சனி, 1 செப்டம்பர், 2012

ஆன்மிகம்: பாகம் மூன்று

ஆன்மிகம்: பாகம் மூன்று (38 முதல் 52 வாரம் வரை) (தினமலர் வாரமலரில் ஆன்மிகம் பகுதியில் 11.9.2011 தேதியில் இருந்து நான் எழுதிவரும் ஆன்மிக தொடரின் மூன்றாம் பாகம்) யாமிருக்க பயம் ஏன்?/38 தேவராஜன் (தினமலர் வாரமலர்) ஓர் எதிரி உங்களைத் துரத்திக்கொண்டு வருகிறான். அவனிடமிருந்து நீங்கள் தப்பிக்க அவனை விட வேகமாக ஓடுகிறீர்கள். அந்த எதிரி உங்களைவிட பலசாலி. உங்களைவிட மிக வேகமாக ஓடி வருகிறான். அவன் ஈவிரக்கமற்றவன். பாவம், புண்ணியம் பார்க்க மாட்டான். கெஞ்சிக் கேட்டாலும் விட மாட்டான் என்பது உங்களுக்குத் தெரியும். ஏற்கெனவே அவன் உங்கள் உறவினர்கள், நண்பர்களில் சிலரை படாதபாடுபடுத்தி இருக்கிறான். தொல்லை கொடுத்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இந்த சூழ்நிலையில் அவனிடமிருந்து தப்பிக்க நீங்கள் முயன்றாலும் அவன் உங்களை மிகவும் நெருங்கி விட்டான். உங்களை அப்படியே கொத்தாக பிடித்து தலைக்கு மேலே துõக்கப் போகிறான். இனி அவ்வளவுதான் என்பது போல நடுநடுங்கி திகைத்து நிற்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்கள் முன் ஒருபலசாலி நிற்கிறார். அவர் உங்களைத் துரத்தி வந்தவனைவிட மிகப்பெரிய பலசாலி. அவர், வாஞ்சையோடு உங்களைப் பார்த்து, "பயப்படாதே! யாம் இருக்க பயம் ஏன்? உன்னைக் காப்பாற்றுகிறேன்!' என்று சொல்கிறார். அந்த நிலையில், அவர் கூறியதைக் கேட்டதும் எப்படி இருக்கும்? அப்பாடா! என்று கை எடுத்து கும்பிடுபோடுவீர்கள்! நிம்மதி அடைவீர்கள்! எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒருநிலையில் ஓர் எதிரி துரத்திக்கொண்டு இருக்கிறான். நம் எல்லாரையுமே துரத்திக்கொண்டு வருகிறான். ஆனால், அந்த எதிரியைவிட பல மடங்கு பலசாலியாய் இருக்கிறார். நம்மைக் காப்பாற்ற வந்திருப்பவர். அவர் அன்பானவர். நமக்கு பிரியமானவர். நாம் அவரை நேசிக்காவிட்டாலும் நமக்கு கருணையோடு உதவக்கூடியவர். நம்மை துரத்தும் எதிரியைத் தம்மால் வீழ்த்த முடியுமென்பதை அவர் பலமுறை பலரிடம் காண்பித்திருக்கிறார். அந்த பலசாலி வீரர் யார் தெரியுமா? அவர் தான் இறைவன்! நம்மை துரத்தும் அந்த எதிரிகள் யார் தெரியுமா? நம் வாழ்வில் நிகழும் துன்பம், துயரம், கஷ்டம் போன்ற துயரத்தொல்லைகள்தான். அந்த எதிரியிடம் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமானால் இறைவனிடம் நாம் சரணடையவேண்டும். நாம் இறைவன் மீது அன்பும், பக்தியும் வைத்துவிட்டால் போதும். அவன் நமக்கு ஏற்படும் இன்னல்களை எல்லாம் துடைத்துவிடுவான். அவன் அருள் நம்மீது பட்டால் நமக்கு ஏற்பட்ட மலைப்போல துயரம் எல்லாம் பனிப்போல விலகிவிடும். தன் முன் யாசிப்பவர்கள் எல்லாருக்கும் மனமகிழ்ந்து கேட்டதை கொடுக்க தயாராக இருக்கிறான் இறைவன். நாமோ இறைவனிடத்தில் கோடைக்காலத்தில் கம்பளியும் குளிர்க்காலத்தில் ஐஸ்கிரீமும் கேட்டு கையேந்தி கொண்டிருக்கிறோம்! தேவராஜன். ************** ************** ************** யார் பெரியவர்?/39/ 17/6/2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்) அவ்வையாருக்கு புலமை கர்வம் இருந்தது. அதை உணர்த்த முருகன் நடத்திய திருவிளையாடல் இது. அவ்வை சோர்ந்து ஒருமர நிழலில் அமர்ந்தார். மரத்தின் மேலே ஆடுமேய்க்கும் சிறுவன், ""பாட்டி, சோர்வு நீக்க பழம் சாப்பிடுகிறீர்களா?'' என்றான். ""சரி'' என்றார் அவ்வை. ""பாட்டி, சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?'' குறும்பாக கேட்டான் அவன். அவ்வை குழம்பினார். இருப்பினும் சுடும், சுடாத பழம் பற்றி இவனிடம் போய் சந்தேகம் கேட்டால் நம் புலமைக்கு இழுக்கு என்று கருதி, அவன் பறித்து போடட்டும் என்றிருந்தார். சிறுவன் பழுத்தப் பழத்தை பறித்துப்போட்டான். கீழே விழுந்த பழத்தில் மண் ஒற்றிக்கொள்ள, அதை அவ்வை ஊதினார். ""பாட்டி ரொம்பவும் பழம் சூடாக இருக்கிறதா? இப்படி ஊதுகிறீர்களே'' என்று நகைத்தான். அவ்வைக்கு புலமை கர்வம் அந்த கணமே ஒழிந்தது. அப்பா, முருகா என் கர்வம் ஒழிந்தது என்று கூவினார் அவ்வை. சிறுவனாக இருந்தவன் முருகனாக தோன்றி, "அவ்வையே, உங்களுக்கு இருக்கும் அறிவே பெரிதென நினைத்ததை திருத்த செய்த சிறு குறும்பு இது' என்றவன் "இந்த உலகத்தில் தான்தான் பெரியவன் என்று பலர் அகந்தையில் இருக்கின்றனர். உண்மையில் உலகில் பெரியவர்கள் என்பவர்கள் இறைவனை வணங்கி, இறைவனையே நினைத்துக்கொண்டிருப்பவர்களே! இது பற்றி ஒரு பாட்டு பாடு' என்று கேட்டார் முருகன். அவ்வை பாடினார். அந்தப்பாட்டின் கருத்து இது: "உலகில் மிகப்பெரியது இந்த உலகம் தான். இந்த உலகமோ பிரம்மாவால் படைக்கப்பட்டது. அப்படி என்றால் பிரம்மாதான் பெரியவர். பிரம்மாவோ திருமாலின் தொப்புள் குழியில் தோன்றியவர். எனவே திருமால் தான் பெரியவர். திருமால் பெரியவர் என்றால் அவரைத் தாங்கும் கடல் தான் பெரிது. கடல்தான் பெரிது என்றால் அந்தக்கடலும் அகத்தியரின் உள்ளங்கையில் அடங்கியது. அகத்தியர் தான் பெரியவர் என்றால் அந்த அகத்தியரும் சிறு மண்குடத்தில் அடங்கியவர். மண்குடமோ இந்த பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. எனவே பூமிதான் பெரியது என்றால் இந்த பூமியை ஆதிசேடன் என்ற பாம்பு தலையில் தாங்கி இருக்கிறது. பூமியைத்தாங்கும் ஆதிசேடன் பெரியவன் என்றால் அந்தப் பாம்பை உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். உமையவள்தான் பெரியவள் என்றால் அவளோ சிவனது உடலில் ஒருபாதியாய் ஒடுங்கி இருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன். அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கி இருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகத்தில் பெரியது.' தேவராஜன். **************** **************** **************** மனித வாழ்க்கையின் அர்த்தம்!/40/ 10/6/2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்) உலகின் இயக்கத்தில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. சூரியன் உதிப்பதிலிருந்து, நதிகள் ஓடுவதிலிருந்து, காற்று வீசுவதிலிருந்து, காலங்கள் மாறுவதிலிருந்து, இரவு பகல் வந்து போவதிலிருந்து எல்லா செயல்களிலும் ஓர் ஒழுங்கு இருக்கிறது. எல்லாம் முறைப்படி நடந்து வருகின்றன. இறைவனின் கிரியா சக்திதான் இந்த ஒழுக்கத்தைத் தந்திருக்கிறது. இயற்கையின் இயக்கத்தில் ஓர் ஒழுக்கம், நியதி, கட்டுப்பாடு தெரிகிறது. இயற்கைக்கே ஓர் ஒழுக்கம் இருக்கிறது என்றால் நம் வாழ்விலும் ஒழுக்கம், கட்டுப்பாடு வேண்டாமா? இந்த உலகில் உயிருடன் காலத்தைக் கழிப்பதற்குப் பெயர் வாழ்வு என்று பொருள் அல்ல. நம் துன்பங்ளை விலக்கிக் கொண்டு இன்புற்று வாழ்தல். அது போல் மற்றவருக்கு நேரும் துன்பங்களை விலக்கி நம்மைப் போல் அவர்களும் இன்புற்று வாழ உதவி செய்து மகிழ்வதே வாழ்க்கையின் முதல் கடமை. அடுத்து, நம்மை படைத்த இறைவனை அறிய, முயற்ச்சியில் ஈடுபடுதல், அதற்காக வழிபாடு உள்ளிட்ட பக்தி காரியங்களில் ஈடுபடுவதும், தன் குடும்பத்தாரையும் இறையருள் பெற தயார்படுத்துதலும் தான் முழுமையான வாழ்கை. குடும்பம் நாம் வாழும்வரை நம்முடைய தேவைகளை நிறைவேற்றியும், நம்மைச் சார்ந்துள்ள மனைவி, பிள்ளைகள், தாய், தந்தையர், உடன் பிறந்தார், உறவினர்கள், ஆதரவுமில்லாத அன்னியர்களுக்கு ஆதரவு தந்து நம்மைப் போல் அவர்களது தேவைகளையும் நிறைவேற்றி, சந்தோஷமடைய உருவாக்கப்பட்ட அமைப்பு தான் குடும்பம். திருமணம் ஆணோ பெண்ணோ தனியாக கடமையை சிறப்பாகச் செய்ய இயலாது. அறம் செய்து இன்பத்தை பெற இரு கைகள் இணைய வேண்டும் என்பதை உணர்த்துவதுதான் திருமணம். பிள்ளைப் பேறு கணவன், மனைவி செய்துவந்த வழிபாடு, சேவைகள், தான தர்மங்கள் அவர்களுக்கு வயதான பிறகும் தொடர்ந்து நடைபெறவேண்டும். நாம் விட்டுச் செல்கின்ற குடும்ப பாரம்பரிய கடமைகளை, அறப்பணிகளை செய்து வரவேண்டும் என்பதற்காகப் பிள்ளைகளைப் பெறுகின்றோம். நாம் தேடிய சொத்துகளை அனுபவிப்பதற்காக அல்ல. நம் லட்சியங்களுக்கு வாரிசாக பிள்ளைகளைப்பெறுகின்றோம் என்று பொருள். மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமுண்டு. நாம் யாருக்காவது பயன்பட வேண்டும். நமது தோல்விகள், ஏமாற்றங்கள், வேதனைகளை நினைத்து என்ன வாழ்க்கை இது! என்று சோர்ந்துவிடலாகாது. அடுத்தவர் துயரங்களைப் பார்த்தால் நம் துன்பங்கள் அற்பமாகிவிடும். இறைவனை நினைத்துக்கொண்டே, மற்றவருக்கு உபகாரம் செய்து, அடையும் நிம்மதியில் தான் வாழ்க்கை சுவை வெளிப்படும். ஆதலால், வாழும் போதே இறைவனை துதித்து, எல்லா உயிர்க்கும் இன்பம் செய்து நாமும் இன்புற்று வாழ்வோம்! தேவராஜன். ******************* ******************* ******************* பணத்தை புண்ணியமாக்கலாம்! /42/ 24.6.2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்) இந்த உலகில் செல்வம் இல்லாதவரை யாரும் மதிக்கமாட்டார்கள். எனவே செல்வத்தை ஈட்டவேண்டும். உலகில் சுகமாக வாழ்வதற்கு நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பது பாவம் அல்ல. சேர்த்த பணத்தில் வீடு, மனை, தோப்பு, பொன், பொருள், வாகனம் வாங்கி வைத்து கொள்வதும் தவறல்ல. இப்படி தேடியவை எல்லாம் நாம் வாழும் வரை பயன்படும். மகிழ்ச்சியை தரும். வாழும் போது ஒருவர் நிறைய சொத்து சேர்த்திருந்தால் எல்லாராலும் போற்றப்படுகிறார். அவரிடம் வேறு எந்தத் தகுதியும் இல்லை என்றாலும் அவரை புகழ்கிறார்கள். இது செல்வம்படுத்தும் பாடு! வாழும் போது மகிழ்ச்சியையும், கவுரவத்தையும், புகழையும் தரும் செல்வம், தேடியவர் இறந்துவிட்டால் அவர் தேடிய செல்வம் அவர் கூடவே வருவதில்லை. ஒருவர் தேடிய செல்வம் அவர் வாழும்போதும், இறந்த பிறகும் பயன்படவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு சுலபமான வழி இருக்கிறது. வாழும் போதே தேடிய செல்வத்தை தானும் அனுபவித்துக்கொண்டு, பிறருக்கும் தான, தர்மம் செய்து, பொது காரியங்களுக்கு, ஆதரவற்றோருக்கு உதவி, ஏழைகளின் கல்விக்கு கொடுத்து, கோயில் பணிகளுக்கு வாரி தந்து செல்வத்தை புண்ணியமாக சேர்த்து கொள்ள வேண்டும். தேடிய செல்வத்தை புண்ணியமாக மாற்றிக்கொண்டால் அது இவ்வுலக வாழ்க்கைக்குப்பிறகும் உதவும். இது பட்டினத்தாருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் "காதறுந்த ஊசியும் வாராது காண் கடைக்கே' என்று கூறி, சம்பாதித்த பொன்னையும் பொருளையும் வாரி கொடுத்து விட்டு கடவுளின் கருணை எனும் பெருஞ்செல்வத்தைத் தேடி சென்றுவிட்டார். செல்வம் பயன்படும் தன்மையைப் பற்றி நீதிநெறி விளக்கப்பாடல் பாடல் ஒன்றில் குமரகுருபரர் மூவகைப் பெண்களை உவமையாகக் காட்டியுள்ளார். விலைமகள் என்பவள் எல்லாருக்கும் பொதுவானவளாக இருக்கின்றாள். குலமகள் அவள் அவளது கணவனுக்கு மட்டுமே உரியவள். கணவனை இழந்தவள் யாருக்கும் உரியவள் அல்லள். விலைமகள் எல்லாருக்கும் பொதுவானவளாக வாழ்வது போல் சிறந்தவர்களிடம் இருக்கும் செல்வம் எல்லோருக்கும் பயன்படும். குலமகள் கணவனுக்கு மட்டும் உரியவளாக வாழ்வதுபோல் செல்வம் அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் பயன்படும். கணவனை இழந்தவள் போல் செல்வமும் யாருக்கும் பயன்படுவது இல்லை என்கிறார். விலைமகள் பண்பில் இழிந்தவள் என்றாலும் அவளது பொதுத் தன்மையைக் கருதி, சிறந்தவர்களின் செல்வம் பொதுவாக எல்லாருக்கும் பயன்படும் நிலைக்கு அதனை உவமைப்படுத்தியுள்ளார் குமரகுருபரர். தேவராஜன். ******************* ******************* ******************* எல்லாருக்குமான முதல் கடமை! /43/ 1/7/2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்) எல்லாரும் சுகப்பட, நம் மீது இறைவன் பிரியப்பட பின்பற்ற வேண்டிய ஒன்று சுதர்மம். இது பற்றி கீதையில் கண்ணன் விரிவாக அர்ஜூனனுக்கு எடுத்துரைக்கிறான். சுதர்மம் என்பது விரிவான அர்த்தங்களைக் கொண்ட நுணுக்கமான சொல். எளிமையாக சொல்வது என்றால் எல்லாருக்கும் இயல்பாக இருக்க வேண்டிய கடமை உணர்வு. நாம் பிறக்கும் போதே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளும் கூடவே பிறந்து விடுகின்றன. எந்த பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தோமோ அவர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும், உறவு, நண்பர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்று சில உண்டு. அவற்றை நாம் செய்துதான் ஆக வேண்டும். இதற்கு விதி விலக்கு எல்லாம் கிடையாது. எந்த சமூகத்தில், நாட்டில் நாம் பிறக்கிறோமோ அதற்கு செய்ய வேண்டிய சேவைகள் எல்லாம் சுதர்மத்தின் செயல்களாக இருக்கின்றன. வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும், வந்து சேரும் ஒவ்வொரு பொறுப்பிலும் சில தார்மீகக் கடமைகள் ஒரு மனிதனுக்கு வந்து சேர்கின்றன. அந்தக் கடமைகளை நிறைவாக செய்ய வேண்டும். அதை செய்யா விட்டால் அந்த மனிதன் எத்தனை புண்ணியம் செய்தாலும் சுதர்மம் தவறியவனாகிறான். சிலர் தங்கள் வீட்டில் ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவ மாட்டார்கள். பெற்றோரை கவனிக்க மாட்டார்கள். சகோதர, சகோதரிகளை மதிக்க மாட்டார்கள். உதவமாட்டார்கள். சொந்த பந்தங்கள், நட்புகளை உதாசீனம் செய்வார்கள். உதவி என்று கேட்டால் விரட்டுவார்கள். ஆனால் யாருக்கோ பேருக்காக, புகழுக்காக ஓடாக உழைப்பார்கள். வாரி வாரி பொருளைக் கொட்டுவார்கள். அவர்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். பரோபகாரிகள் என்று புகழ்வார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் சுதர்மத்தை அனுசரித்தவர்கள் அல்ல. இவர்களால் பிறவிப் பயனை அடைய இயலாது. ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட சுதர்மத்தை நிறைவேற்றாமல், கோயில் உண்டியலில் பொன்னையும் பணத்தையும் அள்ளி அள்ளி போட்டாலும் இறைவன் அது கண்டு மகிழமாட்டார். "நன்றி மறவேல்', 'நன்மை கடைபிடி'. 'ஐயம் புகினும் செய்வன செய்' பிச்சையெடுத்து வாழும் வறுமை நிலையில் ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய நல்ல செயல்களை இயன்ற அளவு செய் என்கிறார் அவ்வை. தனக்கு விதிக்கப்பட்ட சுதர்மத்தை முழுமையாக செய்து முடித்து, பிறகு இறைதொண்டு செய்பவர்கள் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் அவர்களை நோக்கி நுõறு அடி எடுத்து வந்து வாரி அணைத்துகொள்வார். தேவராஜன். ********************* ********************* ********************* எல்லாம் இன்ப மயம்!/44/ 8.7.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) இந்த உலகத்தில் இருக்கும் எந்தப்பொருளும் அதுவாகவே ஆனந்தத்தைத் தருவதில்லை. அப்படி கொடுத்தாலும் அது நிரந்தரமில்லை! நாம் அதை அந்த சமயத்தில் பூர்ணஆனந்தம் கொடுப்பதாக நினைத்துகொள்கிறோம். நண்பர் ஒருவர் காஷ்மீர் டூர் சென்று திரும்புகிறார். மிக தரமான, விலை அதிகம் உள்ள ஒரு சால்வை நமக்கு தருகிறார். அப்போது மார்கழி மாதம். நண்பர் கொடுத்த சால்வை குளிருக்கு இதமாக இருக்கிறது. அது ஆனந்தம் என்று மனம் குதுõகலிக்கிறது. ஆனால், அதே சால்வை மே மாதத்தில் மேலே பட்டாலே வெறுப்பாக துõக்கி வீசிவிடுகிறோம். சால்வை ஆனந்தத்தை தருகிறது என்றால் அது எப்போதும் கொடுத்துக்கொண்டுதானே இருக்க வேண்டும்? கோடையில் அது ஆனந்தம் கொடுப்பதில்லை. அப்படி என்றால் சால்வை நிரந்தரமாக ஆனந்தத்தைக்கொடுப்பதில்லை. இது போலதான், பொன், பொருள், வீடு,வாகனம், செல்வம் எல்லாம்... உண்மையான ஆனந்தம் வெளிப்பொருட்களில் இல்லை. ஆதலால், ஆனந்தத்தை ஒரு பொருளிலோ, வெளியிலோ தேடி, தேடிப் பார்த்தாலும் அது ஒருபோதும் கிடைக்காது. அப்படி என்றால் ஆனந்தம் என்று ஒன்று இல்லை என்று கருதிவிடவேண்டாம். ஆனந்தம் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் பனி கட்டிபோல் உறைந்துபோய் கிடக்கிறது. அதை உருக செய்தால் போதும். இறைவன் ஆனந்த மயமானவன். அவனிடமிருந்து வந்த நாமும் நம்மை போல உள்ள உயிர்களும் ஆனந்த மயமானவைதான். சர்க்கரையில் செய்த தின்பண்டங்களில் எல்லாம் இனிப்பு சுவை கலந்து இருப்பது போல இறைவனிடம் இருந்து உருவான உயிர்களுக்குள்ளும் ஆனந்தம் நிரம்பி உள்ளது. இதை அறிய விடாமல் தடுப்பது அகங்காரம். சுயநலம். ஆசைகள். வெளிப்பொருள்கள் மீது ஆசை, பற்று வைப்பதை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்து, இறைவன்தான் முழுமையான ஆனந்தம். அவனை நினைப்பதும், வணங்குவதும்,அவனை அறிவதும், அவனே மாறாத துணை என்று நம்பி இருந்தால் உங்களுக்குள் ஆனந்தம் மலரும். யார் ஒருவர் இந்த உலகில் உள்ள அனைத்திலும் , உயிர்கள் அனைத்திலும் இறைவனை காண்கிறானோ அல்லது நினைக்கிறானோ அவனுக்குள் ஆனந்தம் பொங்கும். அவன் இருக்கும் இடம் தெய்வீக ஒளி படரும். சொர்க்கமாகும். அமைதி பரவி ஆனந்தம் பெருகும். நீங்கள் காண்பவர்களில் உங்களை எதிர்ப்பவர், வெறுப்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும்,அவர்களுக்கும் ஆனந்தம் பெருகட்டும் என்று வாழ்த்துங்கள்! ஆனந்தம் உங்களுக்குள் மலரஆரம்பிக்கும். அதன் இன்ப மணம் உலகம் எங்கும் வீசி எல்லாரையும் எல்லாத்தையும் சுகப்படுத்தும். தேவராஜன். ******************** ******************** ******************** நல்லதோர் வீணை செய்வோம்!/ 45/15.7.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) புராதன எகிப்தில் வாழ்ந்த மக்களிடம் இருந்த மரணம் பற்றிய நம்பிக்கை இது. அவர்களில் யாராவது மரணித்துவிட்டால், அவர்கள் சுவர்க்கத்தின் நுழைவு வாயிலில் வைத்து இரண்டு கேள்விகள் கேட்கப்படுவார்கள். அந்த இரண்டு கேள்விக்கும் ஆம் என்ற விடை சொன்னால் மட்டுமே அவர்கள் சுவர்க்கத்திற்கு நுழைய முடியுமாம். ""நீ உனது வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டு கொண்டாயா? ""உனது வாழ்க்கை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு சேர்த்திருக்கிறதா? என்பவையே அந்த இரண்டு கேள்வி. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல நம் வாழ்க்கையில் தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தருகின்ற விஷயங்களை ஆசைகளாக்கிக் கொள்ள வேண்டும். ஆசை, துன்பம் தரும் என்பதற்காக ஆசை படாமல் இருப்பது ஒரு நிலை. ஆசைப்படுவதற்காகவே வாழ்க்கை என்று ஆசையிலேயே மிதப்பது எதிர் நிலை. இந்த இரண்டு நிலைகளுமே நமக்குத் தேவையில்லை. நாம் எப்போதும் நடுவில் இருப்போம். பிறக்கும் போதே கூடவே ஆசைகளும் பிறந்துவிடுகிறதோ என்னவோ? மனசு என்று ஒன்று இருந்து விட்டால் அதற்கு ஆயிரமாயிரம் ஆசைகள் என்ற பசி ஏற்பட்டு, அந்தப் பசியை தணிக்க, எரியும் தீயில் நெய் ஊற்றி அணைப்பது போல் மேலும் மேலும் ஆசைப்பட்டு அதற்கு வலுசேர்க்க கோபம், பொய், பொறாமை, அழுகை, பயம் எல்லாமும் படை எடுத்து வந்து விடுகின்றன. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், சந்தோஷம் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே அத்தனை அத்தனை ஆசைகள் என்றாலும், இதனால் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி நிலையாகவா இருக்கிறது? ஒவ்வொரு ஆசையும் அதனால் வரும் சந்தோஷமும் கூடவே கையோடு ஒரு துக்கத்தையும் அழைத்துக் கொண்டு வருகிறது! கண்ணைக் கவர்ந்திழுக்கும் ஆயிரம் பொருட்கள் மீது ஆசை வைப்பதை விட, மனசுக்குப் பிடித்த ஒரு பொருள் மீது ஆசைப்பட்டு வாங்கினால் அது ஒரு நிறைவை தரும். திருப்தியை ஏற்படுத்தும். கண் கண்டவைகள் மீது ஆசை வைப்பது, வாழ்க்கையை விபரீதமாக்கும். தேவை குறைந்து, ஆசையும் குறைந்தால் வாழ்நாள் முழுவதும் அமைதி வரும். எல்லோரும் சந்தோஷம் பெற வாழ்க்கை எனும் ஒரு வீணையை இறைவன் கொடுத்திருக்கிறான். அந்த வீணையின் நரம்புகளை அளவாக முறுக்கேறினால் அதில் இருந்து நல்ல இசை பிறக்கும். அதிகமாக முறுக்கினால் நரம்பு அறுந்துவிடும். இசையும் பிறக்காது. அதற்காக முறுக்கேற்றாமல் விட்டால் நரம்புகள் தளர்ந்து வீணையிலிருந்து இனிய இசையை தராது. நல்ல இசை வீணையில் வருவதற்கு அதன் நரம்புகள் அதிகம் தளராமலும், அதிகம் முறுக்கேறாமலும் இருப்பது நல்லது. ஆதலால் நல்லதோர் வீணை செய்து நலம்பட வாழ்வோம்! தேவராஜன். ******************** ******************** ******************** நம்பிக்கைத்தான் நம்மை காப்பாற்றும்! /46/ 22.7.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) அறியாத ஒன்றினிடம் மனம் பற்று வைப்பதே நம்பிக்கை. நம்பிக்கைத்தான் வாழ்க்கை. நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தருவதுதான் நம்பிக்கை. நம்பிக்கை ஒருவனுக்கு ஆற்றலை, ஆறுதலை, அற்புதங்களை தருகிறது. கோழையை வீரனாக்கும். பலமற்றவனை பயில்வானாக்கும். நம்பிக்கை இல்லை என்றால் ஒரு மாவீரனைக்கூட தோல்வி அடைய செய்துவிடும். மனிதனின் ஒப்பற்ற மனஆயுதம் தான் நம்பிக்கை. நாம் இறைவனிடம் கொள்ளும் அசைக்கமுடியாத நம்பிக்கை பல தடைகலை வெல்லும். துன்பத்தை அகற்றும். அமைதியை தரும். இடைவிடாத நம்பிக்கை இறுதியில் நம்மை இறைவனிடம் இணைக்கும். நம்பிக்கையே இறைவனைக்காட்டித்தரும். நம்பிக்கை இழந்தால் எல்லாமே இழக்கப்படும். நமது பிறவிக் கடமை இறைவனை நம்புவதே. நம்பிய இறைவனை மறவாமல் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதுதான். நம் நம்பிக்கை, பிரார்த்தனை இறைவனுக்கு கேட்கிறதா, இல்லையா என்பதைப் பற்றிய கவலை, சந்தேகம் எல்லாம் படக்கூடாது. எண்ணற்ற சோதனைகள் அலைக்கழித்த போதிலும்,தாங்கமுடியாத சோகமோ, இழப்போ எது நிகழ்ந்தாலும் பிரார்த்தனையை விடாது செய்ய வேண்டும். பிரகலாதன் அவனது தந்தை ஹிரண்யகசிபுவால் பல வகையிலும் துன்புறுத்தப்பட்டான். ஒரு மலையின் உச்சியிலிருந்து கீழே உருட்டிவிடப்பட்டான். பட்டத்து யானையை ஏவி, அதன் காலால் மிதிப்பட தண்டனை பெற்றான். கடலில் துõக்கி எறியப்பட்டான். கொதிக்கும் எண்ணைக்கொப்பரையில் போடப்பட்டான். கொடிய விஷப்பாம்புகள் அவன் மீது போடப்பட்டன. இத்தனை துன்பங்களுக்கும் இடையிலும் அவன் இறைவன் நாராயணன் மீது உள்ள பக்தியை, நம்பிக்கையை இழக்க வில்லை. முழு நம்பிக்கையோடு ஹரியை பிரகலாதன் உறுதியாகப் பிடித்துக்கொண்டான். அவனின் உறுதியான, அசையாத நம்பிக்கைதான் அவனுக்கு நேர்ந்த அத்தனை ஆபத்துகளும், துன்பங்களும் ஹரியால் துடைக்கப்பட்டது. பக்தர்களுக்கு இறைவன் மீது அத்தகைய நம்பிக்கை வேண்டும். இறைவன் உங்களை பலவகையிலும் சோதனை செய்வார். மிகுந்த சோதனை, துன்பங்கள் ஏற்பட்டகாலங்களிலும், நீங்கள் இறைவன் மீதுள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது. கல்லைக்கட்டிக் கடலில் போட்டாலும், சாம்பலாய் கருகிட வைக்கும் செங்கல் சூளையில் அடைத்தாலும் நற்றுணையாவது நாதம் நாமம் நமச்சிவாயமே! என்று நாவுக்கரசரை சொல்ல வைத்தது இறை நம்பிக்கைதான்! பிரகலாதனைப்போல், துருவனைப்போல், நாவுக்கரசரைப்போல் நீங்களும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்து வாருங்கள். அந்த இறை நம்பிக்கையே இறவாப்பெருநிலையை பெறவைக்கும்! தேவராஜன். ********************** ********************** ********************** விருப்பங்களும் திருப்பங்களும் /47/ 29.7.2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்) நம் மக்களுக்கு ஏராளமான தேவைகள், விருப்பங்கள் இருக்கிறது. வாழ்க்கையில் மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கிறார்கள். ஒருவருக்கு பிறர் மூலம் பல தேவைகள் நிறைவேற வேண்டி இருக்கும். தனிமனிதனுக்கு மட்டுமல், ஓர் ஊருக்கும், உலகத்துக்கும் பல தேவைகள் இருக்கிறது. நம் சுய விருப்பங்களுக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். அதுபோல, ஊர், உலகத்தின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் விருப்பங்கள் நிறைவேறுவதற்காக நாம் கோயிலுக்குச் செல்கிறோம். வேண்டுதல் வைக்கிறோம். பரிகாரம் செய்கிறோம். நேர்த்திக் கடன் செய்கிறோம். பலசமயங்களில் நம் வேண்டிய விருப்பங்கள் நிறைவேறும். சில சமயங்களில் நிறைவேறுவதில்லை. அப்படியானால் நம் வேண்டுதல்களை இறைவன் நிராகரிக்கக் காரணம் என்ன? இந்த வேண்டுதல்களின் பலன் நமக்கு வேண்டாம் என இறைவன் தீர்மானிப்பதுதான். அதனால் நமக்கு நன்மைதான். ஒரு தீங்கும் ஏற்படாது. நம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள மேலும் மன பக்குவம், அனுபவம், திறமை, அறிவு வேண்டும் என்பது மறைமுகமாக இறைவன் சொல்லும் செய்தி. ஒருவேளை நாம் வேண்டிய விருப்பங்களை நிச்சயமாக நிறைவேற்றிக்கொள்ள விரும்பினால், "இறைவா! இந்தப் பொருளை அடைவதற்கு என்னை தகுதிப்படுத்து, இந்தப் பொருள் என்னிடத்தில் வந்தால், அதை வைத்துக் காப்பாற்றும் மன திடத்தையும், திறமையையும் வேறு வழி வகைகளையும் உருவாக்கிக்கொடு!' என்று வேண்டுதல் செய்யுங்கள். இறைவனிடத்தில் வேண்டுதலாக வைக்கப்படும் நம் விருப்பங்கள் நேர்மையாக இருந்தால், நம் மனம் அதன் வழியாக துõய்மையாகும். விருப்பங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றால், நீ சிறந்த ஓவியராக வேண்டும் என்பது உன் விருப்பம் என்றால், உன் முழு வாழ்க்கையையும் ஓவியத்தை நோக்கியே செல்ல வேண்டும். ஓவியத்தைத் தவிர பிற செயல்களில் ஈடுபட கூடாது. பலமணி நேரங்கள் பயிற்சியில் கழிக்க வேண்டும். விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள இப்படிப் பழக, பழக, உருவாவதுதான் நேர்மையான விருப்பம். தன் விருப்பங்களை நேர்மை படுத்த விரும்புவோர் அது தொடர்பான அறிவை பெற்றுக்கொண்டே இருப்பர். அந்த அறிவை இறைவன் மறைமுகமாக கொடுத்துக்கொண்டே இருப்பார். அப்படி ஆழ் மனதில் உருவாகும் அந்தத் திறமை, அறிவுதான் இறைவனின் அருள் கொடை. அந்த அறிவுதான் நேர்மைக்கும் ஞானத்திற்கும் அழைத்துச் செல்லும். தேவராஜன். ****************** ****************** ****************** ஓங்காரம் ஒலி அகங்காரம் அழி /48/5.8.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) அடுத்தவர்களைவிட தம்மை உயர்ந்தவராகக் கருதும் மனப்பாங்கு அகங்காரம். அகங்காரம் யாருக்கு எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் இறைவனுக்கு துõரமாக இருக்கிறார்கள். நான், எனது என்கிற அகங்காரத்தை விட்டு ஓங்காரத்தைப் பற்றிக்கொண்டால் இறைவனின் அருளுக்கு அருகில் செல்ல முடியும். இறைவன் அருள் கிடைக்கிறதோ இல்லையோ ஓங்காரம் மனதில் இருந்தால் மனசுக்கு சுகம் கிடைக்கும். நிம்மதி கிடைக்கும். நன்மையே நடக்கும். நான் செய்கிற அத்தனையும் நானே செய்யறேன் என்கிற நினைப்பும் கூட ஒருவகை கர்வம்தான். நான் செய்கிற காரியம் சிறப்பாக இருக்கிறது. அதுக்கு நான்தான் காரணம் என்று நினைக்கிறவர் இறைவனை புரிந்துகொள்ளும் இயல்பு இல்லாமல் போவார். நான் செய்கிறேன் என்கிற நினைப்பு போய் இதை பகவான் செய்கிறார். நான் அதுக்கு ஒரு கருவியாக இருக்கிறேன் என்று உணர்பவர்கள் இறைவனுக்கு பிரியமானவர்களாகிவிடுவர். சிலஆயிரம் ரூபாய் செலவழிச்சு அன்னதானம் செய்வதை பல ஆயிரம் செலவு செய்து ஆடம்பர விழாவாக நடத்தறது எல்லாம் வீண் டம்பத்துக்கு அடையாளம். இப்படியான டம்பம் சத்தியத்துக்கு வெகு தொலைவில் பக்தனை தள்ளிவிட்டுவிடும். இதனால் எளிமையும் இனிமையும் போய் வன்மையும் கசப்பும் வந்துவிடும். கருணை ஒருவரை தலை நிமிர வைக்கும். கர்வம் தலை குனிய வைக்கும். மகாபாரதத்தில் ஒரு காட்சி. மகாபாரத யுத்தம் முடிந்தது. பாண்டவர்கள் அரசாட்சி புரிந்த சமயம். அப்போது கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டது. "கிருஷ்ணா, நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பும் பிரியமும் கொண்டவன். அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன். உன் தங்கை சுமித்ராவை கூட , அர்ச்சுனனுக்கு மணம் செய்து கொடுத்து மகிழ்ந்தாய். பாண்டவர்கள் சூதாடி, நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ, நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா? ஏன் அப்படி செய்யாமல் வேடிக்கை பார்த்தாய்?'' இந்தக் கேள்விக்கு கிருஷ்ணன் சொன்ன பதில்: ""சூதாடுவது என்பது அரச தர்மம். தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை. ஆனால், துரியோதனன் சூதாட அழைத்த போதே என் சார்பாக மாமா சகுனி ஆடுவார் என்று துரியோதனன் சொன்னான். ஆனால், தர்மனோ தான் என்ற அகங்கார எண்ணம் இருந்ததால் தானே ஆட முடிவு செய்தான். தர்மன் என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். யுத்தமும் வந்திருக்காது. தர்மனிடம் இருந்த அந்த அகங்காரம்தான் இந்த நிலைமைக்கு காரணம்'' என்றார் கிருஷ்ணர். தேவராஜன். **************** **************** **************** புத்தியைத் தீட்டு!/49/ 12.8.2012/தேவராஜன் (தினமலர் வாரமலர்) கிருஷ்ணர், அர்ஜூனனுக்குசொல்கிறார், " அறிவுத் தெளிவிலே நிலைபெற்று நில் அர்ச்சுனா! அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும் அது நற்செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே. மனம் போனபடியிருப்பின் அதுவும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து, உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும். உனக்குப் புத்தி தெளிந்து விட்டதன்றோ? புத்தி தெளிவுற்ற இடத்தே, உனக்குத் தீயன செய்தல் சாத்தியப்படாது.'' என்கிறார். புத்தியை தெளிவாக நிறுத்திக் கொள்ளுதல் என்றால், கவலை நினைப்புகளும் அவற்றுக்கு ஆதாரமான பாவ நினைப்புகளுமின்றி புத்தியை இயற்கை நிலைபெறத் திருத்துதலாகும். அதாவது இதயத்தைக் குழந்தைகளின் இதயம் போல சுத்தமாக வைத்துக் கொள்ளுதல். இப்படி புத்தியை தெளிவாக வைத்திருந்தால் போதும் பாவம், புண்ணியம், நல்லது, தீயதுகளை கடந்து விடலாம். தெளிவான புத்தி என்பது கடவுளின் வழிகாட்டுதல் போல இருக்கும். மனதில் எண்ண அலைகள் பல தோன்றுகின்றன. மனதில் தோன்றும் ஆசைகளே செயல்களாக உருவெடுக்கின்றன. ஆனால், மனதில் தோன்றும் எல்லா ஆசைகளும் செயலாக்கம் பெறுவதில்லை. எந்த ஆசைகள் சுக அனுபவத்தைக் கொடுப்பவை, எந்த ஆசைகள் துக்க அனுபவத்தைக் கொடுப்பவை என நிர்ணயித்து, எவற்றைச் செய்யலாம், எவற்றைச் செய்யாது தள்ளலாம் என்று நம் மனதுக்கு உரைப்பது நம் புத்தியே. பல நேரங்களில், புத்தியின் முடிவை மனம் ஏற்று வழிநடப்பதில்லை. தன் ஆசை தனக்குத் துக்கத்தையே தரலாம் என்பதை அறிந்தும், மனம் புலன்கள்வழி காரியங்களை நிகழ்த்துகின்றது. ஒரு சர்க்கரை நோயாளிக்கு, இனிப்பைத் தள்ள வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். அது அவருடைய புத்தியில் பதிந்து கொள்கின்றது. அவருடைய மனம், இனிப்பை உண்ணலாமா என்னும் வினாவை முன் வைக்கும் போதெல்லாம், அவருடைய புத்தி, இனிப்பு உடலுக்கு தீங்கு விளைக்கும் என்றே சொல்லும். யதார்த்தத்தில், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவரை அலைக்கழிக்கின்றது. சில நேரங்களில், ஆசையை அடக்க முடியாமல், புத்தியை மீறி, இனிப்பைச் சுவைக்கவும் செய்கின்றார். இது புத்தி தெளிவில்லாத செயல். அதனால் துன்பம் வருகிறது. ஒருவர் தெளிவான புத்தி நிலையில் இருந்தால் அவர் தன் அறிவைக் கடவுளின் அறிவு போல விசாலப்படுத்திக் கொள்ள இயலும். தெளிவான புத்தியினால் அவர் செய்யும் செயல், சிந்தனை, பேச்சு எல்லாமே தெய்விகமான தன்மை பெற்றுவிடும். அவருடைய புத்திக்கு வரம்பு கிடையாது. அவர் தன் புத்தியால் எங்கும் கடவுள் இருப்பதைக் காண்கிறார். தேவராஜன். ******************* ******************* ******************* ஆசையின் நிழல் துன்பம்/50/19.8.2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்) அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர், வாழ்வின் பேருண்மைகளை தருமனுக்கு உபதேசித்தார். ""செல்வம் இருந்தாலும், இழந்தாலும், சுகம் கிடைத்தாலும், துன்பத்தில் துடித்தாலும் மனிதன் உலகில் வாழத்தான் விரும்புகிறானா?'' என்று தருமன் கேட்டான். "" ஆமாம்! எல்லா உயிர்களும் வாழவே விரும்புகின்றன. இறப்பதற்கு விரும்புவதே இல்லை! எடுத்தப் பிறவியிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. எந்தப் பிறவியாக இருந்தாலும் வாழும் ஆசை போகாது!'' என்றார் பீஷ்மர். நெருப்பைப் புகை மறைப்பது போல் ஆசை அறிவை மறைக்கிறது என்கிறது பகவத் கீதை. நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால், அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்போக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக்கறியின் சுவை அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதை உண்டு பசியாற அவனுள் ஆசை எழுந்தது. ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டு வந்த பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு மூட்டி, ஆமையைக் கொதி நீரில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெதுவெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. அங்குமிங்கும் சந்தோஷத்தில் தாவி தாவி ஆடியது. பாத்திரத்தில் நீரின் வெப்பம் ஏற,ஏற ஆமையின் உடல் எரிச்சல் அடைந்தது. சூடு தாங்காமல், உயிர் துடித்து இறந்தது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே மாறாத வாழ்க்கை நியதி. என்பதை"உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்' என்கிறார் அப்பர். எல்லை மீறினால் எதுவும் துன்பமே என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா? நமக்கும் தான்! அதே சமயம் ஆசையே இல்லாமல் போனால் மனித வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று போதித்த சித்தார்த்தன், அரண்மனை வாழ்க்கையில் சிற்றின்பங்களில் மிதந்தான். பார்வை திரும்பிய பக்கம் எல்லாம் பாவையர். நேரம், காலம் போவது தெரியாமல் ஆடல் பாடல்; பஞ்சணை சுகம்; பால் பழம் விருந்து. சித்தார்த்தனுக்குச் சலித்துப் போனது. சிற்றின்பத்தின் எல்லையில் இருந்து பேரின்பம் காணத் துறவு நோக்கி நடந்தான். தன்னை வருந்தி கடும் தவமிருந்தான். மனம் தெளிந்து, கனிந்து ஒரு பவுர்ணமி நாளில் சித்தார்த்தன் புத்தனானான். ஆசைகளை முற்றிலுமாகஅழித்தல் சாத்தியம் இல்லை. ஆனால், நாம் கொஞ்சம் முயன்றால், நமது ஆசைகளை ஒழுங்காக சீரமைத்துக் கொள்ளலாம். ஆசைகளை ஒழித்து, நாம் முனிவராகவோ, ஞானியாகவோ ஆக வேண்டாம். ஆசையை அறம் சார்ந்த எல்லைக்குள் வைத்து கொண்டு வாழ்ந்தால் போதும் இறைவனின் அருள் நம்மை உயர்ந்த நிலைக்கு ஏற்றிவிடும். தேவராஜன். ***************** ***************** ***************** இருந்தாலும் இறந்தாலும் புண்ணியம் செய்யலாம்! 51/ 26/8/12 தேவராஜன் (தினமலர் வாரமலர்) இந்த உலக வாழ்க்கையில் ஒருவர் நற்செயல்கள் செய்து, புண்ணியம் பெறுவது எல்லாம் அந்த மனிதரின் மரணத்தோடு முடிவடைந்து விடுகின்றன. இது இயற்கை வகுத்த விதி. இந்த இயற்கை விதியை மீறியும் ஒருவர் இறந்தப்பிறகும் நற்செயல்கள் செய்ய இயலும். அதனால் புண்ணியமும் தேடிக்கொள்ள முடியும். ஒருவர் வாழ்கின்ற காலத்தில் அவர் செய்த சில நல்ல செயல்கள் அவர் இறந்தப்பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் புண்ணியத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். வாழும் போது எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டதோ அந்த நோக்கங்கள் காலகாலமாய் நிலைத்து அவருக்கு நன்மைகள் செய்துகொண்டிருக்கும். உதாரணமாக பசித்தவர்களுக்கு புசி என்று உணவிடும் தர்மசாலைகள், தாகம் தீர்க்க குடி நீர் வசதிகள், அப்பாடா என்று ஓய்வெடுக்க நிழல் தரும் மரங்கள் நடுவது,கோயில்கள் கட்டுவது அல்லது புனரமைப்பது. அதுவும் இயலாவிட்டால் காலம்காலமாக கோயிலில் விளக்கு எரிய உதவுவது, ஏழைகள் இலவசமாக கல்விப்பெற கல்விக்கூடங்கள், இலவசமாக மருத்துவம் பெற மருத்துவமனை, ஆதரவற்றோருக்கு இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் போன்ற நற்செயல்கள் யார் எல்லாம் செய்கிறார்களோ அவர்களுக்கு இறந்தப்பிறகும் புண்ணியம் கிடைத்தபடியே இருக்கும். தான் அன்புடன்,பண்புடன், ஒழுக்கத்துடன், இறை நம்பிக்கையுடன் இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தன்னைப் போல மாற்றி வழிநடத்தி செல்பவர்களுக்கு தன்கொள்கைகளைப் பின்பற்றுவர்களால் கிடைக்கும் புண்ணியம் இறந்தப்பிறகும் கிடைத்தபடியே இருக்கும். சாஸ்திர சம்பிரதாயபடியும் மதம் வலியுறுத்தும் நெறிகளை தானும் கடைப்பிடித்து, தன்குடுபத்தினரையும் பின்பற்ற வைத்து அதன்படி தம்மால் வளர்க்கப்பட்ட வாரிசுகள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் அவர்களுக்கும், அதை பின்பற்ற வைத்த ஊக்கிகளாக இருந்த மரணமடைந்த பெற்றோர்களுக்கு புண்ணியம் சேர்ப்பனவாகும். நாம் பெற்ற பிள்ளைகள் சிரத்தையுடன் செய்யும் சிராத்த பித்ரு காரியங்கள், அவர்கள் நாளும் செய்யும் இறைவணக்கம், இறைஉணர்வோடு அவர்கள் செய்யும் எந்த ஒரு நற்செயலும் அந்தச் செயல்களால் கிடைக்கும் புண்ணியம் பெற்றோருக்கு மரணத்திற்கு பிறகும் நன்மை கொடுப்பனவாகும். மேலே கூறிய நற்செயல்கள் செய்தால் ஒருவர் தமது வாழ்நாளிலும் அவர் இறந்த பின்பும் புண்ணியத்தை பெற்றுக்கொண்டே இருக்கலாம்! தேவராஜன். **************** **************** **************** இருப்பின் இல்லாமை 52/2.9.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) ஒருவர் நோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பலநாள் பிரார்த்தனை செய்தார். இருந்தும் அவர் பிழைக்கவில்லை. ஒரு மனிதனை நம்பியிருந்தால் கூட அந்த மனிதன் இயன்ற உதவியைச் செய்திருப்பார். காப்பாற்றுவார் என்று நம்பிக்கை வைத்த கடவுள் காப்பாற்றவில்லையே! உண்மையில் கடவுள் என்று ஒருவர் உண்டா உலகில்? இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, தீயவைகள் இருக்கின்றன. இவைகள் எங்கேயிருந்து வந்தன? இவற்றை தடுக்க கடவுளால் முடியாதா? கடவுளை பார்க்க முடியுமா? அவர் பேசுவதைக் கேட்க முடியுமா? வேறு எப்படி அவரது இருப்பை உணர இயலும்? இப்படி சில சூழ்நிலையில் மனதில் இப்படி கேள்விகள் அறியாமையால் எழுந்து விடுகின்றன! பரிசோதிக்கத்தக்க வகையிலோ, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறையிலோ கடவுளை யாரும் காட்ட இயலாது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் பாலத்தின் பெயர்தான் நம்பிக்கை. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கைபடி கடவுள் இருக்கிறார் என்பதை உணரலாம். கடவுள் பேசுவதை கேட்பதற்கு இயலாவிட்டாலும், அவர் வழிநடத்துதலை, சொந்த அனுபவங்கள் வழியாக அறியலாம் எதிர்பாராத சில நிகழ்வுகளை வாழ்கையில் கடந்து செல்லும் போது உணரப்படும் அனுபவத்தால் கடவுள் இருக்கிறார் என்பதை உணரமுடியுமே தவிர, விளக்கமாக சொல்ல இயலாது. கடவுள் என்பது ஒரு இருப்பின் இல்லாமை. அதை புரிந்து கொள்ள அறிவு, சிந்தனை எல்லாம் உதவாது. இருட்டு, வெளிச்சம். இதில் இருட்டு என்பது நிரந்தரம். ஆனால் வெளிச்சம் என்பதற்கான எதிர்பதம் தரும் பொருள் அல்ல அது. இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பின் இல்லாமைதான். வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, அதிக ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பல வகைகளில் வெளிச்சத்தை வகைப்படுத்த இயலும். ஆனால் இருட்டை அளக்கவோ, வகைப்படுத்தவோ இயலாது. கடவுளும் இருட்டு போலதான். அதை வரையறுக்க இயலாது. அதே சமயம் ஒரே சமயத்தில் வெளிச்சத்தையும் இருட்டையும் பார்க்க முடியாது. ஒரு இருப்பின் இல்லாமைதான் வெளிச்சமாக அல்லது இருட்டாக இருக்கிறது. வெளிச்சம் இல்லாமை தான் இருட்டு என்பது போல, உலகமும், உயிரினமும் இருக்கும் போது இந்த இருப்பின் இல்லாமையாக அதை படைத்த கடவுள் இருக்கிறார். அப்படி என்றால் கடவுள் இருப்புநிலையில் உலகமும் உயிரினமும் தெரியாது. உலகமும் உயிரினமும் தெரியும் போது கடவுள் தெரிவதில்லை. ஒரே சமயத்தில் இரண்டும் வெளிபடுவதில்லை என்ற தத்துவம் புரிந்தால் எங்கே கடவுள் காட்டு என்று யாரும் கூப்பாடுபோடவேண்டியதில்லை. தேவராஜன். ************************** ************************** ***************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக