புதன், 1 ஆகஸ்ட், 2012

விருப்பங்களும் திருப்பங்களும் /47/ 29.7.2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்)

விருப்பங்களும் திருப்பங்களும் /47/ 29.7.2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்) நம் மக்களுக்கு ஏராளமான தேவைகள், விருப்பங்கள் இருக்கிறது. வாழ்க்கையில் மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கிறார்கள். ஒருவருக்கு பிறர் மூலம் பல தேவைகள் நிறைவேற வேண்டி இருக்கும். தனிமனிதனுக்கு மட்டுமல், ஓர் ஊருக்கும், உலகத்துக்கும் பல தேவைகள் இருக்கிறது. நம் சுய விருப்பங்களுக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். அதுபோல, ஊர், உலகத்தின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் விருப்பங்கள் நிறைவேறுவதற்காக நாம் கோயிலுக்குச் செல்கிறோம். வேண்டுதல் வைக்கிறோம். பரிகாரம் செய்கிறோம். நேர்த்திக் கடன் செய்கிறோம். பலசமயங்களில் நம் வேண்டிய விருப்பங்கள் நிறைவேறும். சில சமயங்களில் நிறைவேறுவதில்லை. அப்படியானால் நம் வேண்டுதல்களை இறைவன் நிராகரிக்கக் காரணம் என்ன? இந்த வேண்டுதல்களின் பலன் நமக்கு வேண்டாம் என இறைவன் தீர்மானிப்பதுதான். அதனால் நமக்கு நன்மைதான். ஒரு தீங்கும் ஏற்படாது. நம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள மேலும் மன பக்குவம், அனுபவம், திறமை, அறிவு வேண்டும் என்பது மறைமுகமாக இறைவன் சொல்லும் செய்தி. ஒருவேளை நாம் வேண்டிய விருப்பங்களை நிச்சயமாக நிறைவேற்றிக்கொள்ள விரும்பினால், ‘இறைவா! இந்தப் பொருளை அடைவதற்கு என்னை தகுதிப்படுத்து, இந்தப் பொருள் என்னிடத்தில் வந்தால், அதை வைத்துக் காப்பாற்றும் மன திடத்தையும், திறமையையும் வேறு வழி வகைகளையும் உருவாக்கிக்கொடு!’ என்று வேண்டுதல் செய்யுங்கள். இறைவனிடத்தில் வேண்டுதலாக வைக்கப்படும் நம் விருப்பங்கள் நேர்மையாக இருந்தால், நம் மனம் அதன் வழியாக துõய்மையாகும். விருப்பங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றால், நீ சிறந்த ஓவியராக வேண்டும் என்பது உன் விருப்பம் என்றால், உன் முழு வாழ்க்கையையும் ஓவியத்தை நோக்கியே செல்ல வேண்டும். ஓவியத்தைத் தவிர பிற செயல்களில் ஈடுபட கூடாது. பலமணி நேரங்கள் பயிற்சியில் கழிக்க வேண்டும். விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள இப்படிப் பழக, பழக, உருவாவதுதான் நேர்மையான விருப்பம். தன் விருப்பங்களை நேர்மை படுத்த விரும்புவோர் அது தொடர்பான அறிவை பெற்றுக்கொண்டே இருப்பர். அந்த அறிவை இறைவன் மறைமுகமாக கொடுத்துக்கொண்டே இருப்பார். அப்படி ஆழ் மனதில் உருவாகும் அந்தத் திறமை, அறிவுதான் இறைவனின் அருள் கொடை. அந்த அறிவுதான் நேர்மைக்கும் ஞானத்திற்கும் அழைத்துச் செல்லும். - தேவராஜன். ******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக