புதன், 1 ஆகஸ்ட், 2012

மனித வாழ்க்கையின் அர்த்தம்!/40/ 10/6/2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்)

மனித வாழ்க்கையின் அர்த்தம்!/40/ 10/6/2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்) உலகின் இயக்கத்தில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. சூரியன் உதிப்பதிலிருந்து, நதிகள் ஓடுவதிலிருந்து, காற்று வீசுவதிலிருந்து, காலங்கள் மாறுவதிலிருந்து, இரவு பகல் வந்து போவதிலிருந்து எல்லா செயல்களிலும் ஓர் ஒழுங்கு இருக்கிறது. எல்லாம் முறைப்படி நடந்து வருகின்றன. இறைவனின் கிரியா சக்திதான் இந்த ஒழுக்கத்தைத் தந்திருக்கிறது. இயற்கையின் இயக்கத்தில் ஓர் ஒழுக்கம், நியதி, கட்டுப்பாடு தெரிகிறது. இயற்கைக்கே ஓர் ஒழுக்கம் இருக்கிறது என்றால் நம் வாழ்விலும் ஒழுக்கம், கட்டுப்பாடு வேண்டாமா? இந்த உலகில் உயிருடன் காலத்தைக் கழிப்பதற்குப் பெயர் வாழ்வு என்று பொருள் அல்ல. நம் துன்பங்ளை விலக்கிக் கொண்டு இன்புற்று வாழ்தல். அது போல் மற்றவருக்கு நேரும் துன்பங்களை விலக்கி நம்மைப் போல் அவர்களும் இன்புற்று வாழ உதவி செய்து மகிழ்வதே வாழ்க்கையின் முதல் கடமை. அடுத்து, நம்மை படைத்த இறைவனை அறிய, முயற்ச்சியில் ஈடுபடுதல், அதற்காக வழிபாடு உள்ளிட்ட பக்தி காரியங்களில் ஈடுபடுவதும், தன் குடும்பத்தாரையும் இறையருள் பெற தயார்படுத்துதலும் தான் முழுமையான வாழ்கை. குடும்பம் நாம் வாழும்வரை நம்முடைய தேவைகளை நிறைவேற்றியும், நம்மைச் சார்ந்துள்ள மனைவி, பிள்ளைகள், தாய், தந்தையர், உடன் பிறந்தார், உறவினர்கள், ஆதரவுமில்லாத அன்னியர்களுக்கு ஆதரவு தந்து நம்மைப் போல் அவர்களது தேவைகளையும் நிறைவேற்றி, சந்தோஷமடைய உருவாக்கப்பட்ட அமைப்பு தான் குடும்பம். திருமணம் ஆணோ பெண்ணோ தனியாக கடமையை சிறப்பாகச் செய்ய இயலாது. அறம் செய்து இன்பத்தை பெற இரு கைகள் இணைய வேண்டும் என்பதை உணர்த்துவதுதான் திருமணம். பிள்ளைப் பேறு கணவன், மனைவி செய்துவந்த வழிபாடு, சேவைகள், தான தர்மங்கள் அவர்களுக்கு வயதான பிறகும் தொடர்ந்து நடைபெறவேண்டும். நாம் விட்டுச் செல்கின்ற குடும்ப பாரம்பரிய கடமைகளை, அறப்பணிகளை செய்து வரவேண்டும் என்பதற்காகப் பிள்ளைகளைப் பெறுகின்றோம். நாம் தேடிய சொத்துகளை அனுபவிப்பதற்காக அல்ல. நம் லட்சியங்களுக்கு வாரிசாக பிள்ளைகளைப்பெறுகின்றோம் என்று பொருள். மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமுண்டு. நாம் யாருக்காவது பயன்பட வேண்டும். நமது தோல்விகள், ஏமாற்றங்கள், வேதனைகளை நினைத்து என்ன வாழ்க்கை இது! என்று சோர்ந்துவிடலாகாது. அடுத்தவர் துயரங்களைப் பார்த்தால் நம் துன்பங்கள் அற்பமாகிவிடும். இறைவனை நினைத்துக்கொண்டே, மற்றவருக்கு உபகாரம் செய்து, அடையும் நிம்மதியில் தான் வாழ்க்கை சுவை வெளிப்படும். ஆதலால், வாழும் போதே இறைவனை துதித்து, எல்லா உயிர்க்கும் இன்பம் செய்து நாமும் இன்புற்று வாழ்வோம்! - தேவராஜன். *******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக