ஞாயிறு, 14 மார்ச், 2010

மனுஷ விஷஜந்துக்கள்

!

எதிர் வீடு பூட்டிக்கிடந்தது.
கவிதா, வாசல்வரை வந்து, வந்து ஏமாந்து போனாள். நேற்று மாலைக்கூட கதவோரம் நின்று ராஜா ஜாடையாய் சிரித்துவைத்தானே! இன்று எங்கு போயிருப்பான்? விடையில்லா கேள்வியை நினைத்து என்ன பயன்? சோர்ந்து போய் கம்ப்யூட்டரில் கேம் விளையாட அமர்ந்தாள், கவிதா. இருந்தும் கேம் என்னவோ பிடிக்காமல் போனது.
கிச்சனில் இருந்த வந்த அகிலா,""ஏய், என்ன பண்ற? காலையிலேயே விளையாட்டா? போ... போ... பிரஷ் பண்ணிட்டு இந்த பாலைக்குடி'' அதட்டிய அம்மாவைப் பார்த்து,"வ்வே!' என்று பாவனை செய்த கவிதா, பாத்ரூம் பக்கம் ஓடினாள்.
கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க, கண்கள் செய்திதாளில் நங்கூரம் இட்டிருந்தது, கவிதாவின் அப்பா தினேஷ்க்கு.
""ஏங்க, இன்னைக்கு சண்டே தானே! இன்னைக்குக்கூடவா உங்க அருமை புத்ரியை பார்த்துக்கொள்ளக்கூடாதா, என்ன?'' என, அர்ச்சனை புரிய தொடங்கியதும், செய்திதாளை மடக்கி வைத்து விட்டு, பாதியிலேயே சிகரெட்டை ஆஸ்டிரேயில் திணித்த தினேஷ்,"" என் செல்ல அம்முக்குட்டி'' என்று கொஞ்சியப்படியே பாத்ரூம் சென்றார்.
மதியம் வந்தது. அம்மா அசந்து துõங்கிக் கொண்டிருந்தாள். அப்பா பால்கனியில் இருப்பதை தோராயமாக கணித்த கவிதா, மெல்ல பூனை நடை நடந்து வாசல் பக்கம் வந்தாள்.
தெரு வெறிச்சோடிக்கிடந்தது. எதிர் வீடு பூட்டியேதான் இருந்தது. ராஜாவின் பார்வை பாராமல் கவிதா பறித்துப் போட்ட பூ போல வாடினாள்.
இப்படி தினம் தினம் பார்த்து பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம். நாட்கள் சடசடவென ஓடியது. அது ஆச்சு பத்து நாள்.
அன்று பதினொன்றாவது நாள். துõக்கத்தில் இருந்த கவிதாவின் காதில் "கிறீச்... கிறீச்' சப்தம் கேட்டது.
இது ராஜா வீட்டு கேட் திறக்கும் சப்தமாச்சே! ராஜா வந்து விட்டானா? எதிரே அம்மாவும், அப்பாவும் இருந்தார்கள். இவர்களைத் தாண்டி வெளியே வருவது எளிதான காரியமல்ல என்பதையும் அறிவாள் கவிதா. ஆவலை அடக்கிக்கொண்டாள்.
மெல்ல வெளியே செல்ல கவிதா பிராயத்தனம் பண்ணினாள்.
"" கவி, வெளியே போகாதே. வா, அப்பாக்கூட பேசிக்கிட்டிரு.'' உத்தரவு வந்ததும் கவிதா கப்சிப்.
ஒருவழியாய் மாலை வந்தது. அம்மாவும், அப்பாவும் தன்னை கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள்.
எதிர் வீடு திறந்திருந்தது. கவிதா முகத்தில் அப்போது பூத்த மலரின் மலர்ச்சி தெறித்தது.
மெதுவாக படியிறங்கி, கேட் அருகே வந்து நின்றாள். ராஜா வெளியே வருவான என்று நோட்டமிட்டாள். அவன் வருவதாக இல்லை.
என்ன செய்யலாம் என்று யோசித்தவள்,"" டிவிங்கிள்... டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்'' உரத்த குரலில் பாடினாள்.
எதிர் வீட்டுக்குள் நுழைந்த இந்த பாட்டுச் சத்தம் ராஜாவை வெளியே வரவழைத்தது.
எதிர் எதிரே இருவரும் பார்த்துக்கொண்டனர்.
ராஜா தான் மெல்ல தெருவைக்கடந்து வந்தான்.
இருவரும் தண்ணீர் இறைக்கும் மோட்டர் மேடைக்குப் பின்புறம் சென்றனர்.
""ஐ... யாஜா... நாளைக்கு உன்ன காணும்?'' கவிதா, செல்லமாய் கேட்டாள்.
""நா... நாளைக்கு தத்தா வூயி போனேன். கூக்கூ சிக்குபுக்குல போனேன். நீ தத்தா வூயிக்கு சிக்கு புக்குல போல?''
""ம்ம்ம்... இல்ல. அம்மா போல. நானும் போல. நீ வெளாட ஏன் வல்ல?''
""நா சிக்கபுக்குல போயிட்டேன்ல. இப்ப வெளாடலாம். வா...''
"" பால் குச்சிட்டியா, நீ. அம்மா வரமாட்டாங்கல?''
""பால் குயிக்கல. அம்மா பப்பு மம்மு ஊட்டித்து''
கவிதாவும், ராஜாவும் மழலை கொஞ்சும் மொழியில் பேசிக்கொண்டிருந்தனர்.
எதிரே இருந்த செம்பருத்தி செடியிலிருந்து நல்ல பாம்பு ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்தப் பாம்பை கவிதா கவனித்து விட்டாள்.
""யாஜா... அய்யி... ஆம்பு! ஆம்பு!'' என்று பாம்பு வந்த திசையைக் காட்டினாள், கவிதா.
"" ஆ... ஆ... ஆம்பு!'' என்று சொல்லிக் கொண்டே பாம்பின் எதிரே சென்றான்,ராஜா.
கவிதாவும் ராஜாவை பின் தொடர்ந்தாள்.
இருவர்களையும் பார்த்த பாம்பு படம் எடுத்து"உஷ்ஷ்...'' சீறியது.
"" ஐ... அய்கா இக்கே ஆம்பு'' என்று கவிதா குதுõகலித்தாள்.
"" ஆங்... ஆம்பு நா, கவியீ இக்கோம். நீ வெளாட வறீயா?'' என்று பாம்பை நோக்கிக் கேட்டான், ராஜா.
என்ன நினைத்ததோ பாம்பு. இவர்களின் அன்பில் தன்னை மறந்து படமெடுத்து ஆடியது.
""ஆம்பு... ஆம்பு''
"" ஆம்பு... ஆம்பு... ஆம்பு''
இருவரும் பாம்பைச் சுற்றி சுற்றி வந்தனர்.
கேட் பக்கத்தில் பாதி துõக்கத்தில் இருந்த வாட்ச் மேன் முனுசாமிக்கு <"ஆம்பு... ஆம்பு' என்று சொல் கேட்டுக்கொண்டே இருக்க. சட்டென்று சுதாரித்துக் கொண்டு எழுந்தவன், குரல் வரும் பக்கம் சென்றான்.
அங்கே கவிதா, ராஜா முன்பு பாம்பு படமெடுத்து ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து பதட்டத்தில் ""பாம்பு! பாம்பு!'' என்று அலறினான்.
வாட்ச் மேன் அலறல் கேட்டு கவிதாவின் பெற்றோரும், ராஜாவின் பெற்றோரும் எங்கே நம் பிள்ளைகள் என்று பதறியடித்துக்கொண்டு வெளியே வர. இவர்களின் களேபரத்தில் பாம்பு ஜகா வாங்கிக்கொண்டு சர்ர்ர் என்று செம்பருத்திச் செடிக்குள் ஓடி ஒளிந்து விட்டது.
கவிதாவைத் தரதரவென இழுத்து வந்த அகிலா,""ராஜாக்கூடா பேசக்கூடாது; விளையாடக்கூடாது; சேரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல... ஏன் கேட்கல?'' கவிதாவின் முதுகில் அடி பலமா படபடவென விழுந்தது. ஓங்கி அழுதாள் கவிதா.
எதிர்பக்கம் ராஜா இழுத்துச் சென்று அவன் அம்மா,""படவா ராஸ்கல். எதிர் வீட்டுக்குப் போனா காலை உடைச்சுடுவேன்னு சொல்லியிருக்கேன்ல. அப்புறம் ஏன் போன?'' அவன் கன்னத்தில் பளார் பளார் என்று உள்ளங்கை உரசியது. வலி பொறுக்காமல் ராஜா கதறினான்.
இரு வீட்டிலிருந்தும் பிஞ்சு மனசின் அலறல் ரொம்ப நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது.
பூமியில் விஷ ஜந்துக்களைவிட மனிதர்கள் மனதில் தான் விஷம் நிறைஞ்சுக்கிடக்கு. இவர்களின் மனவிகார விஷங்களை நீக்க இன்னொரு முறை ஈசன் ஆலக்கண்டனாக அவதரிக்க வேண்டுமோ, என்னவோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக