புதன், 31 மார்ச், 2010

ஆன்மிக சிந்தனை 28

ஆன்மிக சிந்தனை 28
ராமன் எத்தனை ராமன்!

ராமன் எத்தனை ராமன்!
இந்தியாவின் இதிகாசங்களாக ராமாயணமும், மகாபாரதமும் போற்றப்படுகின்றன.இதில் ராமாயணக் காவியத்தின் நாயகன் ராமனை கடவுளாகவே இந்தியர்கள் வணங்குகிறார்கள்.
ராமாயணத்தின் அடிப்படை கதைக்கருவாக இருப்பது, சூரியவம்சத்தில் வந்த தசரத மன்னனின் மகனாக ராமன் பிறந்தது, ஜனகனின் மகள் சீதாவை மணந்தது, ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் வனவாசம் செய்தது, சீதை கடத்தப்படல், அவளை மீட்க ராவணனைப் போரில் வென்றது ஆகியன எல்லாம் வரலாற்றுச் செய்திகளாகும்.
மேலே சொன்ன அடிப்படைக் கதைக் கருவைக்கொண்டு எழுதப்பட்ட ராமாயணத்தை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட ராமாயணங்கள் பல.
அவைகளில் எண்ணற்ற கற்பனைச் சம்பவங்களும், பிற்கால சிந்தனைகளும் வலிய சேர்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. செவிவழியாக ராமாயணக்கதையைக் கேட்ட மக்களுக்கு பல புதிய ராமாயணங்களில் கூறப்பட்டிருக்கும் கதைகள், சம்பவங்கள் ஆச்சரியத்தையும்,குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அது மட்டுமல்லாமல் எது அசல், எது போலி என்ற நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது!
வடமொழியில் வால்மீகி ராமாயணம் மட்டுமல்லாமல் வேறுபல ராமாயணங்களும் உள்ளன.
அத்யாத்ம ராமாயணம், அகஸ்தியராமாயணம், ஆனந்த ராமாயணம், அத்புத ராமாயணம், வஷிஷ்ட ராமாயணம், மகாராமாயணம், காகபுசுண்ட ராமாயணம் இப்படி எண்ணிக்கையில் பல இருக்கின்றன. இப்படி எழுதப்பட்ட ராமாயணங்கள் 140க்கு மேல் உள்ளனவாம். இந்த ராமாயணங்கள் சொல்லும் கதைகளும் அப்படி இப்படி இருக்கின்றன. அந்த கதைகளைக்கொஞ்சம் அறியலாம்.
அத்புத ராமாயணம் சீதையை மகாசக்தியாகவும், அவளே ஆயிரம்தலை ராவணனை வதம் செய்ததாக கூறுகிறது.
ஆத்யாத்ம ராமாயணம் 3643 பாடல்களைக் கொண்டிருக்கிறது. இதில் ராமர் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வேதவியாசரால் தொகுக்கப்பட்ட பிரம்மாண்டபுராணத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த ராமாயணத்தை ராமானந்தர் எழுதியுள்ளார்.
ஆனந்த ராமாயணம் என்பது பார்வதி மற்றும் நாரதருக்கு சிவன் கூறிய ராமனின் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.
காகபுசுண்ட ராமாயணம் வந்த கதை எப்படி என்றால் கருடனுக்கு காகம் சொல்லியதாக கூறப்பட்டுள்ளது.
தத்வ சம்க்ரஹ ராமாயணம் ராமபிரம்மானந்தா என்பவரால் எழுதப்பட்டது. வால்மீகி ராமாயணத்தைப் பின்பற்றி கோஸ்வாமி துளசிதாஸ் என்பவர் இந்தியில் ராமசரித மானஸாவை 1574ம் ஆண்டு எழுதினார். இதிலும் விஷ்ணுவின் அவதாரமாக ராமர் போற்றப்படுகிறார். மேலும் ராவணனால் கடத்தப்பட்டது உண்மையான சீதையல்ல அது போலி சீதை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சேஷராமாயணம் இது சீதை தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் சம்பவத்தையும், கர்ப்பமாக இருந்த சீதையை ராமன் காட்டுக்கு அனுப்பிய சம்பவங்களை கூறுகிறது.
காளிதாஸரால் பாடப்பெற்றது ரகுவம்சம் ஆகும். மேலே சொன்ன ராமாயணங்களுக்கு எல்லாம் முன்னாடியாக இருந்தது தசரத ஜாதகாவாகும். இது வால்மிகிக்கு முன்பே எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.
ஜைனராமாயணம், ராமர் ஜைனமுனிவராகி விட்டதால் அவர் போரிடாமல் லட்சுமணனே ராவணனுடன் போரிட்டு வென்றான் என்றும், பின்னர், லட்சுமணனும் ஜைனத் துறவியானதாகவும், சீதை பெண் துறவியானதாகவும் கூறுகிறது.
அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டாகும். இது மளையாளத்தில் எழுத்தச்சனால் எழுதப்பட்டதாகும்.
அவத் மொழியிலும் ராமசரிதமனஸ் துளசிதாசனால் எழுதப்பட்டுள்ளது. கிரித்திவாசா என்பவர் வங்காள மொழியில் ராமாயணம் பாடியுள்ளார். தமிழில் கம்பன் எழுதியது கம்பராமாயணம், வால்மீகி ராமாயணத்திலிருந்து விலகி,சில இடங்களில் ராமரை அவதாரமாகவே போற்றியுள்ளார்.
தாய்லாந்து தெரவாட புத்த மதத்தினரிடம் வழங்கி வரும் ராமாயணம் ராமகியான் என்று வழங்கப்படுகிறது. அதில் புத்தரின் அவதாரமாக ராமர் கூறப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில், ராஹ்வணா கதை என்ற பெயரால் ராமாயணத்தைப் பொம்மாட்ட கூத்தாக நடத்துகின்றனர்.
மேலே சொன்ன ராமாயணங்களில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட ராமாயணம் ஒன்றுள்ளது. இது இன்ன பெயர், இன்னாரால் எழுதப்பட்டது என்பன குறிப்பு இல்லாமல் செவிவழிக்கதையாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த ராமாயணத்தின் கதை எப்படி எனில், ராவணனின் மகள் சீதை. சீதை பிறந்த நேரத்தைக் கணித்த ஜோதிடர்கள், சீதையால் லங்கைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால், சிசுவைக் கொன்றுவிடும் படியும் யோசனைக்கூறினர். குழந்தைப் பாசத்தால் கொல்ல மனமில்லாத ராவணன், அந்தசிசுவான சீதையை ஒரு பெட்டியில் வைத்து, தன் நாட்டு எல்லைக்கு அப்பால் விட்டுவரச் செய்தான். அதனை ஜனக மன்னன் கண்டெடுத்து வளர்த்து வந்தான். பின்னர் ராமனை மணம் செய்தப்பிறகு, சீதைக்கு வனவாசம் செல்ல நேர்ந்தது. இவை அனைத்தையும் தன் ஒற்றர்கள் மூலம் அவ்வப்போது அறிந்து வந்த ராவணன், தன் மகள் சீதை காட்டில் படும் இன்னல்களைக்கேள்விப்பட்டு வேதைனயடைந்தான். அவளை நல்லமுறையில் வாழவைக்க தன் நகருக்குக் கடத்திவந்தான். தானே அவளது தந்தை என்று ராவணன் கூறியதை சீதை நம்ப மறுத்ததால் போர் ஏற்பட்டது. முடிவில், சீதையின் கால்பட்டதால் லங்கா அழிந்தது. ராவணனும் உயிர் இழந்தான் என்று கதை போக்கு போகிறது...
இப்படி பல மொழிகளில் தேசம் கடந்து பல ராமாயணங்கள் இருக்கின்றன.இந்தியாவுக்கு வந்த அந்நிய நாட்டு நாடோடிகள், பயணிகள்,துõதுவர்கள் இப்படி இவர்கள் இங்கு செவிவழியாக கேட்ட ராமாயணக்கதைகளை அவரவர்கள் நாட்டில் கூறி, செவிவழியில் இருந்து எழுத்துக்கு வரும்போது பல புனைவுகளை கொண்டதாக அவை ஒவ்வொன்றும் புதிய செய்திகளைக் கூறுகின்றன. இதிகாச காவியமான ராமாயணம் பெயரில் இத்தனை ராமாயணங்களா என்று ஆச்சரியம் ஏற்படுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக