


பக்தியினிலே ஒன்பது வகை/90/ 26.5.2013/ சாஸ்திரங்கள் கடவுள் மீது நாம் கொள்ள வேண்டிய பக்தியை இப்படி இப்படி என்று வகைப்படுத்தியுள்ளன. அப்படி பக்தி செய்தவர்கள் பெற்ற இறை அருளையும் புராணங்கள் எடுத்துக்காட்டி உள்ளன. சாஸ்திரங்கள் வகைப்படுத்தியுள்ள பக்தியினிலே ஒன்பது வகையில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பக்தியில் நீங்கள் இருக்கும் நிலையைத் தெரிந்து கொண்டு தொடர்ந்து அன்போடு, நம்பிக்கையோடு இடைவிடாது இறைவனிடம் பக்தி செய்து வாருங்கள். நிச்சயம் அதற்குரிய பலனை அப்படியே இறைவனிடம் பெறலாம். ச்ரவணம்: குருமார்களிடமும் சமய சான்றோர்களிடமும் நாம் இறைவனின் அருமை பெருமைகளைப்பற்றி கேட்டு, அறிந்து இறைவனிடம் பக்தி கொள்வது ச்ரவணம் ஆகும். சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து பாகவதம் கேட்டு, தன் பாவங்களில் விடுபட்டான். கீர்த்தனம்: இறைவனின் புகழ்பா டும் பாடல்கள் கீர்த்தனங்களாகும். இந்தக் கீர்த்தனங்களை பஜனை செய்து, இறைவனை வழிபடுவது கீர்த்தனம். சுக முனி பாடிய பாகவதக் கதையால் சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லாம். ஸ்மரணம்: ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று மாணிக்க வாசகரின் எண்ணப்படி முழு நம்பிக்கையுடன் எப்போதும் இறைவனை பற்றி நினைத்துருகுவது ஸ்மரணம். எத்தனையோ துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பிரஹலாதன், தன் ஹரியை மறக்காமல் நினைத்துக்கொண்டிருந்தான்! பாதஸேவனம்: இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது நல்ல உள்ளத்துடன் இறை சேவை செய்தல் பாதஸே வனமாகும். இந்த பாக்கியத்தை பெற்றவள் லக்ஷ்மி தேவி. அர்ச்சனை: உள்ளன்புடன் நாளும் பொழுதும் மலர்களைக் கொண்டு ஈசனுக்கு பூஜை செய்வது அர்ச்சனை. பிருது மகாராஜா என்பவர் இறைவனுக்கு இடைவிடாது அர்ச்சனை செய்தவர்களில் பிரசித்தி பெற்றவர். இவர் இறை அருள் பெற்றவர். வந்தனம்: இந்த உடல் இறைவன் கொடுத்தது. எனவே இந்த உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங்கமாய் இறைவனை வணங்கி எழுதலுக்குப் பெயர் வந்தனம். கண்ணனை தினமும் வணங்கி கண்ணனைக் கண் கூடாகக் கண்டவர் பக்த அக்ரூரர். தஸ்யம்: எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும். இதற்கு சிறந்த உதாரணம் அனுமன். ஸக்யம்: ஒரு பக்தன், இறைவனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியவனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது. முப்பொழுதும் கண்ணனோடு இருந்து,உண்டு , உறங்கி, பேசிப் பழகிய, அன்பு, நட்பு, பக்தி செய்த அர்ஜுனன் கொண்ட பக்தி சக்யம். சக்ய பக்தியினாலேயே அர்ஜூனன் கண்ணனுக்குப்பிரியவனாகி, கீதை உபதேசம் பெற்றான். ஆத்ம நிவேதனம்: இந்த ஆத்மா அவனுடையது. அது அவனுக்கு உரிமையுடையது என நினைத்து, இறைவனுக்கு தன்னையே ஒப்புக்கொடுப்பது ஆத்ம நிவேதனம் . இதற்கு சிறந்த உதாரணம் அரசன் மகாபலி. - தேவராஜன். ************************************