புதன், 1 ஆகஸ்ட், 2012

எல்லாருக்குமான முதல் கடமை! /43/ 1/7/2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்)

எல்லாருக்குமான முதல் கடமை! /43/ 1/7/2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்) எல்லாரும் சுகப்பட, நம் மீது இறைவன் பிரியப்பட பின்பற்ற வேண்டிய ஒன்று சுதர்மம். இது பற்றி கீதையில் கண்ணன் விரிவாக அர்ஜூனனுக்கு எடுத்துரைக்கிறான். சுதர்மம் என்பது விரிவான அர்த்தங்களைக் கொண்ட நுணுக்கமான சொல். எளிமையாக சொல்வது என்றால் எல்லாருக்கும் இயல்பாக இருக்க வேண்டிய கடமை உணர்வு. நாம் பிறக்கும் போதே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளும் கூடவே பிறந்து விடுகின்றன. எந்த பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தோமோ அவர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும், உறவு, நண்பர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்று சில உண்டு. அவற்றை நாம் செய்துதான் ஆக வேண்டும். இதற்கு விதி விலக்கு எல்லாம் கிடையாது. எந்த சமூகத்தில், நாட்டில் நாம் பிறக்கிறோமோ அதற்கு செய்ய வேண்டிய சேவைகள் எல்லாம் சுதர்மத்தின் செயல்களாக இருக்கின்றன. வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும், வந்து சேரும் ஒவ்வொரு பொறுப்பிலும் சில தார்மீகக் கடமைகள் ஒரு மனிதனுக்கு வந்து சேர்கின்றன. அந்தக் கடமைகளை நிறைவாக செய்ய வேண்டும். அதை செய்யா விட்டால் அந்த மனிதன் எத்தனை புண்ணியம் செய்தாலும் சுதர்மம் தவறியவனாகிறான். சிலர் தங்கள் வீட்டில் ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவ மாட்டார்கள். பெற்றோரை கவனிக்க மாட்டார்கள். சகோதர, சகோதரிகளை மதிக்க மாட்டார்கள். உதவமாட்டார்கள். சொந்த பந்தங்கள், நட்புகளை உதாசீனம் செய்வார்கள். உதவி என்று கேட்டால் விரட்டுவார்கள். ஆனால் யாருக்கோ பேருக்காக, புகழுக்காக ஓடாக உழைப்பார்கள். வாரி வாரி பொருளைக் கொட்டுவார்கள். அவர்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். பரோபகாரிகள் என்று புகழ்வார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் சுதர்மத்தை அனுசரித்தவர்கள் அல்ல. இவர்களால் பிறவிப் பயனை அடைய இயலாது. ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட சுதர்மத்தை நிறைவேற்றாமல், கோயில் உண்டியலில் பொன்னையும் பணத்தையும் அள்ளி அள்ளி போட்டாலும் இறைவன் அது கண்டு மகிழமாட்டார். ‘நன்றி மறவேல்’, ’நன்மை கடைபிடி’. ’ஐயம் புகினும் செய்வன செய்’ - பிச்சையெடுத்து வாழும் வறுமை நிலையில் ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய நல்ல செயல்களை இயன்ற அளவு செய் என்கிறார் அவ்வை. தனக்கு விதிக்கப்பட்ட சுதர்மத்தை முழுமையாக செய்து முடித்து, பிறகு இறைதொண்டு செய்பவர்கள் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் அவர்களை நோக்கி நுõறு அடி எடுத்து வந்து வாரி அணைத்துகொள்வார். - தேவராஜன். *********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக