புதன், 1 ஆகஸ்ட், 2012

பணத்தை புண்ணியமாக்கலாம்! /42/ 24.6.2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்)

பணத்தை புண்ணியமாக்கலாம்! /42/ 24.6.2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்) இந்த உலகில் செல்வம் இல்லாதவரை யாரும் மதிக்கமாட்டார்கள். எனவே செல்வத்தை ஈட்டவேண்டும். உலகில் சுகமாக வாழ்வதற்கு நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பது பாவம் அல்ல. சேர்த்த பணத்தில் வீடு, மனை, தோப்பு, பொன், பொருள், வாகனம் வாங்கி வைத்து கொள்வதும் தவறல்ல. இப்படி தேடியவை எல்லாம் நாம் வாழும் வரை பயன்படும். மகிழ்ச்சியை தரும். வாழும் போது ஒருவர் நிறைய சொத்து சேர்த்திருந்தால் எல்லாராலும் போற்றப்படுகிறார். அவரிடம் வேறு எந்தத் தகுதியும் இல்லை என்றாலும் அவரை புகழ்கிறார்கள். இது செல்வம்படுத்தும் பாடு! வாழும் போது மகிழ்ச்சியையும், கவுரவத்தையும், புகழையும் தரும் செல்வம், தேடியவர் இறந்துவிட்டால் அவர் தேடிய செல்வம் அவர் கூடவே வருவதில்லை. ஒருவர் தேடிய செல்வம் அவர் வாழும்போதும், இறந்த பிறகும் பயன்படவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு சுலபமான வழி இருக்கிறது. வாழும் போதே தேடிய செல்வத்தை தானும் அனுபவித்துக்கொண்டு, பிறருக்கும் தான, தர்மம் செய்து, பொது காரியங்களுக்கு, ஆதரவற்றோருக்கு உதவி, ஏழைகளின் கல்விக்கு கொடுத்து, கோயில் பணிகளுக்கு வாரி தந்து செல்வத்தை புண்ணியமாக சேர்த்து கொள்ள வேண்டும். தேடிய செல்வத்தை புண்ணியமாக மாற்றிக்கொண்டால் அது இவ்வுலக வாழ்க்கைக்குப்பிறகும் உதவும். இது பட்டினத்தாருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் ‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடைக்கே’ என்று கூறி, சம்பாதித்த பொன்னையும் பொருளையும் வாரி கொடுத்து விட்டு கடவுளின் கருணை எனும் பெருஞ்செல்வத்தைத் தேடி சென்றுவிட்டார். செல்வம் பயன்படும் தன்மையைப் பற்றி நீதிநெறி விளக்கப்பாடல் பாடல் ஒன்றில் குமரகுருபரர் மூவகைப் பெண்களை உவமையாகக் காட்டியுள்ளார். விலைமகள் என்பவள் எல்லாருக்கும் பொதுவானவளாக இருக்கின்றாள். குலமகள் அவள் அவளது கணவனுக்கு மட்டுமே உரியவள். கணவனை இழந்தவள் யாருக்கும் உரியவள் அல்லள். விலைமகள் எல்லாருக்கும் பொதுவானவளாக வாழ்வது போல் சிறந்தவர்களிடம் இருக்கும் செல்வம் எல்லோருக்கும் பயன்படும். குலமகள் கணவனுக்கு மட்டும் உரியவளாக வாழ்வதுபோல் செல்வம் அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் பயன்படும். கணவனை இழந்தவள் போல் செல்வமும் யாருக்கும் பயன்படுவது இல்லை என்கிறார். விலைமகள் பண்பில் இழிந்தவள் என்றாலும் அவளது பொதுத் தன்மையைக் கருதி, சிறந்தவர்களின் செல்வம் பொதுவாக எல்லாருக்கும் பயன்படும் நிலைக்கு அதனை உவமைப்படுத்தியுள்ளார் குமரகுருபரர். - தேவராஜன். *******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக