புதன், 31 மார்ச், 2010

உயர்திணையும் அஃறிணையும்!

ஆன்மிக சிந்தனை

உயர்திணையும் அஃறிணையும்!
உலகில் கடவுள் 85 லட்சம் உயிரினங்களைப் படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுளின் அருள்பார்வையில் எல்லா உயிரினங்களும் ஒன்று தான். எந்த வேறுபாடும் கிடையாது. மனிதனின் பார்வையில் தான் பேதங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. மனிதன் தன்னை போல சக மனிதர்களிடமே பேதம் கண்டு திரிகிறான். கடவுள் ராஜாங்கத்தில் அனைத்து உ<யிர்களும் சமம். கடவுளை நேசிப்பவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் எல்லாம் உலகில் உள்ள சக ஜீவன்களை சமமாகவே பாவிக்கின்றனர்."வாடியப் பயிரை கண்டுபோதெல்லாம் வாடினேன்' என வள்ளலார் வருந்தினாரே, அந்த பரிபக்குவம் கடவுள் உணர்வு நிரம்ப பெற்றவர்களால்தான் இப்படி எல்லாம் சக உயிர்களைக்கண்டு பரிதாபப்படமுடியும்!
வாழ்வியல் ரீதியாக உலக உயிர்களை இரு வகையாக பிரித்திருக்கிறோம். அவை உயர்திணை, அஃறிணை.ஆறறிவுப் பெற்ற உயிர்கள் எல்லாம் உயர்திணை. அவ்வாறு அல்லாதவை எல்லாம் அஃறிணையாக இலக்கணம் வகுத்துள்ளது. அஃறிணை என்ற சொல் லாவகம்கூட பாராட்டக்கூடியது.
உலக வழக்குப்படி உயர்வு என்றால் தாழ்வு, நன்மை என்றால் தீமை என்று தான் எதிர்பதம் கொள்கிறோம். ஆனால் பாருங்கள் இலக்கணம் வகுத்த தொல்காப்பியன் உயர்திணை என்று சொல்லிவிட்டு, அதற்கு எதிர்பதமாக இருப்பது தாழ்வு திணை என்று சொல்லாமல் அஃது அல்லாத திணை அஃறிணை என்று கவுரவப்படுத்தியுள்ளான்.
இதில் இருந்தே அஃறிணைக்கு ஏதோ ஒரு சிறப்பு இருப்பது புலனாகிறது தானே! ஆம்! மனிதர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு அஃறிணையான உயிரினங்களுக்கு உண்டு என்பதன் சிந்தனைத் தேடல்தான் இந்த கட்டுரையில் சொல் கட்டுமானம்.
மனிதர்கள் ஆறறிவு பெற்றவர்கள். எது நல்லது? எது கெட்டது? என்று பகுத்து உணரும் திறன் பெற்றவர்கள். அது மட்டுமல்ல; உயிர் படைப்பில் அரிதான மேன்மையையும் பெற்றவர்கள் ஆவர். பிறவி சுழலில் பாவத்தைவிட, புண்ணியம் சேர்த்த ஆன்மா மனிதப்பிறவி எடுக்கிறது. முன்னம் எடுத்த பிறவியில் அதிகமாக பாவம் செய்த ஆன்மா அஃறிணையாக பிறவி எடுக்கிறது. அஃறிணை என்றால் ஆடு, மாடு, கோழி, ஜந்துக்கள் ஆகும்.
மனிதப்பிறவியில் தான் நல்லது, கெட்டது தெரிகிறது. நல்லவை செய்ய அதற்குண்டான புண்ணியமும், கெட்டது செய்தால் அதற்குண்டான பாவமும் வந்து சேர்கிறது. ஆக, மனிதன் செய்யும் செயலால் விளையும் பாவ, புண்ணியங்கள் எல்லாவற்றிற்கும் மனிதனே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கிறது. மனிதப்பிறவி வாய்த்திருப்பதன் பேறு என்னவெனில், முன்னம் செய்த வினையை அனுபவிக்கவும் எடுத்தப் பிறவியில் பாவ செயல்கள் செய்யாது புண்ணியம் தேடிக்கொண்டு பிறவி எடுப்பதை தவிர்த்துக்கொள்ள கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் ஆகும். நாம் ஆறறிவைக்கொண்டு, எது பிறவியை தடுக்கவல்ல செயல்கள் என்பதை அறிந்து, கடவுளை பிரார்த்தனை செய்து, கடவுள் ஆணைப்படி நியம, சாஸ்திரங்களை கடைபிடித்து வாழ்ந்து வாழ்வின் இறுதியில் கடவுளின் ராஜாங்கத்தில் தம்மை இணைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், மனிதப் பிறவி எடுத்ததுமே உயிர் மேல் ஆசை வந்து தொற்றிக்கொள்கிறது. பாசப்பற்று வேறு ஒட்டிக்கொள்கிறது. பொருள் மீதும், பொன் மீதும் இப்படி உலகப் பொருள்கள் மீது ஆசை வந்து படுத்த, புண்ணியம் தேடும் பாதையை மறந்து, பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.
ஆனால், அஃறிணையான ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளாக பிறவி எடுத்தவை எல்லாம் அவைகள் எடுத்த பிறவியில் புண்ணியம் சேர்த்து கொள்கின்றன. எப்படி எனில், அவைகளுக்கு எது நல்லது, கெட்டது என்பதை பகுத்துணரும் ஆற்றல் இல்லாததால் அவைகள் ஆற்றும் செயல்களால் வரும் விளைவுகளை அவை கொள்வதில்லை! அஃறிணைகளுக்கு மனிதர்களைப்போல பற்று, ஆசை, உயிர் ஆசை எல்லாம் கிடையாது. கடவுள் அருளைப் பெறவும் அவைகளுக்குத் தெரியாது என்பதால், அவைகள் கடவுளைப் புறக்கணித்த குற்றத்திற்கு ஆளாவதில்லை!
மனிதன் இறந்ததும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நரகமோ, சொர்க்கமோ செல்கிறான். ஆனால், விலங்குகள் எல்லாமே இறந்ததும் சொர்க்கம் மட்டுமே செல்கின்றன. அவைகள் நரகம் புகுவதில்லை. அது மட்டுமல்ல; எடுத்த பிறவியில் அவைகள் பாவம் எதையும் தெரிந்தே செய்வதில்லை. அவை வாழும் வரை பற்றற்று இருந்து, முன்னம் செய்த பாவங்களை போக்கிக்கொள்கின்றன. மேலும் பகுத்தறிவு இல்லாத எந்த ஜீவனின் மனதுள் கடவுள் இருந்து அருள்பாலிக்கிறான். இந்த பேறு யாருக்கு வாய்க்கும்?
மனிதப்பிறவி எடுத்து, அல்லற்று பாவம் தேடிக்கொண்டிருப்பதை விட, விலங்குகளாய் பிறப்பு எடுப்பது மேல் தான்! தன்னை மறப்பது தான் மனதின் வேலையாக இருக்க வேண்டும். அது சாதாரண மனிதர்களாகி நமக்கு வாய்க்காது. துறவிகளுக்கும், ஞானிமார்களுக்கும் வேண்டுமானால் அந்த பக்குவம் வரலாம். சிவனேன்னு இருப்பது என்பது விலங்குகளுக்கு வாய்த்த ஒரு பேறாகும். அதுவாய் பிறந்து, அதுவாய் இருந்து, அதுவாய் இறந்து, அது அதுவாய் போய்விடுகின்றன. அதுவாய் இருப்பது பிரம்மம் என்பதால் அவைகள் நேரடியாக பிரம்மத்தோடு சேர்ந்து விடுகின்றன. நாமோ நான் எனும் ஆணவ மலம் கொண்டு, நான் என்று வாழ்ந்து, நான் என்று இறந்து, நான் என்றே எஞ்சிவிடுவதால் மும்மலம் தீராமல் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கிறோம்.
என்னுடை பிரார்த்தனை எல்லாம்"கடவுளே! மீண்டும் பிறவாமை வேண்டும். அவ்வாறு பிறந்து விட்டால் அந்தப் பிறப்பு மனிதப்பிறப்பாக இல்லாமல் அஃறிணையாக இருக்கவேண்டும். ஒரு வேளை அடுத்தப்பிறவியில் ஆடாய், மாடாய், பன்றியாய், நாயாய் பிறவி வாய்த்தால் பாவம் அறியாது, புண்ணியம் மட்டுமே தேடிக்கொண்டு பிறவி சாகரத்தைக் கடக்க அருள்வாயாக!' என்பதாகவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக