திங்கள், 4 பிப்ரவரி, 2013

சுவார(ஹா)ஸ்யம் பாகம் மூன்று

சுவார(ஹா)ஸ்யம் அதிர்ச்சி நகைச்சுவை/22/ 1.02.2013/........................................................................... (தினமலர்- சிறுவர் மலரில் 7.9.2012 முதல் நான் எழுதி வரும் சுவாரஸ்யம் தொடர்கட்டுரைகளின் பாகம் மூன்று.) கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையாக பேசக்கூடியவர். அவர் பேச்சுகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும். இதோ ஒரு அதிர்ச்சி நகைச்சுவை. என்.எஸ். கிருஷ்ணன் குடும்பமும் பக்கத்து வீட்டு குடும்பமும் திருப்பதிக்கு செல்வதாக திட்டுமிட்டு இருந்தனர். இது தொடர்பாக பக்கத்து வீட்டு பெண்மணி, என்எஸ் கிருஷ்ணனை பார்த்து பேச வந்தார். அந்தப் பெண்மணி , என் எஸ் கிருஷ்ணனைப்பார்த்துக் கேட்டாங்க ...... “நாம நாளானிக்கு திருப்பதி போறதா ஒரு பிளான் வச்சிருந்தோமே!, யார், யார் போறோம்னு முடிவு பண்ணியாச்சா?” என்று கேட்டார். அதற்கு, என்எஸ் கிருஷ்ணன் சிலேடையாக அந்த பெண்மணியைப் பார்க்காமலேயே....“அதெல்லாம் எனக்குத் தெரியாது , நா ஓம் புருஷன் , நீ என் பொண்டாட்டி ..... அவ்வளவு தான்”என்றார் . இப்படி அவர் சொல்லி முடித்ததும்,அந்தப் பெண்மணி அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டு வாயடச்சுப் போயி இருந்தாங்க. பிறகு, கொஞ்சம் நேரம் கழித்து அவர் சொன்னதை ஆழமாக யோசிச்ச போது தான் அந்தப் பெண்மணிக்கு வாய் நிறைய சிரிப்பு வந்து சிரிச்சாங்க. என் எஸ் கிருஷ்ணன் சொன்னதின் அர்த்தம்- நான் ஓம் புருஷன் என்பது நானும், உன் புருஷனும். நீ என் பொண்டாட்டி என்பது நீயும் என் பொண்டாட்டியும் திருப்பதி போறோம் என்று இரட்டை அர்த்தம் வரும்படி பேசினார். ** நானா பொய்யன்? அமெரிக்காவில் 1961ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நிக்சனும், ஜான் எப். கென்னடியும் போட்டி யிட்டனர். பொதுக் கூட்டத்தில் பேசிய நிக்சன், “கென்னடி நம்பிக்கைக்குரியவர் அல்லர்; அவர் மகா பொய்யர்” என்று பேசினார். இதனைக் கேட்ட கென்னடி, “நண்பர் நிக்சன் என்னை ஒரு பொய்யர் என்று குறிப்பிட்டுப் பேசினார். நான் பொய்யன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இப்போது இந்தக் கூட்டத் தில் நான் பேசுபவை பொய் என்றால் தைரியமாகக் கூறுங்கள். இப்போது நான் சொல்கிறேன், இந்தக் கூட்டத்திலிருக்கும் ஆண்கள் அனைவரும் சிறந்த அறிவாளிகள்; அதேபோல் இங்கே கூடியிருக்கும் பெண்கள் அனைவரும் சிறந்த அழகுடையவர்கள். நான் சொன்னது பொய்யெனில், இப்போதே தைரியமாக மறுத்துக் கூறுங்கள்” என்று சாதுரியமாகப் பேசினார். கூட்டத்திலிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர். தேர்தலில் வெற்றிபெற்று, குறைந்த வயதிலேயே குடியரசுத் தலைவரானவர் என்ற பெருமையையும் பெற்றார் கென்னடி. ************************************************************************************************************************************************ சுவாரஸ்யம் பனியை விட விஷம் நன்று!/23/8.02.2013/ ஒருமுறை யாழ்ப்பாணத்துப் புலவர் ஆறுமுக நாவலரும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் மதுரையில் சந்தித்தனர். அப்போது இருவரும் பேசிமகிழ்ந்தனர். மறுநாள் காலை அவர்கள் இருவரும் தம் மாணவர்களுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றனர். அப்போது பனிக்காலம். பனிக்கொடுமையால் மிகுதியாக வாடிய ஆறுமுக நாவலர், மீனாட்சி சுந்தரம் பிள்ளையை நோக்கி, “ஐயா பனிக்காலம் மிகக் கொடிது” என்றார். உடனே மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆமாம் என்று கூறாமல். “நான் பனிக் காலம் நல்லது” என்பேன் என்றார். உடன் சென்ற மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆறுமுக நாவலரோ பனிக் காலம் கொடுமை என்று கூற மீனாட்சி சுந்தரம் பிள்ளையோ பனிக்காலம் நல்லது என்று கூறுகிறாரே? இதில் ஏதேனும் உட்பொருள் இருக்குமோ என்று எண்ணி மாணவர்கள் அவரை நோக்கினர். மாணவர்களின் சந்தேகத்தை ஊகித்து, மீனாட்சி சுந்தரம்பிள்ளை, “ நான் ஆறுமுக நாவலர் கூறியதை மறுக்கவில்லையே ,அவர் பனிக்காலம் மிகக் கொடிது என்றார். பனிக்கு ஆலம் மிகவும் நல்லது என்றேன் நான். ஆலம் என்றால் விஷம் தானே! இப்பனிக் கொடுமைக்கு விஷம் நல்லது என்றுதானே சொன்னேன். இதில் தவறு உண்டா? என்ன”என்றார். ஒரு எளிய உரையாடலுக்குள் இத்தனைப் பொருள் பொதிந்துள்ளதா என்று மாணவர்கள் வியந்தார்களாம். புலவர்களின் சிலேடைத் திறமையை எண்ணி எண்ணி வியக்கும் படி உள்ளதல்லவா! *** ராமன் மீது விளைவு? தமிழகத்தைச் சேர்ந்தவர் சர். சி.வி.ராமன். இவர் அறிவியல் அறிஞர். இவர் ஒளிவிலகல் பற்றிய ராமன் விளைவு என்பதை கண்டறிந்தவர். இவரின் கண்டுபிடிப்புக்காக பாராட்டு விழா ஒன்றை வெளிநாட்டில் நடத்தினர். அந்த விழாவிற்கு சர்.சி.வி.ராமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று அவர் வெளிநாட்டிற்குச் சென்றார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ‘மது பார்ட்டி’ வைக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட நம் அறிவியல் ஆராய்ச்சியாளரான சர் சி வி ராமனுக்கு மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க சொல்லி வீம்பு செய்திருக்கிறார்கள் அவர்கள். சர்.சி.வி. ராமனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அதனால், அவர்கள் வற்புறுத்தலை விடாப்பிடியாக மறுத்தார் சர் சி வி ராமன். அவர்களும் விடுவதாக இல்லை. உடனே அவர்களிடம் இவ்வாறு சொன்னாராம். “நான் உங்களுக்கு தண்ணீரின் மீது ராமன் விளைவை காண்பித்தேன். நீங்களோ, ராமன் மீது தண்ணீரின் விளைவை காண்பிக்க முயற்சி செய்கிறீர்கள்” என்றாராம். இதைக்கேட்டு விழா எடுத்தவர்கள் சிரித்த சிரிப்பில் அரங்கமே அதிர்ந்ததாம்! ........................................................... ******************************************************************************************************************************************************* சுவாரஸ்யம்/15.02.2013/ *பாதி புத்திசாலிகள்! தைரியமாக கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல் பெற்றவர் எழுத்தாளர் பெர்னாட் ஷா. ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தபோது மக்களவையில் கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு வந்தது. பேசத் தொடங்கிய அவர் இங்கிருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள் என்றார். சினமடைந்த அவையினர் சொன்னதை மீட்டுக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர். பெர்னாட் ஷா என்ன செய்தார் தெரியுமா? அமைதியாக அவையினரைப் பார்த்து சரி, இங்கே இருப்பவர்களில் பாதி பேர் புத்திசாலிகள் என்றாரார்.அவரது பேச்சுத்திறமையைப் பார்த்து அந்த அவை வியந்தது. *யார் காரணம்? ஒல்லியான தோற்றமுடைய பெர்னாட் ஷாவைப் பார்த்து ஒருமுறை அவரது நண்பரும், சக எழுத்தாளருமான ஹெச்.டி வெல்ஸ் நம் நாட்டிற்கு வருபவர்கள் உம்மைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்திருப்பதாக எண்ணுவார்கள் என்று கிண்டலடித்தார். அதற்கு சற்றும் சளைக்காமல் அந்தப் பஞ்சத்திற்கு யார் காரணம் என்பதும் உம்மைப் பார்த்தால் அவர்களுக்குப் புரியும் என்றார் பெர்னாட் ஷா. காரணம் ஹெச்.டி.வெல்ஸ் உடல் பருமனானவர். *சிந்தித்துச் செயல்படுங்கள் புதுவையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதோ பின்னால் பாருங்கள் என்றார். கூட்டத் திலிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கு எந்தக் காட்சியும் தென்படவில்லை. உடனே புரட்சிக்கவிஞர், இப்படி யார் எதைச் சொன்னாலும் அவர் சொற்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள். நன்மையா, தீமையா, லாபமா, நட்டமா என்று சிந்திப்பதே இல்லை. ஏமாளியாக இருக்காமல் சிந்தித்துச் செயல்படுங்கள் என்றார். *பார், அதி சின்னப்பயல்! பாரதி இளம் வயதிலேயே புலமையில் உயர்ந்து இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதி நாதன் என்பவர் அவரை பாரதி சின்னப்பயல் என்று இறுதி அடி வரும்படி பாடச்சொன்னார். பாரதி தயங்கவில்லை. “காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்” என்று பாடினார். பாரதி என்பதை பார் அதி என்று பதம் பிரித்து காந்திமதிநாதனை வெட்கும்படி செய்தார் பாரதி. - தேவராஜன். முற்றும். ***********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக