புதன், 26 செப்டம்பர், 2012

நாகத்தின் தலையில் நாமம் வந்தது எப்படி?

நாகத்தின் தலையில் நாமம் வந்தது எப்படி? /55/ 23.9.2012 (தினமலர் வாரமலர்) ராமன் இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்கும் பணியில் வானரங்கள் ஈடுபட்டன. அந்தப் பணியில் அணிலும் ஈடுபட்டது. அதனுடைய சேவையை பாராட்டிய ராமர், அணிலை வாஞ்சையோடு வருடிக்கொடுத்தார். அந்த அடையாளம்தான் அதன் உடம்பில் மூன்று கோடுகளானது. இப்படி ஒரு கர்ணபரம்பரை கதை உண்டு. இக்கதையின் நீதி: நீ பிறருக்கு உன்னால் முடிந்தளவு உதவினால் கடவுளின் அருள் உனக்கு நிச்சயம் உண்டு என்பது தான். அணிலுக்கு மூன்று கோடு வந்தது போல, நல்ல பாம்புக்கு தலையில் நாமம் வந்தது பற்றி செவிவழிக்கதை உண்டு. விஷமுள்ள நாகமான காளிங்கனை அழிக்க வந்தார் கிருஷ்ணர். “ உன் விஷம் யமுனை நதியைப் பாழாக்குகிறது. மாடுகளும் மாடு மேய்ப்பவர்களும் இறக்கவேண்டி வருகிறது. நீ இந்த நதியை விட்டுப் போய்விடு!” என்றார் கிருஷ்ணர். காளிங்கன் மறுத்தது. “இதுதான் எனக்குப் பாதுகாப்பான இடம். நதியை விட்டு நான் போய்விட்டால், என்னை கருடன் எளிதாக வந்து தாக்குவான். அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு நீரை விஷமாக்குவதில் விருப்பமில்லை. ஆனால், அதற்கு நான் என்ன செய்வது? எங்கே போவது?” என்றது. கெட்டவன் ஏன் உருவாகிறான் என்பது குறித்து நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. யாருமே பிறந்தவுடன் குற்றவாளி ஆகிவிடுவதில்லை. தேவையும், ஆசையும், சூழ்நிலையும்தான் ஒருவனைக் குற்றவாளி ஆக்குகிறது. இதை நாம் உணர்வதற்குள், அது நமக்குப் பழகிப் போய்விடுகிறது. காளிங்கனுக்கு கருடன்மீது பயம். கருடனால் தனது உயிருக்கு தீங்கு ஏற்படுமோ என்ற அச்சம். அதனால் யமுனை நதியிலேயே இருக்க கிருஷ்ணரிடம் அனுமதி வேண்டியது. அதே நேரம், காளிங்க நாகமானது தனது விஷத்தன்மையால் நதியையே விஷமாக்கிறது. கிருஷ்ணர் இதை உணர்ந்தார். காளிங்கனுக்கும், யமுனைவாசிகளுக்கு நல்லது செய்ய நினைத்த கிருஷ்ணர், தன் திருப்பாதத்தின் சுவடுகளை காளிங்கனின் தலை மீது பதித்தார். விமோசனம் கொடுத்தார். அந்தப் பாதச் சுவடுதான் நாகப்பாம்பின் மீது காணப்படும் நாமம் அடையாளம். பிறருக்கு தீங்கு செய்யும் காளிங்கனை கிருஷ்ணர் கொன்று விட்டதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் கிருஷ்ணர் காளிங்கனுக்கு வாழ்க்கையிலிருந்து விடுதலை அளிக்கிறார். பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் காப்பாற்றப்பட வேண்டியவர்கள்தான் என்பதை கிருஷ்ணர் காளிங்கன் தலைமீது திருபாதம் வைத்து உணர்த்துகிறார். நாமோ தப்பு செய்கிறவர்களை திருத்தாமல், அடிக்கிறோம், உதைக்கிறோம், தண்டனை கொடுக்கிறோம்; சிறையில் தள்ளுகிறோம். மனிதன் மனிதனுக்கு தரும் தண்டனை இது. ஆனால் கடவுளின் தண்டனை விமோசனம் என்கிற விடுதலை! - தேவராஜன். *********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக