ஞாயிறு, 16 டிசம்பர், 2012

திருநாமத்தின் மகிமை!/59/ 21.10.2012/

திருநாமத்தின் மகிமை!/59/ 21.10.2012/ இறைவனும் அவருடைய திருநாமமும் வெவ்வேறு அல்ல. திருநாமம் என்பதே இறைவன்தான்! இறைவனுடைய திருநாமம் மனதில் நிரம்பியவுடன், உள்ளம் இறைவனின் சந்நிதியாகிடும். நமது சிந்தனைகளை இறைவன்பால் நிறுத்த, அவருடைய திருநாமத்தை இடையறாமல் நினைவு கூர்வது எளிமையான வழி. ‘திருநாமத்தின் மீது உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து, கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முக்திநெறிக்குக் கூட்டுவிப்பது திருநாமம். அது நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனாகிய சிவபெருமானின் திருநாமமான நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தாகும். இம்மந்திரம் அனைத்து உயிர்களின் துன்பங்களையும் சொன்னமாத்திரத்தில் நீக்கவல்ல அற்புத மந்திரமாகும்’ என்கிறார் திருஞானசம்பந்தர். ‘நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க என்று தொடங்கி, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து’ என்கிறார் மாணிக்கவாசகர். ‘இம்மந்திரத்தை பொருள் உணர்ந்து சொல்லுவோர் சிவனடிக்கீழ் ஆனந்தம் பெறுவது உறுதி. இம்மந்திரத்தை பொருள் உணர்ந்தோ உணராமலோ எப்படி சொல்லினும் உயர்வு உறுதி’ என்கிறார் அவர். திருநாமம் ஒருவனை ஆன்மிக வாழ்வின் உச்ச நிலைக்கு இட்டுச் செல்கிறது. இருளில் மூழ்கிய குருட்டு ஜீவனுக்கு வெளிச்சமாக இருக்கிறது. திருநாமத்தின் சக்தி வெல்ல முடியாதது. வெல்லற்கரியது. மனதில் திருநாமம் நிறையும்போது மனம் பணிவுள்ளதாகவும் மென்மையாகவும் இணக்கமுள்ளதாகவும் மாறுகிறது. நாம மகிமையால் மனமே இறைவனாக மாறுகிறது. திருநாமத்தில் தஞ்சம் அடைந்தவன் பல அதிசயங்களை ஆற்ற முடியும். நீங்கள் எந்த இனம், ஜாதி, கொள்கை கொண்டவராயினும் இறைவனின் நாமத்தை சொல்லி சொல்லி திருநாமத்துடன் இனிய உறவை ஏற்படுத்தி கொள்ளுங்கள். நாமம் என்னும் நதியில் நாளும் மூழ்கும் உங்கள் ஆன்மா துõய்மை அடைவது மட்டும் அல்லாமல், யாவும் அறிந்த எங்கும் நிறைந்த இறைவனின் அருளாலும், அன்பாலும் ஈர்க்கப்படும் என்பது உறுதி. திருநாமத்தை இடையறாமல் ஓதும் பயிற்சியினால் ஆசாபாசங்களில் அலைபாயும் மனதை இறைவனின் நினைப்பில் கட்டிப்போடும். திருநாமத்தை ஒருவன் சிரத்தை, நம்பிக்கை, மனதை ஒருநிலையில் வைத்துக்கொண்டு தியானம் செய்யும் போது முகமும் உடலும் ஒரு அசாதாரண ஒளியுடன் பிரகாசிக்கும். இமைப்பொழுதும் நீங்காமல் திருநாமத்தை சொல்ல முடியாவிட்டாலும் கூட, காலையில் எழும்போதும், இரவு துõங்கச் செல்லும்போதும், இடையில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ‘நமச்சிவாய’ என்று சொல்லி வாருங்கள்! வாழ்க்கை சுகப்படும். - தேவராஜன் *****************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக