புதன், 1 ஆகஸ்ட், 2012

நல்லதோர் வீணை செய்வோம்!/ 45/15.7.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்)

நல்லதோர் வீணை செய்வோம்!/ 45/15.7.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) புராதன எகிப்தில் வாழ்ந்த மக்களிடம் இருந்த மரணம் பற்றிய நம்பிக்கை இது. அவர்களில் யாராவது மரணித்துவிட்டால், அவர்கள் சுவர்க்கத்தின் நுழைவு வாயிலில் வைத்து இரண்டு கேள்விகள் கேட்கப்படுவார்கள். அந்த இரண்டு கேள்விக்கும் ஆம் என்ற விடை சொன்னால் மட்டுமே அவர்கள் சுவர்க்கத்திற்கு நுழைய முடியுமாம். “நீ உனது வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டு கொண்டாயா? “உனது வாழ்க்கை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு சேர்த்திருக்கிறதா? என்பவையே அந்த இரண்டு கேள்வி. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல நம் வாழ்க்கையில் தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தருகின்ற விஷயங்களை ஆசைகளாக்கிக் கொள்ள வேண்டும். ஆசை, துன்பம் தரும் என்பதற்காக ஆசை படாமல் இருப்பது ஒரு நிலை. ஆசைப்படுவதற்காகவே வாழ்க்கை என்று ஆசையிலேயே மிதப்பது எதிர் நிலை. இந்த இரண்டு நிலைகளுமே நமக்குத் தேவையில்லை. நாம் எப்போதும் நடுவில் இருப்போம். பிறக்கும் போதே கூடவே ஆசைகளும் பிறந்துவிடுகிறதோ என்னவோ? மனசு என்று ஒன்று இருந்து விட்டால் அதற்கு ஆயிரமாயிரம் ஆசைகள் என்ற பசி ஏற்பட்டு, அந்தப் பசியை தணிக்க, எரியும் தீயில் நெய் ஊற்றி அணைப்பது போல் மேலும் மேலும் ஆசைப்பட்டு அதற்கு வலுசேர்க்க கோபம், பொய், பொறாமை, அழுகை, பயம் எல்லாமும் படை எடுத்து வந்து விடுகின்றன. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், சந்தோஷம் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே அத்தனை அத்தனை ஆசைகள் என்றாலும், இதனால் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி நிலையாகவா இருக்கிறது? ஒவ்வொரு ஆசையும் அதனால் வரும் சந்தோஷமும் கூடவே கையோடு ஒரு துக்கத்தையும் அழைத்துக் கொண்டு வருகிறது! கண்ணைக் கவர்ந்திழுக்கும் ஆயிரம் பொருட்கள் மீது ஆசை வைப்பதை விட, மனசுக்குப் பிடித்த ஒரு பொருள் மீது ஆசைப்பட்டு வாங்கினால் அது ஒரு நிறைவை தரும். திருப்தியை ஏற்படுத்தும். கண் கண்டவைகள் மீது ஆசை வைப்பது, வாழ்க்கையை விபரீதமாக்கும். தேவை குறைந்து, ஆசையும் குறைந்தால் வாழ்நாள் முழுவதும் அமைதி வரும். எல்லோரும் சந்தோஷம் பெற வாழ்க்கை எனும் ஒரு வீணையை இறைவன் கொடுத்திருக்கிறான். அந்த வீணையின் நரம்புகளை அளவாக முறுக்கேறினால் அதில் இருந்து நல்ல இசை பிறக்கும். அதிகமாக முறுக்கினால் நரம்பு அறுந்துவிடும். இசையும் பிறக்காது. அதற்காக முறுக்கேற்றாமல் விட்டால் நரம்புகள் தளர்ந்து வீணையிலிருந்து இனிய இசையை தராது. நல்ல இசை வீணையில் வருவதற்கு அதன் நரம்புகள் அதிகம் தளராமலும், அதிகம் முறுக்கேறாமலும் இருப்பது நல்லது. ஆதலால் நல்லதோர் வீணை செய்து நலம்பட வாழ்வோம்! - தேவராஜன். ********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக