சனி, 1 செப்டம்பர், 2012

ஆசையின் நிழல் துன்பம்/50/

ஆசையின் நிழல் துன்பம்/50/19.8.2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்) அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர், வாழ்வின் பேருண்மைகளை தருமனுக்கு உபதேசித்தார். ""செல்வம் இருந்தாலும், இழந்தாலும், சுகம் கிடைத்தாலும், துன்பத்தில் துடித்தாலும் மனிதன் உலகில் வாழத்தான் விரும்புகிறானா?'' என்று தருமன் கேட்டான். "" ஆமாம்! எல்லா உயிர்களும் வாழவே விரும்புகின்றன. இறப்பதற்கு விரும்புவதே இல்லை! எடுத்தப் பிறவியிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. எந்தப் பிறவியாக இருந்தாலும் வாழும் ஆசை போகாது!'' என்றார் பீஷ்மர். நெருப்பைப் புகை மறைப்பது போல் ஆசை அறிவை மறைக்கிறது என்கிறது பகவத் கீதை. நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால், அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்போக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக்கறியின் சுவை அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதை உண்டு பசியாற அவனுள் ஆசை எழுந்தது. ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டு வந்த பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு மூட்டி, ஆமையைக் கொதி நீரில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெதுவெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. அங்குமிங்கும் சந்தோஷத்தில் தாவி தாவி ஆடியது. பாத்திரத்தில் நீரின் வெப்பம் ஏற,ஏற ஆமையின் உடல் எரிச்சல் அடைந்தது. சூடு தாங்காமல், உயிர் துடித்து இறந்தது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே மாறாத வாழ்க்கை நியதி. என்பதை"உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்' என்கிறார் அப்பர். எல்லை மீறினால் எதுவும் துன்பமே என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா? நமக்கும் தான்! அதே சமயம் ஆசையே இல்லாமல் போனால் மனித வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று போதித்த சித்தார்த்தன், அரண்மனை வாழ்க்கையில் சிற்றின்பங்களில் மிதந்தான். பார்வை திரும்பிய பக்கம் எல்லாம் பாவையர். நேரம், காலம் போவது தெரியாமல் ஆடல் பாடல்; பஞ்சணை சுகம்; பால் பழம் விருந்து. சித்தார்த்தனுக்குச் சலித்துப் போனது. சிற்றின்பத்தின் எல்லையில் இருந்து பேரின்பம் காணத் துறவு நோக்கி நடந்தான். தன்னை வருந்தி கடும் தவமிருந்தான். மனம் தெளிந்து, கனிந்து ஒரு பவுர்ணமி நாளில் சித்தார்த்தன் புத்தனானான். ஆசைகளை முற்றிலுமாகஅழித்தல் சாத்தியம் இல்லை. ஆனால், நாம் கொஞ்சம் முயன்றால், நமது ஆசைகளை ஒழுங்காக சீரமைத்துக் கொள்ளலாம். ஆசைகளை ஒழித்து, நாம் முனிவராகவோ, ஞானியாகவோ ஆக வேண்டாம். ஆசையை அறம் சார்ந்த எல்லைக்குள் வைத்து கொண்டு வாழ்ந்தால் போதும் இறைவனின் அருள் நம்மை உயர்ந்த நிலைக்கு ஏற்றிவிடும். தேவராஜன். *************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக