சனி, 1 செப்டம்பர், 2012

புத்தியைத் தீட்டு!

புத்தியைத் தீட்டு!/49/ 12.8.2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்) கிருஷ்ணர், அர்ஜூனனுக்குசொல்கிறார், " அறிவுத் தெளிவிலே நிலைபெற்று நில் அர்ச்சுனா! அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும் அது நற்செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே. மனம் போனபடியிருப்பின் அதுவும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து, உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும். உனக்குப் புத்தி தெளிந்து விட்டதன்றோ? புத்தி தெளிவுற்ற இடத்தே, உனக்குத் தீயன செய்தல் சாத்தியப்படாது.'' என்கிறார். புத்தியை தெளிவாக நிறுத்திக் கொள்ளுதல் என்றால், கவலை நினைப்புகளும் அவற்றுக்கு ஆதாரமான பாவ நினைப்புகளுமின்றி புத்தியை இயற்கை நிலைபெறத் திருத்துதலாகும். அதாவது இதயத்தைக் குழந்தைகளின் இதயம் போல சுத்தமாக வைத்துக் கொள்ளுதல். இப்படி புத்தியை தெளிவாக வைத்திருந்தால் போதும் பாவம், புண்ணியம், நல்லது, தீயதுகளை கடந்து விடலாம். தெளிவான புத்தி என்பது கடவுளின் வழிகாட்டுதல் போல இருக்கும். மனதில் எண்ண அலைகள் பல தோன்றுகின்றன. மனதில் தோன்றும் ஆசைகளே செயல்களாக உருவெடுக்கின்றன. ஆனால், மனதில் தோன்றும் எல்லா ஆசைகளும் செயலாக்கம் பெறுவதில்லை. எந்த ஆசைகள் சுக அனுபவத்தைக் கொடுப்பவை, எந்த ஆசைகள் துக்க அனுபவத்தைக் கொடுப்பவை என நிர்ணயித்து, எவற்றைச் செய்யலாம், எவற்றைச் செய்யாது தள்ளலாம் என்று நம் மனதுக்கு உரைப்பது நம் புத்தியே. பல நேரங்களில், புத்தியின் முடிவை மனம் ஏற்று வழிநடப்பதில்லை. தன் ஆசை தனக்குத் துக்கத்தையே தரலாம் என்பதை அறிந்தும், மனம் புலன்கள்வழி காரியங்களை நிகழ்த்துகின்றது. ஒரு சர்க்கரை நோயாளிக்கு, இனிப்பைத் தள்ள வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். அது அவருடைய புத்தியில் பதிந்து கொள்கின்றது. அவருடைய மனம், இனிப்பை உண்ணலாமா என்னும் வினாவை முன் வைக்கும் போதெல்லாம், அவருடைய புத்தி, இனிப்பு உடலுக்கு தீங்கு விளைக்கும் என்றே சொல்லும். யதார்த்தத்தில், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவரை அலைக்கழிக்கின்றது. சில நேரங்களில், ஆசையை அடக்க முடியாமல், புத்தியை மீறி, இனிப்பைச் சுவைக்கவும் செய்கின்றார். இது புத்தி தெளிவில்லாத செயல். அதனால் துன்பம் வருகிறது. ஒருவர் தெளிவான புத்தி நிலையில் இருந்தால் அவர் தன் அறிவைக் கடவுளின் அறிவு போல விசாலப்படுத்திக் கொள்ள இயலும். தெளிவான புத்தியினால் அவர் செய்யும் செயல், சிந்தனை, பேச்சு எல்லாமே தெய்விகமான தன்மை பெற்றுவிடும். அவருடைய புத்திக்கு வரம்பு கிடையாது. அவர் தன் புத்தியால் எங்கும் கடவுள் இருப்பதைக் காண்கிறார். தேவராஜன். *******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக