புதன், 9 ஜனவரி, 2013

பாரத மாதா போற்றுதும்! /73/ 27.01.2013/

பாரத மாதா போற்றுதும்! /73/ 27.01.2013/ நேற்று குடியரசு தினம் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். சுதந்திர தினம், குடியரசு தினம் கொண்டாடுவதிலும் பக்தி கலந்திருக்கிறது. இது தேசபக்தி. நம் தேசத்தை தாயாக நினைத்து மதிக்கவும், வணங்கவும் செய்கிறோம். பூமியையும் வணங்கிட கற்றுத்தந்தது இந்து மதத்தின் சிறப்பு! பூமியின் மகள்களாக சீதையையும், ஆண்டாளையும் உருவகம் செய்து பெருமை சேர்த்தது இதிகாசம். பூமி பூஜை கடைப்பிடிக்கப்படுவதும் ஒருவகையில் வழிபாடுதானே! ஒரு முறை தமிழகம் வந்த விவேகானந்தர் இப்போதைய கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு பகலாக தியானம் செய்தார். பாரத மாதாவை மனதில் நிறுத்தி அந்த தியானம் நடந்தது. முதல் நாள் தியானத்தில் விவேகானந்தருக்கு மனக்கண்ணில் பாரத மாதா சோகமாக காட்சியளித்தாள். இரண்டாம் நாள் உடம்பினில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கண்ணீர் வடித்தாள். மூன்றாவது நாள் சங்கிலிகள் உடைத்தெறியப்பட்டு சந்தோஷமாக காட்சியளித்தாள். “தாயே, தாங்கள் எனக்குக் காட்சி தந்த காட்சிகளில் எனக்கு என்ன உணர்த்துகிறாய்?” என்றார் விவேகானந்தர். “ இப்போது அந்நியரிடம் அடிமைப்பட்டு பல இன்னல் படுகிறேன். கை, கால்கள் கட்டப்பட்டு சுதந்திரம் இல்லாமல் அல்லல்படுகிறேன். விரைவில் நான் சுதந்திரம் பெற்று பூர்ண நிம்மதியில் இருப்பேன்!” என்றுரைத்தாள் பாரத மாதா. இந்த சம்பவம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு நிகழ்ந்தது. பிறகு, விவேகானந்தருக்கு தியானத்தில் உணர்த்தியபடி, பாரத மாதா சுதந்திரம் பெற்றாள். பாரதமாதாவை வழிபட்டு, பாரதமாதாவிடம் பேசிய இந்த தேச பக்தியை விவேகானந்தர் வாழ்க்கையில் இருந்து நாம் அறிகின்ற விஷயம். இறைவனுக்கு பள்ளியெழுச்சி தோத்திரங்கள் இருப்பது போல. பாரத மாதாவுக்கும் பாரதமாதா பள்ளியெழுச்சி தோத்திரம் பாடினார் பாரதியார். நாம் பாரத மாதாவை வணங்குவதன் மூலம் நாம் செய்ய வேண்டிய கடமைகள் சில இருக்கின்றன. ஒரு தாய் பெற்ற குழந்தைகளில் ஒரு குழந்தை திருடனாக, ஒரு குழந்தை முரடனாக, ஒரு குழந்தை குடிகாரனாக, ஒரு குழந்தை நல்லொழுக்கம் இல்லாதவனாக, ஒரு குழந்தை ஆதரவற்றவனாக, ஒரு குழந்தை ஏமாற்றுக்காரனாக, ஒரு குழந்தை வன்முறையாளனாக, இப்படியெல்லாம் இருந்தால் அந்த தாய் எப்படித் துன்புறுவாளோ, அதுபோலத்தான் எல்லாரையும் காக்கும் இந்த பூமித்தாயும் துன்புறுவாள். ஒரு தாய்க்கு தன் பிள்ளைகள் எல்லாருமே நல்ல பிள்ளைகளாக, கெட்டிக்காரர்களாக, நேர்மையானவராக, இருந்தால்தானே மகிழ்ச்சி. பாரத தாய்க்கு பாரதப் புதல்வர்களான நாம் அவள் மகிழ்ச்சி பெறும் வகையில் வாழ்வதுதான் பாரத மாதவுக்கு நாம் செய்யும் வழிபாடாகும். அதை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தினமும் குடியரசு தினமும் கொண்டாடுவதுதான் தேச பக்தி! - தேவராஜன். ***********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக