திங்கள், 21 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்49

குட்டீஸ் கேள்வி பதில்49 / 11.01.2013/ கறுப்புப் பெட்டிபற்றி சொல்லுங்க அங்கிள்! - பா. பார்வதி, பேரளம். ‘கறுப்புப் பெட்டி’ என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு முக்கிய கருவி. விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்தக் கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும். இந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு விமானத்தில் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும். பெரிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் ‘பிளைட் டேட்டா ரெகார்டர்.’ இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விவரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் ‘வாய்ஸ் ரெகார்டர்.’ இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும். கறுப்புப் பெட்டியை 1953ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுபிடித்தார். கறுப்புப் பெட்டியின் நிறம் கறுப்பு அல்ல, ஆரஞ்சு நிறம். ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும். விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து ‘பீப்’ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது. *நாய், படுக்கும் முன் அந்த இடத்தை இரண்டு அல்லது மூன்றுமுறை சுற்றி வந்த பிறகே படுக்கிறது, ஏன்? - ஆர். கோகுல், அரக்கோணம். நாய் ஒரு இடத்தைச் சுற்றும்போதே காற்று எந்த திசையிலிருந்து வீசுகிறது என்பதை உணர்கிறது. அதைத் தொடர்ந்து காற்று வீசும் திசைக்கு எதிராக உட்கார்கிறது; அல்லது படுக்கிறது. இச்செயல் மூலம், நாய் தன் அற்புதமான முகரும் திறன் காரணமாக தன் எதிரிகளின் நடமாட்டத்தை விரைவில் உணர்ந்து கொள்கிறது. அதனால் எதிரியின் தாக்குதலில் இருந்து எளிதில் தப்பிக்கவும் முடிகிறது. வெப்பச் சலனம் என்றால் என்ன? -ஆர். ஸ்ரீநிஜா, ஸ்ரீரங்கம். அதிகமாக வெயில் அடிக்கும்போது கடல் காற்று உள்ளே வந்தால் காற்றில் ஈரப்பதம் சேர்ந்து ஆங்காங்கே மேக கூட்டம் உருவாகும். இதைத் தான் வெப்பச் சலனம் என்கிறார்கள். இந்த மேகக்கூட்டங்கள் எல்லா இடத்திலும் இருக்காது. அதனால்தான் ஓரிடத்தில் மழை பெய்தால் இன்னொரு இடத்தில் மழை இருக்காது. கோடை சமயங்களில் வெப்ப சலனம் அதிகம் ஏற்படும். சூரியன் பூமியை சூடாக்குகின்றது. பூமி உள்வாங்கிய வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் அருகிலுள்ள காற்றை சூடாக்குகின்றது. சூட்டினால் காற்றினுடைய அடர்த்தி குறைவடைவதனால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்ப நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் என்று கூறுவர். பூமியின் மேற்பரப்பானது புல் தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை என மாறுபடுவதால் ஒரே சூட்டில் இருப்பதில்லை. இதனால் காற்றும் வெவ்வேறு உஷ்ணத்தில் சூடேற்றப்பட்டு பல இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும் மேலெழும்புகின்றது. இவ்வாறு குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கின்றது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து வளிமண்டலத்திலுள்ள துõசு துணிக்கைகள், உப்பு ஆகியவற்றின் மீது மையம் கொண்டு திரண்டு, பரவி திரவமாகவும், ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய சிறு நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் மேகங்கள் காற்றின் உதவியுடன் ஒன்று திரட்டப்பட்டு சில படிமுறைகளுக்குப் பின் மேகங்களிலுள்ள நீர் ஒடுங்கி மழையாக பூமிக்கு வந்து விழுகின்றது. ..................................................................********************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக