வியாழன், 28 பிப்ரவரி, 2013

மகா சிவராத்திரி மகிமை

மகா சிவராத்திரி மகிமை!/78/3.3.2013 நாகரீக மோகத்தில் நமது உடை, உணவு, வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிட்டது. அது வழிபாட்டையும் விட்டு வைக்கவில்லை. உதாரணம் மகா சிவராத்திரி. வருகிற 9ம் தேதி சனிக்கிழமை மகாசிவராத்திரி விரத நாள் வருகிறது. இப்போதெல்லாம் மகாசிவராத்திரி விரத நாள் என்பது வியாபார திருநாளாகிவிட்டது. சில பக்தர்களை மகிழ்விக்க ஊரெல்லாம் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் என்று விடிய விடிய திரைப்படம் காட்டுகிறார்கள். வீட்டிலோ விடிய விடிய டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள். இவைகளில் ஆர்வம் இல்லாதவர்கள் சிலர் விடிய விடிய சீட்டு விளையாடி இரவை கழிக்கிறார்கள். பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். ஆக, சிவராத்திரி என்றால் இரவு முழுவதும் எப்படியாவது கண்விழிக்க வேண்டும். துõங்காமல் அன்றிரவு இருந்துவிட்டால் ஈசனின் அருள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இப்படி எல்லாம் செய்கிறார்கள். துõங்காமல் இருப்பதுதான் சிவராத்திரி விரதம் என்று இவர்களுக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. சிவராத்திரியில் ஏன் கண்விழித்திருக்க வேண்டும் என்றால், சிவராத்திரியன்று இரவு சிவவழிபாடு இன்றியமையாதது என்பதை உணர்த்துவதற்குத்தான். சிவராத்திரி நாளில் சிவாலயங்களில் நான்கு ஜாமப் பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். முதலாம் ஜாமத்தில் பஞ்கவ்யம், சந்தனக்குழம்பு போன்றவை சாத்தப்படுகின்றன. பயற்றன்னம் நைவேதிக்கப்படுகின்றது. வில்வம் இலையால் அர்ச்சிக்கப்படும். இரண்டாம் ஜாமத்தில் அமிர்தம், அகிற் குழம்பு என்பன சாத்தப்படும். மூன்றாம் ஜாமம் ஆனதும் லிங்கோற்பவருக்கு தேன், பச்சைக்கற்பூரம், தாமரை போன்றவை சாத்தப்பட்டு எள்ளுச்சாதம் நைவேதிக்கப்பட்டு ஷன்பகம், ஜாதிமுல்லை, வில்வம் இலைகளால் அர்ச்சிக்கப்படும். நான்காம் ஜாமத்தில் கருப்பஞ்சாறு, குங்குமப்பூ என்பவை சாத்தி சுத்த அன்னம் நைவேதிக்கப்படும். இந்த நான்கு கால பூஜைகளை கண்டுகளித்து வழிபாடு செய்ய வேண்டுமானால் இரவு விழித்திருந்தால்தானே முடியும். அதனால் சிவராத்திரியில் இரவு கண்விழிக்கச் சொன்னார்கள். சிவராத்திரி மகிமை மிகுந்த விரத நாள். <மாசியில் பிரம்மதேவரும், பங்குனியில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரியனும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசி யில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன் மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்கிறது. எனவே, இனிமேலாவது சிவராத்திரி பொழுதை கேளிக்கையில் கழிக்காமல், ஈசனை மனதில், இரவெல்லாம் ஏதோ ஒரு சிவாலயத்தில் வழிபடுங்கள். இயலாதவர்கள் வீட்டில் கண் விழித்து, சிவபுராணம்,நமச்சிவாய திருப்பதிகம், திருநீற்றுத் திருப்பதிகம், சிவாயநம பாரயணப்பாடல்களைப் படிக்கலாம், பாராயணஞ் செய்யலாம். லிங்கபுராணத்தை சிவராத்திரியன்று படித்தல் நல்லது. <சிவராத்திரியன்று கண்ணுறங்காமல் ஈசனை மனதிலிறுத்தி வணங்குபவர்கள் அவனருளை முழுதுமாகப் பெறுவார்கள் என்பது திண்ணம்!< - தேவராஜன் ******************************************** ******************************************** வாழ நினைத்தால் வாழலாம்!/80/17.3.2013/ நம் வாழ்வின் நோக்கம் எது? சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும்? வாழ்க்கை என்பது என்ன? வாழும் முறை யாது? அதனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன? சரியான வாழ்க்கை என்றால் எப்படி அமைய வேண்டும் என்பதை எல்லாம் நம் சமயம் எடுத்துகூறுகிறது. சமய தத்துவங்களைப் புரிந்து, அவைகளை சரிவர நாம் பின்பற்றினால், நம் வாழ்க்கை முறை மிகச் சிறப்பும் பெற்று, வளமுடனும், ஆற்றலுடனும் இருக்கும். தார்மிகமாகவும், நிம்மதியாகவும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்தும். மனித இனத்தை தவிர பிற உயிரினங்களுக்கு மனம் என ஒன்று இருந்தாலும், தன்னிச்சையான மன இயக்கங்களுடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. மனித மனம், அதன் முழு பரிணாம வளர்ச்சியின் மூலம் நாம் வாழும் வாழ்க்கையை அறிவதற்கான, அறிவதன் மூலம் அடையும் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கான சாத்தியத்தை பெற்றுள்ளது. நாம் முழுமையை அடைய விரும்பினால், முழுமையான வாழ்க்கையை வாழ விரும்பினால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் சாஸ்திரப்படி வாழ்வதுதான். நம் பண்டைய வழக்கப்படி முதலில் கல்வி கற்கும்போது பிரம்மத்தைப் பற்றி அறிவதற்கு உண்டான எல்லா கட்டுப்பாடுகளும், ஒழுக்கம், நெறிகளுடன் இருந்து பயில்வதற்கு ஒரு பிரம்மச்சரிய வாழ்க்கைமுறை. பிறகு மணம் செய்துகொண்டு மனைவி, பிள்ளைகளுடன் வீடு, வாசல் என நல்வாழ்க்கை வாழ்ந்து, சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த ஒரு கிருஹஸ்தாச்ரம வாழ்க்கைமுறை. தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் கடமையுடன் பணியாற்றியபின் அதுவரை தேவையாக இருந்த சுகபோகங்களைக் குறைத்துக்கொண்டு, தான் பிறந்ததன் பயனைப் பற்றிச் சிந்திக்க ஒரு வானப்பிரஸ்தாச்ரம வாழ்க்கைமுறை. இறுதியில் இவ்வுலகச் சுகங்களை முற்றிலும் துறந்துவிட்டு சந்நியாச வாழ்க்கை முறை. ஒருவன் எப்படி வாழவேண்டும் என்பதற்கான படிப்படியாக வாழ்க்கை முறைகளை நம் முன்னோர் வகுத்திருக்கின்றனர். உலகத்தில் உள்ளவைகளை அனுபவித்து சுகபோகமாக இன்பத்தில் திளைக்கவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணியே அனைவரும் வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இன்பமோ வெகுநாட்கள் நீடிப்பதில்லை, மேலும் இன்பமாய் இருப்பதே சில நாட்களில் துன்பம் கொடுப்பதையும் பலர் பார்க்கின்றனர். அப்போதுதான் சிலருக்கு புலன்களைக் கொண்டு போகம் அடைவதைவிட்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி யோகம் செய்து பேரின்பப் பெருநிலையை அடையும் வழிகள் தெரியவருகின்றன. அப்படிச் சிறிது சிறிதாக மனத்தைக்கொண்டே அவைகளைக் கட்டுப்படுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்தி வாழ முயற்சி செய்வதே துன்பங்கள் நீக்கி ஆனந்த நிலையை அடையும் வழியாகும். - தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக