வியாழன், 9 செப்டம்பர், 2010

வரலாற்றைப் படம்பிடித்து

வரலாற்றைப் படம்பிடித்து
வரலாற்றில் இடம்பிடித்தவர்!

முதல் பெண் புகைப்படக் கலைஞரின் சாதனை
(11.9.10 தினமலர் பெண்கள் மலரில் பிரசுரம் ஆன என் கட்டுரை)

ஒரு நிருபர் ஒரு சம்பவத்தை நாலு பக்கத்திற்கு மாய்ந்து மாய்ந்து எழுதி விவரிப்பதை, திறமையான ஒரு புகைப்படக்காரர் ஓரிரு படங்களில் "நச்' என்று சொல்லி விடுவார். இதுதான் புகைப்படக்காரரின் பலம்!
புகைப்படக் கலைஞர்கள், டில்லியில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியில் உலகப் புகைப்பட தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.
இதன் சிறப்பம்சமே, ஹோமாய் வைரவாலா என்ற பெண்மணி எடுத்த புகைப்படங்கள்தான்!
யார் இந்த ஹோமாய்? இவர்தான், இந்தியாவில் பத்திரிகைப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய முதல் பெண்மணி!
இப்போது இவருக்கு 97 வயது.
1913 ம் ஆண்டு குஜராத்தில் நவ்சரியில் பிறந்த இவர், பாம்பே கிரானிக்கிள் பத்திரிகையில் புகைப்படக் கலைஞராகப் பணியில் சேர்ந்தார். ஒரு நாடக நடிகரின் மகளான இவரது ஆரம்ப வாழ்க்கையில் வறுமையின் சோகங்கள் அதிகம்.
பல சிரமங்களின் மத்தியில் பம்பாய் பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் டிகிரி முடித்தார். பிறகு ஜேஜே ஸ்கூல் ஆப் ஆர்ட்டில் டிப்ளமோ படித்து முடித்தார்.
புகைப்படம் எடுப்பதில் விருப்பம் கொண்ட ஹோமாய், தன்னைப் போலவே புகைப்படக் கலையில் ஆர்வம் நிறைந்த மானே ஷா என்பவரை நேசித்து திருமணம் செய்து கொண்டார்.
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான இந்தியாவை தன் கேமரா மூலமாக கருப்பு வெள்ளை படங்களில் அழகான ஓவியமாக பதிவு செய்தவர் இவர். அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள், விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் என 10 ஆயிரத்திற்கும் மேலான கருப்பு வெள்ளை படங்களை எடுத்திருக்கிறார்.
பத்திரிகைப் பணியில் இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்?
இதோ ஹோமாயே கூறுகிறார் :
""இல்லஸ்ட்ரேட் வீக்லி பத்திரிகையில் இருந்த போது எனக்கு கொடுக்கப்பட்ட முதல் அசைன்மென்ட் மறக்க முடியாத அனுபவம்...
அது 1938ம் ஆண்டு. பாம்பேயில் இருந்த ஒரு மகளிர் கிளப் அமைப்பு பிக்னிக் செல்ல இருந்தது. அவர்களைப் படம் பிடித்தேன். அந்தப் படம்தான் என் முதல் பிரசுரம்.
இதுபோல் மறக்கவே முடியாத இன்னொரு அனுபவம்... அது, இரண்டாம் உலகப்போர் மூண்ட நேரம். குண்டு வெடிப்பு பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் அவசர உதவி சேவை மையங்கள் போன்ற களங்களில் நேரடியாக இருந்து முழுநேரப் பணியில் ஈடுபட்டு போர்க்கால நிகழ்வுகளை உடனுக்குடன் புகைப்படம் எடுத்து கொடுத்து வந்ததை மறக்கவே முடியாது.
ராஷ்டிரபதி பவனில் மவுன்ட்பேட்டன் நமது தேசியக்கொடியை ஏற்றிய நிகழ்ச்சி, ஜவஹர்லால் நேருவுடன் அவர் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் நிற்கும் காட்சி, காந்திஜியுடன் கான் அப்துல் கபார் கான் மற்றும் சுசிலா நாயர் சேர்ந்து நிற்கும் காட்சி, நேரு தன் பேரப்பிள்ளைகளுடன் இணைந்திருக்கும் காட்சி, இந்திராவுடன் அவர் கணவர் பெரோஸ் காந்தி சேர்ந்து நிற்கும் காட்சி, தலாய்லாமா இளைஞராக இருந்தபோது படம் பிடித்தது போன்றவை எல்லாம் பசுமையான நினைவுகளாக என் மனதில் பதிந்துள்ளன.
இதுபோல் பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி நாள் சம்பவங்கள் மற்றும் சுதந்திர இந்தியாவின் ஆரம்பக்கட்ட நிகழ்வுகளைப் படம்பிடித்த அனுபவங்களும் மறக்கவே முடியாதவை'' என்கிறார் ஹோமாய்.
தனது பணிக்காலத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணற்ற படங்களை எடுத்திருக்கிறார் இவர். இவர் பதிவு செய்த படங்கள் இந்திய வரலாற்றில் ஒரு அங்கமாக இருப்பவை.
1969ம் ஆண்டில் இவரது கணவர் மானேஷா மறைந்தார். இதன்பின் மும்பையிலிருந்து வதோராவுக்கு இடம் பெயர்ந்தவர், அங்கு தன் வாழ்நாளை தனிமையில் கழித்து வருகிறார்.
இன்றைய சாதனை பெண்களுக்கு ஹோமாய் ஒரு முன்னோடி என்றால் மிகையல்ல!
தேவராஜன்

ஜீன்ஸ் அணிந்த மாடர்ன் பஞ்சாயத்து தலைவி! தேவராஜன்

ஜீன்ஸ் அணிந்த மாடர்ன் பஞ்சாயத்து தலைவி! தேவராஜன்
( 18.9.10 தினமலர் பெண்கள் மலரில் பிரசுரம் ஆன என் கட்டுரை)
"ஜீன்ஸ், டிசர்ட்டில் நவநாகரீக அழகியாக இருக்கும் ஷ்ஷவி ராஜ்வாட் என்ற இளம் பெண் படித்தது, இரண்டு முதுகலைப் பட்ட படிப்பு . சிட்டியில் வானுயர பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் ஒயிட் காலர் ஜாப். கை நிறை சம்பளம் என்று ஒரு உல்லாச வாழ்கையில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்தவர்,இன்ஸ்டென்ட் ஞானம் பெற்றவராய் சிட்டி ஸ்டைல் வாழ்க்கை, கார்ப்பரேட் கம்பெனி, கைநிறைய சம்பளம் இவற்றை எல்லாம் உதறி தள்ளிவிட்டு, ஒரு குக்கிராமத்தைத் தேடி சேவை செய்ய போகிறேன் என்று புறப்பட்டு, திடுக்கென அரசியலில் குதித்து ஒரு கிராமத்துக்கு பஞ்சாயத்து தலைவியாகி, அந்தக்கிராமத்துக்கு பல சேவைகள் செய்து அந்தக்கிராமத்தை முன்னேற்றுகிறார் ஒரு மாடர்ன் இளம் பெண்!' இது ஏதோ ஒரு திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி என்றோ, ஒரு சமூக நாவலின் கதை கரு என்றோ நினைத்து விடாதீங்க. உண்மையில் இது கதையல்ல நிஜம் தான்!
ராஜஸ்தானில் 1980ல் பிறந்தவர் ஷ்ஷவி ராஜ்வாட். இவர், பெங்களூரில் இருக்கும் ரிஷி வேலி ஸ்கூலில் பள்ளிப்படிப்பும், லேடி ஸ்ரீராம் கல்லுõரியில் எம்பிஏ, ஐஐஎம் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்து பட்டம் பெற்றவர். ஐந்தாறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.
தன்னுடைய தாத்தாவின் பூர்வீக கிராமத்துக்கு வருகிறார். அந்தக் கிராமம் ஜெய்பூரிலிருந்து 60 கிலோ மீட்டரில் துõரத்தில் இருக்கும் சோடா கிராமமாகும்.
இந்தக்கிராமத்துக்கு நம் தேவை அதிகம் இருக்கிறது என்று எண்ணி, பிப்ரவரி 4, 2010 ல் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவியானார். இந்தியாவில் இரு பட்டப்படிப்பு படித்து, ஜீன்ஸ் டிசர்ட்டில் இந்த இளம் வயதில் பஞசாயத்து தலைவியாக கலக்கும் பெண் இவர் ஒருத்தராகத்தான் இருப்பார் போலும்.
"சமூக சேவைப் புரியும் குணம் அது என் ரத்தத்தில் கலந்திருக்கிறது' என்று பளீச் சென்று சொல்லும் ராஜ்வாட், சோடா கிராமத்திற்கு பஞ்சாயத்து
தலைவியானப்பின் அதிரடியாக அந்தக்கிராமத்திற்கு பல மாற்றங்களை, முன்னேற்றங்களை கொண்டுவர முனைந்தார். அதற்கான சாத்திய கூறுகளை வரையறுத்துக்கொண்டார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் நுõறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை முழுமையாக தன் கிராமத்தில் செயல்படுத்தினார். அரசு கொண்டுவந்திருக்கும் நுõறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தைபற்றி விளக்கமாக கிராமத்து மக்களிடம் எடுத்துக்கூறி, அவற்றின் நன்மைகள், கிராம முன்னேற்றம் எல்லாம் எடுத்துச் சொல்லி எல்லாரையும் அதில் ஆர்வமாக ஈடுபட வைத்தார்.
ஒரு அலுவலகத்திற்கு செல்வது போல தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கிராமத்தில் வந்து இருந்து மக்கள் குறை கேட்பது, நடக்க÷ வண்டிய பணிகள் பற்றி ஆலோசனை நடத்துவது, திட்டமிடுவது என சுறுசுறுப்பாக இருப்தைக் கண்டுகிராம மக்கள் பாட்டன் 15 ஆண்டில் செய்யாததை இந்தப் பெண் நிச்சயம் செய்வாள் என்று முழுமையாக நம்பினர்.
ராஜ்வாட்டும் கிராமத்திற்கு தேவையான கோரிக்கைகள், செலுகைகள் பெற அந்த மாவட்ட கலெக்டர், பிடிஓ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அவ்வப்போது அணுகி, கிராமத்திற்கு தேவையான வசதிகளை பெற்று, கிராம முன்னேற்றத்திற்கு உதவினார். ராஜ்வாட்டின் கிராம சேவையில்
கிராமத்தில் ஊழல் என்று பேச்சுக்கே இடம் இல்லாமல் போனது. அரசு சலுகைகள் முழுமையாக கிராமத்திற்கு கிடைக்க வழிசெய்தார்.

இவர் பஞ்சாயத்து தலைவியாக இருக்கும் சோடா கிராமத்தில் போலீசுக்கு வேலைஇல்லை. கணவன் மனைவியை கொடுமை படுத்துவதில்லை. விவசாயிகளின் குழந்தைகளுக்கு தன் வீட்டுத் தோட்டத்தில் பூங்கா அமைத்துக்கொடுத்துஅவர்களுடன் விளையாடிவருகிறார்.
வீடில்லா மக்களுக்கு இருக்க டென் அமைத்துக்கொடுத்திருக்கிறார். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல சவ்வாரி குதிரைகள் வாங்கிகொடுதிருக்கிறார்.
கிராமத்தவர்களின் மனப்பாங்கை மாற்றி உள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சுகாதாரமான குடிநீர், வேலைவாய்ப்புகள் பெருக்கித் தந்திருக்கிறார். சாலை வசதி செய்திருக்கிறார். மேலும் தன் கிராம முன்னேற்றத்திற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டமிட்டுவரும் இவருக்கு தான் படித்து பெற்ற பட்டம் பல வகையிலும் உதவுகிறது என்கிறார்.
ராஜ்வாட்டின் தந்தை நரேந்திரசிங் படித்த தன் மகள் இப்படி ஒரு கிராமத்தில் பஞ்சாயத்துதலைவியாகி விட்டாளே! என்று வருத்தம்கொள்கிறாரா, என்று நாம் நினைத்தால், அவரோ," எனக்கு ஒரே மகள் ராஜ்வாட். அவர் விரும்பம் என்னவோ அதை முழுமையாக, சுதந்திரமாக செய்கிறார். நான் ஏன் தலையிடுகிறேன்? என்பவர் என்னைத்தவிர என் குடும்பத்தில் எல்லாருமே ராணுவத்தில் இருந்தவர்கள். ராஜ்வாட்டின் மாமா கோல்ப் வீரர். என் அக்கா பையன் தேசிய பிட்னஸ் டிரைனர், அக்கா மகள் கராச்சியில் 16 ஸ்கூல் நிர்வகிக்கிறார். இப்படி அவரவர்கள் அவர்கள் விருப்பப்படி இருக்கிறார்கள்' என்கிறார்.
மேலும் ராஜ் வாட் பெங்களூரில் பழைய குருகுலக் கல்வி போல ஒரு பள்ளியில்தான் படித்தாள். அங்கு யூனிபார்ம் கிடையாது. தேர்வு கிடையாது. அங்கு அவள் படித்ததினால் தான் அபார திறமையும் அறிவும் பெற்றாள். ஆன்மிக சக்தியையும் பெற்றாள். அதனால்தான் அவளுக்கு சமூக சேவை என்பது ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்று பெருமைபடுகிறார்.
தேவராஜன்

இந்திய சுதந்திர களத்தில் பெண்கள்! தேவராஜன்

இந்திய சுதந்திர களத்தில் பெண்கள்! தேவராஜன்
( 14.8.10 தினமலர் பெண்கள் மலரில் பிரசுரமான கட்டுரை)

இந்திய விடுதலைக்காக கண்ணீரும், செந்நீரும் சிந்தியவர்களும், இன்னுயிர் தந்தவர்களும் ஏராளம்... ஏராளம்! வரலாற்றில் பெரும்பாலும் ஆண்களின் தியாகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசப்படுகின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வீர தீரத்துடன் குதித்த,பெண் தியாகிகள் ஒன்றா, இரண்டா? பட்டியல் போடலாம்! நம்மில் பலரின் கவனத்திற்கு வராத சில பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளை இந்த சுதந்திர திருநாளில் நினைவுகூர்வோமாக.
இந்திய சுதரந்திர போராட்டக்களத்தில் பெண் வீராங்கனைகள் பலர் பங்கு கொண்டனர். 1817 முதல் பீமா பாய் ஹோல்கர், ராணி சன்னமா ஆகியோர் முதல்முதலாக கிழக்கிந்திய கம்பெனிகாரர்களுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தினார்கள்.
ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு, கஸ்துõரிபா காந்தி, அருணா ஆசாப் அலி, இந்திரகாந்தி, கமலா நேரு, விஜயலட்சுமி பண்டிட், மாடம் கமா, பேகம் ஆசாத் மகால், பத்மஜா நாயுடு, சுசெதா கிர்பாலனி போன்றவர்கள் சுதந்திரத்திற்கு போராடியவர்கள். இவர்களில் சிலரை தெரிந்து கொள்வோம்.
பத்மஜா நாயுடு:
தாயைப் போல பிள்ளை நுõலைப் போல சேலை என்பதற்கு உதாரணமாக இருந்தவர். பத்மஜா நாயுடு. இவர், கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் மகள். தன் அன்னையின் இந்திய சுதந்திர வேட்கையைக் கண்டு தானும் இந்திய சுந்திர போராட்டத்தில் ஈடுபட விரும்பினார். தன்னுடைய 21 வயதில் ஐதராபாத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணை நிறுவனராக தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டவர்.
இந்தியர்களிடம் சுதேசி உணர்வை ஊட்ட நம் பொருட்களை நாம் வாங்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையை த்துõண்டி கதர் இயக்கத்தை ஆரம்பித்தார். இதன் காரணமாக இந்தியர்கள் வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதை புறக்கணித்தனர்.
ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்துகொண்டு 1942ல் சிறை சென்றார். இந்திய சுதந்திரத்திற்குப் பின் மேற்கு பெங்காலில் கவர்னராக நியமிக்கப்பட்டார். தன் வாழ்நாளை இந்திய சுதந்திரத்திற்கும், மக்கள் சேவைக்கும் அர்ப்பணித்துக்கொண்ட பத்மஜா நாயுடு ரெட் கிராஸ் சேவையிலும் ஈடுபட்டார்.
சுசேடா கிர்பாலனி:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுசேடா கிர்பாலினியின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றவர். காந்தியின் தேச பற்றினை பின்பற்றி நாட்டுக்காக உழைத்தவர். 1946 ல் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1958 முதல் 1960 வரை இந்திய தேசிய காங்கிரசில் பொது செயலாளராகவும், 1963 முதல் 1967 வரை உத்திதரபிரதேச முதல்வராகவும் இருந்தார். 1947 ஆகஸ்ட் 15ல் நாடாளு மன்றத்தில் வந்தே மாதரம் பாடலைப் பாடியவர்.
பேகம் ஹசாத் மகால்:
ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர் பேகம் ஹசாத் மகால். இளவரசியாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர். அப்படி ஒரு வாழ்க்கை அமைந்தும், ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பது ஆச்சரியமல்லவா! இந்தியவின் முதல் சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இருந்தார். பிரிட்டிஷ் சட்டங்களுக்கும், கப்பம் கட்டுவதற்கும் எதிராகவே செயல்பட்டு தன் வீர தீரத்தைக்காட்டினார்.
1879 ம் ஆண்டு மறைந்த இவருக்கு 1984 மே 10ம் தேதி இந்திய அரசு அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டு பேகம் ஹசாத்தின் தியாகத்தை கவுரவித்தது.
மடாம் கமா:
இந்தியாவின் சுதந்திர தேசியக்கொடி பிறந்து விட்டது. அடுத்து, இந்தியாவுக்கும் சுதந்திரம் பிறந்து விடும் என்று அறைகூவலிட்டவர் மடாம் கமா. இவரின் எழுச்சிமிகு பேச்சுகளும், செயல்பாடுகளும் இளைஞர்களை சுதந்திரப் போராட்ட களத்தில் பெருமளவும் குதிக்க வைத்தது.
அவர் வடிவமைத்த மூவர்ணக்கொடி பச்சை, காவி மற்றும் சிகப்பு நிற பட்டைகளைக் கொண்டிருந்தது. சிகப்பு நிறம் பலத்தையும், காவி வெற்றியையும், பச்சைகம்பீரத்தையும் அர்த்தப்படுத்தியும், எட்டு தாமரைகள் எட்டு மகாணத்தையும் குறித்தது. வந்தே மாதம் என்ற வாசகம் காவி மத்தியில் எழுதப்பட்டிருந்தது. சூரியனும், நிலவும் இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் கொண்டிருந்தது. இந்த கொடி வீர் சவர்க்கர் உதவியுடன் வடிவமைத்தார்.
வெளிநாடுகளுக்குச் சென்று பிரிட்டீஷாருக்கு எதிரான ஆதரவினை திரட்டியவர் இவர்.
அருணா ஆசாப் அலி:
ஹரியனாவில் பெங்காலி பிரமொ குடும்பத்தில் பிறந்தவர் அருணா. லாகூர் மற்றும் நைனிடலில் கல்வி பயின்று ஆசிரியர் பணிபுரிந்தவர். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த ஆசாப் அலியை சந்தித்த அவர், பொது சேவையில் ஈடுபட்ட அவர்பால் ஈர்க்கப்பட்டு 1928ல் அவரை மணம்முடித்தார். இருவருக்கும் மதம் வேறு. 20 வயதுக்கு மேல் வித்தியாசம் வேறு.
திருமணத்திற்குப்பிறகு, காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட இவர், உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்குகொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
திகார் சிறையில் கைதிகளை நடத்தும் முறையில் பாகுபாடு இருப்பதை அறிந்து அதை நீக்க போராடியவர்.
இவருக்கு 1964ல் லெனின் அமைதி விருதும், இந்திய சிறந்த குடிமகள் விருதும், பாரத் ரத்னா விருதும், அவர் உருவ தபால் தலையும் வெளியிட்டு இந்திய அரசு கவுரவப்படுத்தியது.
இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து வெளிநாட்டு பெண்களும் போராடினார்கள். அவர்களில் சிஸ்டர் நிவேதா, மிர்ரா அல்சா, அன்னிபெசன்ட், மீரா பென் மற்றும் சர்ளா பென் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
தேவராஜன்

"எனக்கு வீடே பள்ளிக்கூடம் தான்!'

"எனக்கு வீடே பள்ளிக்கூடம் தான்!'
எழுத்து சித்தர். பாலகுமாரன்

( செப்டம்பர். 5 ஆசிரியர் தின சிறப்புக்கட்டுரைக்காக எழுத்தாளர் பாலகுமாரனை பேட்டி எடுத்து, தினமலர் பெண்கள் மலர் ( செப்டம்பர் 4, 2010) இதழில் பிரசுரமான என் கட்டுரை. தேவராஜன்

என் அம்மா சுலோச்சனா ஒரு தமிழாசிரியை. தங்கை சிந்தா ரவி ஒரு ஆசிரியை, சித்திகள் கவிதாயினி, அலங்காரம், ஜெயலட்சுமி இவர்களும் ஆசிரியைகள். இப்படி வீட்டில் பெண்கள் எல்லாமே ஆசிரியர்களாக இருந்ததால் எனக்கு வீடு, பள்ளிக்கூடம் என்று தனியாகப் பிரித்து பார்க்க முடியாதப்படி என் வாழ்வில் அமைந்துவிட்டது.
வீட்டில் எல்லோரும் படித்தவர்களாக இருந்ததால் வீடெல்லாம் நிறைய புத்தகங்கள் நிரம்பியிருக்கும்.
நான் எழுத்தாளனாக வர, ஆசிரியராக, குருவாக,தாயாகவும் அமைந்த என் அம்மா சுலோச்சனாவைத்தான் சேரும் என்பதை நன்றியோடு பெரிமிதமாக நினைவுகூருகிறேன்.
குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு என் அம்மா பாரதியார் கவிதைகள், புறநானுறு, குறுந்தொகை, கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்ய பிரபந்தம், நீதிக்கதைகள் போன்ற இலக்கிய, இதிகாச, புராணங்களை படிப்படியாக பொருள் விளங்க சொல்லிக்கொடுத்து, அதை மனப்பாடம் செய்யவும் வலியுறுத்தினார். இதனால் எனக்கு சிறுவயது முதலே அறிவுதிறன் பெருகியது. 15 வயதினில் எனக்கு இலக்கிய, இதிகாச, புராணங்களில் உள்ள பாடல்களை மனப்பாடமாக சொல்லும் திறன் வந்துவிட்டது. இன்று வரை எனக்கு ஞாபகசக்தி இருப்பதற்கு காரணம் சிறுவயதினில் அம்மா சொல்லித்தந்த மனப்பாட முறைதான்!
எனக்கு ஆசிரியராகவும் அம்மாவாகவும் இருந்து அவர் வழிகாட்டிய நெறிகள்தான் என்னை ஞானமார்க்கத்தில் இட்டுச் சென்றது, கடவுளிடத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை, குருவைத்தேடல், வாழ்வில் ஒழுக்கம் எல்லாம் அம்மா போதித்தவைகளே! அம்மா போதனையில் தான் நான் எழுத்தாளன் ஆனேன். கடவுளைத் தீர்க்கமாக நம்பும் பக்தன் ஆனேன். குரு தேடலில் யோகி ராம் சுரத்குமாரை சரணடைந்தேன். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றிலிருந்து விடுபடும் மனவலிமையை பெற்றேன். ஆசிரியராக, அம்மாவாக, நல்ல சிநேகிதியாக அமைந்த அம்மா சுலோச்சனா எனக்கு தந்த காணிக்கை அறிவுச்சொத்து, கல்விச் செல்வம். இந்த ஆசிரியர் தின திருநாளில் அம்மாவுக்கு உளபூர்வமான என் நன்றியை சொல்வதின் மூலம் நன்றிகடன் செலுத்தியவனாகிறேன்.
பேட்டி: தேவராஜன்