சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 41

குட்டீஸ் கேள்வி பதில் 41 23.11.2012 *ஐஸ் கட்டியைக் காற்றில் திறந்து வைத்தால் அதிலிருந்து புகை கிளம்புகிறது. ஏன்? - தேச. சீனு, ராமநந்தீஸ்வரம். நெருப்பு இல்லாமல் புகை வருமா ? என்பது போல் இருக்கிறது சீனுவின் கேள்வி. உண்மையில் ஐஸ் கட்டியிலிருந்து புகை எல்லாம் வெளியேறுவதில்லை. திறந்த வெளியில் ஐஸ் கட்டியை திறந்து வைக்கும்போது ஐஸ்ஸைச் சுற்றியுள்ள காற்று குளிர்வடைகிறது. ஒரு அளவிற்கு மேல் குளிர்வடையும்போது அந்தக் காற்றிலுள்ள ஈரப்பதம் மிக நுண்ணிய நீர்த்திவலைகளாக உருமாறுகிறது. மேலும் காற்றின் நகர்வுக்கு ஏற்ப அதாவது காற்று மேலும் கீழுமாக நகரும்போது, இந்த நீர்த்திவலைகள் அங்கும் இங்கும் நகரும். அது பார்ப்பதற்கு புகைப்போல தெரியும் அவ்வளவுதான். பனிக்கட்டியில் இருந்து நீர் தான் வரும். புகை எல்லாம் வராது. *பாலைக் காய்ச்சும்போது பொங்குகிறது? தண்ணீரைக் காய்ச்சும்போது பொங்குவதில்லை, ஏன்? - ம. குமார், வாழைப்பந்தல். பால் என்பது தண்ணீர், புரதம் , மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப் பொருட்கள் அடங்கிய கலவை. பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியைவிட குறைவாக இருப்பதால் பாலின் மேற்ப்பரப்பில் அவை மிதக்கின்றன. தண்ணீரின் 100 டிகிரி. பாலில் உள்ள கொழுப்பு 50 டிகிரியில் உருக ஆரம்பித்துவிடும். பாலை காய்ச்சும்போது 50 டிகிரி நிலை வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்ப்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது. எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்ப்பரப்பில் கொழுப்புப் படலம் ஏடாகப் படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த ஏட்டுப் படலத்தோடு மேலெழும்பி பொங்கி வழிகிறது. தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, புரதங்களோ இல்லை. எனவே மேற்ப்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம். எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை. *பனிமலையின் மீது செல்ல பனிச்சறுக்கு மட்டைகள் எப்படி உதவுகின்றன? -ஆர். கோகுல், கும்பகோணம். பனிச் சறுக்கு மட்டைகள் அமைப்பைப் பார்த்திருக்கிறாயா, கோகுல்? அதனுடைய அமைப்புதான் நம் உடல் எடையை சமநிலைப்படுத்துகிறது. அதனால் பனிமலையில் செல்லும்போது நான் தடுமாறுவதில்லை. பனிச்சறுக்கு மட்டைகளை அணிந்துகொள்ளும்போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது. மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால்களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாயிருக்கிறது என்று வைத்துக்கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும்போது பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும்போது செலுத்தும் அழுத்தத்தை விட 20 மடங்கு குறைவாக இருக்கும். ஏற்கனவே பனிச்சறுக்கு மட்டைகளை நாம் அணிந்துகொண்டால்தான் பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நாம்புதைய வேண்டியதுதான். ******************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக