வெள்ளி, 26 மார்ச், 2010

குழந்தைகளை புரிந்து கொள்வோம்

குழந்தைகளை புரிந்து கொள்வோம்! 1

குழந்தைகள் பூக்களை போன்றவர்கள். அவர்களோடு சினேகம் கொள்ள நீங்கள்
வண்ணத்துப்பூச்சிகளாக மாறவேண்டும்.பூக்களுடன் பழக மென்மை அணுகுமுறை வேண்டும்.
குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளும், சிணுங்களும், சிரிப்பும், அழுகையும் சொல்லும்
அர்த்தங்களை உங்களின் மேதாவி தனத்தால் அறிந்துகொள்ளமுடியாது. ஏனெனில் குழந்தை
களின் மொழி கடவுள் மொழி! அதாவது மவுனம். அரவணைப்பு உணர்வுகள் தான் அவர்கள்
அறிந்த தகவல் பரிவர்த்தனை. குழந்தைகளின் உலகம் தனி உலகம். அவர்களின் குணாதிச
யங்கள், இயல்புகள், தேவைகள் எல்லாம் அறிவதற்கு, குழந்தை மனதுடன் அணுகினால் மட்டுமே
புரிந்து கொள்ள முடியும்.
சரி, குழந்தைகளின் உலகத்தில் உள்ள ஆச்சரியங்களை, குழந்தைகளின் வாழ்க்கையில்
லுள்ள அதிசயங்களை புரிந்து கொள்ள என்னோடு வாருங்கள்.
""அம்மா, குழந்தை மல்லாக்க படுத்துக்கிட்டு "வீல்... வீல்...' கத்தறதும்மா. ஏன்னு புரியலை''
தலைபிரசவத்தில் குழந்தைப் பெற்றவள் தன் தாயிடம் கேட்டாள்.
"" ஒண்ணும் பயப்படாத. குழந்தை சிறுநீர்கழிக்க சிரமப்படுது. குழந்தையை அப்படியே
குப்புற கவிழ்த்து போடு, இல்லேன்னா குழந்தையை துõக்கி இடுப்புல வைச்சுக்கோ எல்லாம்
சரியாயிடும்.'' அம்மா சொன்ன கணமே குழந்தையை துõக்கி இடுப்பில் வைத்து கொள்கிறாள்.
சில நிமிடங்களில் குழந்தை சிறுநீர் போகிறது. அதன் அழுகையும் ஓய்கிறது. மகள் ஆச்சரியப்
படுகிறாள்.
அம்மா, எப்படி உனக்கு குழந்தை இதுக்காகத்தான் அழுவுதுன்னு தெரிஞ்சது?'' தாயிடம்
மகள் ஆச்சரியமாய் கேட்டாள்.
அதற்கு, அந்த தாய்""எல்லாம் ஒரு அனுமானம் தான். காலையிலேயே ஒரு குழந்தை விடாம
அழுதா, ஒண்ணு பசிக்காக அழணும்; இல்ல சிறுநீர்கழிக்கதான் அழுவணும்னு ஒரு கணக்கு.
குழந்தை எதையும் சொல்லாது. ஆனா, அது சொல்ல வேண்டியதை குறிப்பா சொல்லி அழும்.
குழந்தையின் ஒவ்வொரு நேரத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நாம தான் அந்த அழுகையின்
அர்த்தத்தை புரிந்து கொள்ளணும்.'' என்று அந்த தாய் குழந்தையை புரிந்து கொள்ளும் முதல்
பால பாடத்தை தன் மகளுக்கு சொல்லித் தருகிறாள்.
சரி. அந்த தாய் சொன்னது அனுபவ ஞானம். இது பற்றி மருத்துவர் என்ன சொல்கிறார்?
பிரபல குழந்தை நல மருத்துவ நிபுணர் ஒருவரிடம் கேட்ட போது," பொதுவா குழந்தை
களுக்கு உடல் கூறுகள், உறுப்புகள் போதுமான அளவு வளர்ச்சி அடைந்திருக்காது. அது
போல தான் அந்த குழந்தைக்கு சிறுநீர் பை சற்று மேலேயே இருந்திருக்கும். அதனால
குழந்தை சிறுநீர்கழிக்க சிரமப்பட்டு, அதை சொல்லத் தெரியாம அழுது இருக்கும். அதே
நேரம் குழந்தை குப்புற படுத்திருந்தாலோ, குழந்தையை துõக்கி வைச்சிருந்தாலோ
சிறுநீர்பை மேலும் கீழும் ஏறி இறங்கும். அந்த சமயத்தில் குழந்தை சுலபமா சீறுநீர் கழித்திரு“ண
கும். அதனால குழந்தைஅழுவதை நிறுத்திருக்கும்.'' என்று விளக்கம் தருகிறார்.
இப்படிதான் ஆரம்ப காலத்தில் குழந்தைகளின் உடல் அசைவுகளை, அழுகைகளை, சிணுங்கள்
களை புரிந்தும் கொள்ளும்அணுகுமுறைகளை தெரிந்துகொள்ளவேண்டும்.
பசிக்காக அழும் குழந்தைகள் வாயிலிருந்து உமிழ்நீரை வழிய அழும். செரிமானம் ஆகாத
பிரச்னையில் குழந்தைகள் கால், கைகளை உதைத்து கொண்டு விட்டு விட்டு அழும். உடல்
வலி ஏற்பட்டால் அரவணைப்பை தேடி கதறி அழும். ஜன்னி, ஜூரம் வந்தால் குப்புற
கவிழ்ந்து கொண்டு அழுகைக்கு இடையே கொட்டாவி விட்டு அழும்.
இடமாற்றம், சூழ்நிலை மாற்றம், ஒவ்வாமையின் போது,குழந்தைகள் தொடர்ந்து அழுது
அடம்பிடிக்கும். கைகளை இறுக மூடிக்கொள்ளும். 18 மணிநேரத்துக்கு குறைவாக துõக்கம்
இருந்தாலும் நைநை என்று சிணுங்கி அழும்.
ஆக, குழந்தைகள் முதலில் தனது பிரச்னைகளை, தேவைகளை தாய்க்கோ, பிறருக்கோ அதை
எடுத்துச் சொல்லும் விதமாக குறிப்பாக உணர்த்தும் மொழியாக அழுகை ஒன்றையே தகவல்
பரிவர்த்தனையாக கருதுகிறது. அந்த முயற்சியில் அதற்கு வெற்றியும் கிடைத்து விடுவதால்
அழுகையே நமது மொழி என்று கருதிவிடுகிறது. அதனால் தான் குழந்தைகள் தொட்டதுக்
கெல்லாம் அழுது அடம்பிடித்து, களேபரம் செய்கின்றன.
"ச்சே... என்ன குழந்தை இது! எப்பபார்த்தாலும் நைநைன்னு தொணதொணன்னு அழுது
கிட்டே இருக்கே' என்று நம்மில் பலர் அலுத்துகொள்கிறோம். குழந்தைகள் மீது வெறுப்பும்
கொள்கிறோம்.
பொறுமை இழக்கிறோம். குழந்தை மீது கோபம் கொள்கிறோம். குழந்தைகள் அழாமல்
சமத்தாக எப்போதும் துõங்கிகொண்டே இருக்கவேண்டும் என்று பொதுவாக பலரும் ஆசை
படுகிறோம். வேளைக்கு பால் குடித்து விட்டு, ஒருஜடப்பொருள் போல குழந்தைகள்
இருந்தால் நிம்மதி என்று நினைக்கிறோம். நீங்கள் நினைப்பது போல குழந்தைகள்
இருந்தால் அந்தக் குழந்தை இயல்பான, திடக்காத்திரமான, ஆரோக்கியமான குழந்தையாக
இருக்கமுடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் என்றால் அழவேண்டும். அடம்பிடிக்க வேண்டும். தொல்லைக் கொடுக்க
வேண்டும். குழந்தைகளை சமாளிக்க, பராமரிக்க, புரிந்துகொள்ள நாம் தான் குழந்தைகள்
நிலைக்கு வரவேண்டும். குழந்தைகள் மென்மையானவர்கள். நாமும் மென்மையானவர்
களாக மாறவேண்டும். பூப்பறிக்க கோடரி வேண்டாமே.
ஆதலால் குழந்தைகளைப் புரிந்துகொள்ள முதல்படியாக இருப்பது அழுகைதான்! ஏனென்றால்
குழந்தை பிறக்கும் போது அழுகையோடுதானே பிறக்கிறது! இடையில் நம்மிடமா அழுகை
கற்றுக்கொள்கிறது? குழந்தையின் சொந்த மொழி
முதல் குறிப்பு மொழி அழுகைதான் என்பதை நான் புரிந்து
கொண்டால் போதும். அந்த அழுகையின் காரண காரியங்களைத் தெரிந்து கொண்டு உடனுக்
குடன் அதன் அழுகைக்கு பின்னர் உள்ள தேவைகளை கவனித்து செய்தால் போதும்.
குழந்தைகளின் உலகில் நாம் குழந்தைகளோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் விலை
மதிப்பில்லாத சந்தோஷத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.


குழந்தைகளை புரிந்து கொள்வோம்!2

குழந்தைகளின் குழந்தைகளாகுவோம்...
" அப்பப்பா... இதுங்க குழந்தைகளா என்ன? என்ன வால்தனம்! சுட்டித்தனம்! செத்த நேரம்
செவனேன்னு ஒரு இடத்தில அடங்கி, ஒடுங்கி இருக்குதா? எப்பபாரு துருதுருன்னு...
ஓடுறதும், குதிக்கறதும்... இதுகல மேய்க்கறதுக்கே நாளு போய்டுது.' என்று அங்கலாய்ப்
பவரா நீங்கள்? அப்படி என்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். குழந்தைகள்
அப்படிதான் இருப்பார்கள். குழந்தைகள் சுதந்திரமானவர்கள்! தீராத விளையாட்டு பிள்ளைகள்!
ஒருகணம், ஒரு இடத்தில் சும்மா இருக்கமாட்டார்கள்.
அதை எடுப்பது, இதை உடைப்பது என்றுதான் இருப்பார்கள். ததக்கா புதக்கா என்று ஓடும்
போது எங்கே கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்வார்களோ, கட்டிலில் ஏறி, இறங்கும்
போது தடுமாறி விழுந்து, மண்டையை உடைத்து கொள்வார்களோ என்று நமக்கு நெஞ்சம்
பதைபதைக்கும்.
ஆனால் குழந்தைகள் அதைப் பற்றி எல்லாம் கவலை படமாட்டார்கள். இதனால் தான் " இளம்
கன்று பயம் அறியாது' என்கிறோம்.
குழந்தைகள் இப்படி துருதுரு என்று இருப்பதற்கு உளவியல் ரீதியிலான காரணங்கள் இருப்ப
தாக உளவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். ஸ்டெர்ன் பெர் என்பவர், " குழந்தைகளுக்கு
திட்டமிட்ட ஒரு செயலோ, குறிகோளோ கிடையாது. கண் மூலம் ஏதோ ஒன்றை பார்க்கிறது.
காதினால் ஒன்றை கேட்கிறது. தொடு உணர்வு மூலம் எதையோ எடுக்கிறது. இவற்றிலிருந்து
பெறும் அனுபவத்தை குழந்தைகளால் இன்னதென்று அனுமானிக்க முடியாது. அது ஒரு புது
அனுபவமாக இருப்பதால், அந்த அனுபவத்தைப் பெற துரு துரு என எதையாவது
செய்து கொண்டே இருக்கும்" என்கிறார்.
குழந்தைகள் எதை செய்ய நினைக்கிறார்களோ அதை செய்வார்கள். ஏன் செய்கிறோம்?
எதற்கு செய்கிறோம்? சரியா, தவறா? என்று ஆராய்ச்சி, திறனாய்வு செய்யமாட்டார்கள்.
அப்படி செய்யவும் தெரியாது. ஏனென்றால், நம்மை போல அவர்களுக்கு ஆறாவது அறிவு
எல்லாம் வேலை செய்யாது. குழந்தைகள் என்பவர்கள் கிட்டதட்ட ஐந்தறிவு கொண்டவர்
களாகவே இருப்பார்கள்.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகுதான் பகுத்தறிவு வேலை செய்ய தொடங்கும். இந்த நிலையில்
நாம் குழந்தைகளை புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஆறாவது அறிவை கொஞ்சம் துõர
வைத்து விட்டு, குழந்தைகளின் பெற்றோர் என்ற தோரணை இல்லாமல், குழந்தைகளின்
குழந்தைகளாக இருந்து அவர்களோடு பழகினால் மட்டுமே அவர்களை புரிந்து கொள்ள
முடியும்.
"" பாப்பா, காலையில டிபன் சாப்பிட்டியா?''
""யசல்லம் இரவு நன்றாக துõங்கினாயா?'' இப்படி எல்லாம் குழந்தைகளிடம் கேட்டால்
பேந்த பேந்த முழிக்கும். ஆனால் அதே குழந்தையிடம், "" செல்லக்குட்டி, பொம்முகுட்டி
மம்மு சாப்பிட்டியா?'' என்று கேட்டால் உடனே , ""மம்ம்மு சாப்பிட்டேன்'' என தலையை
ஆட்டும்.
""என்ன மம்மு சாப்பிட்ட? பப்பு மம்முவா? தையி மம்முவா? அசம் மம்முவா?'' என்று
கேட்டால், அதற்கு அந்தக் குழந்தை "" பப்பு மம்மு சாப்பிட்டேன்'' என்று ஆர்வமாய் பதில்
சொல்லும். அதுபோல, "இரவு துõங்கினாயா?' என்றால் பதில் வராது. அதே சமயம் ""யாத்திக்கு
அம்மாச்சி மடியில தாச்சிக்கினியா?'' என்றால் ஆமாம் என்று சொல்லும்.
இப்படிதான் குழந்தைகளின் தேவைகளை அவர்களின் மழழை மொழியில் பேசி, அவர்களி
டம் இருந்து அவர்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை, கருத்துகளை தெரிந்து கொள்ள
வேண்டும்.
அடுத்ததாக, குழந்தைகளின் கவனம், நினைவாற்றல் எல்லாம் வானவில் போல வந்து
போகும். ஏதோ ஒன்றை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டு பிடிவாதம் பிடிக்கும். அழுது
அலுச்சாட்டியம் பண்ணும். அந்த நேரத்தில் அந்த குழந்தையை சமாதானப்படுத்த ஐ.நா.
சபை நினைத்தாலும் முடியாது.
உதாரணத்துக்கு பக்கத்து வீட்டு பையன் ஒரு பலுõன் வைத்திருப்பதைப் பார்த்து விட்டால்,
அது தனக்கு வேண்டும் என்று அழுது அடம்பிடிக்கும். அந்த நேரத்தில் குழந்தை அடித்தோ,
திட்டியோ கவனத்தை திசை திருப்ப முடியாது. அந்த சமயத்தில் குழந்தையின் கவனத்தை
திசை திருப்ப, திடீரென்று ""நேத்து தாத்தா வீட்டுக்கு எப்படி போனோம் கூக்கூல தானே?''
என்று கேட்டு வைத்தால் "ஆமாம்' என்று தலையை ஆட்டும். அந்த கணத்தில் அதன் ஞாபகம்
பலுõன் மறந்து ரயில் நினைவு வந்து விடும்.
அடுத்து "குழந்தைகளை எடுப்பார் கை பிள்ளை' என்று சொல்வார்கள். குழந்தைகள் எப்போதுமே
அரவணைப்பைத் தேடி ஏங்கும். நம்மை போல பணம், பொருள், நகை என கொடுத்தால்
திருப்பதி அடைந்து விடாது. குழந்தைகளிடம் நாம் குழந்தை மாதிரி நடந்து கொண்டால்
போதும். பின்னர் நம்மை சுற்றியே வரும். நம்மீது ஆசையாக இருக்கும். நம்மிடம் ஒரு
இணக்கம் ஏற்பட்டு சினேகம் கொள்ளும். குழந்தைகளுக்கு நல்லவர்கள், கெட்டவர்கள்;
நன்மை, தீமை என்று பேதம் பிரிக்கத் தெரியாது. குழந்தைகளுக்கு கள்ளம், கபடம் கிடையாது.
உறவுகள் தெரியாது. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி யார் நடந்து கொள்கிறார்களோ அவர்கள்
தான் குழந்தைகளுக்கு உறவினர். அம்மா, அப்பா எல்லாம் அடுத்தப் படிதான். அதனால் தான்
குழந்தைகளை எடுப்பார் கை பிள்ளை என்கிறோம்.
குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள் மத்தியிலிருந்து விலகி இருக்கவே விரும்பும்.
தனிமையை விரும்பும். குழந்தைகள் முன்னே அதை விட, குறைவான உருவமுள்ளவை
களிடமே இருக்க ஆசைப் படும். குழந்தைகள், குழந்தைகள் கூட்டத்தில் இருப்பதே அலாதி
பிரியமாகும்.
இன்னொரு விஷயம் குழந்தைகளுக்கு எந்த வித குறுக்கீடோ, தொந்தரவோ தருவது அறவே
பிடிக்காது. இன்னும் சொல்லமானால் குழந்தைகளுக்கு உயர்திணைகளை விட, அஃறிணை
களே இஷ்டம். காரணம் அஃறிணைகள் கேள்வி கேட்காது, செய்யும் செய்யலை தடுக்காது,
குறுக்கீடாது, தொந்தரவு செய்யாது. அதனால் தான் நம்மை விட குழந்தைகளுக்கு நாய், பூனை,
ஆட்டுக்குட்டி, விளையாட்டுப் பொருள்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்.
குழந்தைகளை அதை செய்! இதை செய்! அதை செய்யாதே! இதை செய்யாதே என்றெல்லாம்
கட்டளையிட்டால் கதைக்கு உதவாது. அது என்ன செய்கிறதோ, அதை அதன் போக்கில்
ஊக்கப்படுத்தினால் மட்டுமே குழந்தைகள் மகிழும்!
பொதுவாக குழந்தைகளுக்கு பிடிவாதம், கோபம், சுயநலம், ஆத்திரம், பயம் எல்லாம்
இருக்கும். காரணம் குழந்தைகள் தங்கள் எண்ணங்களை, கருத்துகளை, விருப்பங்களை
வெளிப்படுத்த மொழியொன்று அறியாததாலும், தம்முடை விருப்பங்கள் அங்கீகரிக்கப்
படாமல் போவதாலும், பாதுகாப்பு இல்லாததாலும், குழந்தைகளை நாம் குழந்தை மனதோடு
அணுகாததாலும் குழந்தைகள் தற்காப்புக்காக, நினைத்ததை சாதித்துக்கொள்ள புத்திசாலித்
தனமாக, குழந்தைகள் கையாளும் ஆயுதங்களாக பிடிவாதத்தையும், கோபத்தையும், அழுவதை
யும் தமக்கான கேடயங்களாக்கிக் கொண்டன.
நாம் குழந்தைகளின் குழந்தை என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிட்டால்
போதும். எந்த குழந்தையும் பிடிவாதம் பிடிக்காது. தொல்லைக் கொடுக்காது.
அடுத்ததாக குழந்தைகள் சுதந்திரத்தை பெரிதும் விரும்புவார்கள். அவர்களுக்கென்று ஒரு
சூழ்நிலை, களம் நாம் தான் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஆதலால், நம்மை போலவே
அமைதியாக, அடக்கம் ,ஒடுக்கமாக குழந்தைகள் இருக்கவேண்டும் என்று சிறகொடித்து
கூண்டுக்குள் அடைக்கும் கிளிபோல குழந்தையை ஆக்கிவிடாதீர்கள்!
குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள். அதுதான் குழந்தைக்கு சந்தோஷத்தைக்
கொடுக்கும். உங்களுக்கும் சந்தோஷத்தை தரும். உங்களைப் போல குழந்தைகள் இருக்க
வேண்டும் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அப்படி நினைத்தால் அதை விட வேறு
முட்டாள் தனம் இருக்க முடியாது.


குழந்தைகளை புரிந்து கொள்வோம் 3

நற்பண்புகளை விதைப்போம்!
குழந்தைகள் பார்த்தல், கேட்டல், கவனித்தல் செயல்களில் ஆர்வமாக இருக்கும்.
தனக்கென்று ஒரு அனுபவம் இல்லாததாலும், ஒருவேளை இருந்தாலும் ,அதுதொடர்பாக
சிந்தித்து தெளியும் பக்குவம் இல்லாததால் குழந்தைகள் தங்களை சுற்றி நிகழும் சம்பவங்களில்
தாமாகவே முன்வந்து பங்கேற்கின்றன.
இந்த நிலையில் தான் குழந்தைகளிடம் மிக உஷாராக அணுகவேண்டும். எல்லோரிடமும்
குழந்தைகள் பழகவும், விருப்பங்களை வெளிப்படுத்தவும் மொழி தெரியாததால், குழந்தைகள்
மற்றவர்களை கூர்ந்து கவனிக்கின்றன. மற்றவர்கள் செய்யும் செயலை தாமும் செய்து பார்த்து
மகிழ்கின்றன. இதை போல செய்தல் அதாவது திரும்பசெய்தல் என்று சொல்லப்படும்
இமிடேஷன் முறை தான் கற்றலின் முதல் படியாக இருக்கும்.
""செல்லம் தாத்தா எப்படி இருமுவாங்கன்னு, மாமாவுக்கு செஞ்சுக்காட்டு'' என்றதுமே,
அந்தக் குழந்தை தாத்தா இருமியதை மிமிக்ரி பண்ணிக்காட்டும்.
""பாட்டி எப்படி நடப்பாங்கன்னு சித்திக்கு நடந்துகாட்டுடா செல்லம்'' என்று கொஞ்சினால்
உடனே பாட்டிப்போல முதுகு குனிந்து நடந்துகாட்டும்.
""அப்பா எப்படி நாற்காலியில உட்காந்து இருப்பாங்கன்னு சித்தாவுக்கு செஞ்சு காட்டு''
என்றால் தன் அப்பாவை போல கால் மேல் கால் போட்டு உட்காந்து காட்டும்.
இவை எல்லாம் எப்படி குழந்தைகளால் செய்ய முடிகிறது. அதற்கு காரணம் "போல செய்தல்'
ஆர்வம் மற்றும் பிறரை கவனித்தலால் வருவதாகும்.
இப்படி பட்ட சூழ்நிலையில் கேட்பதை திருப்பி சொல்வதில் சிரமம் இருப்பதால், அதில்
கவனம் செலுத்துவதை விட்டு பார்த்தலில் கூடுதலாக கவனம் செலுத்தும். ஆகையால்
குழந்தைகள் இருக்கும் இடத்தில் நல்ல செயல்களையே செய்யவேண்டும். பிறரின்
செய்கையை அப்படியே காப்பி அடிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இருப்பதால், குழந்தை
யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒழுக்கமான அணுகுமுறைகளை கடைப்பிடிக்க
வேண்டும்.
குழந்தைகள் முன் கெட்ட பழக்கங்களை ஒருபோதும் செய்ய கூடாது. ஏனென்றால் குழந்தை
களுக்கு எது நல்ல பழக்கம்? எது கெட்டப்பழக்கம்? என்பதெல்லாம் தெரியாது.
குழந்தைகள் இருக்கும் இடத்தில் புகைப்பிடித்தல், வெற்றிலைப் போடுதல், தலைசொரிதல்,
காது குடைதல், மூக்கு நோண்டுதல், வறட்டு வறட்டு என்று உடம்பு சொறிதல், தும்முதல்,
இருமுதல், இடது கை, வலது கை முறைமாற்றி பயன்படுத்த வேண்டியதுக்கு பயன்படுத்துதல்,
கண் கசக்குதல், பிறரை அடித்தல், ஆயுதம் கொண்டு தாக்குதல், கோபப்படுதல் போன்றவற்றை
முற்றிலுமாக தவிர்க்கவேண்டும்.
ஏனென்றால் இந்த செயல்களை எல்லாம் குழந்தைகள் முன்பு செய்தால் அதை அப்படியே
அதுவும் செய்து பழகும்.
அதே சமயம் குழந்தைகளுக்கு அப்ஸர்வேஷன் தன்மை அதிகமாக இருப்பதால். நாம் குழந்தை
களிடம் நல்ல பழக்கங்களை செய்து காட்டி அவர்களையும் அப்படியே செய்ய வைக்கலாம்.
உதாரணமாக வீட்டில் பெரியவர்களை மரியாதையாக நடத்துவது, வணக்கம், நன்றி போன்ற
பண்புகளையும் உறவினர்கள், விருந்தினர்கள், நண்பர்களிடம் பணிவாக நடந்து கொள்ளும்
பண்பை வளர்க்கலாம்.
முறையாக சாப்பிடும் பழக்கம், ஒழுங்காக துõங்கும் பழக்கம், கவனமாக நடக்கும் பழக்கத்தை
நாம் செய்துகாட்டுவதன் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
அடுத்ததாக குழந்தைகளின் கற்றல் திறனும் கவனத்தில் கொள்ளவேண்டும். குழந்தைகள்
மொழியை எப்படி அணுகுகிறார்கள் என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து
கொள்ள வேண்டும்.
குழந்தைகள் முதலில் சொல் சொல்லாகத்தான் பேசும். அதற்கு அ,ஆ, க,ங அரிச்சுவடி,
இலக்கணம் எல்லாம் தெரியாது. பொருள், பண்பு எல்லாம் தெரியாது. "தா, கொடு, போ,'
இப்படிதான் சொல்வடிவில் பேசும். இந்த சொற்களையும் பிறரிடமும், தன்னை சார்ந்துள்ள
வர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது.
அதுவும் குழந்தைகள் நிறம் சார்ந்த சொல், எண்கள் சார்ந்த சொல், நேரம் சார்ந்த சொல்,
பணம் சார்ந்த சொல் போன்றவற்றை எளிதில் தெரிந்து கொண்டு பேச பழகுகிறது. இப்போது
ஓரளவு புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. தன்னுடை விருப்பத்தை ஓரளவு சொல்ல
முயற்சிக்கிறது.
இந்த நிலையில், குழந்தையை ப்ரீகேஜ், யூகேஜி என்று பள்ளியில் சேர்த்து விடுகிறோம்.
குழந்தைகளோ பார்த்தல், கேட்டல், கவனித்தல் மூலம் முன்கூட்டியே பேச பழகி விட்டது.
ஆனால் பள்ளியில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மொழி கட்டமைப்பை போதிக்கும் போது
அனுபவ வழி மொழிக்கும், கற்றலில் வழி மொழிக்கும் வித்தியாசம் கண்டு குழம்பும்.
பள்ளிக்கு போவது என்றால் அது வெறுப்பான ஒரு செயலாக கருதி, போகமாட்டேன்
என்று அடம்பிடிக்கும். காரணம் குழந்தைகள் விரும்பிய கற்றல் வேறாகவும், பள்ளியில்
பயிற்று விக்கும் முறை வேறாகவும் இருப்பதால் தான் குழந்தைகளுக்கு கற்றல் என்பது
இனிமையாக இருப்பதில்லை.
தற்போது செயல் வழி கல்வித்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் குழந்தைகள்
இயல்பாக, இயற்கையாக, விளையாட்டு முறையில் கற்பதற்கு இந்த கல்வி முறை உதவுகிறது
என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆதலால், குழந்தைகளுக்கு விருப்பமானதை நாம் செய்வது மட்டுமே குழந்தைகளுக்கு
நாம் காட்டுகின்ற நன்றியாகும்.


குழந்தைகளை புரிந்துகொள்வோம்4

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்!

குழந்தைகள் இயல்பானவர்கள். பாத்திரத்திற்கு ஏற்ப வடிவம் பெறும் தண்ணீர் போல குழந்தைகளும் சூழ்நிலைக்கு ஏற்ப,
பழகும் மனிதர்களுக்கு ஏற்ப குணங்களைப் பெறுகின்றனர். குழந்தைகளின் குணங்களுக்கு முதலில் பொறுப்பேற்க
கடமைபட்டவர்கள் பெற்றோர்கள் தான். குறிப்பாக தாய்க்கு பெரும் பங்கு இருக்கிறது.
குழந்தைகள் அர்த்தம் தெரியாமலே, காரணம் புரியாமலே சில குணங்களை பிரதிபலிக்கின்றனர். கோபம், பிடிவாதம்,
சுயநலம், வெறுப்பு, கீழ்படியாமை போன்ற குணங்களை வெளிப்படுத்துகின்றனர். ஏன் அப்படி வெளிப்படுத்து
கிறார்கள் என்றால், அதற்கு காரணம் நமக்கிருப்பது போல இருக்காது. குழந்தைகள் விருப்பம் முழுமையாக நிறைவேற
இவை எல்லாம் கருவிகள் என்று நினைத்து கொள்வதுதான்.
தெருவில் கலர் கலராக பலுõன் கொண்டு வியாபாரி வருகிறார்.
"" வண்ண பலுõன் ஒருரூபா, பெரிய பலுõன் ரெண்டு ரூபா...'' என்று ஒருபலுõனை உள்ளங்கையில் தேய்த்து
விநோதமான சப்தத்தை எழுப்புகிறான்.
இதைப் பார்த்து குழந்தைகள் பலுõன் வாங்க ஆசை பட்டு, பெற்றோர்களை இம்சை படுத்தும். தெருவில் ஒருத்தர்
ஒரு குழந்தைக்கு பலுõன் வாங்கி கொடுத்து விட்டால், மற்ற குழந்தைகளும் வாங்கித்தரச் சொல்லி பிடிவாதம் பிடிக்கும்.
ஒரு பொருளைப் பிடித்திருக்கிறது என்றால் அதை அடைய பிடிவாதத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்துகிறது.
குழந்தை அடம்பிடிக்கிறதே என எண்ணி நாம் அந்தப் பொருளை வாங்கி கொடுத்தால் மகிழ்கிறது. அதன் தேவை
பூர்த்தியாகிறது.இந்த சம்பவத்தின் மூலம் குழந்தை ஒரு பொருளை நம்மிடமிருந்து பெறவேண்டுமானால் இவர்களிடம்
அடம்பிடிக்கவேண்டும், பிடிவாதம் பிடிக்கவேண்டும் என் தற்குறியாக நினைத்து கொள்கிறது.
அதே சமயம் குழந்தை பிடிவாதம் பிடித்தாலும் கூட, அந்தப் பொருளை கடைசி வரை நாம் வாங்கி கொடுக்காமல்
இருந்தால், முடிவில் அந்தக் குழந்தை பிடிவாதத்தால் இது சாத்தியமில்லை என அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளும்.
அடுத்த முறை பிடிவாதத்திற்கு பதிலாக வேறு உபாயம் உண்டா என தேடும். அதற்கும் நாம் இடம் கொடுக்காமல்
இருந்தால் நாளடைவில் குழந்தைகள் பிடிவாதக்குணத்தையும், கோபத்தையும் விட்டுவிடும்.
"" ஏ, செல்லம், மாமா உனக்கு அஞ்சு பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன் பாரு. எல்லாம் உனக்குத்தான். நீயே
தின்னு. யாருக்கும் கொடுக்காத.'' இப்படி மாமன் சொல்லிக் கொடுக்கிறான்.
உடனே, அம்மா, ""டேய், செல்லம். எனக்கொரு பிஸ்கட் கொடுப்பா'' கெஞ்சுகிறாள்.
குழந்தை கொடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசிக்கிறது. இந்த சமயம் பார்த்து மாமன் "" தங்கம், யாரு கேட்டாலும்
கொடுக்காத. இது மாமா உனக்கு வாங்கிக் கொடுத்தது.'' என்று விளையாட்டாக சொல்ல, அங்கேதான் வினையாகிறது.
இப்படி கள்ளமில்லா மனதில் நாம் தான் கருத்தேற்றம் செய்கிறோம்.
இதனால் குழந்தைகள் கை நிறைய பிஸ்கட் வைத்திருந்தாலும் கூட, அதிலிருந்து ஒன்றைக் கூட பிறருக்குக் கொடுக்காது.
இது குழந்தைகள் கடைப்பிடிக்கும் சுயநலபோக்கு. இதற்கு காரணம் குழந்தைகள் இல்லை. நாம் தான் பொறுப்பேற்க
வேண்டும். ஏனென்றால் ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கிக்
கொடுப்பதால், அவ்வளவையும் தானே தின்ன வேண்டும் என்று நினைத்து கொள்கிறது. அதே சமயம் தினம் தினம்
ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்தால் அந்தப் பொருளின் மீது அலட்சியம் தான் தோன்றுமே தவிர, தனக்கே
வேண்டும் என்ற சுயநல போக்கு ஏற்படாது.
பொதுவாக குழந்தைகள் மீது அதிக அக்கறை, பாசம், கரிசனம் காட்டும் பெற்றோர் மற்றும்
உற்றோராலும் குழந்தைகள் தவறு செய்யும் போது, தண்டனை தரும்போது பிறர் தலையிட்டு அக்குழந்தைக்கு ஆதரவு
கரம் நீட்டும் போதும் சில குழந்தைகள் கீழ்படியாமை குணத்தை வெளிப்படுத்துகின்றனர்.
கிராமபுறத்தில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அனேக உறவுகள் இருக்கும்.
குழந்தை கீழே தடுமாறி விழுந்து வீல் வீல் என்று அழும் போது, அம்மா ஓடிவந்து துõக்கி, ""அச்சச்சோ, கீழே விழுந்துட்
டியா? அடிப்பட்டுட்டா... இரு சித்தாப்பாவை கூப்பிட்டு இந்த தரை அடிக்க சொல்றேன்... என்று குழந்தையின்
சித்தப்பாவை கூப்பிட்டு. "" இந்த தரை என் செல்லத்தை கீழே தள்ளி விட்டுட்டு. இந்த தரை நாலு சாத்து சாத்துங்க''
என்பாள். உடனே குழந்தைக்கு முன்பாக, சித்தப்பா குச்சியால் தரை நாலு அடி அடிக்க, குழந்தை அழுவதை நிறுத்தும்.
அதுபோல, குழந்தை எதாவது விஷமதனமோ, பிடிவாதமோ பிடித்தால் "" இத பாரு, பக்கத்து வீட்டு மீசை மாமாவ
கூப்பிடவா? மீசை மாமா வந்தா உன் காதை கடிச்சுடுவாரு. அப்பறம் உன் கண்ணை பிடிங்கி காக்காவுக்கு போட்டுடுவாரு
கூப்பிடவா?'' என்று பயம் காட்டியதும் குழந்தை யோசிக்கும்.
""என்ன சமத்தா இருக்கியா? இல்ல, மீசை மாமாவ கூப்பிடவா?''
இப்போது குழந்தை அம்மா சொல்வதை கேட்டும்.
ஒருபுறம் அக்கறை, அன்பும் மறுபுறம் கண்டிப்பும், தண்டனையும் தரும் பெற்றோர் மத்தியில் வளரும் குழந்தைகள்
மரியாதை கலந்த பயத்துடன் இருப்பார்கள்.
அடுத்ததாக, சிறுகுழந்தைகள் மற்றும் பெற்றோரின் பல நடத்தையின் விளைவுகள் பற்றி புரிந்து கொள்வோம்:
"பிரம்பை கையாளாதவன் தன் குழந்தையை கெடுக்கிறான்' என்ற பழமொழிக்கேற்ப, குழந்தைகளை எந்த சமயத்திலும்
சுதந்திரமாக பேசவோ, நடக்கவோ பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதே சமயம் குழந்தைகள் தவறாக நடந்து
கொண்டால் தண்டனை அளிக்கிறார்கள். இருந்தாலும், குழந்தைகள் ஒழுக்கமாக நடந்துகொள்ளும் போது பாராட்டும்,
பரிசும் அளிக்கின்றனர். இது ஒருவகை பெற்றோர் அணுகுமுறை.
"இப்படி இருக்கவேண்டும்; இப்படி செய்ய வேண்டும்; இப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து, அவ்வாறு
தாங்களும் நடந்து கொண்டு, குழந்தைகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்று கண்காணிக்கின்றனர். ஒருவேளை
குழந்தைகள் தவறாக நடந்தால் பிற்பாடு கொஞ்சம் அணுகுமுறையை மாற்றிக்கொள்கின்றனர். இது ஒரு வகை
பெற்றோரின் அணுகுமுறை.
குழந்தைகளுக்கே உரித்த தனித்தன்மையை மதிக்கின்றனர். குழந்தைகள் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கின்றனர்.
தவறுகளை அனுமதித்து அதை உணரசெய்கின்றனர்.குழந்தைகள் ஒழுக்கமாக நடந்துகொள்ளும் போது பாராட்டும்,
பரிசும் அளிக்கின்றனர். இது ஒருவகை பெற்றோர் அணுகுமுறை.
மேற்கண்ட மூன்று அணுகுமுறை கொண்ட பெற்றோரின் குழந்தைகள் எவ்வாறு இருக்கின்றனர்?
முதல் அணுகு முறையில் வளரும் குழந்தைகள் சுயநலவாதிகளாகவும், பிறரை மதிக்காமலும், சண்டை, சச்சரவு
செய்பவர்களாக வளருகின்றனர்.
இரண்டாவது அணுகுமுறையில் வளரும் குழந்தைகள் வெளிப்படையாக கீழ்படிபவர்களாகவும், ஒத்த இயல்பு
கொண்டவர்களிடம் பழகும் போது, சண்டையிடுபவர்களாக வளருகின்றனர்.
மூன்றாவது அணுகு முறையில் வளரும் குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களும், எது தவறு என்பதை உணர்ந்தவர்களாகவும்,
மற்றவர்கள் பார்வையில் மனித நேயம் உடையவர்களாகவும் வளருகின்றனர்.
ஆக, நாம் குழந்தைகளை அதிகம் கண்டிக்கும் தோறும் குழந்தையானது எதிர்மறை மற்றும் பிடிவாத குணம் உடையதாக
வளருவதால் நாம் மூன்றாவது அணுகு முறையை கடைப்பிடிக்கும் பெற்றோர் அணுகு முறையை குழந்தைகளிடம்
காட்டுவோம். ஏனென்றால், எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அவர்கள் நல்லவர்கள்
ஆவதும், தீயவர்கள் ஆவதும் நம் வளர்ப்பினிலே!

...................................................................................................................

குழந்தைகளை புரிந்து கொள்வோம் 5

ஆறு வயது அனுபவங்கள்....

குழந்தை வளர்ப்பு என்பது ஆடு, மாடு, கோழி போலவோ, மரம், செடி, கொடி வளர்ப்பு
போன்று அல்ல. ஆடு, மாடு, கோழி என்றால் அதற்குரிய தீனி போட்டால் போதும். மரம்,
செடி, கொடி என்றால் உரம், தண்ணீர் விட்டால் போதும் அவை வளர்ந்து விடும். ஆனால்,
குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமில்லை.
குழந்தைகள் வாழ்நாளில் ஒரு நாள்கூட அழக்கூடாது என்றும் ஆனந்தமாக, அமோகமாக,
வளமாக வாழவேண்டும். அப்படி நினைத்து வளர்ப்பதுதான் குழந்தை வளர்ப்பாகும்.
குழந்தை பிறந்தது முதலாய் தொட்டில் அமைக்கும் முறை, பாலுõட்டும் முறை, உடையணி
விக்கும் முறை, உணவூட்டும் முறை, நடைபழக்கும் முறை, மருத்துவசோதனைகள், நோய்
தடுக்கும் முறைகள், தடுப்பூசி போடும் முறை,படிக்க வைக்கும் முறை, நற்பண்புகள் வளர்க்கும்
முறை, திருமணம் செய்விக்கும் முறை என ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்கின்றன.
இதை எல்லாம் பார்த்து, பார்த்து வளர்ப்பவர்களுக்குப் பெயர்தான் பெற்றோர்.
குழந்தைகள் ஆறு வயதை எட்டும் வரை அவர்கள் எடுப்பார் கை பிள்ளையாக தான் இருப்
பார்கள். சுய புத்தி என்று குறிப்பிடும்படி ஏதும் இருக்காது. ஆனால், ஆறு வயதுக்குப் பிறகு
அவர்கள் வெளி உலகை கவனிக்கத் தொடங்குவார்கள். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது
என்பதை அறிய ஆவலாக இருப்பார்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இதுவரை
அம்மாவையே சுற்றி சுற்றி வந்தவர்கள் கொஞ்சம் பெற்றோர்களை விட்டு விலகி இருக்க ஆசைப்
படுவார்கள்.
இந்த தருணத்தில் குழந்தைகள் நம் கூடவே இருக்க வேண்டும். எங்கும் வெளியே செல்லக்
கூடாது. நம் சொல்லாமல் எதையும் செய்யக் கூடாது என்று கட்டுப்பாடோ, குறுக்கீடோ
செய்தோமானால், குழந்தைகள் நம்மை வெறுக்கத் தொடங்கி விடும். அதே சமயம் எக்கேடோ
கெட்டுப் போ என்று விட்டேந்தியாகவும் நாம் இருக்கக்கூடாது.
ஆறு வயது பருவம் என்பது குழந்தைகளைப் புரட்டிப் போடும் பருவம். அவர்களுள் பல
மாற்றங்கள் நிகழத்தொடங்கும் காலமாகும்.
மற்றக் குழந்தைகள் சொல்வதையும், செய்வதையும் அவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். இதுவரை
அப்பா, அம்மாவின் நடை, உடை, பாவனைகளை கவனித்து வந்தவர்கள் இப்போது, அவற்றில்
எது பிடித்ததோ அதை மட்டுமே ஏற்று கொள்வார்கள்.
முன்பு யார் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாலும், கொஞ்சினாலும் ரசித்தவர்கள் இப்போது
யாராவது அப்படி நடந்து கொண்டால் அதை வெறுக்கத் துணிவார்கள். அடுத்ததாக, ஆண்
குழந்தைகள் ஆண்குழந்தைகளோடும், பெண் குழந்தைகள் குழந்தைகளோடும் இருக்கவும்,
விளையாடவும் விரும்புவார்கள்.
இந்த வயதில் அவர்களின் மூளை குறுகுறுப்பாக இருக்கும். எதையும் எடுத்து ஆராய்தல்,
வரைதல், கணக்குப் போடுதல், பாடுதல், ஆடுதல், மெஷின்களை கழற்றிப் போடுதல், பெரிய
வர்கள் எதையாவது செய்யும் போது, அதை கவனித்த குழந்தைகள் பின்னர் அதே போல
செய்து பார்ப்பார்கள். இந்த தருணத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளின் கவனத்தை கூர்ந்து
கவனித்து ,அதை ஊக்கப்படுத்தினால் அவர்கள் மகிழ்வார்கள். பிற்காலத்தில் அந்த துறையில்
சிறந்த வல்லுனராகவும் அவர்கள் முன்னேற அது ஏணிப்படியாக உதவக்கூடும்.
அடுத்ததாக, இந்த வயதில் வெளித்தோற்றத்தில் பெற்றோர்களை அதிகம் தேடுவதில்லை.
ஆனால் உள்ளுக்குள் பெற்றோர்கள் மீது அதிக அன்பை செலுத்துவார்கள். மேலும் தங்களை
அவர்கள் பெரிய மனிதர்கள் போல பாவித்துக்கொள்வார்கள். அது போல பெரியவர்களை
எப்படி மற்றவர்கள் மதிக்கிறார்களோ, அது போலவே தங்களிடமும் நடக்க வேண்டும் என்று
எதிர்ப்பார்ப்பார்கள்.
வீட்டைத் தவிர, வெளியுலகில் இருப்பவர்களிடம் தங்களுக்குப்பிடித்த மாதிரியே
வெளியில் சந்திக்கும் மனிதர்களில் தங்களுக்குப் பிடித்த விஷயங்களைக்
கொண்டுள்ளவர்களிடம் நெருங்கி பழகுவார்கள். அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி
கொள்வார்கள். ஒருவேளை வெளியுலக மனிதர்களைப் பிடிக்காவிட்டால் வெறுத்து விடுவார்
கள். பின்னர், யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
ஆறு வயதில் குழந்தைகள் ஓரளவு கீழ்படிவார்கள். ஓரளவு பிறர் சொல்வதை கேட்பார்கள்.
பல் தேய்க்க, குளிக்க, உடை போட்டுக்கொள்ள, உட்கார்ந்து சாப்பிட, தலைவாரிக்கொள்ள
என சின்ன சின்ன விஷயங்களை நாம் சொல்ல ஆர்வமாக செய்வார்கள்.
இந்த வயதில் சில குழந்தைகள் தங்கள் பொருள்களை, விளையாட்டுச் சாமான்களை
பத்திரமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.
இந்த ஆறு வயதில் இருக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் அணுகு முறை மிக கவனமாக
கையாளப்படவேண்டும். குழந்தைகளை அதிகம் துன்புறும்படி அடிக்கக்கூடாது. அவர்கள்
பதறி பயப்படும்படி அதட்டக்கூடாது. இதை செய்! அதை செய் என்று அதிகார தோரணையில்
கட்டளையிடக்கூடாது. அதே சமயம் குழந்தைகளை அதிகமாக கொஞ்சக்கூடாது. அதே
சமயம் கோபிக்கவோ, வெறுக்கவோ கூடாது. அவர்கள் செய்யும் தவறுகளை பக்குவமாக
சுட்டிக்காட்டி, அவர்களை உணரச்செய்து திருத்த வேண்டும். அதே சமயம் குழந்தைகள் நல்ல
முறையில் நடந்து கொண்டால் அந்த தருணத்திலே பாராட்டி, சின்ன சின்ன பரிசுகள் தந்து,
குழந்தைகளைப் பொறுப்புள்ளவராக வளர ஊக்கப்படுத்த வேண்டும்.
கடைசியாக இந்தப் பருவத்தில் எதையும் பார்த்து தெரிந்து கொண்டு செய்யும் வேகம் இருப்ப
தால் குழந்தைகளுக்கு சினிமா, டி.வி., போன்றவற்றில் இடம் பெயரும் கொடூரக்காட்சிகளை
பார்க்க வைக்கக் கூடாது. பிறரை துன்புறுத்துவது, அடிப்பது, கொலை செய்வது, திருடுவது,
பொய் சொல்லுவது போன்ற மனதைக் கெடுக்கும் காட்சிகளை அவர்கள் பார்க்காமல்
இருக்கும் படி நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த ஆறு வயது பருவம் என்பது மென்மையான பருவம் ஆகும். இந்த
பருவத்தில் நாம் கற்பிப்பது எதுவும் பசு மரத்தாணி போல பதியும் என்பதால் இந்த
வயதில் நல்ல பழக்கங்கள், பண்புகள், நாட்டுப் பற்று, மொழிப்பற்று, தர்ம சிந்தனை,
நாட்டுக்குழைத்த உத்தமர்கள் வாழ்க்கை வரலாறு, ஆன்மிக பெரியவர்கள் வரலாறு
போன்றவற்றை அவர்கள் அறிய செய்தால் வருங்காலத்தில் குழந்தைகள் உத்தமர்களாக
திகழ்வார்கள் என்பது திண்ணம்!

..........................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக