திங்கள், 21 ஜனவரி, 2013

சுவரா(ஹா)ஸ்யம் பக்கம் /பாகம்-2/

************************************************* *********************************** சுவரா(ஹா)ஸ்யம் பக்கம் /பாகம்-2/ (தினமலர்- சிறுவர் மலரில் 7.9.2012 முதல் நான் எழுதி வரும் தொடர்கட்டுரைகளின் பாகம் இரண்டு.) சுவாரஸ்யம்/18/ 4.01.2013/ ஆயிரம் அர்ச்சுனர்கள் காந்திஜி எங்கிருந்தாலும் கடிதம் எழுதும் பழக்கத்தை விடவே மாட்டார். தினசரி சபர்மதி ஆசிரமத்துக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் படித்துவிட்டு, பதில் தரவேண்டிய கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் கடிதம் எழுதி அனுப்பிவிடுவார். ஒருசமயம் காந்திஜி சிறையில் இருக்கும் போதும் சபர்மதி ஆசிரமத்திலிருந்த சிறுவர் சிறுமியர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆசிரம சிறுவர்கள் எழுதி அனுப்பும் கடிதங்களுக்கு காந்திஜியும் நகைச்சுவையோடு சுருக்கமாக பதில்களை எழுதி அனுப்பி வைப்பார். அவருடைய சுருக்கமான பதில்கள் சிறுவர், சிறுமியர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர்கள் காந்திஜிக்கு, “காந்திஜி அவர்களே, பகவான் கிருஷ்ணன், அர்ச்சுனன் கேட்ட சிறு சிறு கேள்விகளுக்குக் கூட அத்தியாயம் அத்தியாயமாய் பதில் அளித்தார். ஆனால் உங்கள் பதில்கள் ஓரிரு வார்த்தைகளாகவே இருக்கிறதே! ஏன் அப்படி?” என்று கேட்டு கடிதம் அனுப்பினார்கள். அதற்கு காந்திஜியும் பதில் அனுப்பினார். “குழந்தைகளே, பகவான் கிருஷ்ணருக்கு ஒரு அர்ச்சுனர் மட்டும்தான் கேள்வி கேட்பவராக இருந்தார். ஆனால், எனக்கு உங்களைப் போல் பல ஆயிரம் பேர் கடிதம் எழுதுகிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். எல்லாருக்கும் பதில் எழுத வேண்டியதிருக்கிறதே...” என்று நகைச்சுவையாகப் பதில் எழுதி அனுப்பினார். சிறுவர், சிறுமியர்கள் காந்திஜியின் விளக்கம் படித்து, அவரின் சுருக்கமான பதிலைப் படித்து மகிழ்ந்து போனார்கள். தாத்தா- பேரன் இருவர் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட போனார்கள். அங்கே ஒரு பலகையில் ‘இங்கே நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். பணத்தை உங்கள் பேரப்பிள்ளைகள் செலுத்தினால் போதும்’ என்று அறிவிக்கப் பட்டிருந்தது. சாப்பிட போன அந்த இருவரும் அந்த அறிவிப்பை படித்து மகிழ்ந்தார்கள். நாம சாப்பிடறதுக்கு நம்ம பேரன்கள் அல்லவா காசு கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அந்த ஓட்டலில் சாப்பாட்டை வெளுத்து கட்டினார்கள். பெரிய ஏப்பத்துடன் கையை கழுவி விட்டு வந்தவுடன், சர்வர் ஒரு பெரிய தொகையை பில்லாக கொடுத்தார். சாப்பிட்ட இருவருக்கும் கோபம்னா அப்படி ஒரு கோபம், “என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? என்ன எழுதி போட்டு இருக்கு? என்ன இது பில்லு?” என்று கத்தினார்கள். சர்வர் அமைதியாக சொன்னார் “எல்லாம் சரிதான். ஆனா, இது உங்க தாத்தா சாப்பிட்ட பில்லாச்சே....” என்றார். .......................................................... ***************************************************************************************************** சுவாரஸ்யம்/19/ 11.01.2013/.................................................. விவேகானந்தரின் துணிச்சல்!..................................................... ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்தார். நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். கூடவே, நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார். அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர். மனைவியைத் துõக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதைக் கண்ட நண்பர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது. ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். “சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார். ..................................................... *************************************************************************************************************** கோணமண்டையா/20/ 18.01.13........................................................... அந்தச் சிறுவன் ஓஹையோ நகரத்தில் மிலான் என்ற ஊரில், பிப்ரவரி11, 1847ம் ஆண்டு பிறந்தான். அவன் பெற்றோருக்கு 7 வது குழந்தை. அதுவும் கடைசி குழந்தை. அந்தச் சிறுவனுக்குச் சிறுவயதிலேயே காது செவிடாய் போய்விட்டது. அதுமட்டுமா? அவனுக்கு பிறக்கும் போதே பின்னந்தலை பின்புறம் சற்று நீட்டிய நிலையில் இருந்தது. அவன் வளர்ந்த பிறகும் மண்டையின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஒரு சில நாட்கள் பள்ளிச் சென்றவன், திடீரென்று இனி பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்தான். ஏனென்று காரணம் கேட்டார் தாய். அதற்கு, அவன், “பள்ளியில் எல்லாரும் என்னை ‘கோணமண்டையா கோண மண்டையா” என்று கேலி செய்வதாகக் கூறினான். தாய் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். பள்ளிக்குச் சென்று வந்தான் அவன். மீண்டும் ஒரு நாள் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்தான். இம்முறை காரணமாக அவன் சொல்லியது: “ என்னை வகுப்பில் எல்லார் முன்னாடியும் மூளைக்கோளாறு உள்ளவன்” என்று ஆசிரியர் திட்டிவிட்டதாகக் கூறினான். மீண்டும் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பப்பட்டான். வழக்கம் போல மீண்டும் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான். கடுப்பான தாய், “உனக்கு கோணமண்டை, அதான் படிப்பு ஏறவில்லை” என்றார். அன்றுடன் அவன் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. உலகத்தில் அதிக கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சாதித்தவர்களின் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார் அந்தச் சிறுவன். அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன். எடிசன் இறந்த பிறகு, அவரின் தலையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் நமக்கு இருக்கும் அதே அளவு மூளை எடிசனுக்கும் இருக்கிறது. ஆனால், பின்புறத்தலையின் நீண்டப் பகுதியில்தான் ஏதோ கண்டறிய இயலாத மிகப்பெரிய மர்மம் மறைந்து இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தார்களாம்! * பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே! வேலைக்காரரை அழைத்து, ‘தபால் தலையை ஒட்டிக் கொண்டுவா’ என்றார் ராஜாஜி. பிரிட்டிஷ் மன்னர் தலையிட்ட தபால்தலையைத் தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்தார் வேலைக்காரர். இந்தச் செயலுக்கு நாமாக இருந்தால் கோபப்பட்டிருப்போம். ராஜாஜி சொன்னார்: “பரவாயில்லையே! நாங்களெல்லாம் செய்ய முடியாத காரியத்தை நீ செஞ்சுட்டியே, பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே!” என்றாராம். ................................ ******************************************************************************************************************************************* எட்டேகால் லட்சணம்/21/ 25.01.13/........................................................... ஒரு நாள் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது புலவர் ஒருவர் அவ்வையாரை நோக்கி ஆரைக் கீரைக்கும் அவ்வைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள்படும் படியாக ஒப்பிட்டு, ‘ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ‘ என்று கூறினார். இதற்கு அவ்வையார், ‘எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க் கூறையில்லா வீடே, குலராமன் துõதுவனே ஆரையடா சொன்னாயது.’ என்று பதில் பாட்டு கொடுத்தார். தமிழில் ‘அ‘ அன்பது எண் 8 ஐக் குறிக்கும் ‘வ‘ 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் ‘அவ‘ என வரும். எட்டேகால் லட்சணமே என்றால் ‘அவ லட்சணமே‘ எனப் பொருள்படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் ‘எருமையே‘ எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் ‘மூதேவியின் வாகனமே‘ என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் ‘குட்டிச் சுவரே‘ என்று பொருள். ‘குலராமன் துõதுவனே‘ என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் துõது சென்ற அனுமானான ‘குரங்கே‘ என்றும் பொருள் படும். ‘ஆரையடா சொன்னாயது‘ என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் ‘அடா‘ என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை ‘அடி‘ என்றதற்குப் பதிலடி கொடுத்தார். * எங்கே விழுது? கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன. இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர். பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை. கி.வா.ஜ அவனை நோக்கி, ‘என்ன?‘ என்று கேட்க, ‘நெய்ங்க...‘ உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது‘ என்று சொன்னான். கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, ‘விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!‘ என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர். .......................................................................................................... ******************************************************************************************************************************** அதிர்ச்சி நகைச்சுவை/22/ 1.02.2013/........................................................................... கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையாக பேசக்கூடியவர். அவர் பேச்சுகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும். இதோ ஒரு அதிர்ச்சி நகைச்சுவை. என்.எஸ். கிருஷ்ணன் குடும்பமும் பக்கத்து வீட்டு குடும்பமும் திருப்பதிக்கு செல்வதாக திட்டுமிட்டு இருந்தனர். இது தொடர்பாக பக்கத்து வீட்டு பெண்மணி, என்எஸ் கிருஷ்ணனை பார்த்து பேச வந்தார். அந்தப் பெண்மணி , என் எஸ் கிருஷ்ணனைப்பார்த்துக் கேட்டாங்க ...... “நாம நாளானிக்கு திருப்பதி போறதா ஒரு பிளான் வச்சிருந்தோமே!, யார், யார் போறோம்னு முடிவு பண்ணியாச்சா?” என்று கேட்டார். அதற்கு, என்எஸ் கிருஷ்ணன் சிலேடையாக அந்த பெண்மணியைப் பார்க்காமலேயே....“அதெல்லாம் எனக்குத் தெரியாது , நா ஓம் புருஷன் , நீ என் பொண்டாட்டி ..... அவ்வளவு தான்”என்றார் . இப்படி அவர் சொல்லி முடித்ததும்,அந்தப் பெண்மணி அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டு வாயடச்சுப் போயி இருந்தாங்க. பிறகு, கொஞ்சம் நேரம் கழித்து அவர் சொன்னதை ஆழமாக யோசிச்ச போது தான் அந்தப் பெண்மணிக்கு வாய் நிறைய சிரிப்பு வந்து சிரிச்சாங்க. என் எஸ் கிருஷ்ணன் சொன்னதின் அர்த்தம்- நான் ஓம் புருஷன் என்பது நானும், உன் புருஷனும். நீ என் பொண்டாட்டி என்பது நீயும் என் பொண்டாட்டியும் திருப்பதி போறோம் என்று இரட்டை அர்த்தம் வரும்படி பேசினார். ** நானா பொய்யன்? அமெரிக்காவில் 1961ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நிக்சனும், ஜான் எப். கென்னடியும் போட்டி யிட்டனர். பொதுக் கூட்டத்தில் பேசிய நிக்சன், “கென்னடி நம்பிக்கைக்குரியவர் அல்லர்; அவர் மகா பொய்யர்” என்று பேசினார். இதனைக் கேட்ட கென்னடி, “நண்பர் நிக்சன் என்னை ஒரு பொய்யர் என்று குறிப்பிட்டுப் பேசினார். நான் பொய்யன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இப்போது இந்தக் கூட்டத் தில் நான் பேசுபவை பொய் என்றால் தைரியமாகக் கூறுங்கள். இப்போது நான் சொல்கிறேன், இந்தக் கூட்டத்திலிருக்கும் ஆண்கள் அனைவரும் சிறந்த அறிவாளிகள்; அதேபோல் இங்கே கூடியிருக்கும் பெண்கள் அனைவரும் சிறந்த அழகுடையவர்கள். நான் சொன்னது பொய்யெனில், இப்போதே தைரியமாக மறுத்துக் கூறுங்கள்” என்று சாதுரியமாகப் பேசினார். கூட்டத்திலிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர். தேர்தலில் வெற்றிபெற்று, குறைந்த வயதிலேயே குடியரசுத் தலைவரானவர் என்ற பெருமையையும் பெற்றார் கென்னடி. ****************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக