சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்29

குட்டீஸ் கேள்வி பதில்29 பாலைவனத் தாவரம் நீர் இன்றி எப்படி வளர்கிறது? ஆக.24.12 - கு. பாஸ்கரன், பொறையார். தாவரங்கள் ஈரப்பதமான மற்றும் வறண்ட இடங்களிலும் வளர்கின்றன. ஈரப்பதமான இடங்களில் வளரும் தாவரங்களுக்கு நீர் வேண்டிய அளவு கிடைக்கும். ஆனால், பாலைவனத் தாவரங்களுக்கு நீர் அப்படிக் கிடைப்பதில்லை. இருந்தாலும் தாவரங்கள் வளர்கின்றன. இதற்கு ஏற்ற அமைப்பு அத்தாவரங்களுக்கு இருக்கிறது. கிடைத்த நீரை வீணாக்காமல் வைத்துக்கொள்ள உதவும் அமைப்புதான் அது. தாவரங்களில் உள்ள நீர் பெரும்பாலும் அவற்றின் இலைகளின் வழியாகவே ஆவியாகிறது. பாலைவனத் தாவரங்களுக்கு இலைகள் அதிகம் இருப்பதில்லை. சில தாவரங்களுக்கு மிகவும் சிறிய இலைகளே இருக்கின்றன. இதனால் இலைகள் மூலம் நீர் ஆவியாவது குறைக்கப்படுகிறது. இது தவிர அந்த இலைகளில் மேற்பகுதி தடிப்பாக அல்லது மெழுகு போல இருக்கிறது. தாவரங்களின் தண்டு திரண்டு இருக்கும். முட்கள் தான் உண்டு. இவையெல்லாம் நீர் ஆவியாவதைக் குறைக்கும். இவ்வாறு அந்த இடத்திற்கு ஏற்ப தாவரங்கள் அமைந்திருப்பதால் பாலைவனங்களில் அவை உயிர் வாழ முடிகிறது. * முத்து எப்படி உருவாகிறது? - அ. செழியன், வந்தவாசி. முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. கடலில் உள்ள சில புல்லுருவிகள் , சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. பூமியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் எது? -சேவ. ஜம்புகேஸ்வரன், கரூர். உலகம் தோன்றியபொழுது முதல் முதலில் தோன்றிய உயிரினம் நீரில்தான் என்பதனால் முதல் முதலாக இறைவன் மச்ச அவதாரம் என்ற ஒரு அவதாரத்தை எடுத்தார் என்று சமய நிபுணர்கள் சொல்கிறார்கள். மனிதனின் மூதாதையர் மீன்களாக கூட இருக்கலாம். டார்வின்னும் உலகின் முதல் உயிரினம் கடல் மார்க்கமாக வந்தது என்கிறார். உலகின் முதல் ஒரு செல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலில் உருவாகியிருக்க முடியும் என்பது அறிவியலாளர்கள் கருத்தாக உள்ளது. பூமியில் எந்த ஒரு ஜீவராசிகளுமற்ற கால கட்டத்தை பிரிகேம்ப்ரியன் யுகம் என்பார்கள். 57 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதல் உயிரினம் உருவான பிறகு, இன்று வரையுள்ள காலத்தை அறிவியல் வல்லுனர்கள் பேலியோசோயிக், மீசாசோயிக் , சீனோசோயிக் என மூன்று யுகங்களாகப் பிரித்துள்ளனர். ஒரு செல் நுண்ணுயிரிகள் பல செல் உயிரினங்களாகிப் பின்னர் அவைகள் தாவரங்கள், பிராணிகள் எனப் பரிணாம வளர்ச்சி அடைந்தன. அதன் பயனாக 51 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் முதுகெலும்புள்ள பிராணி தோன்றியது. உலகின் முதல் தாவர இனம் தோன்றியது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் உலகின் முதல் தரையில் வாழும் உயிரினம் தோன்றியது 37 கோடி ஆண்டுகளுக்கு முன் என்றும் கணகிட்டுள்ளனர். *******************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக