புதன், 1 ஆகஸ்ட், 2012

எல்லாம் இன்ப மயம்!/44/ 8.7.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்

எல்லாம் இன்ப மயம்!/44/ 8.7.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) இந்த உலகத்தில் இருக்கும் எந்தப்பொருளும் அதுவாகவே ஆனந்தத்தைத் தருவதில்லை. அப்படி கொடுத்தாலும் அது நிரந்தரமில்லை! நாம் அதை அந்த சமயத்தில் பூர்ணஆனந்தம் கொடுப்பதாக நினைத்துகொள்கிறோம். நண்பர் ஒருவர் காஷ்மீர் டூர் சென்று திரும்புகிறார். மிக தரமான, விலை அதிகம் உள்ள ஒரு சால்வை நமக்கு தருகிறார். அப்போது மார்கழி மாதம். நண்பர் கொடுத்த சால்வை குளிருக்கு இதமாக இருக்கிறது. அது ஆனந்தம் என்று மனம் குதுõகலிக்கிறது. ஆனால், அதே சால்வை மே மாதத்தில் மேலே பட்டாலே வெறுப்பாக துõக்கி வீசிவிடுகிறோம். சால்வை ஆனந்தத்தை தருகிறது என்றால் அது எப்போதும் கொடுத்துக்கொண்டுதானே இருக்க வேண்டும்? கோடையில் அது ஆனந்தம் கொடுப்பதில்லை. அப்படி என்றால் சால்வை நிரந்தரமாக ஆனந்தத்தைக்கொடுப்பதில்லை. இது போலதான், பொன், பொருள், வீடு,வாகனம், செல்வம் எல்லாம்... உண்மையான ஆனந்தம் வெளிப்பொருட்களில் இல்லை. ஆதலால், ஆனந்தத்தை ஒரு பொருளிலோ, வெளியிலோ தேடி, தேடிப் பார்த்தாலும் அது ஒருபோதும் கிடைக்காது. அப்படி என்றால் ஆனந்தம் என்று ஒன்று இல்லை என்று கருதிவிடவேண்டாம். ஆனந்தம் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் பனி கட்டிபோல் உறைந்துபோய் கிடக்கிறது. அதை உருக செய்தால் போதும். இறைவன் ஆனந்த மயமானவன். அவனிடமிருந்து வந்த நாமும் நம்மை போல உள்ள உயிர்களும் ஆனந்த மயமானவைதான். சர்க்கரையில் செய்த தின்பண்டங்களில் எல்லாம் இனிப்பு சுவை கலந்து இருப்பது போல இறைவனிடம் இருந்து உருவான உயிர்களுக்குள்ளும் ஆனந்தம் நிரம்பி உள்ளது. இதை அறிய விடாமல் தடுப்பது அகங்காரம். சுயநலம். ஆசைகள். வெளிப்பொருள்கள் மீது ஆசை, பற்று வைப்பதை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்து, இறைவன்தான் முழுமையான ஆனந்தம். அவனை நினைப்பதும், வணங்குவதும்,அவனை அறிவதும், அவனே மாறாத துணை என்று நம்பி இருந்தால் உங்களுக்குள் ஆனந்தம் மலரும். யார் ஒருவர் இந்த உலகில் உள்ள அனைத்திலும் , உயிர்கள் அனைத்திலும் இறைவனை காண்கிறானோ அல்லது நினைக்கிறானோ அவனுக்குள் ஆனந்தம் பொங்கும். அவன் இருக்கும் இடம் தெய்வீக ஒளி படரும். சொர்க்கமாகும். அமைதி பரவி ஆனந்தம் பெருகும். நீங்கள் காண்பவர்களில் உங்களை எதிர்ப்பவர், வெறுப்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும்,அவர்களுக்கும் ஆனந்தம் பெருகட்டும் என்று வாழ்த்துங்கள்! ஆனந்தம் உங்களுக்குள் மலரஆரம்பிக்கும். அதன் இன்ப மணம் உலகம் எங்கும் வீசி எல்லாரையும் எல்லாத்தையும் சுகப்படுத்தும். - தேவராஜன். ********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக