சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்கள் 6

குட்டீஸ் கேள்விபதில் 6 மார்ச்2 இந்தியாவின் முதல் தியேட்டர், முதல் திரைப்படம் எது? - டி.சி.சிவசண்முகம், அங்கம்பாக்கம். இந்தியாவில் தயாரான முதல் படம் ‘அரிச்சந்திரா’ 1913ல் வெளிவந்தது. மேல் நாட்டில் தயாரான ஊமைப்படங்கள், இந்தியாவிலும் திரையிடப்பட்டன. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை.’ இந்த ஊமைப்படம், 1896ம் ஆண்டு மும்பையில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் டுபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர். அவர், இந்தியாவில் ஒவ்வொரு நகரமாக அந்த பிலிம் பிரதியைக் கொண்டு வந்து திரையிட்டார். டுபான்ட், திருச்சிக்கு வந்து அப்படத்தை திரையிட்டார். அங்கு அப்படத்துக்கு ஏக வரவேற்பு. டுபான்டிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கொடுத்து ‘ஏசுவின் வாழ்க்கை’ திரைப்பட பிரதியையும், படம் காட்டும் கருவியையும் வின்சென்ட் என்பவர் வாங்கிக்கொண்டார். வசூல் குவிந்தது. வடநாட்டுக்கும் சென்று, இப்படத்தை திரையிட்டார். இதற்கிடையே, மேல் நாட்டில் இருந்து மேலும் பல சார்லி சாப்ளின் படங்களும் வரலாயின. இதனால் படங்களைத் திரையிட வின்சென்ட், அவருடைய சொந்த ஊரான கோவையில் 1914ம் ஆண்டு நிரந்தர சினிமா கொட்டகையை கட்டினார். அந்த தியேட்டரின் பெயர் ‘வெரைட்டி ஹால்.’ தென் இந்தியாவின் முதல் நிரந்தர சினிமா கொட்டகை இதுதான். இப்போது ‘டிலைட்’ என்ற பெயரில் உள்ளது. இதன்பின் சென்னையிலும், மற்ற இடங்களிலும் தியேட்டர்கள் தோன்றின. சென்னையில் கட்டப்பட்ட முதல் தியேட்டர் ‘கெயிட்டி’. *இரும்பு சத்தின் அவசியம் என்ன, அதிகம் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்தா? - வை. காமாட்சி, திருவிடைமருதுõர். இரும்பு சத்து குறைவால் வரும் நோய்கள் தான், உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று உலக சுகாதார மைய தகவல்கள் கூறுகின்றன. உலகின் 80% மக்கள் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் என்றும், அதில் 30% மக்கள் இரும்பு சத்து குறைவால் வரும் ரத்தசோகை கொண்டவர்கள் என்றும் கூறுகிறார்கள். பெரும்பான்மையான புரதங்கள், நொதியங்கள் போன்றவற்றிற்கு இரும்புசத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்லும் ஹீமோகுளோபின், மயோகுளோபின் என்பவற்றின் உள்ளடக்கமாக இரும்பு சத்து உள்ளது. உடலில் மூன்றில் இரண்டு பகுதி இரும்பு சத்து ஹீமோகுளோபின் ஆக ரத்தச் சிவப்பணுக்களில் இருக்கிறது. இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மயோகுளோபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும். உயிரணுக்களின் பெருக்கம், வளர்ச்சி போன்றவற்றிற்கு இரும்பு சத்து முக்கியமான மூலப்பொருள். இரும்புச்சத்து குறைவால் போதிய ஆக்சிஜன் இல்லாமல் தளர்ச்சி, வேலை செய்ய திறமை இல்லாமை, நோய் எதிர்ப்பாற்றல் முறையில் குறைபாடு ஏற்படும். ஒரு நாளைக்கு எவ்வளவு இரும்பு சத்து அவசியம்? மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று வகையான அளவு உண்டு. ஒன்று போதுமான அளவு. இரண்டாவது அதிகமான அளவு. மூன்றாவது இதற்கு மேலே இருந்தால் நச்சுப்பொருளாக மாறிவிடக்கூடிய அபாயத்தைக் குறிக்கும் அளவு என்று உள்ளது. * சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள்? - ஆர். ஸ்ரீநிஜா, ஸ்ரீரங்கம் சாம்பிராணியானது பாஸ்வெல்லியா செர்ராட் எனப்படும் தாவர குடும்பத்தை சேர்ந்த பிரங்கின்சென்ஸ் எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும். இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணியாக மாறுகிறது. இவை எரிந்தால் மிகுந்த மணத்தை பரப்பும். பிரங்கின்சென்ஸ் மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிசா மற்றும் தமிழகத்தில் கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் அதிகம் காணப்படுகிறது. சாம்பிராணியிலிருந்து ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. அந்த எண்ணையிலிருந்து வார்னிஷ் மற்றும் சோப்பு உருவாக்கப்படுகிறது. ******************************************************************************************************குட்டீஸ் கேள்வி பதில்கள் 5 பிப்.24/ *பாம்பு போல் தோலுரிக்கும் விலங்கு உண்டா? ஏன் தோலுரிக்க வேண்டும்? -ஜெயகவிதா, மயிலாடுதுறை. பாச்சை, வெட்டுக்கிளி, தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து நாம் சட்டையைக் கழற்றி விடுவது போல வெளியே எடுத்துவிடுகின்றன. நீங்கள் குறிப்பிட்டது போல பாம்பும் அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும். பாம்பு சட்டை உரிப்பது அதனுடைய வளர்ச்சிக்காக அல்ல. மேல் தோலினைக் கடித்து அதில் உள்ள சத்தினை உறிஞ்சும் பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீறல்கள், காயங்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் பாம்பு தன் தோலை உரிக்கின்றன. பாம்பு சட்டை உரிக்கும் நேரம் வந்தால், வெளிப்புறச் செல்களுக்கு உள்ளாக அருகில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது. சட்டையின் வால் பக்கத்தை சொரசொரப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது. மணிபர்ஸ், பெல்ட் இவை செய்வதற்காக சிலர் பாம்பின் தோலை உரிப்பதும் உண்டு. *தீயிலோ, கொதிக்கும் நீரிலோ கைப்பட்டால் படக் என்று எடுத்து விடுகிறோமே, அது எப்படி? - பழ. வீரபாண்டியன், பேரளம். உடலில் பெருமூளையின் முடிவு இல்லாமலேயே நிகழும் செயல்களை அனிச்சைச் செயல்கள் என்பார்கள். உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் நிகழ்கின்றன. உடலின் அனிச்சைச் செயல்கள் பல, உடலுடன் கூடப் பிறந்தவையாகும். அதாவது அவை இயல்பாக, பயிற்சி இல்லாமல் நிகழ்கின்றன. மேலும் பயிற்சியின் மூலம் அனிச்சைச் செயல்களை உடல் கற்றுக்கொள்ளும். துõங்கும் போது கொசு கடிக்கிறது. உடனே கை கொசுவை அடிக்கிறது. இந்த செயல் துõக்கத்திலேயே நடைபெறுகிறது. இதுவும் அனிச்சைச் செயல் தான். இந்த அனிச்சைச் செயல் செயல்படும் விதம் எப்படி எனில், கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்ட பிறகு கையை எடுப்பது மூளையின் கட்டளைப்படி நடப்பதாகும். ஆனால், நீரின் சூடு விரல்களில் பட்டதுமே நரம்புகள் அச்செய்தியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன. *நம் நாட்டின் தேசிய கீதம், தேசிய பாடல் இவற்றுக்கு உள்ள வித்தியாசம் என்ன? - எஸ். தங்மிஸ்தான், திருவேட்டக்குடி. தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திர நாத் தாகூர். தேசியப் பாடலை எழுதியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. தேசிய கீதம் 19ம் நுõற்றாண்டில் எழுதப்பட்டது. தேசிய பாடல் 18ம் நுõற்றாண்டில் எழுதப்பட்டது. இந்திய அரசியலமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ‘ஜன கண மன’ பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. 1911 டிசம்பர் 27ல் கோல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது. 1912ல் தாகூரின் ‘தத்துவ போதினி’ பத்திரிகையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதத்தை விட ‘வந்தே மாதரம்’ எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நுõல் வெளியானது. எனவே அதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும். 1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் ரவீந்திர நாத் தாகூர். *************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக