புதன், 26 செப்டம்பர், 2012

கடவுளுக்கு விருப்பமான பக்தி

கடவுளுக்கு விருப்பமான பக்தி/ 54/16.9.12. (தினமலர் வாரமலர்) பக்தி செய்வது என்பது காவி அணிவது, மந்திரங்கள் ஜெபித்துக்கொண்டிருப்பது, பூஜை புனஸ்காரங்கள் செய்வது மட்டும் அல்ல. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைப்பதும், அவனே சரணம் என்று இருப்பதே கடவுளுக்கு விருப்பமான பக்தி. பக்தி செய்வது என்பது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கடவுள் என்பது இருக்கா, இல்லையா என்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இதை விளக்கும் ஒரு சின்னக்கதை: ஒரு ஊரில் இரண்டு பக்தர்கள் இருந்தார்கள். ஒருவர் சாதாரண தொழிலாளி. வீட்டில் சாமிபடத்துக்கு விளக்கேற்றி, கும்பிட்டுவிட்டு அவர் வேலையை கவனிக்க சென்றுவிடுவார். எல்லாம் கடவுள் செயல் என்பதில் உறுதியாக இருப்பவர். நிம்மதியான வாழ்க்கை அவருக்கு. இன்னொருவர் பெரிய செல்வந்தர். பெரிய பங்களாவில் ஆடம்பரமாக வசிப்பவர். தினமும் குளித்து, கோயில் அர்ச்சகரை அழைத்து பூஜை, வழிபாடுகள் செய்பவர். இருந்தும் ஏனோ செல்வந்தர் நிம்மதியில்லாமல் இருந்தார். பூலோகத்தில் இதை கவனித்த நாரதர் விஷ்ணுவிடம் சந்தேகம் கேட்டார். அதற்கு விஷ்ணு, ‘நீங்கள் பூலோகம் செல்லுங்கள். என்னுடைய இரண்டு பக்தர்களையும் சந்தித்து, என்னை விஷ்ணு அனுப்பி வைத்துள்ளார். மேல் உலகில் இப்போது விஷ்ணு ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேட்டு வரச்சொன்னார் என்று சொல்லுங்கள். அவர்கள் சொன்ன பதிலை அப்படியே என்னிடம் வந்து கூறுங்கள். நீங்கள் கேட்ட சந்தேகத்திற்கு அதில் பதில் இருக்கும்’ என்றார் விஷ்ணு. நாரதர் செல்வந்தர் வீட்டுக்குச் சென்றார். பூஜையில் இருந்த அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விஷ்ணு சொன்னதை அப்படியே சொன்னார். அதைக்கேட்டு கலகலவென சிரித்த செலவந்தர்,‘ அது எப்படி முடியும்? ஊசிதுளையில் யானையை நுழைப்பது நடக்கிற காரியமா?’ என்றார். அடுத்து தொழிலாளி பக்தரிடம் சென்றார் நாரதர். விஷ்ணு சொன்னதைச் சொன்னார். ‘ இதெல்லாம் பெரிய விஷயமா அந்தக்கடவுளுக்கு? ஒரு பெரிய ஆலமரத்தை ஒரு விதைக்குள் அடக்கியவர். இந்த உலகத்தை வாயிக்குள் விழுங்கி காட்டியவர். விஷ்ணுவில் சக்தி அளவிடக்கூடியதா, என்ன?’ என்று சொல்லி வியந்தார். இரு பக்தர்களின் பதிலை அப்படியே விஷ்ணுவிடம் நாரதர் சொன்னார். ‘உண்மையான பக்திக்கு சந்தேகம் வராது. பூர்ண நம்பிக்கையும், இறைவனே கதி என அடைக்கலம் ஆவதுதான். அது அந்த ஏழைக்கு இருந்தது. அதனால் அவன் நிம்மதி இருக்கிறான். செல்வந்தனுக்கு சந்தேகம்; விசாரணை எல்லாம் இருப்பதால் குழப்பம். குழப்பம் உள்ள மனதில் எப்படி நிம்மதி ஏற்படும்?’ என்றார் விஷ்ணு. --- தேவராஜன். ********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக