சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்36

குட்டீஸ் கேள்வி பதில்36 ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் நிற்கிறதே, எப்படி? - எஸ். எம். முகேஷ், அரையபுரம். 12.10.2012 ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரம் நிலையாக நிற்க முடியும். அவ்வாறு நிற்பதற்கு ஹெலிகாப்டர் பெற்றுள்ள சிறப்பு தன்மைகள் சில உண்டு. ஹெலிகாப்டர் மேலே ஒரு பெரிய விசிறி இருக்கும். அந்த விசிறி சுழலும் போது ஹெலிகாப்டர் மேல் நோக்கி எழும்பும். ஹெலிகாப்டரில் உள்ள விசிறி சுழலும் போது அது காற்றைக் குடைகிறது. அப்படி காற்று குடையும் போது ஹெலிகாப்டர் மேலே இழுக்கப்படுகிறது. அதாவது திருகாணியைச் சுழற்றினால் அது மரத்துக்குள் போகிறதல்லவா? அதேபோல, திருகு வடிவத்தில் காற்றைக் குடையும் படி அந்த விசிறிகள் அமைந்திருக்கின்றன. விசிறிகள் மேலே துõக்கப்படும்போது ஹெலிகாப்டரும் மேலே உயர்த்தப்படும். அப்போது மேலே உயர்த்துக்கிற விசை ஹெலிகாப்டரின் எடைக்குச் சமமாக இருக்கும்போது ஹெலிகாப்டர் அந்தரத்தில் அசையாமல் நிற்கும். விசிறியோடு சேர்ந்து ஹெலிகாப்டரும் சுழலாமலிக்க அதன் வால்பகுதியில் ஒரு விசிறி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கும். * துணியில் கூரான ஊசியை செலுத்தினால் ஈஸியாக நுழைகிறது, ஏன்? - பிரசாந்த், சீர்காழி. கூரான ஊசியை துணியில் செலுத்தும்போது முழுச் சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. அதனால் ஊசி துணியில் எளிதாக நுழைய முடிகிறது. மழுங்கலான ஆணியின் முனையின் பரப்பு அதிகமாயிருப்பதால் அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியால் எளிதாக துளைத்துச் செல்ல முடிவதில்லை. அழுத்தத்தைக் குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஒரு சக்தியின் செயல், அது ஒரு சதுர சென்டிமீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நுõறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது. * பாம்புக்கு கால்கள் இல்லை. பிறகு எப்படி ஓடுகிறது? - ஆர். கார்த்திகேயன், திருவண்ணாமலை. கார்த்திக்கு என்ன வயசு என்று தெரியவில்லை. எப்படி எல்லாம் யோசிக்கிறாய்! கால்கள் இருந்தால்தான் ஓடமுடியுமா, என்ன? பாம்புக்குக் கால்கள் கிடையாது என்பது உண்மைதான். ஆனால், பாம்பின் வயிற்று பகுதி புறச் செதில்களால் அமைந்திருக்கும். அந்த புறச் செதில்கள் உதவியால் பாம்பு தரையைப் பற்றி ஓடுகிறது. அந்தச்செதில்கள் பின்புறமாகத் தரையில் பிடிக்கும்படி அமைந்துள்ளது. எனவே பாம்பு முன்னோக்கி நகர்ந்து, பின்னர் பின்னோக்கி நகரும் போது, செதில்கள் தரையில் உராய்ந்துக்கொள்வதால் அந்த உராய்வு பிடிப்பின் மூலம் உந்திக் கொண்டு மறுபடியும் முன்னோக்கி நகர்ந்து, இப்படித்தொடர்ந்து செல்கிறது. ******************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக