வெள்ளி, 26 மார்ச், 2010

துப்பறியும் கதைகள்

துப்பறியும் கதைகள்3

பேய் கிராமம்!

நகரத்தை ஒட்டி இருந்தது அந்தக் கிராமம். ஒரு மாதமாய் அங்கே எதிர்பாராத விதமாய்
ஒவ்வொரு நாளும் திக்... திக்.. திகில்கள் அரங்கேறி கொண்டிருந்தன. ஒவ்வொரு கணமும்
அடுத்தடுத்து என்ன நடக்கும்? ஏது நடக்குமோ? என்ற அச்சத்தில் கிராம மக்கள் மரணபயத்தில்
இருந்தனர்.
முதலில் அந்தக் கிராமத்திற்கு பத்து போலீசார் காவலுக்கு சென்றனர். பின்னரும் அந்த மர்மம்
தொடரத்தான் செய்தது.
அடுத்ததாக, தெருவுக்கு பத்து போலீசார் காவல் காத்தும் கூட, அந்த அசம்பாவிதனத்தை
தடுத்து நிறுத்த முடிய வில்லை.
இறுதி கட்டமாக ,வீட்டுக்கு வீடு போலீசார் காவல் இருந்தும் தினம் தினம் அரங்கேறும்அந்த
மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை.
இன்ஸ்பெக்டர் துப்புராஜ் துப்பறிவதில் திக்கு முக்காடி போனார்.ஒரு மாதமாய் துõக்கம்
கெட்டு, என்னன்னவோ வழியிலும் புலன் விசாரணை செய்தும், அவரால் இந்த சவாலான
கேஸில் ஒரு படிக்கூட முன் செல்ல முடியவில்லை.
விடிய, விடிய கிராமத்தை ரவுண்ட் வந்த துப்புராஜ், அதிகாலையில் தான் ஸ்டேஷனுக்கு
வந்தார்.
கண்கள் பவளம் போல சிவந்திருந்தது. துõக்கம் இமையில் உட்கார்ந்து துப்புராஜியை
நித்திரையில் கொஞ்சம் அக்கறை செலுத்த சொல்லியது.
அப்படியே டேபிளில் கவிழ்ந்து விட்டார் துப்புராஜ்.
பதறியடித்து வந்த கண்ணாயிரம், துப்புராஜியை உழுக்கி, "" சார்,சார்! தெற்கு தெருவுல
தொடர்ந்தாப்ல மூணு வீடுகள் தீப்பற்றி எரியுது சார். தீயணைப்பு காரங்க தீயை அணைச்சுக்
கிட்டு இருக்காங்க.'' என்று சொல்லிய கண்ணாயிரம் பிரம்மை பிடித்திருந்தார்.
தினம் தினம் இந்த செய்தியைக் கேட்டு, கேட்டு துப்புராஜ் உக்கிரத்தின் உச்சத்துக்கே போனார்.
டென்ஷனில் கொதித்துப் போனவர், "" என்னைய்யா இந்த கிராமத்துல நடக்குது? ஒண்ணுமே
புரியமாட்டேங்கிறது! எவனோ ஒருத்தன் என் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிக்கிட்டு
இருக்கான். சும்மா விடமாட்டேன். பார், பிடிச்சு காட்டுறேன்.'' சொல்லியவர், கொதித்துப்
போனார், "" சரி, வாங்க கண்ணாயிரம் ஸ்பாட்டுக்கு போகலாம்'' என்று துப்புராஜ் சொன்னதும்
பின் தொடர்ந்தார், கண்ணாயிரம்.
அந்த வீடுகள் பாதி எரிந்து சாம்பலாயிருந்தது.
அக்கம் பக்கம் வீடுகளில் இருப்பவர்களையும், அந்தந்த வீடுகளுக்கு காவல் இருந்த போலீசா
ரிடம், "" சந்தேகம் படியான ஆள் நடமாட்டம் இருந்ததா? புதிய மனிதர்கள் யாராவது
வந்தார்களா?'' என்று துப்புராஜ் விசாரித்ததில், எல்லாருமே உதட்டைப் பிதிக்கினர்.
இப்படி எல்லாருமே " தெரியாது' என்று சொன்னதைக்கேட்டு, "" ச்சே! என்னைய்யா மாய
மந்திரமா இருக்குது? ஒரு மாசமா திடீர் திடீர்ன்னு வீடுகள் அதுவா தீப்பிடிச்சு எரிகிறது?
எவனும் தீ வைக்காம எப்படியா இது சாத்தியம்?'' தன் நெஞ்சில் இருந்த ஆத்திரத்தை எல்லாம்
கொட்டித்தீர்த்து விட்டு, கண்ணாயிரத்தை இருந்து விசாரித்து விட்டு வருமாறு சொல்லி விட்டு
ஸ்டேஷனுக்கு கிளம்பினார்.
மதியம். கண்ணாயிரம் ஸ்டேஷனுக்கு வந்தவர், "" சார், ஒரு மாசமா இந்தக் கிராமத்துல வீடுகள்
அதுவா தீப்பிடிச்சு எரிய காரணம் தெரிஞ்சுடுச்சு, சார். இந்த ஊரு பூசாரி மேல பிடாரி அம்மன்
ஏறி குறிசொல்லி இருக்கு. இந்தக் கிராமத்துல இருப்பவங்க தெய்வ குத்தம் செஞ்சுட்டாங்களாம்.
அதனால தான் 48 வகையான பேய், பிசாசுங்க கிராமத்துல இருக்கிற வீட்டை எல்லாம் மர்மமான
முறையில கொளுத்திக்கிட்டு இருக்காம். இதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாதுன்னு
அந்த பூசாரி சாமியாடிருக்கான்'' என்ற கண்ணாயிரத்தின் முகத்தில் ஒரு திருப்தி தவழ்ந்தது.
இதைக் கேட்டதும் துப்புராஜ், "" அப்படியா? அப்போ இது பேய்கள் நடமாடும் கிராமமா?
போய்யா... இந்த விஞ்ஞான யுகத்துல பேய்... பிசாசுன்னு'' என்ற துப்புராஜ்,
யோசனையில் ஆழ்ந்தார். கண்ணாயிரம் சொன்னதில் ஏதோ பொறி தட்டியது.சட்டென்று
சுதாரித்துக்கொண்டவர்,"" அப்பாடா இப்பதான்யா சரியான எவிடன்சே
சிக்கி இருக்கு.இப்ப பாரு நான் பூசாரிக்கிட்ட பேய் ஆடி எல்லா மர்மத்துக்கும் முற்றுபுள்ளி
வைக்கிறேன். போய் அவனை கூப்பிட்டு வாங்க.'' என்றார்.
பூசாரி குறிசொன்ன கணத்திலிருந்து கிராம மக்கள் பேய் கிலிபிடித்து திரிந்தனர்.
இரவு எட்டுமணி இருக்கும் ஸ்டேஷனுக்கு பூசாரியை அழைத்து வந்தார், கண்ணாயிரம்.
லாக்கப்பில் பூசாரிக்கு அடி,உதை சரமாரியாக விழுந்தது.வலிதாங்க முடியாமல் முணகிய
பூசாரி, இனியும் விஷயத்தை மறைத்தால் தர்ம அடியில் உயிரே போனாலும் போயிடும் என்று
முடிவுக்கு வந்தவர், அந்த விஷயத்தை கக்கினார்.
பின்னர், துப்புராஜ் துரிதமாக விசாரணையைத் தொடங்கினார்.
"" கண்ணாயிரம், ஆறுமாசத்துக்கு முன்னால இந்த கிராமத்தையே ஒட்டு மொத்த விலைக்கு
வாங்கி, ஏதோ பேக்டரி கட்ட யாரோ வந்து இருந்தாங்களாமே?''
"" ஆமாம் சார். வந்தவங்க ,அடிமாடு விலைக்கு கேட்டா யாரு கொடுப்பாங்க. அதான் வந்த
வழியே போயிட்டாங்க''
""அப்படியா?'' என்ற துப்புராஜ், போனில் அந்த நம்பரை டயல் செய்தார்.
மறுமுனையில்"" ஹலோ! மாதேஷ் பேசறேன்''
"" மாதேஷ், துப்புராஜ் பேசறேன். சின்ன பிராப்ளம்.''என்றவர், கிராமத்தில் நடந்த சம்பவங்களை
சொன்னார்.
""நான் ஒருகெமிஸ்டிரி புரபசர் என்கிற முறையில் சொல்றேன் இது திட்டமிட்ட அறிவியல் பூர்வமான மே
ஜிக்'' என்ற மாதேஷ், தீப்பிடித்து எரியவைக்கும் மெத்தேடை விவரித்தார்.
""கண்ணாயிரம், ஒருவழியாய் இந்த கிராமத்தில் வீடுகளை தீப்பிடிக்க வைத்த பேயை கைது
பண்ண போறோம். வாங்க.'' என்றார்.
கண்ணாயிரத்துக்கு எதுவும் புரியவில்லை. குழப்பத்தோடு ஜீப்பில் ஏறினார்.
ஒரு மனிநேரத்தில் ஜீப் அந்த பங்களாவில் நின்றது.
தட தட வென உள்ளே போன துப்புராஜ், "" நித்யானந்தம். உங்களை இப்போ கைது பண்ணப்
போறேன். வரீங்களா ஸ்டேஷனுக்கு'' என்றவரிடம், "" எதுக்கு?'' என்றார்.
""நீங்க கேட்ட விலைக்கு அந்த கிராம மக்கள் அவங்கவங்க இடத்தைக் கொடுக்கலை என்பதால
ரொம்ப புத்திசாலிதனமா சையின்ஸ் டெக்னிக்கில் பாஸ்பரஸ் ரசாயன பவுடரை சூடத்துடன்
கலந்து, சாணத்தில் பெட்ரோல் கலந்து அதை உருட்டி வீடுகள் மீது போட சொல்லியிருக்கீங்க.
அந்த ரசாயன கலவை வெயில் படபட சூடாகி திடீர்ன்னு தீப்பிடிச்சு எரியும். இப்படி
தினம் தினம் செய்து அந்த மக்களை பயமுறுத்தி, கடைசியா பூசாரி மூலம் இதெல்லாம்
பேயோடு செயல். தெய்வ குத்தம்ன்னு புரளிய விட்டிருக்கீங்க. கடைசியா மக்கள் பேய்க்கு
பயந்த வீட்டையும் இடத்தையும் உங்களிடம் வந்த விலைக்கு கொடுப்பாங்கன்னு
திட்டம் போட்டு நல்ல நாடகம் போட்டு இருக்கீங்க. ஆக,உங்க சுயநலத்துக்காக
வீட்டை கொளுத்துனதுக்காக தான் கைது பண்றேன்.போதுமா? இன்னும் உன்னோட
பித்தலாட்டத்தை சொல்லவா'' என்றார், துப்புராஜ்.
நித்யானந்தம் மவுனமாய் துப்புராஜியை பின் தொடர்ந்தார்.
" அப்பாடா!' என்று கண்ணாயிரம் பெருமூச்சு விட்டார், துப்புராஜியை பார்த்து சிரித்தப்படி.






துப்பறியும் கதைகள் 4
காலடி தடத்தில் ஒரு தடயம்!

அசந்து துõங்கிக் கொண்டிருந்தவரை, துப்புராஜின் மனைவி அகல்யா
பெட் காபியுடன் எழுப்பினாள்.
"" ஏங்க, எழுந்திரிக்க மனசே இல்லையா? இன்னைக்கு என் தங்கச்சிக்கு
நிச்சயதார்த்த பங்ஷனுக்கு போகணும்னு தெரியாதா? மறந்துட்டீங்களா?...ம்...
சீக்கிரம் எழுந்திருச்சி, கிளம்பறதுக்கு வழிய பாருங்க'' என்றவள், காபி கப்பை துப்புராஜ் கையில்
கொடுத்து விட்டு கிச்சனுள் நுழைந்தாள்.
அகல்யா ஞாபக படுத்தியப்பிறகு தான் துப்புராஜிக்கு பங்ஷனுக்கு போகணும் என்ற நினைப்பு
வந்தது. அகல்யா கொடுத்த காபியை பருகிவிட்டு, குளிக்கச் சென்றார்.
டி.வி. ஸ்டாண்டில் இருந்த போன் ரிங் ஆனது. அகல்யாவுக்கு கிச்சனில் ஓடிய கிரைண்டர்
சத்தத்தில் போன் ரிங் ஒலி கேட்கவில்லை.
பாத்ரூமில் இருந்து அவசர அவசரமா வந்த துப்புராஜ் ரிஸிவரை எடுத்தார்.
மறுமுனையில் கண்ணாயிரம் அந்த தகவலைச் சொன்னார். ரிஸிவரை வைத்துவிட்டு, அவசர, அவசரமாய்
யூனிபார்ம்மை போட்டுக்கொண்டு கிளம்பிய துப்புராஜியிடம்,
""என்னாங்க, டிபன் ரெடி சாப்பிட வறீங்களா?'' என்றஅகல்யாவிடம்,
""இல்ல, ஸ்டேஷன் கிளம்பறேன். அர்ஜென்ட் மேட்டர்...'' கிடுகிடுவென ஓட்டமும் நடை
யுமாய் வீட்டிலிருந்து வெளியே வந்தவர் ஜீப்பில் கிளம்பினார்.
ஸ்டேஷனில் கண்ணாயிரத்திடம் பேசிக்கொண்டிருந்தார் நகை கடை அதிபர் அமிர்தலிங்கம்.
துப்புராஜ் உள்ளே நுழைந்ததும், ""வணக்கம், சார்!'' என்றவரை ""உட்காருங்க'' என்று
சொல்லி விட்டு, கண்ணாயிரத்திடம் நீங்க மோப்ப நாயை கூட்டிக்கிட்டு சார் வீட்டுக்கு
போங்க. நான் ஜீப்பில நடந்த சம்பவம் பற்றி விசாரிச்சுக்கிட்டே அங்கு வர்றேன்'' என்றார்.
"" எப்படி இந்த கொள்ளை நடந்தது?''
""கடைசி பெண்ணுக்கு அடுத்தவாரம் திருமணம் வருது. முதல் பத்திரிகையை குலம் தெய்வம்
கோயிலுக்கு போயி வைச்சுட்டு வரலாம்ணு குடும்பத்தோட சொந்த கிராமத்திற்கு போனோம்.
திரும்பி வந்து பார்த்தா ,வீடு பூட்டியபடிதான் இருந்தது. உள்ளே போயி
பார்த்தா பூஜை அறை அலங்கோலமா கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.அதில
இருந்த ரொக்க பணம் 3 லட்சமும், நுõறு சவரன் நகையும் திருட்டு போயிருக்கு...''
""சரி, கொள்ளை அடிச்சவங்க எந்த வழியா வந்திருக்காங்க?''
""கிச்சன் பக்கம் இருந்த ஜன்னல் வழியா வந்துருக்காங்க.''
""குறிப்பிட்டு சொல்லும்படியா யார் மேலாவது சந்தேகம் இருக்கா?''
"" சந்தேகப்படும்படியா யாரையும் சொல்லத்தோணலையே..''
""அப்படியா?'' என்று யோசனையில் ஆழ்ந்தார், துப்புராஜ்.
அமிர்தலிங்கம் வீடு வந்தது.
துப்புராஜ் வீட்டை முழுவதுமாக நோட்டமிட்டார்.
""கண்ணாயிரம் மோப்ப நாய் எதாவது துப்பு காட்டிச்சா?''
""இல்ல சார். கொல்லைப்புறம் ஓடிச்சு. இதோ இந்த பேப்பரை மட்டும் கவ்விகிட்டு
வந்தது""
"" சரி, பேப்பரை பத்திரப்படுத்துங்க. கைரேகை எல்லாம் எடுத்தாச்சா?''
""எல்லா பார்மாலிட்டீஸ்சும் முடிச்சாச்சு சார்''
கிச்சனுக்கு வந்து ஜன்னலை கூர்ந்து கவனித்தார் துப்புராஜ்.
கிச்சனில் ஓரமாக சிமென்ட் கலவை உலர்ந்து போய் கிடந்தது.
""அமர்தலிங்கம் சார், கிச்சன் தரைக்கு சிமென்ட் பூச்சு வேலை நடந்ததா என்ன?''
""ஆமாம், சார். கிச்சன்ல தரை அங்கங்க சிமென்ட் பேந்து பள்ளமா போயிட்டு. பூஜை
அறைக்கு டைல்ஸ் பதிச்சபோது இதுக்கும் சேர்ந்து சிமென்ட் போட்டோம். கோயிலுக்கு
போறன்னைக்குத்தான் வேலை முடிஞ்சது.'' என்ற அமர்தலிங்கத்திடம்,
"" அப்படின்னா, தரைக்கு சிமென்ட் போட்டப்பிறகு, யாரும் கிச்சன் பக்கம் போகல அப்படிதானே?''
ஆமாம் என்று தலையை ஆட்டினார், அமர்தலிங்கம்.
""சரி, கவலைப்படாதீங்க. கூடிய சீக்கிரம் கொள்ளையர்களைப் பிடிச்சுடுவோம்'' என்று
சொல்லிவிட்டு, துப்புராஜ் ஸ்வேஷனுக்கு கிளம்பினார்.
ஒரு வாரம் கடந்தது.
கொள்ளை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட கை ரேகைகள் பழைய குற்றவாளிகளின் எந்த ரேகையுட
னும் சேரவில்லை. சமீபத்தில் ரிலீஸ் ஆன குற்றவாளிகளையும் விசாரணை செய்ததில்கூட
குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.
துப்புராஜ் டென்ஷன் ஆனார். " அப்படி என்றால் இந்த கொள்ளையில் புதியவர்களோ,
அல்லது அமிர்தலிங்கத்திற்கு தெரிந்தவர்களோதான் கை வரிசை காட்டியிருக்கிறார்கள்.' என்ற
முடிவுக்கு வந்தார், துப்புராஜ்.
"" கண்ணாயிரம், அன்னைக்கு மோப்ப நாய் துப்பு கொடுத்த லோக்கல் பத்திரிகை பல்லாவரத்தில்
இருந்து வருது. அந்த பத்திரிகையில வெத்தல பாக்கு மடிக்கப்பட்டிருந்ததுக்கு அடையாளமா
சுண்ணாம்பு கறை இருந்தது. அடுத்ததா, அந்த பேப்பர் கிடந்த இடத்துல "ரெங்க விலாஸ்'
லேபிள் போட்ட புகையிலை கவர் கிடந்தது.
அதனால நிச்சயமா குற்றவாளிக்கு வெத்தலை போடும் பழக்கம் இருக்கு. அப்பறம் அந்த
புகையிலை சென்னையில கிடைக்காது. ஏன்னா அது திருவாரூர் மாவட்டம் புலியூர்ல
தயாரிக்கப்படறது. இதை எல்லாம் சேர்த்து பார்த்தா குற்றவாளி வெளியூரில் இருந்து
சென்னையில் தங்கி இருக்கிறான்.
ஸோ, குற்றவாளி அனேகமா பல்லாவரம் பக்கம் தான்தங்கி இருக்கணும். நீங்க,
பல்லாவரம் போயி, அந்த ஊர்ல உள்ள ஒரு கால் ஊனம் உள்ளவங்க அத்தனை பேர் லிஸ்ட்
எடுங்க. அது லசந்தேகப் படும்படி யாராவது இருந்தா, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க. என்
உள் மனசு குற்றவாளி அங்க தான் இருக்கணும்ணு சொல்லுது'' என்றார்.
கண்ணாயிரம் விசாரணை செய்ததில் வெத்தல போடும், விந்தி விந்தி நடக்கும் சந்தேகம்
படும்படியான மருதமுத்து என்பவரை கண்ணாயிரம் ஸ்டேஷனுக்கு கூட்டி வந்தார்.
துப்புராஜ் வந்தவனை கூர்ந்து பார்த்தார்.
கொள்ளை போன அந்த ஒருவாரகாலத்தில் அவனின் நடவடிக்கைகள் என்னவென்று
விசாரித்தப்போது, அவன் முன்னுக்கு பின்னாக உளறினான்.
அடுத்து லாக்கப்பில் போட்டு அடித்து, உதைத்தப்போது உண்மையை கக்கினான்.
""சார், அடிக்காதீங்க. எனக்கும் கொள்ளைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான்
அந்த அய்யா வீட்ல கொஞ்ச நாளைக்கு முன்னால பெயிண்டிங் அடிக்கப் போனேன்.
அப்போ டீ கடையில டீ குடிச்சுக்கிட்டு இருந்த போது பக்கத்திலிருந்தவரிடம்
நான் போன இடம் பெரிய இடம். நகை கடைகாரர். இப்போ அவரு பொண்ணுக்கு
கல்யாணம் வைச்சுருக்கிறதால மகராசன் வீட்ல வேலை செஞ்சவுங்களுக்கு எல்லாம்
டிரஸ் எடுத்து கொடுத்தாருன்னு பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ மூணுபேரு
என்னை தனியா அழைச்சுட்டு போயி கத்தை கத்தையா பணத்தைக் கொடுத்து அந்த வீட்டை
பத்தி விவரம் கேட்டாங்க. நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு சொன்னேன். கொள்ளை
நடந்தப் போது என்னையும் அந்த வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாங்க. அவ்வளவுதான்''
என்று கையெடுத்து கும்பிட்டான்.
"" சரி, அந்த மூணுபேரும் இப்ப எங்க இருக்காங்க?'' என்று துப்புராஜ் கேட்டதும். மருத
முத்து அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தைச் சொன்னான்.
"" கண்ணாயிரம், இவன் சொன்ன இடத்துக்கு போய் எல்லாரையும் பிடிச்சு, அவங்ககிட்ட
இருக்கிற பணம், நகை எல்லாத்தையும் கொண்டுவாங்க'' என்றார்.
""சார், ஒரு சந்தேகம்''
""என்ன?''
""இந்த கொள்ளைக்கு முக்கியமான எவிடன்சாக இருந்தது குற்றவாளி ஊனமானவன் என்பது.
அந்த க்ளு எப்படிசார் உங்களுக்குத் தெரிஞ்சது?''
""அதுவா, அமிர்தலிங்கம் வீட்டு கிச்சன்ல தரையில சிமென்ட் உலராம இருந்திருக்கு. அதுல
திருடங்களோட காலடி பதிஞ்சு இருக்கு. அதுல ஒருத்தனோட கால் தடத்துல ஒருகால் தடம்
விரல் தடம் மட்டும்தான் பதிஞ்சுருக்கு. ஸோ திருடன்ல ஒருத்தன் ஊனம்னுகெஸ்பண்ணேன்''
என்றார்.
""சூப்பர் சார்'' என்று சொல்லிவிட்டு கண்ணாயிரம் கிளம்பினார்.
அடுத்த இருநாளில் கொள்ளையர்கள் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல்
செய்யப்பட்ட பணமும், நகையும் அமிர்த லிங்கத்திடம் ஒப்படைத்தார் துப்புராஜ்.
அமிர்தலிங்கம் துப்புராஜியை பாராட்டி விட்டு விடைபெற்றார்.




துப்பறியும் கதை 5. சவால்!

நகரத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் நகரத்தில் முக்கியமான இடங்களில் பாம் வைத்து
தகர்த்து, நகரத்தையே சீர்குலைக்கப் போவதாக உளவுதுறை மூலம் தகவல் வந்ததையடுத்து
துப்புராஜ் ரொம்பவும் அலார்ட்டாக இருந்தார். இரவும் பகலும் நகரத்தை ரவுண்ட் அப்
செய்து கொண்டிருந்தார்.
ஒரு மாதம் முயற்சி செய்ததன் பலனாக ஒருதீவிரவாதி இருக்கும் இடம் துப்புராஜிக்கு ரகசிய
தகவல் வந்தது. அதனையடுத்து துப்புராஜ் போலீஸ் படையுடன் சென்று தீவிரவாதி பதுங்கி
இருந்த இடத்தை ரவுண்டப் செய்து, ரஹமத் என்கிற தீவிரவாதியை அதிரடியாய் கைது
செய்தார்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதி ரஹமத் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தான்.
மேலும் துப்புராஜியை வேறு மிரட்டினான்." என்னை விடுவிக்கா விட்டால் என்னுடைய
நண்பர்கள் உங்கள் தமிழ்நாட்டை சுடுகாடாக ஆக்கிவிடுவார்கள்' என்று எச்சரித்தான்.
துப்புராஜ் அவனின் மிரட்டலை எல்லாம் பொருட்படுத்தவில்லை.
இரு வாரங்கள் கழிந்தன.
துப்புராஜி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். எதிரே டேபிளில் இருந்த போன் பெல்
அடிப்பது கூட உணராமல் சிந்தனையில் இருந்தார்.
அப்போது வெளியிலிருந்து வந்த கண்ணாயிரம் ரிஸிவரை எடுத்து, ""ஹலோ'' என்றார்.
"" என்ன துப்பறியும் புலி துப்புராஜ்! எப்படி இருக்கிறாய்?'' என்று நக்கலாய் மறுமுனையில்
குரல் வந்தது.
இதைக்கேட்டு பதட்டம் அடைந்த கண்ணாயிரம், "" சார், உங்களுக்குத்தான் யாரோ போன்
பண்றாங்க'' என்று சொல்லி முடிக்கும் முன்பாகவே ரிஸிவரை வாங்கி துப்புராஜ் காதில்
வைத்தார்."" யார் பேசறது?'' அதட்டலாய் கேட்டார்.
"" அதை நீ தான் கண்டுபிடிக்கணும். சரி, என்னை உன்னால் ஒரு போதும் கண்டுப்பிடிக்க
முடியாது. இப்போது நான் சொல்லும் தகவலை மட்டும் கேள். குறுக்கே எதுவும் பேசாதே!'' என்ற
கண்டிப்புடன் அந்த ரகசிய குரல் பேச ஆரம்பித்தது.
""சரி, சொல்ல வந்ததை சொல்'' துப்புராஜ் சொன்னார்.
"" இன்னும் ஒரு வாரம் டைம் தருகிறேன். அதற்குள் நீ பிடித்து வைத்திருக்கும் எங்கள் நண்பனை
விடுவிக்கவேண்டும். இல்லாவிட்டால், இந்த நகரத்தின் முக்கிய வணிகவளாகத்தில் குண்டு
வைத்து தகர்ப்போம். இது உறுதி. நன்றாக யோசித்துப்பார்! அங்கே நிமிடத்திற்கு நிமிடம்
ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் இடம். நீ புத்திசாலி என்பதை நான் அறிவேன். ஆதலால்,
குண்டு வைப்பதை தடுக்கவோ, அல்லது குண்டு வைத்ததை கண்டுப்பிடித்து அகற்றி எங்களின்
முயற்சியை முறியடிக்க முயலவேண்டாம். எங்களைப் பொறுத்தவரை ஒருஉயிர் இழப்பு.
உன் பக்கம் ஆயிரக்கணக்கில். பி கேர் புல்'' போன் இணைப்பு சட்டென்று துண்டிக்கப்பட்டது.
இதை கேட்டதும் துப்புராஜ் அதிர்ந்தார்.
போனில் சொல்லப்பட்ட வணிகவளாகத்திற்கு புறப்பட்டார்.
அந்த அவன் சொன்னது போல அந்த வணிகவளாகம் ஜன நெருசலில் மூழ்கி இருந்தது.
இருபக்கமும் பல அடுக்கு கட்டடங்கள் வான் நோக்கி உயர்ந்திருந்தது. இங்கே பாம் வைத்தால்
உயிர் சேதம் அதிகமாகதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டார்.
அடுத்தடுத்து அந்தப் பகுதி முழுவதையும் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
24 மணி நேரமும் போலீஸ் காவலை நீட்டித்தார். அந்தப் பகுதியை சல்லடை சலிப்பது போல
மோப்ப நாய் துணையுடன் பாம் ஸ்குவார்டும், போலீசும் துரிதமாக தீவிர வேட்டையில்
ஈடுபட்டனர்.
இரண்டு நாள் ஓடின. அந்தப் பகுதியில் எங்கும் பாம் வைக்கப்பட வில்லை என்பது உறுதி
யானது.
"அப்பாடா... என்று பெருமூச்சு விட்டார் துப்புராஜ்.
கண்ணாயிரம் ஸ்டேஷனுக்கு வந்தார். துப்புராஜ் முகத்தில் கொஞ்சம் நிம்மதி படர்ந்து இருப்பதை
உணர்ந்தார்.
""சார், ஒரு தீவிரவாதி உங்க கிட்ட சவால் விட்டுருக்கானே சார்! உங்கள பத்தி அவனுக்கு
முழுசா தெரியாதுன்னு நினைக்கிறேன்.'' என்று கண்ணாயிரம் சொல்லி முடித்தப்போது, போன்
மணி அடித்தது.
போனை துப்புராஜ் எடுத்தார்.
""குட்.வெரி குட். வெல்டன் துப்புராஜ். நான் குறிப்பிட்ட பகுதியை நன்றாக பாதுகாப்பு
வளையத்துக்குள் கொண்டுவந்து விட்டீர்கள். நல்லது. எனக்கும் கூட திரிலிங் பிடிக்கும்.
சவால் பிடிக்கும்! செத்த பாம்பை செருப்பால் அடிக்கும் பழக்கம் எனக்கில்லை. சரி, விஷயத்
திற்கு வருகிறேன். பாம் வைக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அதையும் சொல்லி
விடுகிறேன். குறித்துக்கொள்! அந்த இடத்தில் தான் பாம் வைக்கப்போகிறேன்.முடிந்தால்
தடுத்துப்பார்! இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறது என் கெடு முடிவதற்கு.'' சொல்லி
விட்டு போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சாலையோர லோக்கல் போன் பூத்திலிருந்து அவன் பேசினான் என்பது தொலைப்பேசி
அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
""கண்ணாயிரம் இன்னும் அவன் பாம் வைக்கவில்லையாம். இனிமேல் தான் வைக்கப் போறா
னாம். அதுவும் வைக்கப்போற இடத்தையும் சொல்லி விட்டு சவால் விடுகிறான்.'' என்று
எரிச்சலடைந்த துப்புராஜ், வணிகவளாகப் பகுதிக்கு சென்றார். இரவும் பகலுமாக அந்தப்
பகுதி கண்காணிக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்டது. பொதுமக்கள் அங்கு நுழைவதற்கு தடை
செய்யப்பட்டது.
நகரமே என்ன நடக்குமோ என்று பதட்டத்தில் இருந்தது.
தீவிரவாதி விடுத்திருந்த கெடு இன்றுடன் முடிகிறது.
சில போலீஸ் அதிகாரிகள் பிடித்திருக்கும் தீவிரவாதியை விடுவித்துவிடலாம் என்றனர்.
ஆனால், துப்புராஜ் உடன் படவில்லை. ""ஒருவேளை அவன் பாம் வைத்தாலும் அதை
கண்டுபிடிப்பேன். அவனையும் பிடிப்பேன்'' என்று சபதம் செய்து விட்டு,ஸ்பாட்டுக்கு
கிளம்பினார்.
இஞ் பை இஞ்சாக மோப்ப நாய்களின் துணையுடன் அவன் குறிப்பிட்டிருந்த இடத்தை அலசி
னார். எங்குமே பாம் வைக்கப்பட்டிருக்கவில்லை.
"அவன் உண்மையைச் சொன்னானா? இல்லை சும்மா பொய் சொன்னானா?' என்று
யோசனையில் இருந்தப்போது, செல்போன் சிணுங்கியது. எடுத்துப்பேசினார்.
""துப்பறியும் சிங்கமே! பாம் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து விட்டீர்களா? அது உங்களால்
முடியாது. நீ நின்று கொண்டிருக்கும் பகுதியில் தான் பாம் வைக்கப்பட்டிருக்கிறது. அது
இன்னும் 30 நிமிடத்தில் வெடிக்கும்.'' என்று போன் குரல் ஓய்ந்துப்போனது.
துப்புராஜ் அதிர்ச்சி அடைந்தார். டென்ஷனில் தரையை மிதித்துக்கொண்டார். தலையிலிருந்து
தொப்பியைக் கழற்றி, தலைகோதியவர் அண்ணாந்து பார்த்தவரின் பார்வை மேலே அப்படியே
தொக்கி இருந்தது.
சில நிமிடங்கள் அதையே கூர்ந்து கவனித்தவர். திடீரென்று வாவ்... வாவ்.... என்று கத்திக்
கொண்டே பாம் ஸ்குவார்ட் களை அழைத்து, அதோ பாருங்கள்! கை நீட்டி காட்டினார்.
அவர் கை நீட்டிய இடத்தில் ஒரு விளம்பர ராட்சச பலுõன் பறந்து கொண்டிருந்தது.
""இந்த பலுõன் நேற்றில்லையே... அதுக்கு முன்பும் இல்லையே.... இன்னைக்குத் தான்
தொங்க விடப்பட்டிருக்கிறது. கமான்... சர்ச்....'' என்று காட்டுக்கத்தலாய் கத்தினார்.
பாம் ஸ்குவார்ட்ஸ் தப தப வென்று அந்த கட்டடத்தின் மேல் மாடிக்கு ஏறினார்கள். அந்த
ராட்சச பலுõனை கைப்பற்றினார்கள். அந்த வினாடியே அந்த பலுõனை கிழித்துப் பார்த்தப்
போது... அதில் அந்த பாம் இருந்தது. டிஸ்பிளேயில் 20 நிமிடம் 40 வினாடியில் குறைந்து
கொண்டிருந்தது.
ஸ்குவார்டுகள் முனைப்பாக முனைந்து பாம்மை செயல் இழக்கச் செய்தனர்.
தீவிரவாதி விட்ட சவாலில் துப்புராஜ் வெற்றி பெற்றுவிட்டார். சக போலீஸ் அதிகாரிகள்
அவரை பாராட்டினார்கள்.
பின்னர், பிடிப்பட்ட தீவிரவாதியிடம் விசாரணையை முடுக்கிவிட்டார். பிடிப்பட்டவனும்
இனி நாம் விடுதலை ஆக முடியாது என்பதை அறிந்திருந்தான்.துப்புராஜ் அவனின் நண்பர்கள்
வைத்திருந்த பாம்மை கண்டுப்பிடித்து விட்டதை கேள்விப்பட்டு, பிடிப்பட்டவன் அவன்
நண்பர்கள் இருக்கும் ரகசிய இடத்தை காட்டிக்கொடுத்தான்.
துரிதமாக செயல்பட்டு, துப்புராஜ் மற்ற தீவிரவாதிகளையும் விரட்டிப்பிடித்தார்.



துப்புராஜ் 6

ஊரெங்கும் ஒரே பேச்சு. டி.வி., செய்திதாள் எல்லாவற்றிலும் பரபரப்பாக பேசப்படும்
முக்கிய செய்தியும் அதுதான். கோயில், தியேட்டர், பார்க், பஸ்டாண்டு போன்ற மக்கள்
கூடும் முக்கிய இடங்களில் எல்லாம் "காணவில்லை' என்ற அறிவிப்பு ஒட்டிய போஸ்டர்கள்
ஒட்டப்பட்டிருந்தன.
இந்த ஒரு மாதத்தில் இது வரை மூன்று சிறுவர்கள் மாயமாகி விட்டனர். பள்ளியிலிருந்து
ஒரு சிறுவனும், அம்மாவுடன் கோயிலுக்குச் சென்ற சிறுவனும், அப்பாவுடன் பார்க்கில்
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் என மூன்று சிறுவர்களும் வெவ்வேறு இடங்களில்
யாரோ கடத்தி இருக்கிறார்கள்.
இதுவரை கடத்தியவர்களிடமிருந்து எந்த தொலைபேசி அழைப்புகளும் வரவில்லை.
பொதுவா குழந்தைகளை கடத்துபவர்கள் குழந்தைகளை பணயமாக வைத்து பெற்றோர்களிடம்
பணம் கேட்டு மிரட்டுவார்கள். கேட்ட பணம் கடத்தல்காரர்களின் கைக்குப் போனதும், பின்னர்,
குழந்தைகளை ஏதோ பாழடைந்த மண்டபத்திலோ, ஆள்அரவமற்ற சாலையிலோ விட்டு விட்டு
ஓடிவிடுவார்கள்.
இன்ஸ்பெக்டர் துப்புராஜ் பார்த்தவரையில் இப்படிதான் கடத்தல் கேஸ் முடிவுக்கு வரும்.
ஆனால், இந்த சிறுவர்கள் கடத்தல் கேஸ் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இதுவரை கடத்தி
யவர்கள் யார் என்றே தெரியவில்லை. கடத்தியவனும் பணம் கேட்டு பெற்றோர்களை தொடர்பு
கொள்ளவில்லை.
துப்புராஜ் பல கோணத்திலும் புலன் விசாரணை செய்து விட்டார். கடத்தல்காரன் பலே கில்லாடி
எந்த எவிடன்சும் இல்லாமல் கடத்தலை கச்சிதமாக முடித்திருக்கிறான்.
ஒரு மாதம் ஆகியும் கடத்தல்காரன் பணம்கேட்டுமிரட்ட வில்லையே,ஏன்? பணம் தேவை
இல்லை என்றால் எதற்காக கடத்தியிருப்பான்? இல்லை சிறுவர்களிடமிருந்து கிட்னி, இதயம்
போன்ற உடல் உறுப்புகளை எடுத்து விற்பதற்காக இருக்குமோ? ஒருவேளை அப்படி இருந்தால்
கூட, எதோ ஒருமருத்துவமனையில் கையும் களவுமாக சிக்கியிருப்பானே! அட, இவன்
எனக்கே தண்ணிகாட்டுகிறானே! இத்தனை நாளாக என் கண்ணில் மண்ணைத்துõவி சிக்காமல்
இருக்கானே!' பலத்த யோசனையில் இருந்தார், துப்புராஜ்.
சுடச்சுட காபி வாங்கி வந்த கண்ணாயிரம், ""சார், எப்படியும் பொறியில சிக்காமலா போயிடு
வான்? நிச்சயம் சீக்கிரமே பிடிப்படுவான். இப்போ காபியை எடுத்துக்குங்க.'' என்றார்.
"" சரி, கண்ணாயிரம் நீ சொல்றது எப்போதுமே பலித்துவிடும். இந்த முறையும் பலிக்காமலா
போகும்?'' என்ற துப்புராஜ், காபி கப்பை எடுத்து, வாயருகே கொண்டுபோனபோது...
ஸ்டேஷன் வாசலில் சர்ர் என்று வந்த ஆட்டோ குலுங்கி நின்றது. ஆட்டோவிலிருந்து அலறி
அடித்துக்கொண்டு இரு பெண்கள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தனர்.
""சார்... மோசம்போயிட்டோம் சார்... இப்பதான் என் பிள்ளையோடு ஹோட்டலுக்குப்
போனேன். என் பையன் பக்கத்திலிருந்தான். நான் கை கழுவிவிட்டு வந்து பார்த்தா, அவனைக்
காணும் சார்... அந்த பக்கம் நல்லா தேடிப்பார்த்துட்டேன்... சார்...'' சொல்லிய அந்த பெண்
மணி ஓ என்று அழுதுகொட்டினாள்.
""சரி... சரி... அழாதீங்க. என்னோட உடனே கிளம்புங்க. கண்ணாயிரம் கிளம்புங்க, அந்த
ஹோட்டலுக்குப் போகலாம்.'' என்ற துப்புராஜ் பரபரப்புடன் ஜீப்பில் கிளம்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக