ஞாயிறு, 14 மார்ச், 2010

.எதையும் அளவோட ஆசைப்படணும்






1.எதையும் அளவோட ஆசைப்படணும்!
ஹாய்,குட்டீஸ்! உங்களில் சிலபேருக்கு ஆசைக்கு மேல பேராசை இருக்கும். இந்த குணம் இருப்பதால, சில குட்டீஸ் எல்லாம் எனக்கே என்று அடம்பிடிப்பீங்க. அது ரொம்ப தவறான பழக்கம். எதையும் அளவோடுதான் ஆசைப்படணும். கொட்டிக்கிடக்குதே என்பதற்காக வானளவு ஆசைப்படக்கூடாது. அளவில்லாம பேராசை கொண்டிருந்தால் அந்த குரங்குக்கு ஏற்பட்ட கதிதான் எல்லாருக்கும் ஏற்படும். அந்த குரங்கு கதையைச் சொல்றேன் கேட்டுகுங்க.
ஒரு காட்டுல ஒரு குரங்கு ரொம்ப பசியோட இருந்தது. எதாவது சாப்பிட கிடைக்காதா என்று மரத்துக்கு மரம் தாவியது. ஒன்னுமே கிடைக்கல. சோர்ந்து போய் மரத்துக்கு அடியில உட்கார்ந்தது. என்ன ஆச்சரியம்! மரத்துக்கு பின்னால ஒரு மண்பானையில நிறைய லட்டு இருந்தது. குரங்கு ஒரே பாய்ச்சலில் பானைப்பக்கம் சென்றது. பானையின் வாய்ப்பகுதி ரொம்பவும் குறுகலாக இருந்தது. குரங்கு சர்ர்ர்ரென்று பானைக்குள் கை விட்டது. ஒரு லட்டை லபக்கென்று கையில் எடுத்துக்கொண்டு , கையை வெளியே எடுத்தது. எடுத்த லட்டை அப்படியே வாயில் திணித்தது. பானைக்குள் எவ்வளவு லட்டு இருக்கு என்று பார்த்தது. நிறைய இருந்தது. குரங்குக்கு இப்ப, ஆசைக்குப் பதிலா பேராசை ஏற்பட்டது. அப்படியே லட்டு எல்லாத்தையும் தின்னுதீர்த்துடணும் என்று வெறித்தனமாக கை உள்ளே விட்டு அப்படி கை நிறைய கொத்தாக லட்டை அள்ளியது. பின்னர் கையை வெளியே எடுக்க முயன்றது.ஆனால், கை பானையில் இருந்து வெளியே வரவே இல்ல. பாவம் குரங்கு! அதுக்கு பசிவேறு... கையில் இருக்கும் லட்டை விட்டா கையை வெளியே எடுக்கலாம். ஆனால், குரங்குக்கு லட்டை விடவும் மனசில்லாம, கையை வெளியே எடுக்க முடியாம மாட்டிக்கிட குரங்கு ரொம்பவும் தவிச்சது. கடைசி வரைக்கும் குரங்கு லட்டை விடவே இல்லை. அதனால பானைக்குள் நுழைந்த கையோட அங்கும் இங்கும் திரிஞ்சது.
என்ன குட்டீஸ்! பாவம் தானே அந்தக் குரங்கு? பானையில இருக்கிற லட்டை ஒவ்வொண்ணா எடுத்திருந்தா குரங்குக்கு அந்த கதி ஏற்பட்டிருக்குமா? குரங்கின் அல்பபுத்தி, பேராசையினாலதான் அது கைநிறைய லட்டை அள்ளியது. அதுவே அதுக்கு தொந்தரவா போச்சு. நீங்க எப்போதுமே எதற்கும் அளவோட ஆசைப்படணும். புரியுதா?



2.நம்பிக்கை நம்மை தரும்!
ஹாய் குட்டீஸ்! அறிவு என்பது புத்தகத்தைப் படிப்பதால் மட்டுமே வந்து விடாது. ஒன்றின் மீது நாம் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை அறிவை விட பல மடங்கு பெரியது. நீங்க எல்லாம் உங்களோட ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெரியவங்க சொல்ற வார்த்தையை மதிச்சு, நம்பிக்கையோட பின்பற்றினால், அதனால் வரும் நன்மை அளவிடமுடியாது. அதற்கு ஒரு உதாரணம் ஒரு பால்காரி. அந்த பால்காரியின் கதையைச் சொல்றேன். கேட்டுகுங்க.
ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் படிப்பறிவில்லாதஒரு பால்காரி இருந்தாள். ஆற்றங்கரை எதிர்ப்புறம் மெத்த படித்த பண்டிதர் ஒருத்தர் வசித்தார். அவருக்கு தினமும் ஆற்றைக்கடந்து பால்கொண்டு கொடுப்பாள் பால்காரி.
அந்த பண்டிதர் வேத நுõல்கள், மந்திரங்கள் தெரிஞ்சவர். தபஸ் பண்ணிக்கொண்டிருப்பவர்.
சில நாட்களாக ஆற்றைக்கடக்க உதவும் படகுகாரன் இல்லாததால், பால்காரி தாமதமாக பால் கொண்டு கொடுத்தாள். பண்டிதருக்கு ரொம்பவும் கோபம் வந்து விட்டது."" என்ன நீ ரொம்ப தாமதமாக பால் கொண்டு வந்து தர்ற? நான் யார், என் ஞானம் என்னன்னு உனக்குத் தெரியுமா? அசடு. இனிமே, சூரியன் உதிக்கிறதுக்கு முன்பே பால் கொண்டு வந்து கொடுத்திடணும்'' என்று திட்டிதீர்த்தார்.
மறுநாளும் தாமதமாகவே பால் கொண்டு வந்தாள் பால் காரி. பண்டிதருக்கு கோபம் வந்து விட்டது. "" என் வார்த்தைக்கு நீ மதிப்பு கொடுப்பதில்லையா? நேற்று சொன்னேனே சூரியன் உதிக்கும் முன்பே பால் கொடுத்துவிடணும் என்று.'' என்றார்.
""ஐயா, மன்னித்துக்கொள்ளுங்கள். படகு காரன் இல்லை. அதான் தாமதம்'' என்றாள்.
""ஆற்றைக்கடக்க படகுக்காரன் இல்லை என்றால் ஆற்றைக்கடக்க முடியாதா? ஹரியின் நாமத்தைச் சொன்னால் போதும் ஆற்றைக்கடந்து விடலாமே! மண்டு இதுக்கூடவா உனக்குத் தெரியல. போ, போ...'' என்று விரட்டினார்பண்டிதர்.
அடுத்த நாள் பால்காரி சூரியன் உதிக்கும் முன்பாகவே பால்கொண்டு வந்துவிட்டாள். பண்டிதர் ஆச்சரியப்பட்டு, எப்படி என்று கேட்டார்.
""ஐயா, நீங்க தான் சொன்னீங்களே ஹரி நாமம் சொல்லுன்னு. ஹரி நாமம் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆற்றில் மேல் நடந்தே வந்து விட்டேன்!'' என்றாள்.
பண்டிதர் நம்பமுடியாமல்,"" எங்கே என் முன்னே ஆற்றில் நடந்து காட்டு'' என்றார். பால்காரி ஹரி நாமத்தை உச்சரித்துக்கொண்டே ஆற்றில் நடந்து அக்கரைக்குச் சென்றாள்.
பண்டிதர் தானும் ஹரி நாமத்தைச் சொல்லிக்கொண்டே ஆற்றில் இறங்கினார். தொபுக்கடீர்ன்னு ஆற்றில் மூழ்கினார். இதை கவனித்த பால்காரி,''பண்டிதரே, உமக்கு சிந்தனை எல்லாம் ஹரி நாமத்தில் இல்லை. ஆற்றைக்கடக்க முடியுமா? ஆற்றில் விழுந்து விட்டால் வேட்டி நனைந்து விடுமே என்று எண்ணிக்கொண்டே ஆற்றில் இறங்கி பேருக்காக ஹரி நாமத்தைச் சொன்னால் எப்படி ஆற்றைக்கடக்க ஹரி நாமம் உதவும்? நீங்க சொன்னதை அப்படியே நம்பினேன். ஹரி நாமத்தைச் சொன்னேன். ஆற்றைக்கடந்தேன். மெத்த படித்தநீங்க அடுத்தவங்களுக்குத் தான் புத்திமதி சொல்றீங்க. நீங்க அதை நம்பலீயே'' என்றாள் பால்காரி.
நம்பிக்கையின் சக்தி, நம்முடைய புத்தியைவிட பெரிது என்று பண்டிதருக்கு புரிந்தது.


3. பணிவும் ஆணவமும்!
ஓர் ஆற்றங்கரை ஓரத்தில் ஓர் ஆலமரம் ஓங்கி வளர்ந்திருந்தது. அதன் அருகே செழிப்பாய் வளர்ந்து கிடந்தது நாணல் புல். ஆலமரத்துக்கு எப்போதுமே ஒரு இறுமாப்பு. தற்பெருமை கொண்டு இருந்தது. தன் அருகே இருக்கும் நாணல் புல்லைப் பார்த்து,"" ஏ, அற்பமே! என் அருகே இருந்து என் பெருமையைக் கெடுத்துக்கொண்டிருக்கிறாயே!'' என்று சதா நாணலை வெருப்பேற்றிக்கொண்டிருந்தது.
நாணல் ரொம்ப பொறுமை சாலி. அடக்கம் கொண்டது. ஆலமரத்தின் ஏச்சுகளை எல்லாம் காதில் போட்டுக்கொள்வதே இல்லை.
கொஞ்சம் வேகமாக காற்றடித்தால் உடனே நாணல் தலைகவிழ்ந்து விடும். காற்றடித்து ஓய்ந்ததும் மீண்டும் தலை நிமிரும். இப்படி தான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும் நாணல் சட்டென்று கவுரவம் பார்க்காமல் தரையில் குப்புறப்படுத்துக்கொள்ளும்.
இதை எல்லாம் பார்த்து ஆலமரம்,""ஏ... கோழையே! இப்படியா தொட்டதுக்கெல்லாம் தொடை நடுங்கி மண்ணைக் கவ்வுவது. வெட்கம்! வெட்கம்! என் பக்கம் இருந்தும் உனக்கு வீரம் இல்லை.'' என்று ஏளனமாய் நாணலைப் பார்த்து, ஆலமரம் பேசியது.
மாதங்கள் ஓடியது. அது மழைக்காலம்.
தொடர்ந்து கனத்த மழை பெய்து கொண்டே இருந்தது. ஊரெல்லாம் வெள்ளக்காடு. தண்ணீர் ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. ஆறு நிரம்பி தண்ணீர் கரையை நோக்கி அசுரத்தனமாக பாய்ந்தது. ஆற்றோரம் இருந்த ஆலமரத்தின் வேர்கள் தண்ணீரால் அரிக்கப்பட்டது. விழுதுகளும் தண்ணீரோடு அறுந்து சென்றது. ஆலமரம் கொஞ்ச கொஞ்சமாக பிடிமானம் இல்லாமல் தள்ளாடத் தொடங்கியது. கடைசியாக அடித்த புயல் காற்றில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆலமரம் தொப்பென்று தலைகவிழ்ந்து தரையில் விழுந்தது.
இரண்டு நாட்களில் வெள்ள நீர் வடிந்தது. நாணல் பழையபடி தலை நிமிர்ந்தது. ஆனால், ஆலமரத்தால் நிமிரவே முடியவில்லை. நாணலைப் பார்த்து ஆலமரம் வெட்கத்தால் கூனிகுறுகியது.
அப்போது,நாணல், ஆலமரத்தைப் பார்த்து"" என்ன ஆலமரமே! உனக்கத் தான் எவ்வளவு கர்வம். ஆணவம். இப்போ எங்கே போச்சு அவை. பணிவதால் யாரும் கெட்டுப்போவதில்லை. அதே போல ஆணவத்தால் யாரும் நீடித்து வாழ்ந்து விடுவதில்லை. என்னைப் பார்த்து பாடம் கற்றுக்கொள் பணிவுதான் துணிவு என்று'' என்றது நாணல்.




4.எதிரும் புதிரும்
ராஜாவும் பாலாஜியும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்புதான் படிக்கிறார்கள். ராஜா எதையும் பாசிட்டிவ்வாக நினைப்பான்; பேசுவான். ஆனால், பாலாஜி நேர் எதிர்.
இன்று கூட காலையில் பள்ளிக்குப் போகும் போது சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது."ச்சே! இந்த சைக்கிள் இப்படி பழிவாங்கி விட்டதே! ஸ்கூலுக்கு போன மாதிரி தான்' என்று நொந்து கொண்டான் பாலாஜி.
"" டேய்... நடந்தது நடந்துட்டு. என்ன பண்றது? இதை நாம் எதிர்பார்தோமா என்ன? சரி, ரொம்ப நாளா அதோ தெரியுதே பெரிய ஏரி அதை பார்க்கணும்னு நாம ஆசைப்பட்டோம்ல. வா, இன்னைக்கு பார்த்துட்டு வந்துடலாம்'' என்றான், ராஜா.
""என்னமோ... சரி வா போகலாம்'' என்று ராஜாவுடன் நடந்தான் பாலாஜி.
பத்து நிமிடத்தில் அந்த விசாலமான ஏரியை அடைந்தனர் இருவரும். ஏரி ஓரம் இருந்த பெரிய கருவேலம் மரத்தில் இருவரும் அமர்ந்தனர்.
மெல்லிய குளர்ந்த காற்று ஜில்லுன்னு வீசியது. ஏரியில் ஏதேதோ பெயரெ தெரியாத பறவைகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
ராஜா மகிழ்ந்தான். பாலாஜி சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டான்.
"" பாலாஜி, அங்கே பார்! ஆஹா என்ன அழகான பறவை'' என்றான் ராஜா.
உடனே, "" ஏண்டா, அதெல்லாம் அழகா! அந்த பறவை உன்கிட்ட நான் அழகா இருக்கேன்னு சொல்லிச்சா, என்ன?'' குதர்க்கமாக கேட்டான், பாலாஜி.
பாலாஜி பற்றி தெரியும் என்பதால் ராஜா மவுனமாக இருந்து விட்டான்.
""சரி, வாடா. ஏரிகரை பக்கம் போகலாம்.'' என்றான் ராஜா.
வேண்டா வெறுப்பாக பாலாஜி அவனைப் பின்தொடர்ந்தான்.
இருவரும் ஏரிகரையில் அலைமோதும் தண்ணீரில் நடந்தபடி இருந்தனர். காற்றில் நீரலைகள் ஓடிவிளையாடியது. அந்த நேரம் நீரலைகளை மோதிக்கொண்டு இரண்டு மீன்கள் துள்ளிக் குதித்தன. மீண்டும் அவை துள்ளிக் குதித்துக்கொண்டே இருந்தன. அந்தக்காட்சியை பாலாஜியிடம் காட்டிய ராஜா,
"" பாரேன் இந்தக் குளத்துல எவ்வளவு ஆனந்தமாக மீன்கள் துள்ளி குதிச்சுட்டு விளையாடுதுங்க !'' என்றான், ஆசையாய்.
""உனக்கு எப்படித் தெரியும் அந்த மீன்கள் ஆனந்தமாக இருக்குன்னு? நீ என்ன மீனா? இல்ல, மீன் பாஷை உனக்குத் தெரியுமா? அதுங்க ஆனந்தமா இல்ல. என்ன மாதிரி கவலையோட இருக்குங்க. அதான் எப்படியாவது ஏரிய விட்டு தப்பித்துடலாம்னு துள்ளிக்குதிக்கு'' என்றான், பாலாஜி.
அதற்கு ராஜா, ""அது சரி. உனக்கு எப்படித் தெரியும் மீன்கள் ஆனந்தமாக இல்லைன்னு ? '' கேட்டான்.
"" அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏன்னா நீ நானில்லை'' என்றான், பாலாஜி.
குட்டீஸ்! கதை புரியுதா? பொதுவாக எந்த விஷயமும் அது சரி, தவறு என்பதெல்லாம்
காணுபவர் கண்களில் தான் உலகத்தின் துக்கமோ இன்பமோ இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக