புதன், 1 ஆகஸ்ட், 2012

ஓங்காரம் ஒலி அகங்காரம் அழி /48/5.8.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்)

ஓங்காரம் ஒலி அகங்காரம் அழி /48/5.8.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) அடுத்தவர்களைவிட தம்மை உயர்ந்தவராகக் கருதும் மனப்பாங்கு அகங்காரம். அகங்காரம் யாருக்கு எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் இறைவனுக்கு துõரமாக இருக்கிறார்கள். நான், எனது என்கிற அகங்காரத்தை விட்டு ஓங்காரத்தைப் பற்றிக்கொண்டால் இறைவனின் அருளுக்கு அருகில் செல்ல முடியும். இறைவன் அருள் கிடைக்கிறதோ இல்லையோ ஓங்காரம் மனதில் இருந்தால் மனசுக்கு சுகம் கிடைக்கும். நிம்மதி கிடைக்கும். நன்மையே நடக்கும். நான் செய்கிற அத்தனையும் நானே செய்யறேன் என்கிற நினைப்பும் கூட ஒருவகை கர்வம்தான். நான் செய்கிற காரியம் சிறப்பாக இருக்கிறது. அதுக்கு நான்தான் காரணம் என்று நினைக்கிறவர் இறைவனை புரிந்துகொள்ளும் இயல்பு இல்லாமல் போவார். நான் செய்கிறேன் என்கிற நினைப்பு போய் இதை பகவான் செய்கிறார். நான் அதுக்கு ஒரு கருவியாக இருக்கிறேன் என்று உணர்பவர்கள் இறைவனுக்கு பிரியமானவர்களாகிவிடுவர். சிலஆயிரம் ரூபாய் செலவழிச்சு அன்னதானம் செய்வதை பல ஆயிரம் செலவு செய்து ஆடம்பர விழாவாக நடத்தறது எல்லாம் வீண் டம்பத்துக்கு அடையாளம். இப்படியான டம்பம் சத்தியத்துக்கு வெகு தொலைவில் பக்தனை தள்ளிவிட்டுவிடும். இதனால் எளிமையும் இனிமையும் போய் வன்மையும் கசப்பும் வந்துவிடும். கருணை ஒருவரை தலை நிமிர வைக்கும். கர்வம் தலை குனிய வைக்கும். மகாபாரதத்தில் ஒரு காட்சி. மகாபாரத யுத்தம் முடிந்தது. பாண்டவர்கள் அரசாட்சி புரிந்த சமயம். அப்போது கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டது. ‘கிருஷ்ணா, நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பும் பிரியமும் கொண்டவன். அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன். உன் தங்கை சுமித்ராவை கூட , அர்ச்சுனனுக்கு மணம் செய்து கொடுத்து மகிழ்ந்தாய். பாண்டவர்கள் சூதாடி, நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ, நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா? ஏன் அப்படி செய்யாமல் வேடிக்கை பார்த்தாய்?” இந்தக் கேள்விக்கு கிருஷ்ணன் சொன்ன பதில்: “சூதாடுவது என்பது அரச தர்மம். தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை. ஆனால், துரியோதனன் சூதாட அழைத்த போதே என் சார்பாக மாமா சகுனி ஆடுவார் என்று துரியோதனன் சொன்னான். ஆனால், தர்மனோ தான் என்ற அகங்கார எண்ணம் இருந்ததால் தானே ஆட முடிவு செய்தான். தர்மன் என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். யுத்தமும் வந்திருக்காது. தர்மனிடம் இருந்த அந்த அகங்காரம்தான் இந்த நிலைமைக்கு காரணம்” என்றார் கிருஷ்ணர். - தேவராஜன். *********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக