சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 28

குட்டீஸ் கேள்வி பதில் 28 தேநீர் அருந்தும் பழக்கம் எங்கிருந்து வந்தது?/ஆக.17/ - செ. சிவசூர்யா, தாராசுரம். தேநீர் உலகில் பல நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். தேயிலைச் செடியிலுள்ள இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. தேயிலைகளை சூடான நீரில் வடித்துப் பின் அவரவர் விருப்பத்திற்கிணங்க பால் மற்றும் சர்க்கரையைக் கலந்தோ கலக்காமலோ அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர். தேயிலை, தென்கிழக்கு ஆசியாவில் வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா, திபெத் அடங்கிய பகுதியிலேயே தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியிலிருந்து இத்தேயிலைச் செடி 52 நாடுகளுக்கு அறிமுகமானது. சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அதாவது, இங்கேயே முதன் முதலில் தேயிலையை உண்பது அல்லது நீரில் ஊறவைத்துக் குடிப்பது சுவையானது என்பதை மனிதன் அறிந்து கொண்டான். நள்ளிரவில் மற்றும் நாள் முழுவதும் சூரியன் உதிக்கும் இடம் இருக்கிறதாமே, விரிவாக விளக்கம் கொடுங்க அங்கிள்! - ஏ. விஷ்ணுபதி, திருச்சி. நள்ளிரவிலும் சூரியன் ஒரு வட்டத் தட்டு போலத் தோன்றி ஜொலிக்கும் பகுதி வட தென் துருவ வட்டங்கள் ஆகும். இந்த இரு துருவங்களைச் சுற்றி 90 கி. மீ. வரையிலும் கோடையில் நடு இரவிலும் சூரியன் ஜொலிக்கிறது. பூமியின் வட பகுதி முடிந்து விடும் இடத்திற்கு ஆர்டிக் என்று பெயர். நார்வேயின் சவால்பார்ட் என்ற இடத்தில், ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் 23 வரை 24 மணி நேரமும் சூரியன் மறையாமலே, அந்த ஊரிலேயே சுற்றிக்கொண்டு காட்சி தருகிறது. அதற்கும் மேல் உள்ள பகுதிகளில் ஆண்டில் பாதி மாதங்கள் சூரியன் நாள் முழுவதும் காட்சி கொடுக்கும். அப்போது அப்பகுதியில் இரவே இருக்காது! துருவப் பகுதிகளில் 60 பாகை அட்ச ரேகைகளுக்கு மேல் இருக்கும் ஆர்டிக் பகுதியில் ஆர்டிக் பெருங்கடல், கனடா நாட்டில் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. அந்தப் பகுதியில் நடுநிசி நேரத்திலும் சூரியன் ஒளி வீசி கொண்டிருக்கும் அதிசயத்தைக் காணலாம். ஆர்டிக் வட்டப் பகுதிக்குள் குளிர் காலத்தில் சூரியனையே காணமுடியாத 24 மணி நேரமும் இரவும், கோடையில் 24 மணி நேரமும் சூரியன் மறையாது பிரகாசிக்கும் பகலும் காணப்படும். பின்லாந்தின் கால் பகுதி வட ஆர்டிக் வட்டத்தில் உள்ளதால் அதன் வடக்கு முனையில், கோடையில் 60 நாட்கள் சூரியன் அந்த ஊரை விட்டு நகராமல் மறையவே மறையாத நாட்களாக வியப்பூட்டும் . அறுசுவையில் எதை முதலில் சாப்பிடணும் ? -ஆர். சண்முகம், ராமநந்தீஸ்வரம். முதலில் இனிப்பையும், பிறகு வரிசையாக புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவை கொண்டவற்றையும் சாப்பிட வேண்டும் . நிறைவாக, தயிரில் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் உணவு நன்கு செரிக்கும் . இந்த அறுசுவைகளும் அன்றாட உணவில் சமச்சீராக இருப்பதே ஆரோக்கியம். *********************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக