திங்கள், 28 ஜூலை, 2014

புதுமையான மரங்கள், விலங்குகள் கொண்ட அதிசய தீவு! - தேவராஜன்.


¦புதுமையான மரங்கள், விலங்குகள் கொண்ட அதிசய தீவு! - தேவராஜன். இந்த உலகில் அதிசயங்களும் விநோதங்களும் ஏராளமாக இருக்கின்றன. அதுபோல உலகில் இன்னமும் விடை தெரியாத புதிர்முடிச்சுகளும் இருக்கின்றன. ஏன், எதற்காக, இப்படி என்று விளக்கம் காண இயலாத மர்மங்களும் இருக்கின்றன. இப்படி சில விநோதங்களும் மர்மங்களும் கொண்ட ஒரு தீவு இருக்கிறது. அந்தத் தீவில் எங்கு பார்த்தாலும் எல்லாமே வித்தியாசமாக இருக்கின்றன. பார்க்கின்றவை எல்லாம் இதுவரை நம் கண்கள் காணாதவையாகவே உள்ளன என்றால் ஆச்சரியம்தானே! இந்தத் தீவில் காணப்படும் பொருட்கள் எல்லாம் இந்த உலகில் வேறு எங்கும் காணப்படாதவையாக இருக்கின்றன. இப்படி பல விநோதங்களைக் கொண்ட அந்த தீவின் பெயர் சோகோட்ரா தீவு. இந்த தீவு யெமென் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது. யெமென் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும் வடகிழக்கில் ஓமானும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழக்கேயும் அரபிக் கடல் அமைந்துள்ளது. வடமேற்கில் செங்கடல் அமைந்துள்ளது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு புதிரான இடம்தான் இந்த தீவு என கணிக்கப்படுகிறது. இந்தத் தீவு - இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொம்பு கடற்கரைக்கு அடுத்து அராபிய தீபகற்பத்திற்கு தெற்கே 190 கடல்வழி மைல்கள் (220 மைல்; 350 கி.மீ) தொலைவில் உள்ள நான்கு தீவுகள் அடங்கிய சிறு தீவுக்கூட்டமாகும். இந்த தீவு கரடுமுரடான பாலைவனம் போல காணப்படுகிறது. வறண்ட நிலமாக இருக்கிறது. திட்டு திட்டாக காடுகளும், பாறைகளும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் மரங்களும், விலங்குகளும் இதுவரை உலகில் எங்கும் காணப்படாத வித்தியாசமான வடிவத்தோடு காணப்படுகின்றன. இது போன்ற வடிவம் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளை எங்கும் காண முடியாது. அது தான் அந்த தீவின் மர்மத்தின் நுழைவு வாயிலாக இருக்கின்றது! இத்தீவுகளில் சிற்றினத்தோற்றம் காரணமாக இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒருபங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை. இவை புவிப்பரப்பில் வெளிக்கிரக சூழல் போன்று விளங்கும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிற்றினத்தோற்றம் என்பது ஓர் உயிரினம், தன்னுடைய சுற்றுச்சூழலில் வாழும் பொழுது, தன் தேவைக்கேற்ப ஏற்படும் படிமலர்ச்சி நடைமுறையினால் முற்றிலும் ஒரு புதிய உயிரினமாக உருவெடுத்துத் தோன்றுவதாகும். ஓர் உயிரினத்திலிருந்து, புதியதொரு சிற்றினம் இயற்கையாக நான்கு முறைகளில் தோற்றமடைகிறது. இந்த தீவில் 900 வகை தாவரங்கள், டிராகன் இரத்த மரம் மற்றும் உலகின் வேறு எங்கும் இல்லை என்று அரிதான பறவைகள் சில இருக்கின்றன. புதர் குரோட்டன் மற்றும் வினோதமான மரம், சதைப்பற்றுள்ள மரம், உயரமான குங்கிலியம் மரங்கள், மூன்று ஆண்டு முழுவதும் தோன்றும் சோற்று கற்றாழை, மற்றும் காட்டு மாதுளை இருக்கின்றன. அழகிய மணல் கடற்கரைகள், குகைகள்,ட்ரெக்கிங், ஒட்டக சவாரி, பறவை பார்த்தல் மற்றும் கடல் நீச்சல், கண்கவர் புதிய நீர் குளங்கள், அற்புதமான பள்ளத்தாக்குகள், அற்புதமான மணற்குன்றுகள் இத்தீவில் பார்த்து வியக்கத்தக்கவையாக இருக்கின்றன. இந்த தீவில் மட்டும் இருக்கும் உயிரினங்கள் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கின்றன? இங்குள்ள மரங்கள் ஏன் வித்தியாசமாக வளர்கின்றன? இந்த இனங்கள் ஏன் உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை போன்ற பல சந்தேகங்கள், கேள்விகள் பல ஆராய்ச்சியாளர்களை ஆராய்ச்சி செய்ய துõண்டிவருகின்றன. பல ஆய்வுகள் நடக்கின்றன. சுற்றுலா பயணிகள் பலர் இந்தத் தீவுக்கு வருகின்றனர். இத்தீவைப் பார்த்து வியக்கின்றனர். ஆனால், இந்த தீவுக்கு பின் இருக்கும் மர்மங்களுக்குத்தான் விடை தெரியாமலேயே உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது! பாக்ஸ் மேட்டர்: 1880ம் ஆண்டில் தாவரவியல் அறிஞர் ஐசக் பெய்லி 500 வகை தாவரங்கள் சேகரித்தார். அதில் 200 க்கும் அதிகமான அறிவியல் புதிய இனங்கள் இருந்தன. இன்றுவரை, ஏறத்தாழ 900 வாஸ்குலர் தாவரங்கள் மற்றும் 300 வகை வித்தியாசமான தாவர உருவாக்கம் வேறு எங்கும் காணப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 1513ல் தீவு அறிமுகம். முதலில் தீவுகளில் ஒரு சில எச்சங்கள் காணப்பட்டன. இந்த தீவில் 100 தனிச்சிறப்புமிக்கவற்றில் இப்போது 40 வகை மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் சந்தேகத்திற்கு இடமின்றி பல அழிவுகளைக் கண்டிருக்கின்றன. ஆனால், இப்போது ஒரு சமநிலை இயற்கைக்கு நிலவுகிறது. ***********************************************************

வெள்ளி, 18 ஜூலை, 2014

பேய்கள் உலாவும் பிரமாண்டமான கப்பல்! - தேவராஜன்.


பேய்கள் உலாவும் பிரமாண்டமான கப்பல்! - தேவராஜன். ஆர். எம். எஸ். குயின் மேரி கப்பல் மிகபிரம்மாண்ட கப்பல். இது டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டுவதற்கு முன்பே கட்டப்பட்டது. இந்த பிரம்மாண்ட கப்பலின் நீளம் 1019.5 அடி. உயரம் 181 அடி. எடை 81,237 டன்கள். இதன் எஞ்சின் 1 லட்சத்து 60 ஆயிரம் குதிரைதிறன் கொண்டது . 3 ஆயிரம் பேர் சொகுசாக பயணிக்கலாம். ஜான் பிரவுன் கம்பெனி (ஸ்காட்லாந்து) மற்றும் குனார்ட் ஸ்டீம்சிப் நிறுவனத்தால் உருவானது. பொருளாதார நெருக்கடியினால் ஒன்பது தளங்கள் கொண்டு முழுமையாக முடியாத நிலையில் 1931 ல் இருந்தது. பின்னர் இந்த நிறுவனம் “வைட் ஸ்டார் லைன் (டைட்டானிக் கப்பலை நடத்தி வந்த நிறுவனம்) கம்பெனியுடன் இணைந்து இந்த கப்பலை 1936 ல் உருவாக்கினார்கள். 1936 ம் ஆண்டு மே 27ல் இதன் முதல் பயணத்தை எட்டாம் எட்வர்ட் அரசர், ராணி மேரி, இளவரசி எலிசபத்,டச்சு பிரபுக்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 1001 அட்லாண்டிக் பயணங்களை முடித்தது. செப்டம்பர் 19, 1967 ல் ஓய்வு பெற்றது. இது 31 ஆண்டுகள் உழைத்தது. இந்த கப்பல் இப்போது கலிபோர்னியாவின் லாங் பீச் கடற்கரை மணல் திட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது ஓட்டலாக செயல்படுகிறது. இந்த ஓட்டலுக்கு ஆண்டுக்கு 1.4 மில்லியன் பேர் வந்து செல்கிறார்கள். இவ்வளவு பிரமாண்ட கப்பல் இன்னொரு வகையில் இந்த உலகத்தை மிரட்டி வருகிறது. அந்த மிரட்டலின் முதல்படியாக இக்கப்பலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கிரே கோஸ்ட்! இந்தக் கப்பல் ஆவி மற்றும் பிசாசு அனுபவங்களுக்குப் புகழ் பெற்றது. அமானுஸ்யம் மற்றும் ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர் பீட்டர் ஜேம்ஸ். இவர் 1991 ம் ஆண்டில் இருந்து இக்கப்பலில் ஆய்வுகளை மேற்கொண்டவர். இந்தக் கப்பலில் வாழும் பேய், பிசாசுகளின் அட்டகாசங்கள் பற்றி, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கிறார்: “எனது ஆராய்ச்சியின்படி குயின் மேரி கப்பலில் அதிகமாக பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கருதுகிறேன். இந்தக்கப்பலில் இன்றும் 600 பேய்கள் இருக்கிறது. பல துர் மரணங்கள் இந்த கப்பலில் ஏற்பட்டது காரணமாக இருக்கலாம். இந்தியப் பெருங்கடலின் அதிக வெப்பத் தாக்குதல் காரணமாக அதிக அளவில் இறந்துள்ளனர். ஜெர்மன் மற்றும் இத்தாலிய போர்க்கைதிகள் இதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்கொடுமைக்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொண்டனர். சரியான மருத்துவ வசதி மறுக்கப்பட்டும் பலர் இறந்தனர். இப்படி இறந்தவர்களின் ஆவிகள் இந்தக்கப்பலில் நடமாடுகிறது. இக்கப்பலில் விநோத சப்தங்களும், காப்பாற்றச் சொல்லும் கூக்குரல்கள்களின் ஓலங்களும் சில பகுதிகளில் கேட்கிறது. கப்பலின் மையப்பகுதியில் முதல் தர நீச்சல் குளத்தின் அருகில் 5 வயதுள்ள சிறுமி தன்னோடு பேசியதாகவும்; கப்பலின் மற்றொரு நீச்சல் குளத்திற்கு அழைத்ததாகவும்; இச்சிறுமியின் பெயர் ஜாக்கி எனவும்; சில சமயங்களில் இவளைத் தேடி சாரா எனும் நடுத்தர பெண்மணி ஒருவரும் வந்து சென்றதாக ஒருவர் மூலம் அறிந்தேன். அந்த குறிப்பிட்ட நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது. கப்பலில் ஆங்காங்கே இருக்கும் அலுவலக ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் தானாக திறந்து மூடும் கதவுகள்... பழங்கால உடையணிந்த உருவங்களின் நடமாட்டம்... கப்பலின் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்ட தலைகள், கைகள் கால்கள்... கிடந்து மறைகின்றன. அடிக்கடி பல இடங்களில் அடையாளம் தெரியாத பல உருவங்கள் தோன்றி மறைதல் என பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. அவ்வப்போது திடீரென்று முணு முணுக்கும் குரல்கள்... அடித் தொண்டையில் வெளிப்படுத்தப்பட்ட கரகரப்பான சப்தங்கள்... அணைக்கப்பட்டிருந்த விளக்குகள் தானாகவே எரிந்து அணையும் மர்மம்...” இப்படி ஏதோ சினிமாவில் இடம் பெறும் காட்சிகள் போல பீட்டர் ஜேம்ஸ் பயம் கலந்த நடுக்கமான குரலில் பேய்களைப் பற்றிய அனுபவத்தை பதிவு செய்கிறார். கப்பலில் பேய், பிசாசுகள் இருப்பது உண்மை என்கிறார்கள் சிலர். இவையெல்லாம் அந்த ஓட்டலை நடத்த ஏற்படுத்தப்பட்ட வியாபார தந்திரங்கள் என்கின்றனர் சிலர். எது உண்மை, எது பொய் என்பது முழுமையாக வெளிபடும் வரை ஆர்.எம். எஸ். குயின்மேரி கப்பலின் பிரமாண்டம் போலவே அதன் மர்மங்களும் பிரமிக்க வைக்கின்றது! **** பாக்ஸ் குயின் மேரி 2- கடந்த 2004ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கியது. இது கனார்டு லைன் நிறுவனத்துக்கு சொந்தமானது. 3 கால் பந்தாட்ட மைதானங்களை விட பெரியது. 1,130 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 1,48,528 டன் எடையும் உடையது. இந்த கப்பலில் அதிகபட்சமாக 3,090 பயணிகள் தங்கும் வசதி கொண்டது. உலகின் மிகப்பெரியதும் ஆடம்பரமானதுமான குயின் மேரி - 2 21-23 அடுக்குகளைக் கொண்ட ஆடம்பர கப்பல்.

வியாழன், 10 ஜூலை, 2014

மறுபிறப்பு எடுக்கும் மம்மோத் யானை! - தேவராஜன்.


மறுபிறப்பு எடுக்கும் மம்மோத் யானை! - தேவராஜன். பல மில்லியன்கள் ஆண்டுகளில் இருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஐரோப்பா எங்கும் ஐஸ் பரவியிருந்தது. கண் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப்போர்வையாக ஐஸ் சூழ்ந்திருக்கும். மனித நாகரீகக் காலப்பிரிவுகளில் இந்தக் காலக் கட்டத்தை ‘ஐஸ் காலம்‘ என்று அழைப்பார்கள். இக்காலத்திலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில் தான், இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்தன. துருவம் வரை சென்றன. அங்கே சங்கமம் ஆகியது. இந்த ஐஸ் காலத்தில் தான்‘மம்மோத்’ என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள் வாழ்ந்தன. இப்போது காணப்படும் யானைகள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. இப்போது வாழ்கின்றன யானைகளின் முப்பாட்டன் தான் இந்த மம்மோத். இந்த இன விலங்கு உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தன. இந்த மம்மோத், தற்கால யானைகளை விட மிகப்பெரியவை. உடலெங்கும் நீண்ட முடிகளுடனும், நீண்ட தந்தங்களுடனும் காணப்பட்டவை. யானை போன்ற தோற்றம் உள்ள இந்த மம்மோத்கள் 16 அடி உயரம் வரை வளரும். இதன் தந்தங்கள் நம் நாட்டு யானயைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும். சுமார் 8 -12 டன் எடை கொண்டதாக இருக்கும். இந்த மம்மோத்களும் யானை போன்றே சுத்த சைவம். இலை தழைகளை தின்று வாழும். இதன் உடல் முழுவதும் ரோமங்கள் அடர்ந்து காணப்படும். மம்மோத், ஐஸ் உள்ள குளிர்ப் பிரதேசங்களிலேயே வாழக்கூடியவை. இங்கிலாந்தில் கூட இவை வாழ்ந்திருக்கின்றன. இன்றைய அலாஸ்கா, ரஷ்யாவின் சைபீரிய தூந்திரப் பிரதேசங்களில் அவை அதிகம் வாழ்ந்திருக்கின்றன என்று கணிக்கப் படுகிறது. இங்கிலாந்தில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவை வாழ்ந்திருக்கின்றன. காலப்போக்கில் மம்மோத் யானையினம் மனிதர்களின் வேட்டையினாலும், ஐஸ் கட்டிகள் கரைந்து இல்லாமல் போனதாலும், மொத்தமாகப் பூமியிலிருந்து அழிந்து போயின. இந்த மம்மோத்களை, ஆதி கால மனிதர்கள் அதன் ரோமத்திற்காகவும், உணவிற்காகவும் வேட்டையாடினர். உலகம் தன் தட்ப வெப்ப நிலையிலில் மாறுதல் அடைந்ததால் அவற்றிற்கான உணவுத் தாவரங்கள் அழிந்து போய் அதனால் அந்த இனம் அழிந்திருக்கலாம் என்பது ஒரு ஊகம். மேலும் பனி உருகத்தொடங்கிய காலத்தில் அவற்றிற்கான வாழ்விடப் பற்றாக்குறை காரணமாகவும் அவை இறந்திருக்கலாம். சிலவேளை மாறும் தட்ப வெப்ப நிலைக்கேற்ப பரிணாம வளர்ச்சி அடைந்து தன்னைத் தகவமைவு செய்து கொள்ளாததினாலும் அவை இறந்திருக்கலாம் என்று எண்ணப் படுகிறது. இவை அழிந்த காலத்திலிருந்து, மெல்ல மெல்லப் பனிப்பிரதேசங்கள் மரம் செடிகள் முளைக்கும் பிரதேசங்களாக மாறின. மறுபிறப்பெடுக்கும் மம்மோத் ரஷியாவில், யமல் பெனின்சுலா என்ற இடத்தில் 2007ம் ஆண்டு ஒரு மாத குட்டி மம்மோத் கண்டெடுக்கப்பட்டது! இதன் பெயர் லியுபா. இந்த மம்மோத் குட்டி ஹாங்காங்கில் ‘ஐஎப்ஸி மால்’ என்ற இடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது . இந்த குட்டி யானை இறக்கும் போது இதன் வயது ஒரு மாதம். தன் தாயிடம் குடித்த பால் கூட வயிற்றில் உறைந்த நிலையில் காணப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மற்ற உள் உறுப்புக்கள் கூட அப்படியே சேதம் அடையாமல் இருக்கிறதாம். பனியில் உறைந்த நிலையில் இந்த உடல் 42 ஆயிரம் ஆண்டுகள் கெடாமல் இருந்து வந்துள்ளது என்பது ஆச்சரியம்! லியுபா மூலம் ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் அகிரா ஐரிடானி தலைமையில் மம்மோத் யானைகளை உயிர்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆராய்ச்சியாளர் அகிரா தலைமையிலான குழு, இந்த குட்டி யானையின் திசுக்களிலிருந்து அதன் டி.என்.ஏ.களை பிரித்து, அந்த டி.என்.ஏகளை பெண் ஆப்பிரிக்கா யானையின் கருமுட்டையில் செலுத்தி, அது சரியாக வளர்ச்சியடைவதன் மூலம் மம்மோத் யானைகள் பூமியில் மீண்டும் உயிருடன் வலம்வரலாம் என்கிறார்கள். விஞ்ஞானிகள் இந்த முயற்சியில் வெற்றிபெறும் பட்சத்தில் இந்த மம்மோத் இனம் மீண்டும் புவியில் மறுபிறப்பு எடுக்கலாம் யார் கண்டார்கள்! பாக்ஸ் *10000 பி.சி. திரைப்படத்தில் நவீன கணினித் தொழில்நுட்ப உதவியுடன் மிக தத்ரூபமாக மம்மோத் யானைகளை வடிவமைத்திருப்பார்கள். அவற்றைப் பிரமிடுகள் கட்ட பயன்படுத்துவதாகக் காட்டியிருப்பார்கள். * சைபீரிய நாட்டில் மம்மோத்தின் எலும்பு ஒன்று பனிக்கட்டிகளுக்கு அடியில் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது. இதனை ஆராய்ச்சி செய்த ரஷ்ய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள், இதன் எலும்பில் இருந்து எடுக்கப்படும் டிஎன்ஏவை யானையின் கருமுட்டையில் செலுத்தி மீண்டும் இந்த மம்மோத் இனத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

வியாழன், 3 ஜூலை, 2014

தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவின் மர்மங்கள்! - தேவராஜன்.


தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவின் மர்மங்கள்! - தேவராஜன். * தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ளது ஒரு குட்டி தீவு. இது ஐரோப்பியர்களால் 17ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்டது. இத் தீவு பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ளது. இதன் இப்போதைய பெயர் பொலினீசியத் தீவு. இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்டது. ராப்ப நூயீ மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவுக்கு சிறப்பு சேர்ப்பவை. இத்தீவு ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடமாகும். இந்தத் தீவுக்கு ‘ஈஸ்டர் தீவு‘ என்று பெயர். இப் பெயர் முதன் முதலாக இங்கு வந்திறங்கிய டச்சுப் பயணியான ஜேக்கப் ரகவீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. இவர் இத்தீவில் 1722 ம் ஆண்டு ஈஸ்டர் நாளன்று வந்திறங்கினார். அதைக்குறிக்கவே இப்பெயர் வந்தது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. இத்தீவில் 887 மனித உருவச்சிலைகள் அமைந்துள்ளது . இத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட து. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது. ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. இத்தீவு முழுவதும் 60ற்கும் மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன. இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்தச் சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்தது. இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். இதனால் ஈஸ்டர் தீவு மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இருக்கிறது. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் இத்தீவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், வேளாண்மை, மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும், மக்கள் தொகை 12 ஆயிரம் இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின. 1990களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 15 மோவாய்கள் மனித முகம் போல் தோற்றமுடைய மோவாய்கள் என்ற நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன. இவற்றின் உயரம் சராசரியாக 10 மீட்டரும் எடை 80 டன்னும் உள்ளன. முன்னூறுக்கும் மேற்பட்ட இச்சிலைகள் ஓரிடத்தில் நிலைத்து இருத்தாது, பத்து மைல் தூரம் வரை தீவு முழுமையும் நகர்த்தப்பட்டு வந்துள்ளன. ஏன் சிலைகள் வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டன என்பது குறித்த ஆய்வுகள் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு சவாலாக அமைந்தன. ஒவ்வொரு முறையும் இச்சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. ஒரு கட்டத்தில் இந்தத் தீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழை வெள்ளம் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது. மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். உணவுப் பற்றாக்குறையால் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு இறந்தார்கள். கூடவே மோவாய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள். மக்கள் தொகை பெருமளவு குறைந்தது. எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்தனர். அந்த சமயத்தில் ஜேக்கப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார். இதனைத் தொடர்ந்து அடிமை வணிகத்திற்காக தீவுவாசிகளை பிடித்துக்கொண்டு போனார்கள். சில ஆண்டுகளுக்குப்பின்னர் ஒரு சிலர் தப்பி வந்தனர். அவர்கள் மூலமாக சின்னம்மை போன்ற தொற்றுநோய்கள் பரவின. இது போன்ற நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டிராத தீவுவாசிகள் இவற்றுக்கு எளிதில் பலியானார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. தனக்கென்று ஒரு மொழி, எழுத்து, நாகரீகம், கலை என கொண்டிருந்த இந்த தீவு மக்கள் எப்படி அழிந்து போனார்கள்? இவர்கள் எதற்காக கலைநயம் மிக்க கற்சிலைகளை தீவு எங்கிலும் செதுக்கினார்கள்? அந்தச் சிலைகள் எல்லாம் அவர்கள் வழிபடும் கடவுள்களா? பொதுவாக மக்கள் வாழும் பகுதி என்றால், ஆங்கே ஆண்டுதோறும் மக்கள் தொகை வளர்ச்சி அடைவதும், அந்தப்பகுதி செழுமை அடைவதுதானே இயல்பு! இந்த ஈஸ்டர் தீவில் மக்கள் படிப்படியாக அழிந்து வந்திருப்பது ஏனோ மர்மமாகவே இருக்கிறது. உலகில் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஈஸ்டர் தீவும் ஒன்று . பாக்ஸ் செய்தி ஈஸ்டர் தீவின் ஆதி குடிகள் தங்களுக்கு என்று ஒரு மொழியை வைத்திருந்தனர். அந்த மொழியின் பெயர் ரொங்கோரொங்கோ. இந்த மொழி குறியீட்டு எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளனர். ஸ்பானியர்கள் இந்த தீவிற்குள் நுழைந்ததற்கு பின்னே அதாவது 1770க்கு பின் ஸ்பானிஸ் வார்தைகளை லத்தீன் எழுத்துகளில் எழுதிவந்திருக்கிறார்கள். 1860க்கு பின் நுழைந்த மிஷனரியை சேர்ந்தவர்கள் ஈஸ்டர் தீவின் குறியீட்டு எழுத்துக்களை வடிவங்களின் புதிர்களை விடுவிக்க முயன்றார்கள். முயற்சி தோல்வி . ********************