புதன், 26 செப்டம்பர், 2012

பஞ்ச மகா புண்ணியம்!

பஞ்ச மகா புண்ணியம்!/ 53/ 9.9.2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்) நம் சமயத்தில் இல்லறம் என்பது மனித வாழ்வில் இரண்டாம் நிலை. இல்லற வாழ்வில் ஈடுபட்டு அறம் தவறாமல் தான தர்மங்களைச் செய்து வாழ்தல், மக்களைப் பெற்றெடுத்து கல்வி புகட்டி, நன்னிலை அடையச் செய்தல். அவர்களுக்கு மணம் செய்வித்து நல்வாழ்வு வாழச் செய்வதுமான காலம். இந்தக்காலப்பகுதி ஏறகுறையஇருபத்தைந்துக்கு மேற்பட்டு அறுபதுக்கு உட்பட்ட காலம். இந்தக்கால இடைவெளியில் தான் ஒரு இல்லறத்தான் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். பஞ்ச மகா யக்ஞங்கள் செய்வது சிறந்தது என சமயம் கூறுகிறது. தேவர்களின் ப்ரீதிக்காக ஆற்றப்படும் யாகங்கள், பூஜைகள். தேவர்களின் பிரியத்திற்காக நம்மால் முடிந்த ஸ்தோதிரங்கள் சொல்லி துதி பாடுவது தேவ யக்ஞம். இன்வார்த்தைகள் பேசுதல், பிறரை வாக்கால், மனதால், செயலால், துன்புறுத்தாமை, விருந்தோம்பல் முதலியன மனுஷ்ய யக்ஞம். பித்ருக்களுக்கான கடன், அமாவாசை தர்பணங்கள், திதிகள் முதலியன பித்ரு யக்ஞம். வேதம் கற்றல், அதை பிறருக்கு கற்பித்தல், பிரம்ம ஞானத்தை பிறருக்கு எடுத்துரைத்தல் ப்ரம்ம யக்ஞம். எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட கர்மம் பூத யக்ஞம் அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகின்ற காரியம். நம் அன்றாட வாழ்வில், நம் ஜீவனத்திற்காக பல நுண்ணுயிர்கள், பூச்சிகள் முதலியன கொல்லப்படுகின்றன. நம் மூச்சுக்காற்றில் பல கிருமிகள் மடிகின்றன. நம் ஆரோக்கிய வாழ்விற்காக நம்முள்ளும் புறமும் வாழும் பல கிருமிகளை நாசம் செய்கிறோம். நடக்கும் போது சிறிய உரு கொண்ட பூச்சிகள் கொல்லப்படுகின்றன. நம் பசிக்காக வெட்டப்படும் மரங்கள், செடிகள், காய்கள் கனிகளில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றிற்காக செய்யும் பிராயச்சித்த கர்மாவாக பூத யக்ஞம் செய்யப்படுகிறது. தானம் தர்மம் செய்தல் உயர்ந்த பண்பு, புண்ய காரியமாகவும், பலனை எதிர்பார்த்து செய்தாலும் கூட பலன் தர வல்லது என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட தான தர்மங்கள், மனுஷனுக்கு செய்யும் போது, அது மனுஷ கர்மாவாக பாவிக்கப்படுகிறது. தெய்வத்திற்கும் தேவர்களுக்கும் செய்யப்படவேண்டிய கர்மா, யக்ஞங்கள் யாகங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. திருமூலர் தம் திருமந்திரத்தில் யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. எனக்கூறுகிறார். -தேவராஜன். *********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக