சனி, 2 பிப்ரவரி, 2013

எது வாழ்க்கை தரம்? /74/ 3.02.2013/

எது வாழ்க்கை தரம்? /74/ 3.02.2013/ “அவனுக்கு என்னப்பா...சோறு கண்ட இடம் சொர்க்கம். திண்ணை கண்ட இடம் கைலாசம்” என்று சிலரைப் பார்த்து சொல்ல கேட்டிருக்கலாம். இதில்தான் வாழ்க்கையின் அர்த்தமே இருக்கிறது. எல்லாருக்கும் பசி தீர சாப்பாடு, மானத்தையும், குளிர் வெயிலையும் காப்பாற்றப் போதுமான உடை, வசிப்பதற்கு ஒரு சின்ன வீடு. இந்தத் தேவைகள் வாழ போதுமானதுதான். இந்தத் தேவைகள் பூர்த்தியானதும், இதை அடைய உதவிய இறைவனுக்கு நன்றி செலுத்தவும், நம்மை படைத்த இறைவனின் அருளை அடைய பக்தியில் ஈடுபடுவதாக நம் வாழ்க்கை செல்ல வேண்டும். பெரிய பங்களா, பொன்,கார் என சுகபோகத்திற்கான ஆடம்பர பொருட்களைப் பெற இரவு, பகலாக உழைத்து வருவதால் மட்டும் ஒருவர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடும் என்று கருதுவது உண்மையல்ல. உண்மையில் வாழ்க்கைத் தரம் என்பது வெளி பொருட்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான். நாம் மேலைநாட்டினர் மாதிரி இருக்க நினைக்கிறோம். போகத்தின் உச்சிக்குப்போன மேல் நாட்டினர் அதில் நிறைவே இல்லை என்பதால் நம்முடைய யோகத்துக்கு, வேதாந்தத்துக்கு, பக்திக்குக் கூட்டம்கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய சிஷ்யர்களுக்கு ஒரு குரு அனுபவ பாடத்தை இப்படி போதித்தார்: ஒரு பாத்திரத்தில் சுவையான உணவை கொண்டு வந்தார். கூடவே சாப்பிட பித்தளை, செப்பு, இரும்பு, வெள்ளி தட்டுகளை எடுத்து வைத்தார். சீடர்கள் ஆளுக்கு ஒரு வெள்ளித்தட்டில் உணவை வைத்து சாப்பிட ஆரம்பித்தனர். குரு சொன்னார்: ‘நீங்கள் எல்லாரும் விலை உயர்ந்த வெள்ளித்தட்டை எடுத்துக் கொண்டுள்ளீர்கள். வாழ்வில் மிகச் சிறந்தவைகளையே அடைய வேண்டும் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. நல்லது. ஆனால் உங்கள் பிரச்னைகளின் பிறப்பிடமே அதுதான். தட்டுகளின் தரத்தினால் உணவின் சுவை நிச்சயிக்கப்படுவதில்லை. உங்களுக்கு வேண்டியது சுவையான உணவு. ஆனால் நீங்கள் விலையுயர்ந்த தட்டுகளில் தேடினீர்கள். அதுமட்டுமல்ல; மற்றவர்களின் கைகளில் இருந்த தட்டுகளையும் கவனித்தீர்கள். வாழ்க்கை என்பதை உணவு என்று வைத்துக் கொள்ளுவோம். உங்களது உழைப்பு, வருமானம், அதனால் இந்தச் சமூகத்தில் உங்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்து இந்த தட்டுகளைப்போல. இந்தத் தட்டுகள் உணவை சாப்பிட பயன்படும் வெறும் சாதனங்கள்; அவ்வளவே. இவற்றால் நமது வாழ்க்கை தீர்மானிக்கப்படுவதில்லை. இவை நம் வாழ்க்கையின் தரத்தை அளவிடும் அளவு கோல் அல்ல. சில சமயங்களில் தட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்க்கை என்னும் ருசி மிகுந்த உணவை அனுபவிக்க மறந்து விடுகிறோம். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் சரியான அளவில் தயாரிக்கப்பட்ட சுவையான உணவையே கொடுத்திருக்கிறார். நாம் அதனை ஏதேதோ அளவுகோல் கொண்டு மதிப்பிட்டுப் பார்க்கிறோம்” என்றார். -தேவராஜன். *****************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக