புதன், 26 செப்டம்பர், 2012

குழந்தைகள் உலகமும் ஹைமாவதி பாட்டியும் இயல், இசை, நாடகம் மற்றும் கல்விக்கு அப்பாற்பட்ட பல துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி, அந்த குழந்தைகளின் திறமைகளை வானொலி, தொலைகாட்சி, மேடை நிகழ்ச்சிகளில் வெளிபடுத்தி, அக்குழந்தைகளுக்கு தேசபக்தியையும், தெய்வபக்தியையும் வளர்த்து, 50 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது சுதோதயா சிறுவர் சங்கம். இது வடசென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ளது. இந்த சங்கத்தின் செயலாளர் செல்வி. எஸ்.வி. ஹைமாவதி தன் முதுமையிலும் குழந்தைகளின் குதுõகலத்தில் தானும் ஒரு குழந்தையாக மாறி அவர்களுடன் பழகி வருவதால் அவர் முதுமையிலும் இளமை மனசுடன் இருக்கிறார். தனக்கென்று குடும்பமோ, குழந்தைகளோ இல்லாத தனிமரமாக இருக்கிறோம் என்ற எண்ணம் எப்போதும் அவருடைய மனதில் எட்டி பார்க்காமல் செய்துவிட்டது இவரை சுற்றி மொய்க்கும் குழந்தை நட்சத்திரங்கள். சுதோதயா சங்கக் குழந்தைகளுக்கு இயல், இசை,நாடகம் வழியாக தெய்வ பக்தியையும், ஒழுக்கத்தையும் பயிற்றுவித்து, பக்தி பாடல்கள், சுலோகங்கள் கற்பித்து , பஜனை ஆகிய நற்பணிகளில் குழந்தைகளை ஈடுபட வைப்பதில் பெருமைபடுகிறார் எஸ்.வி. ஹைமாவதி . சுதோதயா சங்கம் உருவானது எப்படி என்ற கேள்விக்கு, அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்று மலரும் நினைவில் மூழ்குகிறார் ஹைமாவதி பாட்டி. அது ஒரு தீபாவளித்திருநாள். அன்று ஊரெங்கும் ஒளிமயம். குழந்தைகளின் சிரிப்பு ஒலி, பட்டாசு சத்தம், வாண வேடிக்கை இவைகளுக்கு இடையே சென்னை மயிலையில் அப்பர் சுவாமிகள் கோயில் அருகில் உள்ள சிதம்பர சுவாமிகள் இரண்டாவது தெரு எட்டாம் எண்ணுள்ள சுதோதயா என்ற வீட்டில் தம்பி, தங்கைகள் ஒன்று கூடி இயல் இசை நாடகத்தினை சிறப்பாக தயார் செய்துகொண்டிருந்தனர். கமலா புதுமைபித்தன், ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் 23.10. 1957ல் சுதோதயா சிறுவர் சங்கம் உருவானது. அன்று தொடங்கிய இந்த சிறுவர் சங்கம் நண்பர்கள் உதவியுடன் அன்று முதல் இன்று வரையிலும் நல்ல ஆன்றோர்கள், சான்றோர்கள் வாழ்த்துகள், பாராட்டுகளுடன், பல கலைஞர்களின் சந்திப்பு, பல தலைவர்கள் முன்னிலையில் நடிப்பு, கோயில்களில் பாடல் நடனம்போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றிகரமாக பொன்விழாவைக்கடந்து தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்கிறார் முதுமையின் தள்ளாமையில் மூச்சிறைக்க. ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்கிறார்: வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் எங்கள் சங்க குழந்தைகள் பங்கு கொண்டு சிறப்பித்த நிகழ்ச்சிகள் எண்ணிக்கை எண்ணிமாளாது. 1960களில் 70 குழந்தைகளுடன் செயல்பட்ட சுதோதயா சங்கம், இந்தச்சங்கத்தை நிறுவிய வேங்கட்ராமன் வசித்த வடசென்னை புது வண்ணாரப்பேட்டைக்கு மாற்றப்பட்டது. மிகவும் பின்தங்கிய பகுதியாக விளங்கிய இந்த இடத்தில் வசித்தவர்கள் இச்சங்கத்தைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகள் வரத்து குறையத்தொடங்கியது. அந்த சமயத்தில் ஒரு முறை சங்க குழந்தைகள் கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடினர். விழாவிற்கு வந்த அனைவரும் குழந்தைகளை பாராட்டினர். இந்த கந்த சஷ்டி விழாதான் வட சென்னை பகுதியில் வசித்த பெற்றோர்களை தட்டி எழுப்பியது. அதன்பிறகு நிறைய குழந்தைகள் சங்கத்தில் சேர்ந்தனர். இந்தப்பகுதியில் வசித்த பெற்றோர் கல்வியறிவு குறைந்தவர்களாகவும் குழந்தைகள் படிப்பில் ஈடுபடாமல் அந்தக்காலக்கட்டத்தில் இருந்தனர். அவர்களின் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்தவும், ஒழுக்கம், பண்பு குணங்களை வளர்க்கவும் இந்த சங்கம் பாடுபட்டது. 1975ம் ஆண்டு சென்னையில் தொலைகாட்சி நிலையம் துவங்கப்பட்டபோது முதல் நிகழ்ச்சியாக ‘கண்மணிப்பூங்கா’வில் சுதோதயா சிறுவர் சங்கம் பங்கு கொண்டது. அதன் பிறகு படிப்படியாக வானொலியில் இளையபாரதம், ரத்தினமாலை, வினாடி வினா நிகழ்ச்சிகள் என்று நுõற்றுக்கும் அதிகமான நிகழ்ச்சிகளும் தொலைகாட்சியில் பல நிகழ்ச்சிகளையும் மேடைகளில் வண்ண வண்ண நிகழ்ச்சிகளையும் நடத்தி அனைவரின் பாராட்டைப் பெற்று வளர்ந்தது. வளர்ந்துகொண்டுவருகிறது. சிறுவர் நாடகவிழா, நாடக விழா, நவமணிமாலை போன்ற மேடை விழாக்களில் எங்கள் சங்கம் சாதனைப்படைத்தது. பூவண்ணன் எழுதிய எழுத்து மாறாட்டம் என்ற நாடகத்தினை சென்னையிலும் பல மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தியுள்ளோம். 52 முறை நடைபெற்ற இந்த நாடகத்தினை ஒருமுறை தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கண்டு, ரசித்து, சங்கக்குழந்தைகளைப் பாராட்டி, பரிசும் வழங்கியுள்ளார். எங்கள் சங்கம் ஆன்மிக வழிபாட்டிலும், தேசபக்தியிலும் முன்னோடியாக உள்ளது. எங்கள் சங்க குழந்தைகள் கோயில் விழாக்களில் பங்கேற்று தெய்வபக்தி, தேசபக்தி பாடல்களை இன்றும் பாடி வருகின்றனர். காஞ்சி மகாபெரியவர் முன்பு பாடல்கள் பாடி வெள்ளி டாலர்களையும் ஆசியையும் பெற்றுள்ளனர். சமுதாய வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட எங்கள் சங்கம்,ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதியன்று குழந்தைகள் கலைநிகழ்ச்சி, பாராட்டு பரிசு என்று மட்டும் இல்லாமல் நலிவுற்ற மாணவர்களுக்கு சீருடை வழங்கி வருகிறது என்கிறார் ஹைமாவதி. - தேவராஜன். ( தினமலர்- பெண்கள் மலரில் வெளியான என் கட்டுரை) ****************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக