புதன், 9 ஜனவரி, 2013

இறைவனின் மனசாட்சி/72/ 20.1.2013/

இறைவனின் மனசாட்சி/72/ 20.1.2013/ மாமிச உணவுகளை உண்ணாமல் இருப்பவர்கள்தான் உயிர்களின் மீது இரக்கம் கொண்டவர்கள் என்று கூற முடியாது. மனதளவில் மற்றவர்களை புண்படுத்தாமல், சகமனிதர்களை மதிப்பதே உயிர் இரக்கமாகும். நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் நிகழும் சுகதுக்கங்களுக்கும் நம் மனப்பாங்கிற்கும் ஏற்ப செயல்படுகிறோம். நாம், நம்மை வெறுகின்றவர்களை வெறுக்கின்றோம். நம்மைப் பகைக்கின்றவர்களை பகைக்கின்றோம். நம்மிடம் பொருள், பணம் கேட்பவர்களுக்கு உடனே அதைக் கொடுப்பதற்கு மனம் வராமல் தயங்குகின்றோம். காரணம் இரக்கம் இல்லாமைதான். நம்மை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்து,புறங் கூறுபவர்களை ஆசிர்வதித்து, நிந்திக்கிறவர்க்கு மன்னிப்போ, பிரார்த்தனையோ செய்து பாருங்கள் மனம் நிம்மதி பெறும். மனிதர்கள் எல்லாரிடமும் இருக்க வேண்டிய நற்பண்புகள் அன்பு, இரக்கம் , கருணை ஆகும் . அது எல்லோரிடமும் இருந்தால் சண்டை, சச்சரவுகளே வராது . அடுத்தவரிடம் இரக்கம் காட்டுவது என்பது நல்லொழுக்க நெறி என்பதை புத்தர், ஸ்ரீஅரவிந்தர், விவேகானந்தர், தாயுமானவர், பட்டினத்தார் போன்ற தவசீலர்கள் பலவகையில் எடுத்துரைத்திருக்கிறார்கள். அதனைக் கடைப்பிடிக்கிறோமா நாம்? ஒரு சிறு கற்பனை. ஒரு ஐந்து நிமிடம் இந்த உலகம் முழுவதும் அன்பிற்கு கட்டுப்பட்டு இரக்க குணத்துடன் செயல்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்! போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வேளையில் ஒதுங்கி வழிவிடும் நல்ல எண்ணம், ரேஷன் கடையில் நீண்ட வரிசையின் இறுதியில் நிற்பவருக்கு, அவருடைய அவசரம் கருதி, அவர் முதலில் பொருளை வாங்கிக்கொள்ளஅனுமதி அளிக்கும் இரக்க குணம், பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் அவசரமாக பயணம் மேற்கொள்ள வேண்டியவருக்கு தன் பயணச்சீட்டை விட்டுக்கொடுக்கும் உன்னத குணம், பசியோடு கையேந்தி நிற்பவருக்கு சாப்பிடும் உணவு ஒருபிடி எடுத்து தரும் நல்லமனசு இப்படியெல்லாம் நடந்தால் வாழ்க்கை எல்லாருக்கும் எவ்வளவு அருமையாக இருக்கும்? உலகில் அன்பும், இரக்கமும் வேண்டி நிற்போர் பலர். முதியோர் இல்லத்தில் விடப்பட்டு உறவுகள் இன்றி தனிமையில் வாடுபவர்களுடன் ஒருசில மணித்துளிகளாவது நம் நேரத்தை செலவிட்டு அன்பாகவும், ஆதரவாகவும் பேசலாம்; மருத்துவமனையில் உதவியின்றி சிரமப்படும் அனாதை நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்; கஷ்டப்படுபவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம் இப்படி சின்ன, சின்ன விசயங்களில் இரக்கம் காட்டும் போது, நம் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கும்! நம்மோடு வாழும் சக மனிதர்களுக்கு நாம் காட்டும் இரக்கம்கூட தெய்வாம்சம்தான். இரக்கம் என்பது இறைவனின் மனசாட்சி. இதை நம்பினால் நாளும் நலம் பெறலாம்! - தேவராஜன். ******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக