புதன், 31 மார்ச், 2010

பேருந்தில் எனக்கு ஜன்னல் ஓரம்!

பேருந்தில் எனக்கு ஜன்னல் ஓரம்!
தீரா ஆசைகள் நம்மில் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்று தான் பேருந்தில், ரயிலில் ஜன்னல் பக்கம் இருக்கை ஆசை! குழந்தையோ, முதியவரோ யாராகட்டும் பேருந்தில் ஏறியதுமே கண்கள் வட்டமடித்து நிலைக்கொள்வது ஜன்னலோர இருக்கை காலியாக இருக்கிறதா என்பதே!
ஏனிந்த ஆசை? இன்னமும் புரிபடாமலே இருக்கிறது எனக்கு. ஒருமுறை இதுபற்றி யோசித்துப் பார்த்தேன். ஜன்னலோர இருக்கை வசதி என்பது நல்லகாற்றோட்டம், வசதியான இருப்புநிலை உள்ளிட்ட பல காரணங்கள் என புரிந்தது. ஆனாலும், இதற்கு மேலும் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. நாம் வேடிக்கை மனிதர்கள். அதற்கு ஜன்னலோரம் வசதியானது.
தினம் தினம் அதே பேருந்து. அதே வழி. புறப்படும் இடம், சேரும் இடம் வழக்கமானதுதான். இருந்தாலும், தினமும் பயணத்திற்கு பேருந்தில் மனசு ஜன்னலோரத்தைத் தானே தேர்வு செய்கிறது. இதென்ன அல்ப ஆசை! மனதை நெருடினாலும், விட்டக்குறை தொட்டக்குறைபோல... தொட்டில் பழக்கம் போல இந்த ஆசை யாரையும் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு பேருந்தில் ஜன்னல் ஓரம் என்பது அலாதியானது. அலுத்தப்போகாமல்தான் தொடர்கிறது. தினம் தினம் பழக்கப்பட்ட பாதை எனினும், கண்களில் காட்சிகள் புதிது புதிதாகதான் வந்து போகிறது. நான் பார்க்கிற மனிதர்கள் எல்லாம் ஒவ்வொரு வார்த்தைகளாக எதையோ சொல்லிப்போகிறார்கள் என்பதாக நினைப்பு எழுகிறது.
நகர வாசனை கொஞ்சம்கூட இல்லாத, என்கிராமத்து உறவினர் என்னைப்பார்க்க வந்தபோது, நானும் அவரும் நகரத்தில் பேருந்தில் பயணப்பட்ட போது, சாலைகளில் சிக்னல்களில் மந்தை மந்தையாய் வந்து குவிந்து, கிரீன் லைட் சிக்னல் விழுந்ததும் ஆளாய் பறக்கும் மனிதர்களைப் பார்த்து,"" ஆமாம், இவர்கள் எல்லாம் இப்படி சாரை சாரையாய் எங்குதான் போகிறார்கள்? அப்படி என்ன அவசரம், ஆபத்து? இப்படி தலைத்தெறிக்க வேகமெடுத்து போகிறார்களே!'' என்று அவர் விட்டேந்தியாய் சொல்லியது, இன்றுகூட ஜன்னலோரம் அமர்ந்து செல்லும் பயணத்தில் கண்களில் நுழைந்து, பறக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது, உறவினரின் அந்த வார்த்தைகள் என் காதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அது விடைதெரியாத விடுகதைப்போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக