திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சிறுவர்களுக்கான கதைகள் பாகம் மூன்று /தேவராஜன்/

சிறுவர்களுக்கான கதைகள் பாகம் மூன்று /தேவராஜன்/ நீ.க-1. மரியாதை ராமனின் சமயோசிதம் /டிச.17/2011/ ஒரு ஊரில் நான்கு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து முதலீடு செய்து பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். பஞ்சுக்கடையில் எலிகள் தொல்லை இருந்தன. எலிகள் பஞ்சு மூட்டைகளை நாசம் செய்தன. எலிகளைஒழிப்பதற்காக ஒரு பூனை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவர் ஐடியா கூறினார். அந்த ஐடியாவை மற்ற நண்பர்கள் ஏற்றுக்கொண்டனர். அடுத்த நாளே ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை வந்ததிலிருந்து எலிகளின் தொல்லை குறைந்தது. நண்பர்களுக்கு பூனையின் மேல் மிகுந்த அன்பு ஏற்பட்டது. பூனைக்குச் சகலவித உபசாரங்களும் செய்தனர். பூனையின் கால்களுக்குத் தண்டை கொலுசு முதலியவைகளை அணிவித்து அழகுபடுத்த நினைத்தார்கள். பூனையின் நான்கு கால்களை ஆளுக்கு ஒரு கால் என பராமரிப்பது என முடிவு செய்தனர். அவரவர்க்குச் சொந்தமான கால்களில் தங்களுக்கு விருப்பமான அணிகலன்களைப் பூட்டி மகிழ்ந்தனர். ஒரு நாள் பூனைக்கு அடிப்பட்டது. அதனால் அது நொண்டிக் கொண்டே வந்தது. இதைப் பார்த்த ஒருவர் தன் நண்பரிடம், ‘நண்பா, உனக்குச் சொந்தமான காலில் அடிபட்டு விட்டது. ஜாக்கிரதையாக மருந்து போட்டு குணப்படுத்து‘ என்றார். அந்தக் காலுக்கு உரியவரும் பூனையின் காயத்தைத் துடைத்து எண்ணைய் துணியால் கட்டுபோட்டு வைத்தார். அன்று இரவு பூனை விளக்குப் பக்கம் போகவே அதன் காலில் சுற்றியிருந்த துணியில் நெருப்புப் பிடித்துக் கொண்டது. தன் காலில் சுற்றப்பட்டிருந்த துணியில் நெருப்புப் பிடித்துக் கொண்டதும் பூனை மிரண்டு போய்ப் பஞ்சு மூட்டைகளின் மேல் ஓடியது. உடனே பஞ்சு மூட்டைகள் அனைத்திலும் நெருப்பு பிடித்துக் கொண்டது. கடையில் இருந்த எல்லா பஞ்சு மூட்டைகளும் எரிந்து சாம்பலானது. நண்பர்களில் மற்ற மூவரும் துணி சுற்றியவரைப் பார்த்து, ‘நீ எண்ணைய் துணி சுற்றி வைத்ததால் தான் இந்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நீதான் கொடுக்க வேண்டும்’ என்றனர். அவரோ, ‘ தான் வேண்டுமென்றே பூனையின் காலில் எண்ணை துணி கட்டவில்லை. எதிர்பாராவிதமாக நடந்து விட்டதற்குத் தன்னை மன்னிக்க வேண்டும்’ என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டார். மற்ற மூவரும் அவர் பேச்சைக் கேட்கவில்லை. பிரச்னை மரியாதை ராமனிடம் சென்றது. மூவரும் பூனையின் இவருக்கென்று பிரித்துக் கொடுக்கப்பட்ட கால்களால் தான் இத்தனை நஷ்டம். ஆகவே இவர் தான் அந்த நஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்று கூறினர். மூவர் சொலவதை முழுவதையும் கேட்ட மரியாதை ராமன் இவ்வாறு தீர்ப்பு சொன்னான் ‘பூனையின் ஒரு காலில் அடிபட்டுள்ளது. அந்தக்காலால் நடக்கவோ, ஓடவோ அதனால் முடியாது. அந்த சமயத்தில் அது மற்ற மூன்று கால்களால் தான் ஓடியிருக்க வேண்டும். எனவே உங்கள் மூவருக்கும் சொந்தமான கால்களால் ஓடித்தான் அது நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, நீங்கள் மூவரும் தான் இந்த நாலாமவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கினார். புத்திவந்ததும் மூவரும் நஷ்டத்தை பகிர்ந்து, மீண்டும் கடையை நடத்த துவங்கினர். மரியாதை ராமனின் சமயோசிதமான தீர்ப்பை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர். ******** நீ.க.-2 எதிரும் புதிரும் டிச23/2011/ ராஜாவும் பாலாஜியும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்புதான் படிக்கிறார்கள். ராஜா எதையும் பாசிட்டிவ்வாக நினைப்பான்; பேசுவான். ஆனால், பாலாஜி நேர் எதிர். இன்று கூட மாலையில் பள்ளி விட்டு வரும் போது சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது.‘ச்சே! இந்த சைக்கிள் இப்படி பழிவாங்கி விட்டதே! சீக்கிரம் வீட்டுக்குப் போன மாதிரி தான்’ என்று நொந்து கொண்டான் பாலாஜி. “ டேய்... நடந்தது நடந்துட்டு. என்ன பண்றது? இதை நாம் எதிர்பார்தோமா, என்ன? சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டறதுக்கு ஒரு மணிநேராவது ஆகும். அந்த ஒரு மணி நேரத்தில் நாம் ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைச்ச அதோ தெரியுதே பெரிய ஓடை அங்கே போகலாம் வா” என்றான், ராஜா. “என்னமோ... சரி வா போகலாம்” என்று ராஜாவுடன் நடந்தான் பாலாஜி. பத்து நிமிடத்தில் அந்த விசாலமான ஓடையை அடைந்தனர் இருவரும். ஏரி ஓரம் இருந்த பெரிய கருவேலம் மரத்தில் இருவரும் அமர்ந்தனர். மெல்லிய குளிர்ந்த காற்று ஜில்லுன்னு வீசியது. ஏரியில் ஏதேதோ பெயரெ தெரியாத பறவைகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. ராஜா மகிழ்ந்தான். பாலாஜி சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டான். “ பாலாஜி, அங்கே பார்! ஆஹா என்ன அழகான பறவை” என்றான் ராஜா. உடனே, “ ஏன்டா, அதெல்லாம் அழகா! அந்த பறவை உன்கிட்ட நான் அழகா இருக்கேன்னு சொல்லிச்சா, என்ன?” குதர்க்கமாக கேட்டான், பாலாஜி. பாலாஜி பற்றி தெரியும் என்பதால் ராஜா மவுனமாக இருந்து விட்டான். “சரி, வாடா. ஓடக்கரை பக்கம் போகலாம்.” என்றான் ராஜா. வேண்டா வெறுப்பாக பாலாஜி அவனைப் பின்தொடர்ந்தான். இருவரும் ஓடக்கரையில் அலைமோதும் தண்ணீரில் நடந்தபடி இருந்தனர். காற்றில் நீரலைகள் ஓடிவிளையாடியது. அந்த நேரம் நீரலைகளை மோதிக்கொண்டு இரண்டு மீன்கள் துள்ளிக் குதித்தன. மீண்டும் அவை துள்ளிக் குதித்துக்கொண்டே இருந்தன. அந்தக்காட்சியை பாலாஜியிடம் காட்டிய ராஜா, “ பாரேன் இந்த ஓடையில் எவ்வளவு ஆனந்தமாக மீன்கள் துள்ளி குதிச்சுட்டு விளையாடுதுங்க !” என்றான், ஆசையாய். “உனக்கு எப்படித் தெரியும் அந்த மீன்கள் ஆனந்தமாக இருக்குன்னு? நீ என்ன மீனா? இல்ல, மீன் பாஷை உனக்குத் தெரியுமா? அதுங்க ஆனந்தமா இல்ல. என்ன மாதிரி கவலையோட இருக்குங்க. அதான் எப்படியாவது ஓடையை விட்டு தப்பித்துடலாம்னு துள்ளிக்குதிக்குது” என்றான், பாலாஜி. அதற்கு ராஜா, “அது சரி. உனக்கு எப்படித் தெரியும் மீன்கள் ஆனந்தமாக இல்லைன்னு ? ” கேட்டான். “ அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏன்னா நீ நானில்லை” என்றான், பாலாஜி. குட்டீஸ்! கதை புரியுதா? பொதுவாக எந்த விஷயமும் அது சரி, தவறு என்பதெல்லாம் காணுபவர் கண்களில் தான் உலகத்தின் துக்கமோ இன்பமோ இருக்கிறது! ******* நீ.க.3 கற்றது கை அளவு 6/1/2012 அந்தத் தெருவின் எதிரெதிர் வீட்டில் இருந்து உரக்க சப்தமிட்டு பாடம் படித்துக் கொண்டிருந்தனர் கோகுலுவும், தர்ஷிணியும். இருவரும் ஒரே வகுப்பு. படிப்பில் யார் கெட்டிக்காரர்கள் என்று அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். கோகுல் மிகவும் சப்தமிட்டு படித்தான். அது தர்ஷிணிக்கு தொந்தரவாக இருந்தது. தர்ஷிணி கோகுல் வீட்டுக்கு வந்தாள். “நான் தான் உன்னை விட அறிவாளி. நான் தான் அதிகம் மதிப்பெண் எடுக்கப் போகிறேன். நீ ரொம்ப சத்தமாக படித்தால் மட்டும் அதிக மதிப்பெண் எடுத்துவிட முடியுமா ?” என்று சிடுசிடுத்தாள் தர்ஷிணி. உடனே கோகுல், “ சும்மா ரொம்பதான் அலட்டிக்காத. நான் உன்னை விட அறிவாளியாக்கும்” என்று வெறுப்பேத்தினான். இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது திடீரென அவர்கள் முன் ஓர் வேதாளம் தோன்றியது. வேதாளத்தைப் பார்த்து இருவரும் அதிர்ந்தனர்; பயந்தனர். “தினமும் என்ன பிரச்னை? சண்டை போடறீங்க. என்னிடம் சொல்லுங்க. நான் உதவுறேன்” என்றது அது. அப்படி வேதாளம் சொன்னதும் இருவருமே, நான் தான் அறிவாளி என்று அடம்பிடித்தனர். இருவரும் சொன்னதைக்கேட்டு இப்போது வேதாளம் அதிர்ந்தது. சிறிது நேரம் யோசித்தது. “உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் ஜெயிக்கிறீங்களோ, அவங்கதான் அறிவில் சிறந்தவர்” என்றது வேதாளம். கோகுலும் தர்ஷிணியும் கொஞ்ச நேரம் யோசித்தனர். “உங்களுக்கு இதில் சம்மதமா?” என்றது வேதாளம். இருவரும் தலையாட்டினர். “நான் உங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு பாட்டில் தருகிறேன். இது மார்கழி மாதம். நிறைய பனி பெய்யும். இந்தக் கண்ணாடி பாட்டிலில் இரவு முழுவதும் பனித்துளிகளைச் சேகரிக்க வேண்டும். உங்களில் யார் அதிகம் சேகரிக்கிறீர்களோ அவர்தான் நான் வைக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர். நான் நாளை மாலை மீண்டும் வறேன், என்று வேதாளம் சொல்லிவிட்டு மறைந்தது. இருவரும் பாட்டிலுடன் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். மறுநாள் பொழுது விடிந்தது. கோகுலும் தர்ஷிணியும் அவரவர் பாட்டிலைப் பார்த்தனர். ஓரளவுக்கு இருவரது பாட்டிலிலும் பனித் துளிகள் இருந்தன. மதியம் வேதாளம் வரும் இடத்துக்குப் புறப்பட்டனர். நாம் தோற்றுவிடுவோமோ என்று இருவருமே பாட்டிலில் நிறையத் தண்ணீரை ஊற்றி எடுத்துச் சென்றனர். வேதாளம் வந்தது. “ வந்தாச்சா! எங்கே உங்கள் பாட்டிலைக் காட்டுங்கள்” என்றபடி பாட்டிலைப் பார்த்த வேதாளம் கலகலவென சிரித்தது. “ஏன் இப்படிச் சிரிக்கிறே?” கோகுல் கேட்டான். அதற்கு வேதாளம், “சாதாரணமாக பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது நீராவியாகிவிடும் உங்கள் பாட்டிலில் உள்ள பனித்துளிகள் இந்த வெயிலுக்கு கொஞ்சம் கூட ஆவியாகலையே எப்படி?” என்று கூறியது. “இப்போது சொல்லுங்கள். நீங்களா அறிவாளி?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டது வேதாளம். இருவரும் தலை கவிழ்ந்து நின்றனர். இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள் என்று எவருமே இல்லை. கற்றுக்கொண்டது கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. நிறைய படிக்க முயற்சிக்கணும், இப்படி சண்டை போட்டுக்கொண்டிருக்கக்கூடாது” என்றது வேதாளம். கோகுலும் தர்ஷிணியும் வேதாளத்திடம் மன்னிப்பு கேட்டனர். அப்போதே மனம் திருந்தினர். *************** நீ.க-4 நன்றி மறவாதே! பிப்24 ஒரு காட்டில் இரு காகம் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. பல நாட்களுக்குப் பின், பெண் காகம் 5 முட்டைகள் இட்டது. ஆண் காகம் தான் தந்தையாகப் போவதை நினைத்து மகிழ்ந்தது. பெண் காகம் முட்டைகளை அடைகாத்து வந்தது. ஆண் காகம் பெண் காகத்திற்கு வேண்டிய இரையை தேடிக்கொடுத்து, பெண் காகம் அடைகாப்பதற்கு உதவி செய்தது. அதே காட்டில் ஒரு நரியும் குடும்பமாக வசித்து வந்தது. அந்த நரியும் காகமும் நல்ல நண்பர்கள். ஒரு நாள் ஆண் காகம் இரைதேடி வரும் வழியில் வேட்டைக்காரர்கள் காட்டினுள் நுழைவதைக் கண்டது. உடனே காகம், நரி நண்பர் வசிக்கும் இடத்திற்கு சென்று வேட்டைக்காரர் காட்டில் வருவதையும் பாதுகாப்பாக எங்காவது மறைந்து இருக்கும் படியும் கூறியது. உடனே நரியார் குடும்பம் நன்றி கூறி விட்டு ஓடி ஒளிந்து கொண்டது. ஆண் காகம் இரையுடன் பெண் காகம் அடைகாத்துக் கொண்டிருந்த கூட்டுக்கு வந்தது. அப்போது பெண்காகம் அழுது கொண்டிருந்தது. காரணம் வினவிய போது. பாம்பொன்று வந்து தனது முட்டைகளை குடித்துவிட்டதாக கூறிப் புலம்பியது. அதனைக் கேட்ட ஆண் காகமும் விம்மி அழுதது. அந்தப் பாம்பு தமது பிள்ளைகளை அழித்ததுடன் தமக்கு இனிமேலும் பிள்ளைகள் பிறக்க விடமாட்டாது . ஆகையால் அதனை கொன்றே தீருவேன் என சபதம் எடுத்தது. மறுநாள் நரியார் காகம் இருந்த கூடு பக்கம் வந்தது. காகம் இரண்டும் சோகமாக இருந்தன. அதனை கண்ட நரி உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டது. அப்போது ஆண் காகம் முழு விவரத்தையும் சொல்லியது. புத்திசாலியான நரி பாம்பைக் கொல்ல ஒரு உபாயம் நாளைக்குச் சொல்கிறேன் என்றது. மறு நாள் நரி வெளியே சென்ற போது மகாராணியார் ஆற்றில் குளிப்பதற்காக தோழியருடனும் காவலருடனும் வருவதை கவனித்தது. மகாராணி தனது நகைகளை கழட்டி ஆற்றங்கரையில் வைத்து விட்டு குளித்துக் கொண்டிருந்தார். உடனே நரிக்கு ஒரு ஐடியா தோன்றியது. மகாராணி நாளைக்கு குளிக்கும் போது கரையில் வைத்த நகைகளைக் காகம் துõக்கிக் கொண்டு போய் பாம்பின் புற்றுக்குள் போட்டால், அரச காவலாளிகள் பாம்பைக் கொலை செய்து நகைகளை மீட்பார்கள். அப்போது எனது நண்பரின் எதிரி இறந்து விடுவான் என திட்டம் போட்டு, தனது திட்டத்தை காகத்திடம் கூறியது. மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே காகங்களும் நரியும் ஆற்றங்கரைக்குச் சென்று சரியான சூழ்நிலை வரும் வரை காத்து இருந்தன. மகாராணியாரும் வழக்கம் போல நகைகளைக் கழட்டி ஆற்றங்கரையில் வைத்து விட்டு குளிக்கச் சென்றார். இதுதான் தருணம் என எண்ணி நகைகள் இருந்த இடத்திற்குச் சென்று நகைகளைத் துõக்கிச் சென்றது காகம். காவலாளிகள் காகத்தைத் பின் தொடர்ந்தார்கள். காகம் அந்த நகைகளை எதிரியான பாம்பு இருந்த புற்றினுள் போட்டது. காவலாளிகள் நகையை எடுக்க முயற்சித்தார்கள். அதனுள் இருந்த பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது. உடனே பாம்பை அடித்து கொன்று நகைகளை மீட்டுச் சென்றார்கள். அதன் பின் காகங்கள் நிம்மதியாக வாழ்ந்தன. நீதி: என்றோ செய்த உதவிக்கு நிச்சயம் ஒரு நாள் பலன் கிடைக்கும். ************************** புரூப் ஓகே/ நீ.க-5. ஆப்பு! மார்ச்2 ஒரு காட்டில் குரங்கு ஒன்று ஒரு மரத்தில் தனியாக வசித்து வந்தது. அது மிகவும் குறும்புக்கார குரங்கு. சுட்டித்தனமாக அங்கும் இங்கும் தாவிக் குதிக்கும். மனதில் பயம் என்பதே அதற்குக் கிடையாது. ஒருநாள் அந்தக் காட்டிற்கு ஒரு விறகு வெட்டி வந்தார். வந்த இடத்தில் மரங்கள் அதிகமாக இருந்ததால், விறகு வெட்டி அங்கேயே கூடாரம் அமைத்து தங்கினார். அவர் கூடாரம் அமைத்திருந்த இடத்தின் பக்கத்தில்தான் அந்தக் குரங்கும் வசித்தது. தினமும் விறகு வெட்டியும் மரங்களை பெரிய துண்டுகளாக வெட்டிவந்து, அவற்றை தன் கூடாரத்தின் அருகே வைத்து கோடரியால் பிளந்து, அடுப்பில் வைக்கக் கூடிய அளவாகச் சிறு துண்டுகளாக்கினார். அடுத்த நாள் அவற்றை பக்கத்து கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்று அதைக்கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். அப்படி அவர் மரத்துண்டுகளை சுலபமாக பிளப்பதற்கு ஆப்புகளைப் கையாள்வது வழக்கம். ஆப்பு என்பது மரம் அல்லது இரும்பினால் ஆனது. கீழ் பக்கம் ஒடுக்கமாகவும் மேல் பக்கம் அகலமாகவும் உள்ள ஒரு ஆயுதம். வழக்கம்போல் ஒரு பெரிய மரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தார். அவருக்கு களைப்பு வந்ததால் மரத்தின் பாதியளவு பிளந்திருந்த நிலையில் பிளவுக்கு இடையில் மரத்தாலான ஆப்பை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார். விறகு வெட்டியின் செயலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த அந்தக் குரங்கு அவர் சென்றவுடன் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தது. விறகு வெட்டி விட்டுச் சென்ற மரத்துண்டின் மீதேறி மரத்தில் இறுக்கி இருந்த ஆப்பை நோக்கியவாறு அமர்ந்தது. அப்போது பிளவுபட்ட பகுதியில் அதன் வால் முழுவதும் சொருகியிருந்தது. குரங்கு ஆப்பை இழுக்கும் கவனத்தில் இருந்ததால், தனது வால் மரத்துண்டின் பிளவில் மாட்டியிருப்பதை உணரவில்லை. பின் தனது குறும்பு வேலையைச் செய்ய ஆரம்பித்தது. மரப்பிளவு இறுகாமல் செருகி இருந்த ஆப்பை தன் முழுப் பலத்தையும் கொண்டு ஆட்டி ஆட்டி எடுக்க முயற்சி செய்தது. திடீரென்று அந்த ஆப்பு குரங்கின் கையோடு வந்துவிட்டது. உடனே பிளவுபட்ட மரத்துண்டு சுருங்கிக் கொண்டது. பிளவுக்குள் தொங்கியிருந்த வால் நசுங்க, குரங்கு அலறியது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மரவெட்டி, அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். அதற்குள் குரங்கு வலி தாங்காமல் பரிதாபமாக செத்துப் போனது. நீதி: பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல், குறும்புத்தனமாக எந்த காரியத்தையும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அவற்றால் ஆபத்து வரும். ******************** நீ.க-6 அரண்மனையா, சத்திரமா? மார்ச்8புரூப் ஓகே/ ஒருசமயம் பீர்பால் ஒரு வேலை நிமித்தமாக அண்டை நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் அரண்மனை ஒன்று இருந்தது. மிகவும் சோர்வாக இருந்த பீர்பால் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என்று அந்த அரண்மனைக்குள் நுழைந்தார். அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனைதானே என்று அவர் நினைத்தார். அந்த அரண்மனையின் பின்புறம் குதிரையைக் கட்டினார். ஆள் அரவமே இல்லை. அரண்மனையில் உணவு இருந்தது. தமக்கிருந்த பசியில் உணவினை எடுத்து உண்டார். உண்ட மயக்கத்தில் பக்கத்தில் இருந்த பஞ்சு படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார். வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் வந்து விட்டார். தன் உணவை உண்டு விட்டு, தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் கோபத்தில் பீர்பாலை எழுப்பினார். ‘என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவினை உண்டு, என் படுக்கை அறையில் படுத்திருக்கிறாயே, நீ யார்?’ என்று அதட்டினார். ‘ இது அரண்மனையா? யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!’ என்றார் பீர்பால். தான் ஒரு மன்னர் என்று தெரிந்தும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம சத்திரம் என்கிறானே இவன் என கோபமுற்றார் மன்னர். ‘உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!’ என்றார் மன்னர். ‘மன்னா, இது அரண்மனையாகவே இருந்தாலும், இதனையும் தர்ம சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லையே!’ என்றார் பீர்பால். ‘ அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார். மறுநாள் வேறொருவர் வருவார்... பிறகு சென்று விடுவார்... இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!’ என்றார் மன்னர். ‘மன்னா,உங்கள் தாத்தா எங்கே தங்கி இருந்தார்?‘ ‘இதே அரண்மனையில்தான்!’ ‘அப்பா?’ ‘இதே அரண்மனையில்தான்!’ ‘ உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?’ ‘ என் மகன் தங்குவான்!’ ‘அப்படியா! ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! உங்கள் தாத்தா சில காலம், உங்கள் அப்பா சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். அப்படி என்றால் அரண்மனையும் ஒரு சத்திரம்தானே!’ என்றார் பீர்பால். பீர்பால் சொல்லியதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு. ‘தாங்கள் யார்?’ என்று மரியாதையுடன் கேட்டார் மன்னர். ‘என்னை பீர்பால் என்று அழைப்பார்கள்!’ என்றார் பீர்பால். ‘அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்!’ என்றார் மன்னர். நீதி: இந்த உலகில் யாருக்கும் எதுவும் நிரந்தர சொந்தமில்லை. இருக்கும் வரை அனுபவிக்கலாம். *********** நீ.க-7 சிறந்த வீரர்! மார்ச்16 ஒருநாள் அக்பர் தனது அவையில் அமர்ந்து இருந்தார். அவையில் இருந்தவர்களைப் பார்த்து, ‘உலகத்தில் சிறந்த வீரர் யார்?’ என்று கேட்டார். ‘மாபெரும் சேனை ஒன்றை ஐந்தாறு வீரர்களை மட்டும் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்று வெற்றி பெறும் தளபதியே சிறந்த வீரர்!’ என்றார் ஒரு அமைச்சர். ‘ஆயுதம் இல்லாமல் எல்லா ஆயுதங்களும் வைத்திருக்கும் ஒருவனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கொள்பவனே சிறந்த வீரன்!’ என்றார் இன்னொருவர். எல்லாரும் பதில் அளித்துக் கொண்டிருக்க பீர்பால் மட்டும் அமைதியாக இருந்தார். அது அக்பருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ‘பீர்பால், உன் பதில் என்ன?’என்றார் அக்பர். ‘மன்னா, வீரம் என்பது வெறும் உடல் பலம் அல்ல. உள்ளத்தின் உயர் பண்பே வீரம். தன்னம்பிக்கையுடன் உழைத்துக் கிடைக்கும் வருவாயினை மட்டுமே தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்பவன், சுய முயற்சியுடன் தன் கடமைப் பொறுப்பினை நிறைவேற்றும் விதத்தில் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படுபவன் ஆகிய இவர்கள்தான் உண்மையான வீரர்கள் என்று நான் கருதுகிறேன்!’என்றார் பீர்பால். ‘நீர் கூறுவது உயர்ந்த தத்துவம்தான். ஆனால் வாழ்க்கையில் சுயநல நோக்கம் இல்லாமலும் முழுக்க முழுக்க தன் உழைப்பினை மட்டுமே நம்பி வாழக்கூடிய ஒருவன் இருக்கக் கூடும் என்று நான் நினைக்கவில்லை. இதை நான் உனக்கு நிரூபித்துக் காட்ட முடியும்!’ என்றார் அக்பர். மறுநாளே அக்பர் தன் நாட்டு மக்களுக்கு உத்தரவு ஒன்றினை பிறப்பித்தார். பொதுமக்கள் அனைவருக்கும் ஒருவார காலத்திற்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு இலவசமாக அளிக்கப்படும் என்பதுதான் அந்த செய்தி. விருந்தளிப்பு நாளும் தொடங்கியது. மக்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட வந்தார்கள். யாரும் வேலைக்கு செல்லவில்லை. விருந்து தொடங்கி மூன்று நான்கு நாட்கள் கழிந்தன. அக்பரும் பீர்பாலும் மாறுவேடத்தில் குதிரைமீது நாடு முழுவதையும் சுற்றி வந்தார்கள். தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. ஒரு கிராமத்து வயல்பக்கமாக அக்பரும் பீர்பாலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயலில் வயதான முதியவர் ஒருவர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது உழுது கொண்டிருந்தார். அக்பர், முதியவரை நெருங்கி, ‘பெரியவரே.. இந்தக் கடும் வெயிலிலும் வேலை செய்துகொண்டு இருக்கிறீரே? மன்னர் அனைவருக்கும் ஒருவாரத்திற்கு மூன்று வேளையும் அறுசுவை விருந்து அளிக்கிறாரே.. அதைப்பற்றி உங்களுக்குத் தெரியாதா?’என்று கேட்டார். ‘ஐயா. அந்தச் செய்தி என் காதிலும் வந்து விழுந்தது. நான் சாமான்ய உழைப்பாளி. உழைத்துச் சாப்பிட்டு பழகிப் போனவன். உழைக்காமல் கிடைக்கும் உணவு என் குடலில் செரிமானம் ஆகாது. தவிர மன்னர் ஒரு வார காலத்திற்கு மட்டும்தான் உணவு அளிப்பார். அதன்பிறகு நான் உழைத்துத்தானே சாப்பிட்டு ஆகவேண்டும்? என்னைப் பொறுத்த மட்டில் என் உழைப்புதான் எனக்கு எல்லாமே’ என்று கூறினார் முதியவர். முதியவரின் சொற்களைக் கேட்டு மன்னர் அக்பர் பிரமித்து நின்றார். பீர்பால் சொன்னது போல் இவர் தான் சிறந்த வீரர் என்று தெளிவு பெற்றார். ********* நீ.க-8. புகழ்ச்சியால் வந்த ஆபத்து! மார்ச்23 அது அடர்ந்த காடு. காட்டில் பல மிருகங்கள் இருந்தன. அந்தக்காட்டில் ஒரு நரிக்கூட்டம் இருந்தன. அந்தக்கூட்டத்தில் ஒரு வயசான நரி இருந்தது. நரி வசிப்பிடத்தின் பக்கத்தில் முள்ளம் பன்றி கூட்டமும் வசித்து வந்தன. அந்த முள்ளம் பன்றி கூட்டத்தில் எல்லாமே கொழு கொழுவென்று இருந்தன. முள்ளம் பன்றி கூட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் வயசான நரிக்கு வாயில் எச்சில் ஊறும். ஒரு நாள் முள்ளம் பன்றியை வேட்டையாட துடித்தது நரி. முள்ளம் பன்றியை ஓடிப்போய் கவ்வியது. முள்ளம் பன்றியின் முள் முகமெல்லாம் குத்திவிட ரத்தம் கசிந்தது. வலி எடுத்தது. முணகிக்கொண்டே ஊளையிட்டு ஓடிப்போனது. சில நாட்கள் சென்றன. தன் நண்பன் ஓநாயை சந்தித்தது நரி. முள்ளம் பன்றி கூட்டத்தை நயவஞ்சகமாக ஏமாற்றி அவற்றை அடித்து சாப்பிட ஒரு சதி திட்டம் தீட்டியது. அந்தத் திட்டத்தை ஓநாயிடம் சொன்னது. ஓநாயும் அதற்கு சம்மதித்தது. முள்ளம் பன்றியிடம் தன் நாடகத்தை அரங்கேற்ற வந்தது. தன் முன்பு வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்தது முள்ளம் பன்றி. உடனே தன் முட்களைச் சிலிர்த்து நின்றது. இதைப் பார்த்து பயந்துபோன ஓநாய் உடனே பதற்றத்துடன், “பயப்படாதே முள்ளம் பன்றி! நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். என்னை நம்பு” என்று கெஞ்சியது; கொஞ்சியது. பிறகு, சிரித்தப்படி “ உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன்” என்றது ஓநாய் இதைக்கேட்டதும்,“ என்னது? நான் அழகா?” என்று ஆச்சரியப்பட்டது முள்ளம் பன்றி. “ ஆமாம். நீ ரொம்ப அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முள்ளுதான் உன் அழகை கெடுக்குது” என்றது ஓநாய். “ அப்படியா, ஆனா அதுதானே என்னைப் பாதுகாக்குது” என்றது முள்ளம்பன்றி. “ உண்மைதான். ஆனால் உன் உடம்பில் இருக்கும் முள்ளை எல்லாம் எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது.” என்ற ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கியது முள்ளம்பன்றி. மறுநாள் ஓநாய் சொன்னபடி தன் உடம்பில் இருக்கும் முட்களை எல்லாம் உதிர்த்துவிட்டது. பிறகு, அவசர அவசரமாய் ஓநாய் முன் வந்து நின்றது. “இப்போ நான் இன்னும் அழகாயிருக்கேனா?” என்று கேட்டது. அப்படி முள்ளம் பன்றி கூறியதும், புதரில் மறைந்திருந்த நரி வெளிப்பட்டு, ஓநாயுடன் சேர்ந்து கொண்டு, “அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு” என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது நரியும் ஓநாயும். நீதி: வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே! ************* நீ.க.9. புத்திசாலிதனம்! மார்ச்30 தெனாலிராமன் கிருஷ்ண தேவராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் கிருஷ்ணதேவராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரைக் கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று சொல்லிக் கொண்டு அவனது வீட்டில் தங்கியிருந்தான். ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் கிருஷ்ண தேவராயருக்கு கடிதம் ஒன்று எழுதினான். அதில் மன்னர் உடனே தன் வீட்டுக்கு வந்தால் அதிசயம் ஒன்றைக் காட்டுவதாக எழுதி, தெனாலிராமன் என்று கையெழுத்துப்போட்டு அனுப்பினான். கடிதத்தைக் கண்ட கிருஷ்ணதேவராயரும் தெனாலிராமன் ஏதோ அதிசயத்தைக் காட்டப் போகிறார் என்ற ஆவலில் உடனே குதிரை மீது ஏறிப் புறப்பட்டார். அவசரமாகப் புறப்பட்டதால் ஆயுதம் எதையும் கொண்டு வரவில்லை. மூடியிருந்த கதவை லேசாகத்தட்டி, “தெனாலி”என அழைத்தவாறே கதவைத் திறந்து நுழைந்தார். அங்கு மறைவாக நின்றிருந்த சதிகாரன் கூரிய ஆயுதத்தால் மன்னரைக் குத்த முயன்றான். சட்டென்று சுதாரித்துக்கொண்டு, சதிகாரனைப் பிடித்து துõணில் கட்டிப்போட்டார். மன்னர் தனியாக தெனாலி வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்த மக்கள் பின்னாலேயே வந்து சதிகாரனை அங்கேயே அடித்துக் கொன்றனர். மறுநாள் சபை கூடியது. தெனாலிராமன் குற்றம் சாட்டப் பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டார். மன்னரைக் கொலை செய்ய முயற்சிப்பது பெரும் குற்றம். அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. சதிகாரனுக்கு ஆதரவளித்ததால் தெனாலிராமனும் குற்றவாளியென்று கூறி அவனுக்கு மரண தண்டனை அளித்தார் கிருஷ்ணதேவராயர். தெனாலிராமன் ‘அந்த சதிகாரன் என் உறவினன் என்று சொல்லிக்கொண்டு வந்ததால் இடமளித்தேன். அவன் இப்படி சதி செய்வான் என்று தெரியாது.’ என வாதாடிப் பார்த்தார். அறியாமல் நேர்ந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினார். அரசர் சற்று நேரம் சிந்தித்தார். பிறகு சொன்னார்.‘ தெனாலி! சட்டப்படி குற்றம் சாட்டப் பட்ட உன்னை மன்னிக்க முடியாது. வேண்டுமானால் உன் விருப்பப்படி சாக அனுமதி அளிக்கிறேன். நீ எப்படி சாக விரும்புகிறாய் என்பதைச் சொல். அதை நிறைவேற்றுகிறேன்.’ என்றார். ஒரு நிமிடம் தெனாலிராமன் சிந்தித்தான். பிறகு சட்டென்று ‘ மன்னா! நான் வயதாகி முதுமை அடைந்த பிறகு இயற்கையாக சாக விரும்புகிறேன்.’ என்றார். மன்னர் தென்னாலியின் புத்தி கூர்மையை மெச்சி, தெனாலி வாக்குக்கு மதிப்பளித்து விடுதலை செய்தார். தெனாலிராமன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். ********* நீ.க.10 ஏமாற்றாதே! ஏப்6 சீடர்களுடன் பரமார்த்த குரு ராஜ வீதியில் வந்து கொண்டிருந்தனர். மன்னன் தேரில் ஊர்வலமாக வந்து கொண்டு இருந்தார். அவர்கள் அருகே தேர் வந்ததும், கையில் வைத்திருந்த செத்துப் போன தவளை, ஓணானை தேர் சக்கரத்தில் போட்டான் மூடன். சக்கரம் ஏறியது. தவளையையும் ஓணானும் நசுங்கிப் போனது. இதைப் பார்த்த பரமார்த்தர் ஒரு நாடகம் நடத்த தீர்மானித்தார். மன்னரிடம், “என் சீடர்களைக் கொன்று விட்டாயே! இது தான் நீ ஆட்சி புரியும் முறையா?” என்று கூச்சலிட்டார். ஒப்பாரி வைத்தார். மன்னருக்கும் அமைச்சர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. “யாரையும் நான் கொல்லவில்லையே! நான் தான் உன் சீடர்களை கொன்றேன் என்றால் அவர்கள் உடல்கள் எங்கே” என்றார் மன்னர். “இதோ இவைதான் என்றபடி, நசுங்கிப் போன தவளையையும், ஓணானையும் காட்டினார்”பரமார்த்தர்! “இதுவா தவளை உன் சீடர்கள்?” மன்னர் கேட்டார். “ மன்னா, நான் சொல்வது உண்மை. இந்தத் தவளையும் ஓணானும் நம்மைப் போல மனிதர்களாகத்தான் இருந்தார்கள். ஒரு மந்திரவாதியின் சாபத்தால் இப்படி ஆகிவிட்டார்கள்!” என்று பொய் கூறினார் பரமார்த்தர். “சரி, நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன செய்யனும்? என்றார் மன்னர். “ மறுபடியும் இதே தவளைக்கும் ஓணானுக்கும் உயிர் கொடுங்கள். இல்லாவிட்டால், தினம் நுõறு பொற்காசுகள் தர வேண்டும்” என்றார் பரமார்த்தர். மன்னர் ஒப்புக் கொண்டார். செத்துப் போன தவளையையும் ஓணானையும் காட்டி ராஜாவையே ஏமாற்றி விட்டோம்! இனி,தினமும் நூறு பொற்காசு கிடைக்கும் என்று ஆசையாக இருந்தார் பரமார்த்தகுரு. தன் சீடர்களான முட்டாள், மூடனைப் பார்த்து, “நீங்கள் இருவரும் செத்து விட்டதாகக் கூறி விட்டேன். இனிமேல் மடத்தை விட்டு வெளியே போகாதீங்க. தப்பித் தவறி வெளியே போனீர்களானால், நாம் மன்னரிடம் மாட்டிக் கொள்வோம்” என்று எச்சரிக்கை செய்தார், குரு. சில நாட்கள் சென்றன. ஒரு நாள் இரவு. முட்டாளும் மூடனும் மட்டும் விழித்துக் கொண்டிருந்தனர். “ ஊர் சுற்றிவர ஆசை! யாருக்கும் தெரியாமல் ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்து விடலாம்!” என்று கிளம்பினர். இரண்டு தெரு சுற்றுவதற்குள், இரவுக் காவலர்கள் கண்ணில் பட்டு விட்டனர்! காவலர்கள் துரத்திப் பிடித்தனர். பொழுது விடிந்தது. மற்ற சீடர்களும் குருவும் கைது செய்யப்பட்டனர். “ இவர்கள் செத்து விட்டதாக ஏமாற்றினாயே! இப்போது உண்மையாகவே இவர்கள் இருவரையும் தேர் ஏற்றிச் சாகடிக்கப் போகிறேன்!” என்றார், மன்னர். குருவும் சீடர்களும்அலறினார்கள். “மன்னா! மன்னித்து விடு. உங்களிடம் இருந்து வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம்” என்று மன்னரின் கால்களில் விழுந்தனர். மன்னனும் போனால் போகிறது என்று மன்னித்து அனைவரையும் விடுதலை செய்தார்! **** நீ.க.11 எது புண்ணியம்? ஏப்13 மகாபாரத யுத்தம் முடிந்த சமயம் அது. தருமர் அசுவமேத யாகம் ஒன்று செய்தார். பல நாட்டின் அரசர்களும், வேதியர்களும், தவ முனிவர்களும் வந்தனர். தருமர், வந்திருந்தவர்களுக்கு செல்வங்களை தானம் செய்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு தங்கம் போல பிரகாசிக்க, தருமபுத்திரர் முன்னால் தானம் செய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது. எல்லாரும் அதிசயப்பட்டனர்! தருமர், கீரிப்பிள்ளையிடம் “கீரியே உன் பாதி உடம்பு ஏன் தங்க நிறமாக இருக்கிறது? இங்கு ஏன் இப்படி புரளுகிறாய்?” என்றார். “தருமரே! நான் வசித்துவரும் காட்டில் ஒரு ஏழை முனிவர், குடிசை ஒன்றில் மனைவி,மகன், மருமகளோடு வாழ்ந்து வந்தார். காட்டில் உள்ள காய் கனி கிழங்குகளை உணவு உண்டனர். ஒரு சமயம் மழை பொய்த்தது. உணவு பொருள் கிடைப்பது அரிதாகி விட்டது. காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை சிறிது சிறிதாகச் சேர்த்து அதனை மாவாக அரைத்து சாப்பிடுவார்கள். சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து விட்டது. பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது. ஒரு நாள் நான்கு நாட்களுக்குப் பிறகு நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்போகும் சமயத்தில்,எங்கிருந்தோ முதியவர் ஒருவர் வந்தார். “ ஐயா பெரியோர்களே! நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி விட்டது,பசி தாங்க முடியவில்லை தயவு செய்து கொஞ்சம் உணவு கொடுங்கள்” என்று கெஞ்சினார். முனிவர் குடும்பம் தங்கள் பசியைப் பொருட்படுத்தாது, அந்த முதியவருக்கு உணவைக் கொடுத்து உபசரித்தது. முதியவர் சாப்பிட்டு விட்டு அவர்களை மனதார வாழ்த்திச் சென்றார். அவர் சென்ற அடுத்த நொடி, அங்கு தேவர்களின் புஷ்பக விமானம் ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது. பல இடங்களிலும் அலைந்து திரிந்து பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு நடந்த அதிசயங்களை கண்டேன். பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த மாவை உண்ணும்போது அது என் மேலெல்லாம் ஒட்டிக்கொண்டது. அந்த மாவு ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம் தங்கமாக மின்னியது! தங்க நிறமான எனது பாதி உடல் எனக்கு தருமத்தின் சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகிறது” என்று கூறியது கீரி. “ சரி, இங்கு தான தண்ணீரில் புரளுவது ஏன்?” என்றார் தருமர். “எனது உடம்பின் மீதி பாதியும் தங்க நிறமாக வேண்டி தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன். எனது வாலின் கடைசியில் உள்ள சில முடிகள் மட்டுமே தங்க நிறமாக மாறி இருக்கிறது. நீங்கள் செய்யும் யாகத்தைவிட அந்த முனிவர் செய்த தர்மமே மிகவும் சிறந்தது!” என்று சொல்லியது கீரி. நீதி: பசித்தவனுக்கு புசி என்று கொடுக்கும் உணவை விட சிறந்த புண்ணியம் எதுவும் இல்லை. ************* நீதிக்கதை-12 அவரவர் திறமை! ஏப்20 ஒரு காட்டில் கரடி, குரங்கு, கழுதை மூன்றும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. தாங்கள் உண்ணுவதற்கு, உணவு தேட மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்காக நண்பர்களான மூன்றும் இணைந்து ஒரு ஒப்பந்தம் போட்டன. அந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு மரத்திலும் ஏறி குரங்கு பழத்தைப் பறித்துப் போடவேண்டும், கரடி அதை சேகரித்து மூட்டையாக கட்ட வேண்டும். அந்த மூட்டையை கழுதை சுமந்து, மூன்றும் வசிக்கும் இடத்திற்கு கொண்டுவரவேண்டும். கொண்டு வந்த பழத்தை மூன்று பங்காக பிரித்து பங்கிட்டு உண்ண வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி தினம் தினம் காட்டில் உணவுத்தேடி, கிடைத்த உணவை பங்கிட்டு உண்டு வந்தன. இப்படி சில நாட்கள் சென்றன. திடீரென்று ஒரு நாள், கழுதைக்கு விபரீத எண்ணம் ஒன்று தோன்றியது. பொதி சுமக்கும் வேலை மிகவும் தரம் குறைந்தது; மிகவும் கஷ்டமானது என எண்ணியது. இதனால், குரங்கின் பணியை செய்ய முடிவு செய்தது. குரங்கிடம் சென்று,‘நான் செய்யும் வேலை மிகக் கடினம். நீ செய்வது மிக எளிதாக உள்ளது. அதனால், உன் வேலையை எனக்குத் தந்து விடு’ என்று கழுதை கேட்டது. அதற்கு குரங்கு,‘நீ செய்யும் பொதி சுமக்கும் வேலை ஒன்றும் கடினமில்லை. நான் செய்யும் வேலைதான் மிகக் கடினம்’ என வாதிட்டது. இருவரும் கரடியிடம் சென்று முறையிட்டனர். கரடி இருவரின் வாதத்தையும் கேட்டறிந்து,‘உங்களுக்குள் வேலையை மாற்றிக் கொள்ளுங்கள்! ஆனால், உணவு கொண்டுவருவதில் காலதாமதமோ, பிரச்னையோ வரக்கூடாது” என்று எச்சரித்து அனுப்பியது. மறு நாள், குரங்கும், கழுதையும் தங்கள் வேலையை மாற்றிக்கொள்ள முடிவு செய்தன. குரங்கின் வேலை மரத்தில் ஏறுவது. ஆனால், அது கழுதையால் முடியவில்லை. கழுதையின் வேலை பொதி சுமப்பது. ஆனால், குரங்கினால் அது முடியாது. இருவரும் திகைத்து நிற்க, அப்போது கரடி வந்தது. ‘கழுதையின் பணி பொதி சுமப்பது, குரங்கின் பணி மரத்தில் ஏறுவது. இதை இருவரும் உணர்ந்து செயல்பட்டு இருந்தால், இந்த பாரபட்சம் வந்திருக்க வாய்ப்பில்லை’ என்று குரங்கு மற்றும் கழுதையிடம் கரடி கூறியது. இதை உணர்ந்த இரண்டும் மீண்டும் பழையபடி தங்கள் வேலையை செய்யத் தொடங்கின. கரடி பழங்களை சேகரிக்க, மூவரும் பகிர்ந்து உண்டனர். நீதி: ‘அவரவர் வேலையை அவரவர்தான் செய்ய வேண்டும்’ ************* நீ.க-13 நியாயம்! ஏப் 27 அது ஒரு கிராமம். அந்த ஊரின் தெருவின் எதிர் எதிரே இரு குடும்பம் வசித்தன. ஒருவர் கோதை. இவரிடம் ஆடு,மாடுகள் நிறைய இருந்தன. இவர் மிக பேராசைக்காரர். ஊதாரி. எதிர் வீட்டில் இருப்பவர் வேதா. இவரிடம் குறைவான ஆடு,மாடுகள், கோழிகள் இருந்தன. இருவரும் பால், மோர், தயிர், நெய் வியாபாரம் செய்தனர். கோதை வீட்டில் விஷேசம். உறவினர்கள் வந்தனர். உறவினர்களுக்கு விருந்து வைக்க, பலகாரங்கள் செய்ய நிறைய நெய் தேவைபட்டது. வேதாவிடம் நெய் கடனாக பெற்றார் கோதை. நாட்கள் பலவாகியும் வாங்கிய நெய்யைத் திருப்பிக் கொடுக்கவில்லை வேதா. ஒருநாள். கோதையிடம் கடனாகப்பெற்ற நெய்யை கேட்டார் வேதா. “ உன்னிடம் நான் எப்போது நெய் வாங்கினேன்?” என்றார் கோதை. அதிர்ச்சியுற்றார் வேதா. மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டார் வேதா. மரியாதை ராமன், இருவரையும் விசாரித்தார். “என்னிடம் நிறையப் பசுக்கள் உள்ளன. நெய்க்கு நான் ஏன்பிறரிடம் அலையவேண்டும்? என்னை அவமானப் படுத்தவே இப்படி ஒரு புகார் கொடுத்திருக்கிறார் வேதா” என்றார் கோதை. இதை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும் என்று தீர்மானித்தார் மரியாதை ராமன். ஒரு சின்ன பள்ளம் தோண்டி, அதில் சேரும் சகதியையும் கொண்டு நிரப்பினார். இரண்டு கிளிஞ்சல்களும், இரண்டு செம்புகள் நிறைய தண்ணீரும் அந்தப்பள்ளத்துக்கு அருகில் வைக்கச் செய்தார். முதலில் கோதையையும் அடுத்து வேதாவையும் சேற்றில் இறங்கி, பிறகு செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவி வரச் சொன்னார். கோதை சேற்றில் வேகமாக இறங்கி, செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவினார். சேறு சரியாகப் போகவில்லை. வேதா சேற்றில் இறங்கினார். பொறுமையாக வெளியே காலை எடுத்து, ந கிளிஞ்சலால் காலிலுள்ள சேற்றைச் சுத்தப்படுத்தி,பிறகு செம்பிலுள்ள தண்ணீரால் கால்களைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டு வந்தார். செம்பில் சிறிது தண்ணீரும் மிச்சமிருந்தது. இருவரின் செயலை கூர்ந்து கவனித்த மரியாதை ராமன் தன் தீர்ப்பைச் சொல்லத் துவங்கினார். வேதா காலிலுள்ள சேற்றைக் கிளிஞ்சல்களால் வழித்து எடுத்து விட்டு தண்ணீரால் கால்களைச் சுத்தமாகக் கழுவிய பிறகும் செம்பில் சிறிது தண்ணீரும் மிச்சம் இருக்கிறது. வேதா சிக்கனக்காரி. கோதையோ காலிலுள்ள சேறு போகாமல் அவ்வளவு தண்ணீரையும் செலவழித்து விட்டார். இதிலிருந்தே கோதை ஊதாரி எனத் தெரிகிறது. கோதை, வேதாவிடம் நெய் கடனாக வாங்கி இருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது என்றார் மரியாதை ராமன். மரியாதை ராமன் சொன்ன தீர்ப்பை ஏற்று, கோதை, வேதாவிடம் நெய் கடனாக வாங்கியதை ஒத்துக் கொண்டார். வாங்கிய நெய்யைத் திருப்பிக்கொடுத்தார். நீதி: நியாயம் எப்போதும் வெல்லும்! *************** நீ.க.14 பிரார்த்தனை மே4/ ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ராஜன் மற்றும் செல்வம். இருவரும் வியாபாரம் நிமித்தமாக கப்பலில் பயணம் செய்தனர். ஒரே அறையில் இருவரும் பயணித்தனர். ராஜன் பசி தாங்க மாட்டான், பயந்த சுபாவமுள்ளவன். கடலில் பலத்த புயல் வீசியது. கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. ராஜன் மற்றும் செல்வம் அலையில் சிக்கி ஒருதீவை அடைந்தனர். அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இருவரும் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். ராஜன், ‘கடவுளே! எனக்கு ரொம்ப பசி. சாப்பிட உணவு வேண்டும், தீவில் தனியாக இருக்க பயமாக இருக்கிறது வீட்டுக்கு போக எனக்கு மட்டும் படகு அனுப்பு’ என்று வேண்டினான். செல்வம், ‘கடவுளே! ராஜன் பசி தாங்கமாட்டான் அவனுக்கு சாப்பிட உணவு வேண்டும், அவன் பயந்த சுபாவம். தீவிலிருந்து வெளியே போக படகு அனுப்பு’ என்று வேண்டினான். பசி மயக்கத்தில் இருந்த போது ராஜனுக்கு ஒரு ஆப்பிள் மரம் தென்பட்டது. பசி தாங்கவில்லை என்பதால், அவசர அவசரமாக ஆப்பிளை பறித்து சாப்பிட்டான் ராஜன். மதியம்வேளை <உணவுக்கு மீண்டும் ஆப்பிளை சாப்பிட்டான் ராஜன். தென்றல் காற்று வீசியது. ராஜன் பசி மயக்கத்தில் மரத்தடியில் நிம்மதியாக உறங்கினான். அப்போது திடீரென்று கடலில் காற்று பலமாக வீசியது. மீண்டும் கடலில் புயல் வந்துவிட்டது போல என்று ராஜன் பயந்தான். அடித்த புயலில் ஒரு சின்ன படகு மட்டும் அவர்கள் இருந்த தீவில் கரை ஒதுங்கியது. படகைக் கண்டதும் ராஜனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எப்படியும் இதில் ஏறி தன் ஊருக்கு சென்று விடலாம் என்று நிம்மதியடைந்தான். செல்வத்தை நினைத்து கவலை படவே இல்லை. ராஜன் படகில் ஏறி அமர்ந்தான். அப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. ‘கடலில் உன்னுடன் கரை ஒதுங்கிய செல்வத்தையும் அழைத்துச் செல்?’என்று அசரீரி சொன்னது. ராஜன், ‘நான் எனக்காக மட்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். நான் என்ன விரும்பி கேட்டேனோ அதை கடவுள் எனக்கு தந்துள்ளார். அவனும் அப்படி பிரார்த்தனை செய்தால் அவனுக்கும் கிடைத்திருக்குமே. இதில் என் தவறு எதுவும் இல்லை’ என்றான் ராஜன். அதற்கு அசரீரி, ‘நீ பிரார்த்தனை செய்ததால் மட்டும் நீ கேட்ட பொருட்கள் வரவில்லை. அவன் உனக்காக பிரார்த்தனை செய்தான். அதனால்தான் உனக்கு உணவு, படகு கிடைத்துள்ளது‘ என்று சொன்னது. இதை கேட்டதும் ராஜன் தன் தவறை உணர்ந்தான். படகில் செல்வத்தையும் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்பினான். **************** நீ.க.-15 வலி வாங்கி வா! மே11 ஒரு கிராமத்தில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அவர் கருமி. நல்ல ஏமாற்றுக்காரர். தன் பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களிடம் நிறைய வேலைகளை வாங்கிக்கொண்டு அதற்கு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவார். தன்னிடம் வேலைக்கு வருபவர்களிடம் அதிக சம்பளம் கொடுப்பதாக சொல்லுவார். வேலைக்கு வருபவர்கள் சந்தோஷமாக வேலை செய்வார்கள். ஒரு மாதம்வரை கடுமையாக உழைப்பார்கள். மாத இறுதி நாளில் வேலை செய்தவர்களுக்கு கொஞ்சம் சம்பளம் கொடுத்துவிட்டு, “மீதி சம்பளம் வேண்டுமானால் ஏதாவது கடையில் ‘வலி’ வாங்கி வா. வாங்கி வராவிட்டால் உனக்குச் சம்பளம் கிடைக்காது ” என்பார். ‘கடையில் வலிக்கு மருந்து கிடைக்கும். வலி எப்படி கிடைக்கும்?’ என்று குழம்பி வேலை செய்தவர்கள் கடைத்தெருவுக்குச் சென்று கடைகளில் விசாரிப்பார்கள். ‘வலி’ கிடைக்காமல் திரும்பி வருவார்கள். அவர்களுக்கு மீதி சம்பளம் கொடுக்காமல் வீட்டுக்கு அனுப்பிவிடுவார் பண்ணையார். வேலை செய்தவர்கள் யாருமே அவரிடம் முழுமையாக சம்பளம் வாங்கியதே இல்லை. இந்த விஷயத்தைக் கேள்விபட்ட ஒரு புத்திசாலி, பண்ணையாருக்கு பாடம் கற்பிக்க அவரிடம் வேலைக்குச் சென்றார். நாட்கள் சென்றன. மாதத்தின் கடைசி நாள். புத்திசாலியான அவரிடம் பாதி சம்பளத்தைக் கொடுத்த பண்ணையார் “கடைக்குப் போய் ‘வலி’ வாங்கி வா. வாங்கி வராவிட்டால் உனக்குச் மீதி சம்பளம் இல்லை” என்றார். “ வாங்கி வருகிறேன். எங்கள் ஊரில் வலி இப்போ விலை ஏறிவிட்து. நீங்கள் கொடுத்த தொகையைவிட பத்து மடங்கு அதிகம் வேணும்” என்றார் புத்திசாலி. வலி எந்த கடையிலும் கிடைக்காது என்பதால் அவன் கேட்டத் தொகையைக் கொடுத்தார். புத்திசாலி கடைக்குப்போய் ஒரு தகர டப்பா வாங்கினார். அதில் ஒரு தேளை போட்டு அடைத்து எடுத்து வந்தார். “ நீங்கள் கேட்ட வலி இதோ இந்த டப்பாவில் இருக்கு. எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். பண்ணையார் குழப்பத்துடன் டப்பாவில் கையை விட்டார். தேள் கொட்டியது. வலி பொறுக்க முடியாமல் ‘வலிக்குது வலிக்குது!’ என்று கத்தினார். “ இந்த வலி போதுமா? இன்னும் வாங்கி வரவா?” என்று நகைத்தான் புத்திசாலி. தேள் கொட்டிய வலியில் துடித்த பண்ணையார் “ போதும்! போதும்!” என்று கத்தினார். தனக்குப் பேசிய முழு சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு புத்திசாலி வேலையாள் வீடு திரும்பினார். பண்ணையார் மனம் திருந்தினார். நீதி: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. ******* நீ.க.-16 கோகுல் செய்த தந்திரம்! மே18 அது நகரத்தை ஒட்டி அமைந்திருந்த ஒரு சின்ன கிராமம். அந்தக் கிராமத்தின் பெயர் பள்ளூர். அந்த ஊரில் கோகுல் என்பவன் இருந்தான். அவன் ரொம்ப குசும்பன். எப்போதும் கேலித்தனமாகவே பேசுவான். அந்தக் கிராமத்தில் பலர் அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள்? எதற்கு செய்கிறார்கள் என்று வம்பு பேசுவதும், குறை பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு எல்லாம் ஒரு பாடம் புகட்ட தீர்மானித்தான் கோகுல். ஒரு நாள் கிராமத்தின் சாலையோரம் இருந்த முருகன் கோயில் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். தன் பக்கத்துல சின்ன சின்ன கற்களை அடுக்கி வைத்தான். இரவு நேரம் வந்ததும் நேராக முருகன் கோயிலுக்கு வந்தான். முருகனை வணங்கினான். பிறகு, கற்கள் குவித்து வைத்திருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தைப் பார்த்து ஒவ்வொரு கல்லா எடுத்து வீசிக்கொண்டிருந்தான் கோகுல். அந்த சாலையில்போன அந்த ஊர் மக்கள் ‘ என்னாச்சு கோகுலுக்கு? கொஞ்சும் விஷமக்காரன். ஆனா, இப்ப என்னவோ பைத்தியம் மாதிரி ஒவ்வொரு கல்லா எடுத்து வானத்தை நோக்கி எறியிரானே! இவனுக்கு வேற வேலையே இல்லலையா?” என்று நினைத்து, சாலையில் போவோர் வருவோர் எல்லாரும் கோகுலிடம் ,“ கோகுல் உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா? என்ன இப்படி கல்லை வானத்தை நோக்கி வீசிக்கிட்டு இருக்கியே” அப்படின்னு கேள்வி கேட்டு பார்த்தாங்க. கோகுல் அவர்கள் கேட்பதை கண்டுக்காம அவன் விருப்பப்படி கற்களை வானத்தை நோக்கி வீசிக்கிட்டே இருந்தான். கோகுலின் இந்த மடத்தனமான செயல் பள்ளூர் முழுவதும் பரவியது. கடைசியாக வேலை வெட்டியில்லாத ஒரு பெரியவர் கோகுலிடம் வந்து, “ கோகுல், உனக்கு வேற வேலையே இல்லையா? உன் வெட்டித்தனத்துக்கு அளவே இல்லையா?” அப்படின்னு கேட்டார். ரொம்ப நேரமா பேசாம இருந்த கோகுல் பேசினான்: ‘இந்த உலகத்தில் யாரும் பிரயோஜனம் இல்லாம எதையும் செய்றது இல்லை. அவர் அவர் செய்ற வேலை பற்றி அவருக்குத் தெரியும் . உலகத்தில் பிரயோஜனம் இல்லாத வேலைன்னு சொல்பவர் எல்லாம் அடுத்தவன் என்ன செய்றான்? ஏன் செய்றான்? அப்படின்னு ஆராய்ச்சி செய்றது, கேள்வி கேட்கிறதே வேலையா இருக்கிறாங்களே அவங்க பண்றது என்ன வேலை? அப்படிப்பட்ட ஆட்கள் எத்தனை பேர் பள்ளூரில் இருக்காங்கன்னு எண்ணியபடி ஒவ்வொரு கல்லா எடுத்து வானத்தில் நட்சத்திரத்தைப் பார்த்து வீசிக்கொண்டே எண்ணிப் பார்த்தேன்” என்றான். இவ்வளவு நேரமா காத்திருந்து கோகுலை கேள்வி கேட்ட எல்லாரையும் வேலை வெட்டி இல்லாதவராக்கி விட்டு அவன் வீட்டுக்குச் சென்றான். நீதி : அடுத்தவர் செய்றது எல்லாம் ஏன், எதுக்கு? என்று நினைத்து கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்குவது மிகப் பெரும் வெட்டி வேலை. **************** நீ.க-17 உண்மை மே25 அது ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் இருக்கும் இறைவனை வழிபட வந்தார் ஒரு ரிஷி. அந்த ரிஷி எப்போதுமே உண்மையே பேசுவார். கோயில் தரிசனம் முடிந்ததும் கோயில் அருகில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்தார் ரிஷி. அப்போது அந்த வழியே தப்பித்தால் போதும் என்று ஒருமாடு தலைத்தெறிக்க ஓடி, கோயில் நந்தவனத்தில் தஞ்சம் புகுந்தது. அடுத்த சில நிமிடங்களில், ஒரு கசாப்புக்கடைக்காரர் அந்த மாட்டை தேடிக்கொண்டு வந்தார். மரத்தடியில் அமர்ந்திருந்த ரிஷியிடம் அவர், “ ஐயா, இந்த வழியே ஒரு மாடு ஓடிவந்ததைப் பார்த்தீர்களா?” என்று மூச்சிரைக்கக் கேட்டார். எப்போதும் உண்மையே பேசக்கூடிய ரிஷி, “ ஆமாம். இந்தப்பக்கம் ஒரு மாடு ஓடிவந்தது. அதோ அந்த நந்தவனத்தில் நுழைந்தது” என்றார். ரிஷி உண்மையைத்தான் சொல்வார் என்று நினைத்த அந்த கசாப்புக்கடைக்காரர், கோயில் நந்தவனத்திற்குச் சென்று அந்த மாட்டைப் பிடித்து விட்டார். மாட்டை ஓட்டிச் சென்று இறைச்சிக்காக அடித்து கொன்று விட்டார். அந்த மாடு இறைச்சிக்காக கொல்லப்பட, ரிஷி ஒரு காரணமாக இருந்து விட்டார். சில ஆண்டுகள் கழித்து அந்த ரிஷி இறந்து விட்டார். மக்கள் எல்லாம் எப்போதும் உண்மையே பேசக்கூடிய ரிஷியின் ஆத்மா சொர்க்கத்திற்கு சென்று இருக்கும் என்று பேசிக்கொண்டனர். அதே சமயம் ரிஷியின் ஆத்மாவை பாசக்கயிற்றால் கட்டி எமதுõதர்கள் நரகத்திற்கு இழுத்துச் சென்றனர். ரிஷியின் ஆத்மா ஒன்றும் புரியாமல் குழம்பியது. ‘நாம் வாழ்நாள் முழுக்க உண்மையைத் தானே பேசி வந்தோம்? பிறகு எதற்கு நரகத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறோம்?’ என்று எண்ணிய ரிஷியின் ஆத்மா, “ நான் செய்த பாவம்தான் என்ன? என்னை எதற்கு நரகத்திற்கு கொண்டு செல்கிறீர்கள்?” என்று எம துõதர்களிடம் கேட்டது. அதைக்கேட்டு சிரித்தனர் எமதுõதர்கள். “நீ உண்மை மட்டுமே பேசுவாய் என்பது எனக்குத்தெரியும். ஆனாலும் உண்மையில் சில வித்தியாசங்கள் உண்டு. அது உனக்குத் தெரியவில்லை. மிகச்சிறந்த உண்மை என்பது அந்த உண்மையால் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு நேரிடக்கூடாது. ஆனால், நீ சொன்ன ஒரு உண்மையால் ஒரு மாடு உயிரிழந்து விட்டதே! அந்த பாவத்திற்கு தான் உன்னை நரகத்திற்கு கொண்டுச் செல்கிறோம்” என்றார்கள் எமதுõதர்கள். நீதி: நாம் சொல்லும் உண்மையால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படக்கூடாது. அப்படி ஏற்பட்டால் அந்த உண்மையும் ஒரு பாவம்தான்! *************** நீ.க.-18 போற்றலும் துõற்றலும் ஜூன்1 தன் நாட்டின் நடப்பு நிலை எப்படி இருக்கிறது என்று அறிய மாறு வேடத்தில் அக்பரும் பீர்பாலும் நகர்வலம் புறப்பட்டனர். வழியில் விறகுகளை தலையில் சுமந்து கொண்டு ஒருவர் வந்து கொண்டிருந்தார். “அய்யா, தங்களுக்கு இன்று நடந்த விஷயம் தெரியுமா?” என பீர்பால் கேட்டார். “என்ன நடந்தது?” என்று கேட்டார் முதியவர். “நமது மன்னர் இன்று இயற்கை எய்தி விட்டார்” என்றார் பீர்பால். இதனைக் கேட்ட முதியவர் அதிர்ச்சி அடைந்தவராக, “நமது மன்னர் இயற்கை எய்திவிட்டாரா? நமது மன்னர் நாட்டிற்கு பல நன்மைகள் செய்துள்ளார். இன்று நமது நாடு செழிப்புடன் விளங்குவதற்குக் காரணம் அவர்தானே” என்று கவலையுடன் கூறிய முதியவர் விடை பெற்றார். “மன்னரே! விறகு வெட்டியான முதியவர் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துள்ளீர்கள் என்று அறிய முடிகிறது” என்றார் பீர்பால். அரசரும், பீர்பாலும் பேசியபடி நகர வீதியை அடைந்தனர். வீதியில் ஒரு பெண் தலையில் மோர் பானையுடன் வந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்து பீர்பால், “மோர்காரப் பெண்ணே! எங்கள் இருவருக்கும் இரண்டு குவளை மோர் கொடு” என்று கூறி மோருக்கானப் பணத்தைக் கொடுத்த பீர்பால், மோர்காரப் பெண்ணிடம் “ நம் மன்னர் இன்று இயற்கை எய்திவிட்டார் என்கிற செய்தி உனக்குத்தெரியுமா?” என்றார். அதற்கு மோர்க்காரப் பெண், ”மன்னர் இருந்தால் என்ன மறைந்தால் என்ன? மன்னராகப் பிறந்தாலும் இயற்கையை வெல்ல முடியாது” என்று கூறிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டாள். “பீர்பால், நாம் சந்தித்த இருவரும் இருவிதமான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனரே இதற்கு என்ன காரணம்?” என்றார் அக்பர். ”மன்னரே! விறகு வெட்டி பழுத்த முதியவர். தங்களின் மீது பெரும் மதிப்பை வைத்துள்ளார். அதனால் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியினால் வேதனையடைந்தார். “மோர் விற்ற பெண்ணிடம் கொஞ்சம் கூட நாட்டுப்பற்று கிடையாது. சிந்தனை முழுவதும் மோர் அதிகமாக விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதாக இருந்தது” என்றார் பீர்பால். “அப்படியானால் யார் மீது தவறு?” என்றார் அக்பர். “ தவறு நம்மீது தான். நாட்டின் நலன் கருதி பல நல்ல செயல்களைச் செய்யும்போது மக்களில் சிலர் போற்றுவதும், சிலர் துõற்றுவதும் நடைமுறையான விஷயம்தான். நாட்டில் எது நடந்தாலும் மன உறுதியுடன் மக்களின் நன்மைக்காக நாடாளும் மன்னராக இருக்க வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று சிந்திக்கக்கூடாது” என்றார் பீர்பால். நீதி: பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் புகழ்ச்சி, இகழ்சிக்கு மயங்ககூடாது. ******************* நீ.க.-19 மனிதனின் வாழ்வுகாலம் ஜூன்8 கடவுள் இந்த உலகத்திற்கான உயிரினங்களை ஒவ்வொன்றாக படைத்துக்கொண்டிருந்தார். முதலில் ஒரு கழுதையை படைத்து, “ கழுதையே, நீ கடுமையாக உழைக்க வேண்டும். பொதி சுமக்க வேண்டும். இலைகள் மற்றும் காய்கறிகளை உண்டு 50 ஆண்டுகள் வாழவேண்டும்” என்றார் கடவுள். அதற்கு கழுதை மிகப் பணிவுடன், “ கடவுளே நீ சொல்வதை அப்படியே ஏற்று மகிழ்கிறேன். ஆனால், 50 ஆண்டுகள் ஆயுசு வேண்டாம். அதை 25 ஆண்டுகளாக குறைத்து அருள வேண்டும்” என்று கேட்டுகொண்டது. கடவுளும் சரி என்றார். 2வதாக ஒரு நாயை படைத்து அதனிடம், “ மனிதனுக்கு காவலனாக இருப்பாயாக! நீ அவன் கொடுக்கும் ஆகாரத்தை உண்டு 40 ஆண்டுகள் வாழ்வாயாக!” என்று ஆசீர்வதித்தார், கடவுள். உடனே, நாய், “கடவுளே, உங்கள் கட்டளையை அப்படியே ஏற்கிறேன். ஆனால், எனக்கு 40 ஆண்டுகள் ஆயுள் வேண்டாம். அதை 20 ஆண்டாக குறைத்தருளுக” என்றதற்கு கடவுளும் சரி என்றார். 3வதாக ஒரு குரங்கை படைத்த கடவுள், அதனிடம்“ நீ மனிதர்களை குதுõகலப்படுத்த ஓடி,ஆடி, குதிக்க வேண்டும். மரத்துக்கு மரம் தாவிக்கொண்டிருக்கணும். பழங்கள், காய்களை உண்டு 30 ஆண்டுகள் வாழ வேண்டும்” என்றார் கடவுள். அதற்கு குரங்கு, “ கடவுளே, தங்கள் சித்தம் என் பாக்கியம். நான் 30 ஆண்டுகள் இருந்து என்ன சாதிக்கப்போகிறேன். 15 ஆண்டுகள் போதுமே” என்றது. கடவுளும் சரி என்றார். இறுதியாக கடவுள் மனிதனைப் படைத்தார். அவனிடம், “ மனிதா, நீதான் உலக உயிர்களுக்கெல்லாம் எஜமான். இவைகளை உன் வாழ்க்கைக்கு எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம். நீ விருப்பப்பட்டதை சாப்பிடலாம். உனக்கு ஆயுள் 20 ஆண்டுகள்” என்றார், கடவுள். அதற்கு பேராசைப் பிடித்த மனிதனோ, “ கடவுளே 20 ஆண்டுகள்தானா? இது போதாது. கடவுளே! தாங்கள் என் மீது கருணைகொண்டு கழுதை வேண்டாமென்ற 25 ஆண்டையும், நாய் வேண்டாமென்ற 20 ஆண்டையும், குரங்கு வேண்டாமென்ற 15 ஆண்டையும் சேர்த்து எனக்கு கொடுத்துவிடுங்கள்” என்றான். கடவுளும் சம்மதித்தார். காலங்கள் ஓடியது. 20 ஆண்டுகள் மனிதன் மனிதனாகவும், அடுத்து 25 ஆண்டுகள் கழுதை போல உழைக்கிறான். அடுத்த 20 ஆண்டுகள், தன் குடும்பத்தை நாய் போல காக்கிறான். கடைசி 15 ஆண்டுகள் முதுமை எய்தி குரங்கு போல தன் பேரப்பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செயலை செய்து வாழ்கிறான். இதுதான் மனித வாழ்க்கை ! **************** நீ.க.20 சாமர்த்திய பதில்!ஜூன்15 முல்லா பெரிய அறிவாளி. அவருக்கு எப்போது, எப்படி, எந்தவகை ஆபத்து, துன்பங்கள் வந்தாலும் அதற்காக கவலைப்படாமல், பயப்படாமல் அவருக்கு இருக்கும் அறிவாற்றலைக்கொண்டு அந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவார். இந்த விஷயம் பரவலாக எல்லாருக்கும் தெரிந்தது. ஊர் எல்லாம் முல்லாவின் அறிவு ஞானத்தையே பெருமையாக பேசியது. இது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா சபைக்கு வந்தார். மன்னரை வணங்கி நின்றார். ‘முல்லா , உமது அறிவைப் பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாக உள்ளது. நீ உண்மையிலேயே அறிவாளியே என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். அதனால் உனக்கு ஒரு பரிசோதனை வைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றை இந்த சபையில் சொல். நீ சொன்னது உண்மையாக இருந்தால் உனது தலை வெட்டப்படும் , நீ சொன்னது பொய்யாக இருந்தால் நீ துõக்கிலிடப்படுவாய்!’ என்றார் மன்னர். மன்னர் இப்படி சொன்னதும் முல்லா அதிர்ந்தார். மன்னர் எப்படியும் நம்மை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். நாம் உண்மை சொன்னாலும் பொய்யைச் சொன்னாலும் நமக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. இது சாதுர்யமாக சமாளிக்கணும் என்று முல்லா தீர்மானித்தார். முல்லா தீவிரமாக யோசித்தபடி இருந்தார். முல்லாவை சபையும், மன்னரும் கவனித்தனர். முல்லா மன்னரிடம், ‘ மன்னர் அவர்களே, தாங்கள் என்னை துõக்கில் போடப்போகிறீர்கள்’ என்றார். முல்லா அப்படி சொன்னதும் மன்னர் திகைப்படைந்தார். முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும். தலை வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும். முல்லா கூறியது பொய் என்று வைத்துக் கொண்டால் முல்லாவைத் துõக்கில் போட வேண்டும். துõக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால், அவரை துõக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னரை திக்குமுக்காட வைத்துவிட்டார். மன்னரால் எதுவும் தீர்ப்பு கூறமுடியவில்லை. சாதுர்யமாக பேசி, தனக்கு வந்த ஆபத்தை தன்னுடைய அறிவு ஆற்றலால் சமாளித்த முல்லாவைப் பாராட்டி, பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்து அனுப்பினார் மன்னர். ************* நீ.க.21 பகைவற்கும் அருளும் பண்பு ஜூன்22 திருக்கோவிலுõரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு. அந்நாட்டை மலையமான் காரி ஆண்டான். மக்களிடம் பாசமும் சிவனிடத்தில் பேரன்பும் சிவனடியார்களிடம் பெருமதிப்பும் கொண்டிருந்தான். இவனை வெல்ல எண்ணிய அரசர்களை எல்லாம் வென்றான். அண்டை நாட்டு மன்னன் முத்தநாதன் பெரும் படை கொண்டு தாக்கினான். ஆனால், படு தோல்வி அடைந்தான். மலையமானை வஞ்சனை செய்து வீழ்த்த, சூழ்ச்சி செய்து சிவனடியார் வேடம் கொண்டான். அரண்மனைக்குள் நுழைந்தான். அவன் கையில் ஒரு புத்தகக் கட்டும் அதனுள் ஒரு கத்தியும் மறைத்து வைத்துக் கொண்டான். அரண்மனைக்குள் சிவனடியார் எங்கும் எப்போதும் செல்லலாம் என்று ஆணை இருந்ததால் முத்தநாதன் தயக்கமின்றி உள்ளே நுழைந்தான். வாயிலில் நின்ற தத்தன் என்ற மெய்க்காப்பாளன் தடுத்தான். “அடிகளே, வணக்கம். எமது மன்னர் உறங்கும் நேரம். தயவு செய்து தாங்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு அதிகாலை வரலாமே? கூறிய தத்தனை கோபத்துடன் பார்த்தான் சிவனடியார் வேடதாரி முத்தநாதன். “யாருக்கும் கிட்டாத ஆகம நுõல் ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். தாமதிக்காமல் மன்னனை எழுப்பு” என்றபடியே உள்ளே நுழைந்தான் முத்தநாதன். சிவனடியார் நின்றிருப்பதைக் கண்டு வணங்கினான். “வரவேண்டும் சுவாமி, ஆசனத்தில் அமருங்கள்” என்று உபசரித்தான். எவருக்கும் கிட்டாத ஆகமநுõல் ஒன்று எமக்குக் கிட்டியது. அதை உனக்கு உபதேசிக்கவே வந்தேன் என்றவனிடம், நான் பெரும் பேறு பெற்றேன் என்றபடியே முத்தனாதனின் காலடியில் அமர்ந்தான் மன்னன். இமைக்கும் நேரத்தில் தன் புத்தகக் கட்டினுள் வைத்திருந்த குறுவாளை எடுத்து மன்னனின் உடலில் பாய்ச்சி விட்டான். அதே நேரம் உள்ளே பாய்ந்துவந்த தத்தன் தன் உடைவாளை ஓங்கி முத்தநாதனை வெட்டத் துணிந்தான். மன்னன் அவனைத் தடுத்து ‘தத்தா அவரைக் கொல்லாதே!’ “சிவனடியார் வேடம் தாங்கி வந்தாலும் அவர் நமக்கு அந்தச் சிவமே. அவரை பத்திரமாக நம் நாட்டு எல்லை வரை கொண்டு விட்டு வா. நீ வரும் வரை என் உயிர் பிரியாது.” என்று கட்டளையிட்டார். தத்தன், முத்தநாதனை அழைத்துச் சென்றான். ‘அரசே! முத்தநாதனை பத்திரமாக விட்டு வந்தேன்’ இச்சொற்களைக் கேட்ட மன்னன் மகிழ்ந்தான். “தத்தா! எனக்குப் பேருதவி செய்துள்ளாய். உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்” என்றவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அவன் உயிர் இறைவன் திருவடி நிழலை அடைந்தது. சிவனிடத்திலும் அடியார்களிடத்திலும் மலையமான் காரி கொண்ட பக்தியினால், அறுபத்து மூன்று நாயன்மார் வரிசையில் மெய்ப்பொருள் நாயனார் என்ற பெயர் கொண்டு சிறப்பிக்கப் பெற்றார். ************* நீ.க.22 வானத்தில் வீடு ஜூன்29 ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் பீர்பாலும் பேசிக்கொண்டு கொண்டிருந்தனர். அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு ஆசை. ”பீர்பால் எனக்கு வானத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா?” என்றார் அக்பர். பீர்பால் திடுக்கிட்டார். தயங்கியபடியே “செய்யலாம் மன்னா!” என்றார். “எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. சீக்கிரம் முடியுங்கள்” என்றார் அக்பர். மன்னரின் வானத்தில் வீடு கட்டும் ஆசை எப்படி சாத்தியமாகும்? இந்த ஆசை நிறைவேறாது என்பதை மன்னரே உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார் பீர்பால். “அரசே வானத்தில் வீடு கட்டுவதற்கு முன்னர் பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்றார் பீர்பால். “ ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நாளை காலை கஜானாவிலிருந்து அதற்கான பணம் வரும்” என்றார் மன்னர். உள்ளூர்க்காரர்களிடம் சில கிளிகளைக் கொண்டுவரச் சொன்னார். பிறகு, வானத்தில் வீடு கட்டும் பணிக்கு ஆட்களை திரட்டி வர வெளியூர் சென்றிருப்பதாகவும் மன்னருக்கு தகவல் சொல்லியனுப்பினார் பீர்பால். “அரசே! வானத்தில் வீடு கட்ட ஆட்களை தயார் செய்து விட்டேன். அவர்களை நீங்கள் வந்து பார்வையிட்டதும் வேலையைத் தொடங்கிவிடலாம்” என்றார் பீர்பால். உடனே கிளம்பினார் மன்னர். கிளிகள் இருந்த அறைக்கு அரசரை அழைத்துச் சென்றார் பீர்பால். அந்த அறையில் அரசரும் பீர்பாலும் மட்டுமே இருந்தனர். அரசரைப் பார்த்ததும் கிளிகள், “சுண்ணாம்பு கொண்டு வா! செங்கல்லை கொண்டு வா! சாரத்தைக் கட்டு! கல்லை இந்தப் பக்கம் போடு! சுண்ணாம்பைப் பூசு! என்று ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தது. அரசருக்கு கோபம் ஏற்பட்டது. “பீர்பால் என்ன இது?” என்றார். ”மன்னரே! என்னை மன்னிக்கணும். வானத்தில் வீடு கட்ட பறவைகளினால்தான் முடியும். ஆகையினால்தான் இவைகள் பேசுகின்றன. இவைகளெல்லாம் நல்ல பயிற்சி பெற்றவையாகும். வானத்தில் வீடு கட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்து விடலாம்” என்றார் பீர்பால். இப்படி பீர்பால் சொன்னதும் மன்னருக்குப் புரிந்துவிட்டது. வானத்தில் எப்படி வீடு கட்ட முடியும்? இது நடக்க முடியாத விஷயம் என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகின்றார் என்பதை புரிந்து கொண்டு புன்னகைத்தார் அக்பர். ******************** நீ.க-23 நன்றி! ஜூலை6 கண்ணன் செல்வந்தர் வீட்டுப்பையன். அன்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்தான். வரும் வழியில் ஒரு ஆறு குறுக்காக இருந்தது. தண்ணீர் அதிகமாக கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றில் இறங்கினான் கண்ணன். அவனுக்கு நீச்சல் தெரியாது. தண்ணீர் வேகத்தில் அவன் இழுக்கப்பட்டான். பயத்தில்... தண்ணீரில் மூழ்கி தத்தளித்தபடியே “காப்பாத்துங்க. காப்பாத்துங்க” என்று கத்தினான். அச்சமயம் அந்த வழியாக வந்த ஒருவர் ஆற்றில் ஒரு சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டார். சடசடவென்று ஆற்றுக்குள் இறங்கி, கண்ணனை நோக்கி நீந்தி சென்றார். ஒருவழியாக ஆற்றிலிருந்து கண்ணனை காப்பாற்றி கரை சேர்த்தார். சிறிது நேரம் மயக்கத்தில், அதிர்ச்சியில் இருந்த கண்ணன் கண் விழித்தான். எதிரே தன்னை காப்பாற்றியவர் நிற்பதைக் கண்டான். அவரை கைகூப்பி வணங்கினான். பிறகு, அவரிடம்,‘ நீச்சல் தெரியாததால் தண்ணீரில் சிக்கிக்கொண்டேன். நீங்கள் மட்டும் அந்த நேரம் வந்து என்னை காப்பாற்றியிருக்காவிட்டால், இப்போது நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். என்னைக் காப்பாற்றியதுக்கு நன்றிகள்.’ என்றான். இப்படி கண்ணன் சொன்னதும், அவர் , “எதற்காகப்பா நன்றி சொல்கிறாய்?” என்றார். “என்னைக் காப்பாற்றியதற்காகத்தான். எங்க அப்பா பெரிய செல்வந்தர். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள். அப்பாவிடம் சொல்லி நீங்கள் கேட்டதை வாங்கித் தருகிறேன்” என்றான் கண்ணன். “ தம்பி, நான் உன்னைக் காப்பாற்றினேன் என்பதெல்லாம் இருக்கட்டும். எனக்கு நீ எந்த சன்மானமும் கொடுக்க வேண்டாம். நீ பெரியவனானதும் - உனது வாழ்க்கையை நல்லவிதமாக வாழ்ந்துகாட்டுவதில் மட்டுமே நீ எனக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். நீ ஒழுக்கமானவனாக, பெரிய கல்விமானாக, உத்தமனாக வாழ்ந்து,கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்து, ஊரில் நல்லபெயர் எடுத்து வாழ்ந்து காட்டுவதுதான் நீ எனக்கு தரும் சன்மானம். நான் கேட்டதை உன்னால் செய்ய முடிந்தால் தான் உனது உயிரைக் காப்பாற்றியதிற்கு நன்றியாகும்’ என்றார். ‘நான் உன்னை நினைத்து வருந்தும் அளவுக்கு நடந்துகொள்ளச் செய்து விடாதே. ஒரு மோசமானவனைக் காப்பாற்றிவிட்டோமே என்று நான் வருந்தும் நிலைக்கு என்னை ஆளாக்காமல் ஒரு சிறந்தவனைக் காப்பாற்றினோம் - ஒரு தர்மவானைக் காப்பாற்றினோம் என்ற கவுரவத்தை எனக்குக் கொடு” என்றார். ******************** நீ.க.24 யார் உயர்ந்தவர்கள்? ஜூலை13 ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுலவாசம் முடிந்து ஊர் திரும்பினர். சீடன் அந்த நாட்டின்அரசன் கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அந்த மன்னனை போற்றிப் பாடினான். மகிழ்ச்சியடைந்த மன்னன் சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவையிலேயே வைத்துக் கொண்டான். இரண்டாவது சீடன் அன்னதானம் செய்யும் ஒரு சத்திரத்தில் சமையல் கலைஞனாக சேவை செய்து முன்னேறினான். மூன்றாவது சீடன் தனது கிராமத்தில் உள்ள சிறுவர்கள் காடுகளிலும் வரப்புகளிலும் கிடைத்த வேலைகளைச் செய்து கஷ்டப்படுவதைக் கண்டான். இவர்கள் கல்வியறிவு இல்லாததால் கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். அச் சிறுவர்களின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசினான். சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மரத்தடியில் அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான். அவனுடைய அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட அந்த மக்கள் அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே, தாமாக முன்வந்து உதவிகளைச் செய்தனர். அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, படிப்படியாக ஒரு கல்விச் சாலையை நிறுவினான். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூவரும் குருவைக் காண ஒருசேரக் கிளம்பிப் போனார்கள். தனது சீடர்களைக் கண்டதும், அவர் பெரிதும் மகிழ்ந்தார். அவர்கள் என்ன செய்கிறார்கள் கேட்டுத் தெரிந்துகொண்டார். சில நாட்கள் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது மற்ற இரண்டு சீடர்களைக் காட்டிலும் மூன்றாவது சீடனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்தார் குரு. இது மற்ற சீடர்கள் இருவரையும் மனம் நோகச் செய்தது. ஒருநாள் இருவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குரு புன்னகைத்தார். பின்னர் முதல் சீடனிடம் “நீ அரசவைப் புலவன்! சிறந்த இலக்கியங்களைப் படைக்கின்றாய். உனது படைப்பு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது நீயும் உயர்ந்தவன்தான்! அடுத்து, இரண்டாவது சீடனிடம் , “நீ சிறந்த நளபாகனாக இருக்கின்றாய். வயிற்றுக்கு உணவளித்தவன் தாய்க்கு ஒப்பானவன்! நீயும் உயர்ந்தவன்தான்! ஆனால், அறியாமையில் இருக்கும் ஒருவனுக்குக் கல்வி அளிப்பது என்பது பார்வையில்லாதவனுக்கு பார்வை அளிப்பது போல. கல்விக்கண் திறக்கப்பட்டவனுக்குத்தான் உலகின் மற்ற வளங்கள் அனைத்தும் கிடைக்கும்! அதனால் எழுத்தறிவித்தவன் இறைவனாகிறான்! அதனால்தான் உங்கள் இருவரையும்விட மூன்றாமவனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். ஒரு குருவாக நான் இதைச் செய்திருக்கக்கூடாதுதான்! என்னை மன்னித்துவிடுங்கள்” என்றார் குரு. “பொறாமை எங்கள் கண்களை மறைத்துவிட்டது. எங்கள் இருவர் சேவையைவிட கல்விசேவை உயர்வானது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். தாங்கள்தான் எங்களை மன்னிக்க வேண்டும்’ என்றனர் சீடர்கள் இருவரும். ********************* நீ.க.-25 எது அவமானம்? ஜூலை20 அசோகர் அரண்மனைக்குப் புறப்பட்டார். எதிரில் ஒரு துறவியும் அவரது சீடர்களும் வந்து கொண்டிருந்தனர். அசோகர் உடனே தமது ரதத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று துறவியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம். ‘உலகமே வியக்கும் ஒரு பேரரசன் இந்த பரதேசியின் காலில் விழுகிறாரே’ என்ற நினைத்து எரிச்சல் அடைந்தார். அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. ஒரு விசித்திர உத்தரவு விட்டார் அசோகர். “மந்திரியாரே ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர். திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார் அமைச்சர். ஆட்டுத் தலையை கறிக்கடையிலும், புலித்தலையை ஒரு வேட்டைக்காரனிமும், மனிதத் தலையை ஒரு சுடுகாட்டில் புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் இருந்தும் எடுத்துக்கு கொண்டு மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்தார் அசோகர். அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றார்கள். ஆட்டுத்தலையை எளிதில்விற்றனர். புலியின் தலையை வாங்கவில்லை.வேடிக்கைதான் பார்த்தார்கள். ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை வாங்கிக் கொண்டார். மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர். மன்னரிடம் விவரத்தைச் சொன்னார் அமைச்சர். “ சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்” என்றார் மன்னர். ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை. விஷயத்தைக் கேட்ட அசோகர், “மந்திரியாரே நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார். அமைச்சர் மவுனம் காத்தார். “மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? இலவசமாகக் கொடுத்தாலும் யாரும் வாங்காமல் அருவருத்து ஓடுகிறார்கள். செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவது அவமானம் இல்லை!” என்றார் அசோகர். அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்! *********** 27.7.2012 நீ.க-26 நன்றி மறவேல் ஜூலை27 அவர் ஒரு அப்பாவி விவசாயி. இரக்க குணம் கொண்டவர். எல்லோரிடமும் பிரியம் காட்டக்கூடியவர். துன்பப்படும் எவருக்கும் உதவ தயாராக இருப்பவர். யாராக இருந்தாலும், விளைவு பற்றி அக்கறையில்லாமல் உதவக் கூடியவர். ஒரு நாள் விவசாயம் பார்க்க வயல் வெளிக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் தற்செயலாக காயப்பட்ட ஓநாய் ஒன்றை, வேட்டையாடும் வேடர்கள் துரத்தி கொண்டு வருவதைக் கண்டார். அந்த ஓநாய் விவசாயி பக்கம் விரைந்தது வந்தது. அவரிடம் கெஞ்சியது. தன்னை வேடர்களிடம் இருந்து காப்பாற்றும்படி அழுதது. விவசாயி அந்த ஓநாய் மீது இரக்கம் கொண்டார். அதை காப்பாற்றுவதாக உறுதி தந்தார். உடனே தான் கொண்டு வந்து சாக்குப்பையில் ஓநாயை வைத்து மூடி மறைத்துகொண்டார். ஓநாயை துரத்தி வந்த வேடர்கள் விவசாயிடம் வந்தனர். அவர்கள் அவரிடம் ஒரு ஓநாயைக் கண்டீர்களா என விசாரித்தனர். விவசாயியும் வழமைக்கு மாறாக எதையும் காணவில்லை எனப் பொய் கூறினார். அதைக்கேட்டு, விவசாயி உண்மையாகத்தான் சொல்லி இருப்பார் என்று நம்பி அந்த இடத்திலிருந்து சென்றனர். சாக்குப் பையில் இருந்து அந்த ஓநாய் வெளியே வந்தது. வெளியே வந்ததும் அது தன்சுய புத்தியைக் காட்டியது. அது கூறியது, எனக்குப் பசிக்கிறது என்றும், விவசாயி மிக இரக்கம் உள்ளவராக இருப்பதால் அவரையே உணவாகத் தர வேண்டும் என்று கேட்டது. இதைக் கேட்டதும் விவசாயி பயந்து ஓடத் தொடங்கினார். அப்பொழுது, ஒரு வழிபோக்கர் அவ்வழியில் வந்தார். என்ன விஷயம் எனக் கேட்டார். விவசாயியும் ஓநாயும் தம் வாதங்களைக் கூறி, தமக்கு ஓர் தீர்ப்பையும் வழங்கக்கேட்டனர். வழிபோக்கர் நிலைமையைப் புரிந்து கொண்டார். “நீங்கள் இருவரும் சொல்வதை என்னால் நம்பமுடிய வில்லை. இந்த சாக்குப் பை மிகவும் சிறியது. எப்படி ஓநாய் இதற்குள் போயிருக்க முடியும்?இதை எனக்கு செய்து காட்ட முடியுமா?” என்றார். அந்த ஓநாய் மீண்டும் ஒரு முறை பைக்குள் சென்றது. அந்த வழிபோக்கர் பையை இறுக மூடினார். “நீங்கள் மிகவும் அப்பாவி. நீங்கள் துஷ்ட மிருகங்களிடம் இப்படி பரிவு காட்டக் கூடாது. அவற்றின் இயற்கையான தீயகுணத்தை ஒரு போதும் மாறாது”என வழிபோக்கர் கூறினார். பின்னர், அவர் ஒரு தடியால் அந்த ஓநாயை அடித்து கொன்றார். அதன் பிறகே அப்பாவி விவசாயி உண்மை நிலையை புரிந்து கொண்டார். ****************** நீ.க.-27 கெட்டிக்காரன் புளுகு 3.8.2012 ஒரு கிழட்டு நரி மிகுந்த பசியோடு வயல் வெளியில் திரிந்தது. அதன் பசிக்கு இரை கிடைக்க வில்லை. வயல் வெளிக்கு ஒதுக்கு புறத்தில் களத்து மேடு இருந்தது. களத்து மேட்டில் வைக்கோல் போர்கள் இருந்தன. களத்து மேட்டை நோக்கி நரி சென்றது. வைக்கோல் போர் மேல் ஒரு ஆட்டுக்குட்டி துள்ளி துள்ளி விளையாடிக் கொண்டிந்தது. இதைக் கண்ட நரி வைக்கோல் பக்கம் வந்தது. தன் கோரப் பசிக்கு ஆட்டுக்குட்டியை அடித்து சாப்பிட திட்டம் போட்டது. இதற்காக ஒரு தந்திரம் செய்தது. வைக்கோல் போர் மேலே இருக்கும் ஆட்டுக் குட்டியைப் பார்த்து, “சகோதரனே!, நலமா? எப்படி இருக்கிறாய்? ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பூமியில் வாழும் எல்லா மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. ஒருத்தரை ஒருத்தர் அடித்து கொல்லக்கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் இறங்கி வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி நிறைய பேசலாம்” என்றது நரி. அந்த ஆட்டுக் குட்டி மிக புத்திசாலி. நரியின் தந்திரப் பேச்சைப் புரிந்து கொண்டது. இப்போது நரியை பயமுறுத்த யோசித்தது ஆட்டுக்குட்டி. சில நிமிடங்களில் துõரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் துõக்கிப் பார்த்தது. “ என்ன சகோதரா! எதையோ பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது?” நரி கேட்டது. “ துõரத்தில் சில வேட்டை ஓநாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. அதுதானா என்பதைக் கவனிக்கிறேன்” என்றது ஆட்டுக்குட்டி. நரிக்கு உடல் நடுங்கியது. “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது. “ நரி அண்ணே போகாதே. இதோ கீழே வருகிறேன். ஓநாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? நீதானே சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்றாயே!” ஆட்டுக்குட்டி கேட்டது. “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அந்த ஓநாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்” என்ற நரி ஓட்டம் எடுத்தது. “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது” என்று சிரித்தது ஆட்டுக்குட்டி. நீதி: கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும். **************** நீ.க.28 செய்நன்றி மறவாதே! ஒரு மீனவர் கடலோரத்தில் வாழ்ந்து வந்தார். முதுமை காரணமாக அவரால் கடலுக்குள் போய் மீன் பிடிக்கமுடியவில்லை. ஒரு நாள் அவர் கடலோரத்தில் பசியோடு நின்று கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான ஒரு பறவை வந்தது. அது பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தது. அது ஒரு தேவலோகப் பறவை. ‘ பாவம் நீ! முதுமையால் கஷ்டப்படுகிறாய். நான் தினமும் உனக்கு ஒரு மீன் தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்‘ என்று கூறி விட்டு பறந்து விட்டது தேவலோகப் பறவை. அன்று முதல் தினமும் ஒரு பெரிய மீனை முதியவர் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அந்த மீன் சந்தையில் நல்ல விலைக்குப் போனது. ஒவ்வொரு நாளும் அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். தேவலோக பறவை ஒன்று இந்தப் பகுதியில் பறப்பதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் அந்தப் பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள். ‘அரசனுக்கு தேவலோப் பறவை ஏன் தேவை?’ மீனவர் தண்டோராவிடம் கேட்டார். ‘அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் அந்தப் பறவையின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும். ஆமாம் உனக்கு அந்தப் பறவை பற்றி தெரியுமா?’ என்று கேட்டான் தண்டோரகாரன். அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசையில் ஏதோதோ உளறினான். தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனை அரசன் முன்னால் நிறுத்தினார்கள். பயந்து போன மீனவன், ‘அது பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது’ என்று கூறினான். அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள். அன்று வழக்கம் போல தேவலோகப் பறவை வந்தது. மீனவர் ‘ தேவலோகப் பறவையே, கொஞ்சம் உள்ளே வாயேன். உனக்கு பிடித்த ஒரு உணவு வைத்திருக்கிறேன்.’ என்று கூறினான். பறவை நம்பி உள்ளே வந்தது. ஓடிப் போய் அதன் காலைபிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான். சுதாரித்துக் கொண்ட தேவலோகப்பறவை காலைப் பிடித்துக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை. ஒரு மலை முகட்டில் நன்றிகெட்ட அந்த மீனவனை போட்டு விட்டு பறந்தது அந்தப் பறவை! ( தினமலர்- சிறுவர் மலரில் நான் எழுதி வரும் நீதிக்கதைகளின் பாகம் மூன்று)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக