புதன், 1 ஆகஸ்ட், 2012

யார் பெரியவர்?/39/ 17-/6/2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்)

யார் பெரியவர்?/39/ 17-/6/2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்) அவ்வையாருக்கு புலமை கர்வம் இருந்தது. அதை உணர்த்த முருகன் நடத்திய திருவிளையாடல் இது. அவ்வை சோர்ந்து ஒருமர நிழலில் அமர்ந்தார். மரத்தின் மேலே ஆடுமேய்க்கும் சிறுவன், “பாட்டி, சோர்வு நீக்க பழம் சாப்பிடுகிறீர்களா?” என்றான். “சரி” என்றார் அவ்வை. “பாட்டி, சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?” குறும்பாக கேட்டான் அவன். அவ்வை குழம்பினார். இருப்பினும் சுடும், சுடாத பழம் பற்றி இவனிடம் போய் சந்தேகம் கேட்டால் நம் புலமைக்கு இழுக்கு என்று கருதி, அவன் பறித்து போடட்டும் என்றிருந்தார். சிறுவன் பழுத்தப் பழத்தை பறித்துப்போட்டான். கீழே விழுந்த பழத்தில் மண் ஒற்றிக்கொள்ள, அதை அவ்வை ஊதினார். “பாட்டி ரொம்பவும் பழம் சூடாக இருக்கிறதா? இப்படி ஊதுகிறீர்களே” என்று நகைத்தான். அவ்வைக்கு புலமை கர்வம் அந்த கணமே ஒழிந்தது. அப்பா, முருகா என் கர்வம் ஒழிந்தது என்று கூவினார் அவ்வை. சிறுவனாக இருந்தவன் முருகனாக தோன்றி, ‘அவ்வையே, உங்களுக்கு இருக்கும் அறிவே பெரிதென நினைத்ததை திருத்த செய்த சிறு குறும்பு இது’ என்றவன் ‘இந்த உலகத்தில் தான்தான் பெரியவன் என்று பலர் அகந்தையில் இருக்கின்றனர். உண்மையில் உலகில் பெரியவர்கள் என்பவர்கள் இறைவனை வணங்கி, இறைவனையே நினைத்துக்கொண்டிருப்பவர்களே! இது பற்றி ஒரு பாட்டு பாடு’ என்று கேட்டார் முருகன். அவ்வை பாடினார். அந்தப்பாட்டின் கருத்து இது: ‘உலகில் மிகப்பெரியது இந்த உலகம் தான். இந்த உலகமோ பிரம்மாவால் படைக்கப்பட்டது. அப்படி என்றால் பிரம்மாதான் பெரியவர். பிரம்மாவோ திருமாலின் தொப்புள் குழியில் தோன்றியவர். எனவே திருமால் தான் பெரியவர். திருமால் பெரியவர் என்றால் அவரைத் தாங்கும் கடல் தான் பெரிது. கடல்தான் பெரிது என்றால் அந்தக்கடலும் அகத்தியரின் உள்ளங்கையில் அடங்கியது. அகத்தியர் தான் பெரியவர் என்றால் அந்த அகத்தியரும் சிறு மண்குடத்தில் அடங்கியவர். மண்குடமோ இந்த பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. எனவே பூமிதான் பெரியது என்றால் இந்த பூமியை ஆதிசேடன் என்ற பாம்பு தலையில் தாங்கி இருக்கிறது. பூமியைத்தாங்கும் ஆதிசேடன் பெரியவன் என்றால் அந்தப் பாம்பை உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். உமையவள்தான் பெரியவள் என்றால் அவளோ சிவனது உடலில் ஒருபாதியாய் ஒடுங்கி இருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன். அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கி இருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகத்தில் பெரியது.’ - தேவராஜன். ****************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக