திங்கள், 3 செப்டம்பர், 2012

இருப்பின் இல்லாமை

இருப்பின் இல்லாமை 52/2.9.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) ஒருவர் நோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பலநாள் பிரார்த்தனை செய்தார். இருந்தும் அவர் பிழைக்கவில்லை. ஒரு மனிதனை நம்பியிருந்தால் கூட அந்த மனிதன் இயன்ற உதவியைச் செய்திருப்பார். காப்பாற்றுவார் என்று நம்பிக்கை வைத்த கடவுள் காப்பாற்றவில்லையே! உண்மையில் கடவுள் என்று ஒருவர் உண்டா உலகில்? இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, தீயவைகள் இருக்கின்றன. இவைகள் எங்கேயிருந்து வந்தன? இவற்றை தடுக்க கடவுளால் முடியாதா? கடவுளை பார்க்க முடியுமா? அவர் பேசுவதைக் கேட்க முடியுமா? வேறு எப்படி அவரது இருப்பை உணர இயலும்? இப்படி சில சூழ்நிலையில் மனதில் இப்படி கேள்விகள் அறியாமையால் எழுந்து விடுகின்றன! பரிசோதிக்கத்தக்க வகையிலோ, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறையிலோ கடவுளை யாரும் காட்ட இயலாது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் பாலத்தின் பெயர்தான் நம்பிக்கை. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கைபடி கடவுள் இருக்கிறார் என்பதை உணரலாம். கடவுள் பேசுவதை கேட்பதற்கு இயலாவிட்டாலும், அவர் வழிநடத்துதலை, சொந்த அனுபவங்கள் வழியாக அறியலாம் எதிர்பாராத சில நிகழ்வுகளை வாழ்கையில் கடந்து செல்லும் போது உணரப்படும் அனுபவத்தால் கடவுள் இருக்கிறார் என்பதை உணரமுடியுமே தவிர, விளக்கமாக சொல்ல இயலாது. கடவுள் என்பது ஒரு இருப்பின் இல்லாமை. அதை புரிந்து கொள்ள அறிவு, சிந்தனை எல்லாம் உதவாது. இருட்டு, வெளிச்சம். இதில் இருட்டு என்பது நிரந்தரம். ஆனால் வெளிச்சம் என்பதற்கான எதிர்பதம் தரும் பொருள் அல்ல அது. இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பின் இல்லாமைதான். வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, அதிக ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பல வகைகளில் வெளிச்சத்தை வகைப்படுத்த இயலும். ஆனால் இருட்டை அளக்கவோ, வகைப்படுத்தவோ இயலாது. கடவுளும் இருட்டு போலதான். அதை வரையறுக்க இயலாது. அதே சமயம் ஒரே சமயத்தில் வெளிச்சத்தையும் இருட்டையும் பார்க்க முடியாது. ஒரு இருப்பின் இல்லாமைதான் வெளிச்சமாக அல்லது இருட்டாக இருக்கிறது. வெளிச்சம் இல்லாமை தான் இருட்டு என்பது போல, உலகமும், உயிரினமும் இருக்கும் போது இந்த இருப்பின் இல்லாமையாக அதை படைத்த கடவுள் இருக்கிறார். அப்படி என்றால் கடவுள் இருப்புநிலையில் உலகமும் உயிரினமும் தெரியாது. உலகமும் உயிரினமும் தெரியும் போது கடவுள் தெரிவதில்லை. ஒரே சமயத்தில் இரண்டும் வெளிபடுவதில்லை என்ற தத்துவம் புரிந்தால் எங்கே கடவுள் காட்டு என்று யாரும் கூப்பாடுபோடவேண்டியதில்லை. தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக