புதன், 1 ஆகஸ்ட், 2012

நம்பிக்கைத்தான் நம்மை காப்பாற்றும்! /46/ 22.7.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்

நம்பிக்கைத்தான் நம்மை காப்பாற்றும்! /46/ 22.7.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) அறியாத ஒன்றினிடம் மனம் பற்று வைப்பதே நம்பிக்கை. நம்பிக்கைத்தான் வாழ்க்கை. நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தருவதுதான் நம்பிக்கை. நம்பிக்கை ஒருவனுக்கு ஆற்றலை, ஆறுதலை, அற்புதங்களை தருகிறது. கோழையை வீரனாக்கும். பலமற்றவனை பயில்வானாக்கும். நம்பிக்கை இல்லை என்றால் ஒரு மாவீரனைக்கூட தோல்வி அடைய செய்துவிடும். மனிதனின் ஒப்பற்ற மனஆயுதம் தான் நம்பிக்கை. நாம் இறைவனிடம் கொள்ளும் அசைக்கமுடியாத நம்பிக்கை பல தடைகலை வெல்லும். துன்பத்தை அகற்றும். அமைதியை தரும். இடைவிடாத நம்பிக்கை இறுதியில் நம்மை இறைவனிடம் இணைக்கும். நம்பிக்கையே இறைவனைக்காட்டித்தரும். நம்பிக்கை இழந்தால் எல்லாமே இழக்கப்படும். நமது பிறவிக் கடமை இறைவனை நம்புவதே. நம்பிய இறைவனை மறவாமல் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதுதான். நம் நம்பிக்கை, பிரார்த்தனை இறைவனுக்கு கேட்கிறதா, இல்லையா என்பதைப் பற்றிய கவலை, சந்தேகம் எல்லாம் படக்கூடாது. எண்ணற்ற சோதனைகள் அலைக்கழித்த போதிலும்,தாங்கமுடியாத சோகமோ, இழப்போ எது நிகழ்ந்தாலும் பிரார்த்தனையை விடாது செய்ய வேண்டும். பிரகலாதன் அவனது தந்தை ஹிரண்யகசிபுவால் பல வகையிலும் துன்புறுத்தப்பட்டான். ஒரு மலையின் உச்சியிலிருந்து கீழே உருட்டிவிடப்பட்டான். பட்டத்து யானையை ஏவி, அதன் காலால் மிதிப்பட தண்டனை பெற்றான். கடலில் துõக்கி எறியப்பட்டான். கொதிக்கும் எண்ணைக்கொப்பரையில் போடப்பட்டான். கொடிய விஷப்பாம்புகள் அவன் மீது போடப்பட்டன. இத்தனை துன்பங்களுக்கும் இடையிலும் அவன் இறைவன் நாராயணன் மீது உள்ள பக்தியை, நம்பிக்கையை இழக்க வில்லை. முழு நம்பிக்கையோடு ஹரியை பிரகலாதன் உறுதியாகப் பிடித்துக்கொண்டான். அவனின் உறுதியான, அசையாத நம்பிக்கைதான் அவனுக்கு நேர்ந்த அத்தனை ஆபத்துகளும், துன்பங்களும் ஹரியால் துடைக்கப்பட்டது. பக்தர்களுக்கு இறைவன் மீது அத்தகைய நம்பிக்கை வேண்டும். இறைவன் உங்களை பலவகையிலும் சோதனை செய்வார். மிகுந்த சோதனை, துன்பங்கள் ஏற்பட்டகாலங்களிலும், நீங்கள் இறைவன் மீதுள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது. கல்லைக்கட்டிக் கடலில் போட்டாலும், சாம்பலாய் கருகிட வைக்கும் செங்கல் சூளையில் அடைத்தாலும் நற்றுணையாவது நாதம் நாமம் நமச்சிவாயமே! என்று நாவுக்கரசரை சொல்ல வைத்தது இறை நம்பிக்கைதான்! பிரகலாதனைப்போல், துருவனைப்போல், நாவுக்கரசரைப்போல் நீங்களும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்து வாருங்கள். அந்த இறை நம்பிக்கையே இறவாப்பெருநிலையை பெறவைக்கும்! - தேவராஜன். **********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக