புதன், 1 ஆகஸ்ட், 2012

யாமிருக்க பயம் ஏன்?/38 - தேவராஜன் (தினமலர் வாரமலர்)

யாமிருக்க பயம் ஏன்?/38 - தேவராஜன் (தினமலர் வாரமலர்) ஓர் எதிரி உங்களைத் துரத்திக்கொண்டு வருகிறான். அவனிடமிருந்து நீங்கள் தப்பிக்க அவனை விட வேகமாக ஓடுகிறீர்கள். அந்த எதிரி உங்களைவிட பலசாலி. உங்களைவிட மிக வேகமாக ஓடி வருகிறான். அவன் ஈவிரக்கமற்றவன். பாவம், புண்ணியம் பார்க்க மாட்டான். கெஞ்சிக் கேட்டாலும் விட மாட்டான் என்பது உங்களுக்குத் தெரியும். ஏற்கெனவே அவன் உங்கள் உறவினர்கள், நண்பர்களில் சிலரை படாதபாடுபடுத்தி இருக்கிறான். தொல்லை கொடுத்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இந்த சூழ்நிலையில் அவனிடமிருந்து தப்பிக்க நீங்கள் முயன்றாலும் அவன் உங்களை மிகவும் நெருங்கி விட்டான். உங்களை அப்படியே கொத்தாக பிடித்து தலைக்கு மேலே துõக்கப் போகிறான். இனி அவ்வளவுதான் என்பது போல நடுநடுங்கி திகைத்து நிற்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்கள் முன் ஒருபலசாலி நிற்கிறார். அவர் உங்களைத் துரத்தி வந்தவனைவிட மிகப்பெரிய பலசாலி. அவர், வாஞ்சையோடு உங்களைப் பார்த்து, ‘பயப்படாதே! யாம் இருக்க பயம் ஏன்? உன்னைக் காப்பாற்றுகிறேன்!’ என்று சொல்கிறார். அந்த நிலையில், அவர் கூறியதைக் கேட்டதும் எப்படி இருக்கும்? அப்பாடா! என்று கை எடுத்து கும்பிடுபோடுவீர்கள்! நிம்மதி அடைவீர்கள்! எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒருநிலையில் ஓர் எதிரி துரத்திக்கொண்டு இருக்கிறான். நம் எல்லாரையுமே துரத்திக்கொண்டு வருகிறான். ஆனால், அந்த எதிரியைவிட பல மடங்கு பலசாலியாய் இருக்கிறார். நம்மைக் காப்பாற்ற வந்திருப்பவர். அவர் அன்பானவர். நமக்கு பிரியமானவர். நாம் அவரை நேசிக்காவிட்டாலும் நமக்கு கருணையோடு உதவக்கூடியவர். நம்மை துரத்தும் எதிரியைத் தம்மால் வீழ்த்த முடியுமென்பதை அவர் பலமுறை பலரிடம் காண்பித்திருக்கிறார். அந்த பலசாலி வீரர் யார் தெரியுமா? அவர் தான் இறைவன்! நம்மை துரத்தும் அந்த எதிரிகள் யார் தெரியுமா? நம் வாழ்வில் நிகழும் துன்பம், துயரம், கஷ்டம் போன்ற துயரத்தொல்லைகள்தான். அந்த எதிரியிடம் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமானால் இறைவனிடம் நாம் சரணடையவேண்டும். நாம் இறைவன் மீது அன்பும், பக்தியும் வைத்துவிட்டால் போதும். அவன் நமக்கு ஏற்படும் இன்னல்களை எல்லாம் துடைத்துவிடுவான். அவன் அருள் நம்மீது பட்டால் நமக்கு ஏற்பட்ட மலைப்போல துயரம் எல்லாம் பனிப்போல விலகிவிடும். தன் முன் யாசிப்பவர்கள் எல்லாருக்கும் மனமகிழ்ந்து கேட்டதை கொடுக்க தயாராக இருக்கிறான் இறைவன். நாமோ இறைவனிடத்தில் கோடைக்காலத்தில் கம்பளியும் குளிர்க்காலத்தில் ஐஸ்கிரீமும் கேட்டு கையேந்தி கொண்டிருக்கிறோம்! - தேவராஜன். **************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக