ஞாயிறு, 16 டிசம்பர், 2012

ஆன்மிகம் கட்டுரைத் தொடரின் நான்காம் பாகம்

இருப்பின் இல்லாமை- 52/2.9.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) தினமலர்* வாரமலரில் நான் எழுதி வரும் ஆன்மிகம் கட்டுரைத் தொடரின் நான்காம் பாகம் (52 முதல் 70 முடிய) ******************** ********************** ஒருவர் நோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பலநாள் பிரார்த்தனை செய்தார். இருந்தும் அவர் பிழைக்கவில்லை. ஒரு மனிதனை நம்பியிருந்தால் கூட அந்த மனிதன் இயன்ற உதவியைச் செய்திருப்பார். காப்பாற்றுவார் என்று நம்பிக்கை வைத்த கடவுள் காப்பாற்றவில்லையே! உண்மையில் கடவுள் என்று ஒருவர் உண்டா உலகில்? இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, தீயவைகள் இருக்கின்றன. இவைகள் எங்கேயிருந்து வந்தன? இவற்றை தடுக்க கடவுளால் முடியாதா? கடவுளை பார்க்க முடியுமா? அவர் பேசுவதைக் கேட்க முடியுமா? வேறு எப்படி அவரது இருப்பை உணர இயலும்? இப்படி சில சூழ்நிலையில் மனதில் இப்படி கேள்விகள் அறியாமையால் எழுந்து விடுகின்றன! பரிசோதிக்கத்தக்க வகையிலோ, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறையிலோ கடவுளை யாரும் காட்ட இயலாது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் பாலத்தின் பெயர்தான் நம்பிக்கை. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கைபடி கடவுள் இருக்கிறார் என்பதை உணரலாம். கடவுள் பேசுவதை கேட்பதற்கு இயலாவிட்டாலும், அவர் வழிநடத்துதலை, சொந்த அனுபவங்கள் வழியாக அறியலாம் எதிர்பாராத சில நிகழ்வுகளை வாழ்கையில் கடந்து செல்லும் போது உணரப்படும் அனுபவத்தால் கடவுள் இருக்கிறார் என்பதை உணரமுடியுமே தவிர, விளக்கமாக சொல்ல இயலாது. கடவுள் என்பது ஒரு இருப்பின் இல்லாமை. அதை புரிந்து கொள்ள அறிவு, சிந்தனை எல்லாம் உதவாது. இருட்டு, வெளிச்சம். இதில் இருட்டு என்பது நிரந்தரம். ஆனால் வெளிச்சம் என்பதற்கான எதிர்பதம் தரும் பொருள் அல்ல அது. இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பின் இல்லாமைதான். வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, அதிக ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பல வகைகளில் வெளிச்சத்தை வகைப்படுத்த இயலும். ஆனால் இருட்டை அளக்கவோ, வகைப்படுத்தவோ இயலாது. கடவுளும் இருட்டு போலதான். அதை வரையறுக்க இயலாது. அதே சமயம் ஒரே சமயத்தில் வெளிச்சத்தையும் இருட்டையும் பார்க்க முடியாது. ஒரு இருப்பின் இல்லாமைதான் வெளிச்சமாக அல்லது இருட்டாக இருக்கிறது. வெளிச்சம் இல்லாமை தான் இருட்டு என்பது போல, உலகமும், உயிரினமும் இருக்கும் போது இந்த இருப்பின் இல்லாமையாக அதை படைத்த கடவுள் இருக்கிறார். அப்படி என்றால் கடவுள் இருப்புநிலையில் உலகமும் உயிரினமும் தெரியாது. உலகமும் உயிரினமும் தெரியும் போது கடவுள் தெரிவதில்லை. ஒரே சமயத்தில் இரண்டும் வெளிபடுவதில்லை என்ற தத்துவம் புரிந்தால் எங்கே கடவுள் காட்டு என்று யாரும் கூப்பாடுபோடவேண்டியதில்லை. - தேவராஜன். *********************************************************************************************************** ************************** ********************************************************************************************************* பஞ்ச மகா புண்ணியம்!/ 53/ 9.9.2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்) நம் சமயத்தில் இல்லறம் என்பது மனித வாழ்வில் இரண்டாம் நிலை. இல்லற வாழ்வில் ஈடுபட்டு அறம் தவறாமல் தான தர்மங்களைச் செய்து வாழ்தல், மக்களைப் பெற்றெடுத்து கல்வி புகட்டி, நன்னிலை அடையச் செய்தல். அவர்களுக்கு மணம் செய்வித்து நல்வாழ்வு வாழச் செய்வதுமான காலம். இந்தக்காலப்பகுதி ஏறகுறையஇருபத்தைந்துக்கு மேற்பட்டு அறுபதுக்கு உட்பட்ட காலம். இந்தக்கால இடைவெளியில் தான் ஒரு இல்லறத்தான் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். பஞ்ச மகா யக்ஞங்கள் செய்வது சிறந்தது என சமயம் கூறுகிறது. தேவர்களின் ப்ரீதிக்காக ஆற்றப்படும் யாகங்கள், பூஜைகள். தேவர்களின் பிரியத்திற்காக நம்மால் முடிந்த ஸ்தோதிரங்கள் சொல்லி துதி பாடுவது தேவ யக்ஞம். இன்வார்த்தைகள் பேசுதல், பிறரை வாக்கால், மனதால், செயலால், துன்புறுத்தாமை, விருந்தோம்பல் முதலியன மனுஷ்ய யக்ஞம். பித்ருக்களுக்கான கடன், அமாவாசை தர்பணங்கள், திதிகள் முதலியன பித்ரு யக்ஞம். வேதம் கற்றல், அதை பிறருக்கு கற்பித்தல், பிரம்ம ஞானத்தை பிறருக்கு எடுத்துரைத்தல் ப்ரம்ம யக்ஞம். எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட கர்மம் பூத யக்ஞம் அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகின்ற காரியம். நம் அன்றாட வாழ்வில், நம் ஜீவனத்திற்காக பல நுண்ணுயிர்கள், பூச்சிகள் முதலியன கொல்லப்படுகின்றன. நம் மூச்சுக்காற்றில் பல கிருமிகள் மடிகின்றன. நம் ஆரோக்கிய வாழ்விற்காக நம்முள்ளும் புறமும் வாழும் பல கிருமிகளை நாசம் செய்கிறோம். நடக்கும் போது சிறிய உரு கொண்ட பூச்சிகள் கொல்லப்படுகின்றன. நம் பசிக்காக வெட்டப்படும் மரங்கள், செடிகள், காய்கள் கனிகளில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றிற்காக செய்யும் பிராயச்சித்த கர்மாவாக பூத யக்ஞம் செய்யப்படுகிறது. தானம் தர்மம் செய்தல் உயர்ந்த பண்பு, புண்ய காரியமாகவும், பலனை எதிர்பார்த்து செய்தாலும் கூட பலன் தர வல்லது என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட தான தர்மங்கள், மனுஷனுக்கு செய்யும் போது, அது மனுஷ கர்மாவாக பாவிக்கப்படுகிறது. தெய்வத்திற்கும் தேவர்களுக்கும் செய்யப்படவேண்டிய கர்மா, யக்ஞங்கள் யாகங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. திருமூலர் தம் திருமந்திரத்தில் யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. எனக்கூறுகிறார். -தேவராஜன். *********************************************************************************************************** ********************************************** ******************************************************************************************************** கடவுளுக்கு விருப்பமான பக்தி/ 54/16.9.12. பக்தி செய்வது என்பது காவி அணிவது, மந்திரங்கள் ஜெபித்துக்கொண்டிருப்பது, பூஜை புனஸ்காரங்கள் செய்வது மட்டும் அல்ல. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைப்பதும், அவனே சரணம் என்று இருப்பதே கடவுளுக்கு விருப்பமான பக்தி. பக்தி செய்வது என்பது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கடவுள் என்பது இருக்கா, இல்லையா என்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இதை விளக்கும் ஒரு சின்னக்கதை: ஒரு ஊரில் இரண்டு பக்தர்கள் இருந்தார்கள். ஒருவர் சாதாரண தொழிலாளி. வீட்டில் சாமிபடத்துக்கு விளக்கேற்றி, கும்பிட்டுவிட்டு அவர் வேலையை கவனிக்க சென்றுவிடுவார். எல்லாம் கடவுள் செயல் என்பதில் உறுதியாக இருப்பவர். நிம்மதியான வாழ்க்கை அவருக்கு. இன்னொருவர் பெரிய செல்வந்தர். பெரிய பங்களாவில் ஆடம்பரமாக வசிப்பவர். தினமும் குளித்து, கோயில் அர்ச்சகரை அழைத்து பூஜை, வழிபாடுகள் செய்பவர். இருந்தும் ஏனோ செல்வந்தர் நிம்மதியில்லாமல் இருந்தார். பூலோகத்தில் இதை கவனித்த நாரதர் விஷ்ணுவிடம் சந்தேகம் கேட்டார். அதற்கு விஷ்ணு, ‘நீங்கள் பூலோகம் செல்லுங்கள். என்னுடைய இரண்டு பக்தர்களையும் சந்தித்து, என்னை விஷ்ணு அனுப்பி வைத்துள்ளார். மேல் உலகில் இப்போது விஷ்ணு ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேட்டு வரச்சொன்னார் என்று சொல்லுங்கள். அவர்கள் சொன்ன பதிலை அப்படியே என்னிடம் வந்து கூறுங்கள். நீங்கள் கேட்ட சந்தேகத்திற்கு அதில் பதில் இருக்கும்’ என்றார் விஷ்ணு. நாரதர் செல்வந்தர் வீட்டுக்குச் சென்றார். பூஜையில் இருந்த அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விஷ்ணு சொன்னதை அப்படியே சொன்னார். அதைக்கேட்டு கலகலவென சிரித்த செலவந்தர்,‘ அது எப்படி முடியும்? ஊசிதுளையில் யானையை நுழைப்பது நடக்கிற காரியமா?’ என்றார். அடுத்து தொழிலாளி பக்தரிடம் சென்றார் நாரதர். விஷ்ணு சொன்னதைச் சொன்னார். ‘ இதெல்லாம் பெரிய விஷயமா அந்தக்கடவுளுக்கு? ஒரு பெரிய ஆலமரத்தை ஒரு விதைக்குள் அடக்கியவர். இந்த உலகத்தை வாயிக்குள் விழுங்கி காட்டியவர். விஷ்ணுவில் சக்தி அளவிடக்கூடியதா, என்ன?’ என்று சொல்லி வியந்தார். இரு பக்தர்களின் பதிலை அப்படியே விஷ்ணுவிடம் நாரதர் சொன்னார். ‘உண்மையான பக்திக்கு சந்தேகம் வராது. பூர்ண நம்பிக்கையும், இறைவனே கதி என அடைக்கலம் ஆவதுதான். அது அந்த ஏழைக்கு இருந்தது. அதனால் அவன் நிம்மதி இருக்கிறான். செல்வந்தனுக்கு சந்தேகம்; விசாரணை எல்லாம் இருப்பதால் குழப்பம். குழப்பம் உள்ள மனதில் எப்படி நிம்மதி ஏற்படும்?’ என்றார் விஷ்ணு. --- தேவராஜன். *************************************************************************************************** ************************************** ****************************************************************************************************** நாகத்தின் தலையில் நாமம் வந்தது எப்படி? /55/ 23.9.2012 ராமன் இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்கும் பணியில் வானரங்கள் ஈடுபட்டன. அந்தப் பணியில் அணிலும் ஈடுபட்டது. அதனுடைய சேவையை பாராட்டிய ராமர், அணிலை வாஞ்சையோடு வருடிக்கொடுத்தார். அந்த அடையாளம்தான் அதன் உடம்பில் மூன்று கோடுகளானது. இப்படி ஒரு கர்ணபரம்பரை கதை உண்டு. இக்கதையின் நீதி: நீ பிறருக்கு உன்னால் முடிந்தளவு உதவினால் கடவுளின் அருள் உனக்கு நிச்சயம் உண்டு என்பது தான். அணிலுக்கு மூன்று கோடு வந்தது போல, நல்ல பாம்புக்கு தலையில் நாமம் வந்தது பற்றி செவிவழிக்கதை உண்டு. விஷமுள்ள நாகமான காளிங்கனை அழிக்க வந்தார் கிருஷ்ணர். “ உன் விஷம் யமுனை நதியைப் பாழாக்குகிறது. மாடுகளும் மாடு மேய்ப்பவர்களும் இறக்கவேண்டி வருகிறது. நீ இந்த நதியை விட்டுப் போய்விடு!” என்றார் கிருஷ்ணர். காளிங்கன் மறுத்தது. “இதுதான் எனக்குப் பாதுகாப்பான இடம். நதியை விட்டு நான் போய்விட்டால், என்னை கருடன் எளிதாக வந்து தாக்குவான். அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு நீரை விஷமாக்குவதில் விருப்பமில்லை. ஆனால், அதற்கு நான் என்ன செய்வது? எங்கே போவது?” என்றது. கெட்டவன் ஏன் உருவாகிறான் என்பது குறித்து நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. யாருமே பிறந்தவுடன் குற்றவாளி ஆகிவிடுவதில்லை. தேவையும், ஆசையும், சூழ்நிலையும்தான் ஒருவனைக் குற்றவாளி ஆக்குகிறது. இதை நாம் உணர்வதற்குள், அது நமக்குப் பழகிப் போய்விடுகிறது. காளிங்கனுக்கு கருடன்மீது பயம். கருடனால் தனது உயிருக்கு தீங்கு ஏற்படுமோ என்ற அச்சம். அதனால் யமுனை நதியிலேயே இருக்க கிருஷ்ணரிடம் அனுமதி வேண்டியது. அதே நேரம், காளிங்க நாகமானது தனது விஷத்தன்மையால் நதியையே விஷமாக்கிறது. கிருஷ்ணர் இதை உணர்ந்தார். காளிங்கனுக்கும், யமுனைவாசிகளுக்கு நல்லது செய்ய நினைத்த கிருஷ்ணர், தன் திருப்பாதத்தின் சுவடுகளை காளிங்கனின் தலை மீது பதித்தார். விமோசனம் கொடுத்தார். அந்தப் பாதச் சுவடுதான் நாகப்பாம்பின் மீது காணப்படும் நாமம் அடையாளம். பிறருக்கு தீங்கு செய்யும் காளிங்கனை கிருஷ்ணர் கொன்று விட்டதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் கிருஷ்ணர் காளிங்கனுக்கு வாழ்க்கையிலிருந்து விடுதலை அளிக்கிறார். பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் காப்பாற்றப்பட வேண்டியவர்கள்தான் என்பதை கிருஷ்ணர் காளிங்கன் தலைமீது திருபாதம் வைத்து உணர்த்துகிறார். நாமோ தப்பு செய்கிறவர்களை திருத்தாமல், அடிக்கிறோம், உதைக்கிறோம், தண்டனை கொடுக்கிறோம்; சிறையில் தள்ளுகிறோம். மனிதன் மனிதனுக்கு தரும் தண்டனை இது. ஆனால் கடவுளின் தண்டனை விமோசனம் என்கிற விடுதலை! - தேவராஜன். ************************************************************************************************** ******************************************************** ***************************************************************************************************** எட்டு வகை தானம்/ 56/ 30.9.2012/ *** ஆயிரம் காலமாக இருக்கும் எத்தனையோ கோயில்களைக் கட்டியவர்கள் யார் என்ற வரலாறு இருப்பதில்லை. ஆனால், அந்தக்கோயிலில் இருக்கும் சாதாரண மின் விளக்கில் கூட அன்பளிப்பு இன்னார் உபயம் என்று எழுதி இருக்கும். தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும். அந்த பொருள் மீது நாம் உரிமை கூறக் கூடாது. இன்னார் உபயம் என்று எழுதுவது விதுரர் நீதி படி தானம் ஆகாது. நாம் எந்த நோக்கத்தில் தானம் தர்மம் செய்கிறோமோ அந்த நோக்கம்தான் நிறைவேறும். நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும். ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது. மைமோனிடீஸ் (1135 – 1204) ) யூத மதத்தைச் சேர்ந்த தத்துவ ஞானி தானத்தின் எட்டு படிகளைப்பற்றி விளக்குகிறார். 1.மனத்திற்குப் பிடிக்காமலோ, மன வருத்தத்தோடோ கொடுப்பது. இந்த தானம் கையால் கொடுக்கும் தானம். இருதயத்திலிருந்து வரும் தானம் அல்ல. 2.சந்தோஷத்தோடு, ஆனால் கேட்பவர் தேவைக்குக்குறைவாகக்கொடுக்கும் தானம். 3.சந்தோஷமாகவும், தேவையைப் பூர்த்திசெய்யும் வண்ணம் ஆனால் கேட்ட பிறகு கொடுக்கும் தானம். 4.சந்தோஷமாகவும், கேட்காமலேயே தேவைக்கேற்ற தானத்தை தானம் பெறுபவர் கையில் கொடுத்து அவரை வெட்கப்படும்படி செய்யும் தானம். 5. யாருக்காக தானம் கொடுக்கப்பட்டது என்ற தெரியாமலேயே தானம் செய்வது. முன்னோர்களில் சிலர் தங்கள் வீட்டு முற்றங்களில் பண மூட்டைகளை தொங்கவிடுவார்களாம். பணம் தேவையுள்ளவர்கள் கொடுத்தவருக்குத் தெரியாமலேயே எடுத்துச் செல்வார்களாம். 6.தானம் கொடுத்தவரின் பெயர் விளம்பரப்படுத்தாமலேயே கொடுக்கப்படும் தானம். முந்தைய காலத்தில் சில நல்லவர்கள் யாருக்கு உதவி தேவையோ அவர்கள் வீட்டுக்கு தானப் பொருள்களை அனுப்புவது உண்டு. யார் அனுப்பினர் என்பது பெறுபவருக்குத் தெரியாது. 7.கொடுப்பவருக்கும் யாருக்கு கொடுக்கிறோம் என்று தெரியாது. வாங்கியவருக்கும் யாரிடமிருந்து வந்தது என்றுதெரியாது. இந்த தானம் சிறந்தது. ஒரு பொது இடத்தில் தானப் பொருள் கொடுக்கப்படும். வேண்டியவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றபடவிநியோகிக்கப்படும். 8.எல்லாவற்றிற்க்கும் மேலான உயர்ந்த தானம், ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகள். தேவை என்று வருகிறவர்களுக்கு ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ கற்றுக்கொள்ள வசதிகள் செய்வது மிகப் பெரிய தானம். இந்த தானம்தான் அவர்களை மற்றவர்களிடம் கை ஏந்தி நிற்காத நல்ல தன்மானமுள்ள மனிதர்களாக மாற்றும். - தேவராஜன். **************************************************************************************************** ********************************************************************** ******************************************************************************************************** பிறப்புக்கு முன்பும் இறப்புக்குப் பிறகும் /57/ 7.10.2012 *** இறைவனின் படைப்பில் உயர்ந்த படைப்பு மனிதன். இறைவனால் படைக்கப்பட்ட இந்த உயிருக்கு உலகில் பிறப்பதற்கு முன்பும், அந்த உயிர் உலகைவிட்டு புறப்பட்டப்பிறகும் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றி சாஸ்திரங்கள் சொல்கின்றன. அவற்றை நாம் முழுமையாக பின்பற்றினால், நம் உயிர் நிச்சயமாக வாழும் போதும், வாழ்க்கையை விட்டப்பிறகும் இறைவனின் திருவடிகளைப் பற்றும். ஒரு பெண் கருவுற்ற மூன்று மாதங்களில் செய்யப்படும் சடங்கு பும்ஸவனம். கருவில் இருக்கும் சிசுக்கு எந்தபாதிப்பும் வரக்கூடாது என்று இறைவனை பிரார்த்திப்பது இந்த சடங்கின் நோக்கம். கருவுற்ற பெண்ணுக்கு நான்கு அல்லது எட்டாவது மாதத்தில் செய்யப்படும் சடங்கு சீமந்தம். குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேவர்களை பிரார்த்தனை செய்வதாகும். மேலே குறிப்பிட்ட இரண்டும் குழந்தை பிறப்பதற்கு முன்பாக செய்யப்படும் சடங்குகள். குழந்தைப் பிறந்தப்பிறகு, பிறந்த குழந்தை நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி ஜாதகர்மம், பெயர் சூட்டும் நாமகரணம், முதலில் குழந்தை வெளியே செல்லும்போது நிஷ்க்ராமணம், ஆறுமாதத்தில் குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது அன்னபிப்ராசனம், பள்ளிக்குச் செல்லும்போது வித்யாரம்பம், காதுகுத்தும்போது கர்ணபூஷணம் இப்படி பல சடங்குகள் ஆரம்பித்து, திருமணம், சங்கற்பம், புண்யாவாசனம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் என வாழும்போதும் செய்யப்படும் சடங்குகள் பல. அவற்றின் நன்மைகளும் பல. இறந்தப்பிறகும் ஒரு உயிருக்கு அபரக்கிரிகை என்ற சடங்கு செய்ய வேண்டும். மனிதன் இறந்தப்பிறகு அவன் ஆன்மா நலம் பெறவதற்கு அவரது மகன்கள் செய்யும் சடங்கு இது. ஒருவர் இறக்கும் தருவாயில் இருக்கும் போது, நாம் அவர்மீது கொண்ட அன்பு, பாசத்தினால், அவர்ஆன்மா பிரியும் நேரத்தில் அழுது, புலம்பி, அவரை உறவு முறை சொல்லி அழைத்து, அந்த ஆன்மாவை நிம்மதியாக இறைவனை நாட விடாது நிலைகுலையச் செய்யும் தவறைச் செய்து விடுகின்றோம். இப்படி செய்வதைத் தவிர்த்து, நாம் எல்லோரும் அந்நேரத்திலாவது குலதெய்வங்களை வழிபட்டு அந்த ஆன்மாவின் ஈடேற்றத்திற்காக பிரார்தனை செய்தால் அந்த ஆன்மாவுக்கு நலம் சேர்க்கும். பிறகு, உடலுக்கு செய்யும் இறுதிக்கிரியைகள் மூலம் அந்த ஆன்மாவானது அந்த உடலைத் தாங்கி நின்ற காலத்தில் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று சாந்தி பெறும். இந்த சடங்குகளை எல்லாம் நாம் செய்யும் போது உடலை விட்டு பிரிந்த ஆன்மாவானது இவ்வுலகத்தில் பெற்றிருந்த ஆசாபாசங்களை மறந்து, இறைநாட்டம் கொண்டதாகி இறைவனை நாடி நிற்கும். அந்த நிலையில் இறைவனின் அருள் அந்த ஆன்மாவுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். - தேவராஜன். ******************************************************************************************************* ******************************************************** ********************************************************************************************************** இப்படிதான் இருக்கனும் பக்தி! /58/ 14.10.2012 *** கடவுள் பக்தியும், நற்செயல்கள் செய்வதும் ஒரு முகத்தில் இருக்கும் இரண்டு கண்கள் போன்றவை. இரு கண்கள் பார்க்கும் காட்சி வெவ்வேறாக இருப்பதில்லை. ஒழுக்கமான வாழ்க்கை, நற்பண்புகள் , நல்ல உழைப்பும் கொண்டிருப்பது போலவே, கடவுள் பக்தியும் , நல்ல செயல்களும் கொண்டிருக்க வேண்டும். கடவுள் மீது நம்பிக்கை கொண்டு விட்டு, தான் செய்யும் செயல்களில் நற்பண்புகள் வெளிப்படவில்லை எனில், கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் எந்த ஓர் அர்த்தமும் இருக்காது. நான் ஒருவரை மதிக்கிறேன்; அன்பு செலுத்துகிறேன். ஆனால், அவர் சொல்வதை எதையும் கேட்க மாட்டேன்; செய்ய மாட்டேன் என்றால் எப்படி இருக்கும்? கடவுளை நம்புகிறவர், அவரை வணங்குபவர் கடவுள் கட்டளையிட்ட நல்ல காரியங்களை செய்யாமல் அலட்சியமாக இருப்பது, உண்மையாக கடவுளை நம்பியதாக இருக்காது. ஒருவர் கடவுள் மீது நம்பிக்கை கொள்வதுடன் தன்னுடைய செயல்பாடுகளிலும் சிறந்த நற்செயல்களை வெளிப்படுத்த வேண்டும். நற்செயல்கள் என்றால், உண்மை பேசுவது, நேர்மையாக இருப்பது, கருணைக்காட்டுவது, தர்மம் செய்வது போன்றவைகள். ஒருவர் பொறுமை, நேர்மை, நியாயப்படி தன்னுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு, கடவுள் மீது பற்றும், பக்தியும், நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படிப்பட்ட பக்தியே கடவுளை உணர்வதற்கும், கடவுளின் அருளை அடைவதற்கும் வழிசெய்யும். வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையிலும், எந்த நிலையிலும் தினமும் செய்யும் செயல்களில் கடவுளுக்கு விருப்பமான நல்ல செயல்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் இதை இடைவிடாது தொடர்ந்து செய்யப்பட வேண்டும். எந்த ஒரு நல்லசெயலும் அது எவ்வளவு சிறிதாயினும் கடவுள் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக, கடவுளுக்காக இடையில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து செய்யப்படுவதே கடவுளிடத்தில் நான் கொண்டிருக்கும் பிரியத்தையும், ஈடுபாட்டையும் உணர்த்துவதாக அமையும். இத்கைய செயல்கள் மூலமே கடவுள் நமக்கு பரிசாக அளிக்கும் சொர்க்கத்தை பெறமுடியும். கடவுள் கோயிலில் சிலையாக இருக்கிறார். நாம் செய்வதெல்லாம் அவருக்குத் தெரியவாப்போகிறது. அப்படியே தெரிந்தாலும் நேரில் வந்து தடியை எடுத்து அடிக்கவா போகிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கை நெறி தவறி, செய்ய கூடாத செயல்களில் ஈடுபடக்கூடாது. கடவுள் நம்பிக்கை என்பது எப்போதும் கடவுள் நம்முடனேயே இருக்கிறார்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கவனிக்கிறார்; சாட்சியாக இருந்து நமக்கு நல்ல தீர்ப்பு வழங்குகிறார் என்று எண்ண வேண்டும். - தேவராஜன். ********************************************************************************************************* *********************************************** ************************************************************************************************************ திருநாமத்தின் மகிமை!/59/ 21.10.2012/ இறைவனும் அவருடைய திருநாமமும் வெவ்வேறு அல்ல. திருநாமம் என்பதே இறைவன்தான்! இறைவனுடைய திருநாமம் மனதில் நிரம்பியவுடன், உள்ளம் இறைவனின் சந்நிதியாகிடும். நமது சிந்தனைகளை இறைவன்பால் நிறுத்த, அவருடைய திருநாமத்தை இடையறாமல் நினைவு கூர்வது எளிமையான வழி. ‘திருநாமத்தின் மீது உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து, கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முக்திநெறிக்குக் கூட்டுவிப்பது திருநாமம். அது நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனாகிய சிவபெருமானின் திருநாமமான நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தாகும். இம்மந்திரம் அனைத்து உயிர்களின் துன்பங்களையும் சொன்னமாத்திரத்தில் நீக்கவல்ல அற்புத மந்திரமாகும்’ என்கிறார் திருஞானசம்பந்தர். ‘நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க என்று தொடங்கி, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து’ என்கிறார் மாணிக்கவாசகர். ‘இம்மந்திரத்தை பொருள் உணர்ந்து சொல்லுவோர் சிவனடிக்கீழ் ஆனந்தம் பெறுவது உறுதி. இம்மந்திரத்தை பொருள் உணர்ந்தோ உணராமலோ எப்படி சொல்லினும் உயர்வு உறுதி’ என்கிறார் அவர். திருநாமம் ஒருவனை ஆன்மிக வாழ்வின் உச்ச நிலைக்கு இட்டுச் செல்கிறது. இருளில் மூழ்கிய குருட்டு ஜீவனுக்கு வெளிச்சமாக இருக்கிறது. திருநாமத்தின் சக்தி வெல்ல முடியாதது. வெல்லற்கரியது. மனதில் திருநாமம் நிறையும்போது மனம் பணிவுள்ளதாகவும் மென்மையாகவும் இணக்கமுள்ளதாகவும் மாறுகிறது. நாம மகிமையால் மனமே இறைவனாக மாறுகிறது. திருநாமத்தில் தஞ்சம் அடைந்தவன் பல அதிசயங்களை ஆற்ற முடியும். நீங்கள் எந்த இனம், ஜாதி, கொள்கை கொண்டவராயினும் இறைவனின் நாமத்தை சொல்லி சொல்லி திருநாமத்துடன் இனிய உறவை ஏற்படுத்தி கொள்ளுங்கள். நாமம் என்னும் நதியில் நாளும் மூழ்கும் உங்கள் ஆன்மா துõய்மை அடைவது மட்டும் அல்லாமல், யாவும் அறிந்த எங்கும் நிறைந்த இறைவனின் அருளாலும், அன்பாலும் ஈர்க்கப்படும் என்பது உறுதி. திருநாமத்தை இடையறாமல் ஓதும் பயிற்சியினால் ஆசாபாசங்களில் அலைபாயும் மனதை இறைவனின் நினைப்பில் கட்டிப்போடும். திருநாமத்தை ஒருவன் சிரத்தை, நம்பிக்கை, மனதை ஒருநிலையில் வைத்துக்கொண்டு தியானம் செய்யும் போது முகமும் உடலும் ஒரு அசாதாரண ஒளியுடன் பிரகாசிக்கும். இமைப்பொழுதும் நீங்காமல் திருநாமத்தை சொல்ல முடியாவிட்டாலும் கூட, காலையில் எழும்போதும், இரவு துõங்கச் செல்லும்போதும், இடையில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ‘நமச்சிவாய’ என்று சொல்லி வாருங்கள்! வாழ்க்கை சுகப்படும். - தேவராஜன் ******************************************************************************************************** ****************************************************************** ************************************************************************************************************ செல்வம் சினிமா மாதிரி/ 60/ 28.10.2012 நாம் சேர்த்து வைக்கும்செல்வம் நிலையானது அல்ல. அது வரும், இருக்கும், போகும். செல்வம் இருக்கும் போதே அதை நல்வழிகளில் செலவிட வேண்டும். ‘கூத்தாட்ட அவை குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளிந்த அற்று’ இது வள்ளுவர் கணிப்பு. கூத்தாடும் நாடக கொட்டகையில் உள்ள கூட்டம் போல் செல்வம் வரும், போகும், அழியும் அல்லது கை விட்டு போய் விடும் என்கிறார் வள்ளுவர். சினிமா தியேட்டருக்கு வரும் கூட்டம், படம் ஆரம்பிக்கும் முன்னால். கொஞ்சம் கொஞ்சமாய் வரும். படம் முடிந்தவுடன் மொத்தமாய் போய் விடும். அது போல், செல்வம் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாய் வரும். போகும் போது மொத்தமாய் போய் விடும். சினிமா தியேட்டருக்கு வரும் கூட்டத்திற்கு, வரும் போது ஒரு ஆவல் இருக்கும், படத்தை பார்க்கும் போது ஒரு சுவை இருக்கும், படம் முடிந்து போகும் போது, ஒரு சோர்வு இருக்கும். அது போல், செல்வம் வரும்போது ஒரு சுகம், அதை அனுபவிக்கும் போது ஒரு சுகம். அது விட்டு போகும் போது ஒரு சோர்வு இருக்கும். கூத்தாட்ட அவை எனில் அது அங்கு உள்ள நடிகர்கள், அந்த மேடை அலங்காரம், வேடம் என்று எல்லாவற்றையும் குறிக்கும். நாடக மேடையில் எல்லாமே பொய் தானே. கதா பாத்திரங்களும், வேடங்களும், மேடை அமைப்பும் எல்லாமே உண்மை போல் தெரியும், ஆனால் உண்மை அல்ல. அது போல் செல்வமும் உண்மை போல் தெரிந்தாலும், உண்மை அல்ல. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு குட்டி கதை : தாங்க முடியாத வெயிலில் ஒருவன் களைத்தபடி நடந்து கொண்டிருந்தான். சாலை ஓரத்தில் ஒரு மரம். அதன் நிழலில் ஒதுங்கி நின்றபோது அங்கே ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான். நண்பர்களே! வேலிக்கு அருகில் ஓர் கிணறு இருக்கிறது. தாகமாக இருந்தால் வந்து பருகவும் என்று எழுதி இருந்தது. ஓடிச் சென்று தண்ணீரைக் குடித்தபோது, இன்னொரு வாசகத்தைப் பார்த்தான். களைப்பாக இருந்தால் அதோ அருகில் இருக்கும் மரக்கட்டிலில் ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தபோது அங்கே ஒரு வாசகம்எழுதி இருந்தது. பசியாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் கூடையில் பழங்கள் இருக்கின்றன எடுத்து சாப்பிடுங்கள். சாப்பிட்டபோது அங்கு ஒருவர் வந்தார். ‘நீர் பயன்படுத்தாவிட்டால் நீர் அசுத்தமடைந்துவிடும். படுக்காவிட்டால் கட்டிலில் துõசி படிந்துவிடும். நிறைய காய்க்கும் பழங்களை யாராவது சாப்பிடாவிட்டால் காய்த்த மரத்திற்கு பெருமையில்லை’என்றார். தன் கிணற்றில் குளிக்கவிடாது, தன் கட்டிலில் படுக்க விடாது, தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது வாழும் மனிதனாக ஒருவன் இருந்தால் அவனைப் படைத்ததற்காக கடவுள் வருத்தப்படுவார். - தேவராஜன் ************************************************************************************************************* ***************************************************************** ************************************************************************************************************ பிரம்மார்ப்பணம்/61/4.11.12/ ‘எதை செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானம் செய்கிறாயோ அவற்றை எல்லாம் எனக்கு அர்ப்பணம் செய். இதனால், புண்ணிய, பாவங்களிலிருந்து நீ விடுபடுவாய்’ என்கிறார் பகவான். அதாவது,நாம் செய்யும் காரியங்களை எல்லாம் பகவானுக்கு அர்ப்பணமாக செய்வது பிரம்மார்ப்பணம். பிரம்மார்ப்பணம் என்பது முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் முதல்படி. முதல்படியில் ஏறுவது எளிது அல்லவா? இறைவனுக்கு நாம் அன்புடன், ஆசையுடன், ஆர்வத்துடன் எதை சமர்ப்பித்தாலும் அதை உள்ளன்போடு இறைவன் ஏற்றுக்கொள்கிறார். அது மட்டும் உண்மை. ’எவன் பக்தியுடன் ஒரு பச்சிலையோ, புஷ்பமோ, தீர்த்தமோ சமர்ப்பிக்கிறானோ அவற்றை எல்லாம் உள்ளன்புடன், பிரியமாய் நான் ஏற்கிறேன்’ . என்கிறார் கீதையில் பகவான். அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. குசேலர் பக்தியுடன் தந்த ஒருபிடி அவல், திரவுபதி தந்த ஒரு சிட்டிகை கீரை, கஜேந்திரன் துதிக்கையால் எடுத்து அளித்த புஷ்பம், சபரி அளித்த பழம் என இப்படி பக்தியுடன் வழங்கப்பட்ட எளிய பொருள்களை இறைவன் ஏற்றுக்கொண்டான் என்பதற்கு ஆதார பட்டியல் நீளும். இறைவன் நம்மிடமிருத்து பெரிதாக எந்தப் பொருளையோ, கஷ்டமான காரியத்தையோ எதிர் பார்ப்பதில்லை. ஆகையால் நாம் உடலாலோ, மனதாலோ, வாக்காலோ, தர்ம செயல்களாலோ, பக்தியினாலோ, இயற்கை வசப்பட்டு சுவபாவத்தாலோ எது எதைச் செய்கிறோமோ அது எல்லாவற்றையும் இறைவனுக்கே என அர்ப்பணிக்க வேண்டும். இப்படி நாம் நாளும் செய்கின்ற சின்ன சின்ன அர்ப்பணங்கள் நமக்கும் இறைவனுக்குமான உறவை வலுப்படுத்திக்கொண்டே இருக்கும். ஒரு சிறு கம்பி கிடைத்தால் கூட அதைப் பற்றிக் கொண்டு மின்சார சக்தி அதன் வழியாக எளிதில் பாய்ந்து செல்வது போல, இறைவனின் அருளும் நாம் செய்கின்ற சிறு அர்ப்பணப் பொருள் வழியே நம்மிடம் பாய்கிறது. ‘எவன் என்னை எங்கும் பார்க்கிறானோ, என்னிடத்தில் எல்லாவற்றையும் பார்க்கிறானோ, அவனுக்கு நான் காணாமல் போவதில்லை. அவனும் எனக்கு காணாமல் போவதில்லை. அவன் எந்த நிலையில் இருந்தாலும், எத்தொழிலைப் புரிந்தாலும் என்னிடத்திலே இருப்பான்.’ என்று கீதையில் பகவான் உறுதியளித்திருக்கிறார். ஆதலால், நம்பிக்கையோடு ஒவ்வொரு பொழுதையும் பகவானுக்காக அர்ப்பணம் செய்துவருவோம். நம் அன்றாடம் செய்கின்ற கடமையில் உண்மையுடன் சிரத்தையுடன் இருப்போம். இறைவனின் ஆசி கிடைக்கும் வரை பொறுத்திருப்போம். நம்பினார் கெடுவதில்லை. நிச்சயம் நல்லதே நடக்கும்! - தேவராஜன். ********************************************************************************************************** ************************************************************ ********************************************************************************************************** சமயத்தின் மேன்மை!/62/11.11.2012/ ஒரு சாதாரணமனிதன் – உயர்ந்தவனாக, சிறந்தவனாக, மேம்பட்டவனாக ஆவதற்கு உதவுவது சமயம். ‘ உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்கிறது தொல்காப்பியம். உலகம் உயர்ந்தோர்களின் பண்பை வைத்தே அளவீடப்படுகிறது. சமூகத்தில் வாழும் மனிதன் சில கொள்கைகளை ஏற்பதினாலும் அவற்றில் நம்பிக்கை வைப்பதினாலும் ஒரு மேலான நிலைக்கு செல்கிறான். அதற்கு நம் முன்னோர்கள் காட்டிய வாழ்வியல் முறை அடித்தளமாக இருக்கிறது. முன்னோர்களை வழிய நடத்திய பாதையாக சமயம் இருந்து வருகிறது. இப்படித் தான் வாழவேண்டும் என்று வழிகாட்டும் சமயத்தினை சார்ந்து வாழ்பவன், சமயத்தினைச் சார்ந்து ஒழுக்கமானவன் ஆகின்றான். இன்ப துன்பங்களை ஏற்பதால் அவனது மனம் பக்குவப்படுகிறது. சமயம் என்னும் சொல் கொள்கை, கோட்பாடு, குறிக்கோள் என்னும் பொருளைத் தருகிறது. ஆனால், சமயத்தின் உண்மையான பொருள் அனுபவம் சார்ந்தே உணரக்கூடியது. அதாவது, ஒருவர் பசிக்கு உணவு பொருளை நேரடியாக உண்ணாமல், சமைத்த பிறகே அதாவது அவித்து, வேகவைத்துச் உண்ணுகிறோம். அது போல் பக்குவமில்லாத, பண்பில்லாத, ஒழுக்கமில்லாத நிலையில் வாழும் மனிதனை,அன்பு, இரக்கம், கருணை, செய்யதக்கன, செய்யத்தகாதனவைகளை எல்லாம் சொல்லி, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மனதை சமைத்துப்பக்குவப்படுத்த தோன்றியவை சமயம் என்று பொருள் கொள்வதே சரியாக இருக்கும். கடவுள்- மனித வாழ்வு என்ற இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு , வாழ்விலிருந்து கடவுளை அடையும் நெறிமுறைகளை தெளிவுப்படுத் உதவுவது சமயம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றியது சமயநெறி. துõயவாழ்க்கை முறை, மனிதனை நெறிப்படுத்திப் பக்குவப்படுத்தும் வாழ்வியல் அனுபவமுறை,மனிதனுடைய குறை நீக்கத்திற்கும், புலன்களை பக்குவப்படுத்தவும், அன்பு பெருகவும், அருள் பெருகவும். சமயம் உதவும். சமயத்தின் முக்கிய நெறி அன்பை மையமாக் கொண்டது. ‘ஆருயிர்க் கெல்லாம் அன்பு செயல் வேண்டும்’ என்னும் வள்ளலார் காட்டிய வாழ்வு நெறிதான் சமயம் காட்டும் நெறி. அன்பின் வழியே , ஆண்டவனை அடையமுடியும் என்கிறது நமது சமயம். காலம் மாறலாம். நாகரீகம் மாறலாம். நம் வாழ்க்கை முறை மாறலாம். ஆனால் சமயம் சொல்லும் வாழ்வியல் உண்மைகள் என்றும் மாறாதவை. கட்டுபாடு நிறைந்திருக்கலாம். கசப்பாக இருக்கலாம். நடைமுறை வாழ்கையில் பின்பற்ற இயலாமல் போகலாம். ஆனால், சமயம் வலியுறுத்தும்படி வாழ்பவர்கள் என்றுமே இறைவனுக்கு பிரியமானவர்களாக, வாழும் போது நிம்மதியாக வாழலாம்! வாழ்ந்து பாருங்கள் புரியும்! - தேவராஜன். ************************************************************************************************** ********************************************************** *************************************************************************************************** சாந்தம்! /63/18.11.2012/ தட்சணாமூர்த்தியை குருவாக, ஞானம் போதிப்பவராக நினைத்து வணங்குவர். தென் திசையை நோக்கி,ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தட்சணாமூர்த்தியின் வடிவ அழகை தரிசிக்கும் போதெல்லாம் எனக்கு அவர் சாந்தத்தின் குறியீடாக, அமைதியின் இலக்கணமாகத்தான் தெரிகிறார். தட்சிணாமூர்த்திக்கு பேசாமல் பேசும் தெய்வம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. பேசாமல் இருப்பது என்பது மவுனம் அல்ல; அது சாந்தம்! உலக வாழ்க்கையில் ஒருவர் எதை அடைகிறாரோ இல்லையோ, சாந்தத்தை அடைந்து விட்டால் போதும். அவர் எல்லாம் அடைந்தவராக திருப்தி பெறலாம். சாந்தத்தின் முதிர்வில் இறைவனையும் புரிந்துகொள்ளலாம்! சாந்தம் என்பது சாது போல் இருக்கும். அதை எதிர்க்க எந்த சக்திக்கும் சக்தி கிடையாது. எல்லா சித்திகளும் இதனாலே கிடைக்கப்பெறும். எந்தநிலையிலும்,எந்தநேரத்திலும்பதட்டமில்லாமலும்,கோபப்படாமலும், எதற்கும் கலங்காமல், தெளிவான மனத்துடன் செயல்படுவது சாந்தத்தின் குணமாகும். வெற்றி, தோல்வி, இன்ப, துன்பத்தில் மனம் அடிமையாகாமல் இருப்பது, மனக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை கொண்டிருப்பது சாந்தத்தின் அடையாளங்கள். எதுவும்,எப்பொழுதும் நம் விருப்பப்படி எல்லாம் நடக்காது. அதுதான் உண்மையும்கூட. வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப அலைபாயும் தன்மையுடையது மனம். இந்த அலைபாயும் தன்மை, இந்த வாழ்க்கை, இந்த உலகம் பொய் என்ற உண்மை புரியவிடாமல் தடுத்துவிடும். சாந்தம் இருப்பின் மனம் புத்தியின் கட்டளைபடி செயல்படும். சாந்தம் இல்லாத மனம் புலன்களின் இழுப்புக்கு கட்டுப்பட்டு விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் வேலைசெய்யும். ஒருவர் நம்மை முட்டாள் என்று திட்டினால் உடனடியாக கோப படாமல்,அவர் யார், எதற்காக அவ்வாறு கூறினார் என்று ஆராய்ந்து, தேவைப்பட்டால் மன்னிப்பது என்ற நிலை ஏற்பட்டால், நீங்கள் சாந்தத்தை அடையும் முதல் படியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். செய்த தவறுகளுக்காக தன்னைத்தானே வருத்திக்கொள்வது, நமது சக்திக்கு மீறிய செயல்களை செய்யமுடியவில்லையே என்று குற்ற உணர்வு இல்லாமல் இருப்பது சாந்தத்தின் அடுத்தநிலை தகுதி. இந்த வாழ்க்கை, இந்த உலகம் உண்மையானது, நிலையானது என்று நினைத்தால், எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலை தினம் தினம் இருந்து கொண்டே இருக்கும். இதுவே மனதை பாழ்படுத்திவிடும். ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழு அமைதியாக இருப்பதுபோல இருக்கக்கூடிய அனுபவம் கிடைத்து விட்டால், விழித்திருக்கும் நேரத்திலும் மனம் முழுமையான சாந்தத்துடன் இருக்கும். இந்தஆனந்த நிலைதான் இறைவனுக்கு சமீபத்தில் அழைத்துச் செல்லும். சாந்தம் கொண்டு ஓரடி நீங்கள் எடுத்து வைத்தால், இறைவன் உங்களை நோக்கி நுõறடி எடுத்து வைத்து உங்களை அணைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பான். - தேவராஜன். ****************************************************************************************** ************************************************************ ********************************************************************************************************* இலக்கியங்களில் சமய ஒற்றுமை/64/25.11.2012/ வேம்பம் பூவிலும் சிறு துளி தேனுண்டு என்பது போல, சமய காழ்ப்புணர்ச்சி காலத்தில் தமிழுக்கு தேவார திருமுறைகளும், நாலாயிரதிவ்ய பிரபந்தமும் கிடைத்தது. தொல்காப்பியர் காலத்திலும் அவருக்கு முந்தைய காலத்து மக்கள், ஐம்பூதங்களையும், முருகன், திருமால், கொற்றவை தெய்வங்களை வழிபாடு செய்தனர். ‘மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்’ இப்பாடல் அக்காலத்தில் பல தெய்வங்களை வணங்கும் நிலை இருந்தது. ஆனாலும், அவர்களுக்கு சமயக்காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதை அறியலாம். தமிழ் பேரிலக்கியங்கள் அனைத்தும் சமயத் தொடர்புடையது. சிற்றிலக்கியங்களாகிய பிள்ளைத்தமிழ் , குறவஞ்சி , பள்ளு , உலா ஆகியவைகளும் சமயத் தொடர்பு கொண்டவைதான். காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், சீவக சிந்தாமணி போன்றவை அந்தந்தக் காலத்துச் சமய ஒற்றுமையினை எடுத்துக் காட்டுகிறது. சிலப்பதிகாரத்தில் சைவம், வைணவம்,பவுத்தம் முதலிய சமயங்களையும் குறிப்பிடுவதால் சமயச் சார்பற்ற காலமாகச் சிலப்பதிகாரம் இருந்துள்ளது. சைவ சமயக் கடவுள் சிவனைப் பற்றி மதுரை காண்டத்துள் வேட்டுவ வரியில், ‘சிவனுக்கு நெற்றிக்கண் உண்டு என்பதையும்,தேவர்களுக்காக நஞ்சுண்டு நீலகண்டன் என்பதையும், வாசுகியை நாணாகவும்,இமயத்தை வில்லாகவும் கொண்டு திரிபுரத்தை எரித்தான் என்றும், கொன்றை மாலையைத் தரித்தவன்’ என்றும் சிவனை பிறவா யாக்கை பெரியோன் என்றும் போற்றுகிறது. வைணவ சமயக் கடவுள் திருமாலைப் பற்றிச் சிலம்பில், ஆய்ச்சியர் குரவையிலும், காடுகாண் காதையிலும் காணலாம். ஆய்ச்சியர் குரவையுள், ” கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்’ ‘ திருவரங்கம் ‘ பற்றிய குறிப்பும்,திருமால் பாம்பின் மீது பள்ளி கொண்டுள்ளான் என்ற குறிப்பும் ‘ காடுகாண் காதையில் காணப்படுகிறது. வைணவக் காப்பியமான கம்ப ராமாயணத்தில் பிற சமயக் கடவுள் பற்றியும் கூறுகின்றது. ராவணன், வாலி முதலானோரைச் சைவ சமயக் கடவுளான சிவனின் பக்தர்களாகவே படைத்துள்ளார். வாலி பற்றி‘ அட்டமூர்த்தி தாள் பணியும் அன்பன் ‘ என்றும் ராவணைனைப் பற்றி‘ சிவபெருமானால் முக்கோடி வாழ்நாள் வழங்கப் பெற்றவன் ‘ என்றும், ‘ துள்ளுநீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் ‘ என்றும் குறிப்பிடுகிறார். சிந்தாமணி, மணிமேகலை முதலிய காப்பியங்களும், சமயக் காழ்ப்பற்ற நிலையினை விளக்க பல தெய்வங்களைக் குறிப்பிடுகின்றன. இன்றைய காலத்திலும் நாம் சமயபொறை காக்க வேண்டியது நம் கடமை மட்டுமல்ல; அது இறைவனின் விருப்பமும்கூட. -தேவராஜன். ********************************************************************************************************** ******************************************************************* ************************************************************************************************************ பணிவு! /65/ 2.12.2012/ தாழ்வு, அடக்கம், பணிவு ஒருவருக்கு அமையும்போதுதான் பக்தியின் முழுமை தன்மை பூர்த்தியாகும். ‘மழைத்தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. அது பள்ளமான இடம் நோக்கியே ஓடும். அதுபோல், இறைவன் அருள் தற்பெருமை, கர்வம் உள்ளவர்கள் மனதில் தங்கி நிற்பதில்லை. அது பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி இருக்கும்’ என்கிறார் பரம்மஹம்சர். எல்லாருக்கும் பணிவு வேண்டும் என்பதை ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்றும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்கிறார் வள்ளுவர். அடக்கமாக இருப்பது ஒரு மேம்பட்டத் தன்மை. பணிவின் அடுத்த நிலைதான் சரணடைதல். இது மிக உன்னத நிலை.பரஸ்பரம் நிகழக்கூடியது. முழுவதுமாக புரிந்து கொண்ட நிலையில் தான் இது சாத்தியம். நாம் இறைவனிடம் சரணடையும் போதுதான் இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும். சரணடைதலில் முழுமைப்புரியும். உண்மை மலரும். அன்பு பொங்கும். பயம் காணாமல் போகும். தந்திரம் தொலையும். தர்க்கம் மறையும். சின்னக்கதை: மன்னர்அசோகர் தம் எதிரே ஒரு துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். சட்டென்று அவர் காலில் விழுந்தார். ‘மாமன்னர், ஒரு பரதேசியின் காலில் விழுவதா?’ என்று வருத்தபட்ட தளபதி, இது பற்றி மன்னரிடம் கேட்டார். அதற்கு மன்னர், ‘ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே கொண்டு வா அதில் உனக்கான பதில் உள்ளது’ என்றார். மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் வாங்கிச் சென்றார். மனிதத் தலையைக் கண்டவர்கள் முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை. தளபதி விவரங்களை மன்னரிடம் சொன்னார். மனிதத் தலையை யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார். இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை. இப்போது மன்னர் சொன்னார்,“தளபதியே, மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது. இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு தெரிகிறது.ஆனால், உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளின் பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்றார் மன்னர். பணிவின் மேன்மையை தளபதி புரிந்துகொண்டார். பணிவுதான் பக்தியின் தொடக்கம். பணிவு இல்லாவிட்டால் பக்தி மட்டுமல்ல;கணவன் மனைவி, பெற்றோர், பிள்ளைகள், அதிகாரிகள் இடையே இருக்கும் உறவுகள்கூட நம்மை விட்டு கொஞ்சம் தள்ளி செல்லும் அல்லது விலகிவிடும். -தேவராஜன். ********************************************************************************************************* ************************************************************* ********************************************************************************************************* இந்து சமயத்தின் இருகண்கள்!/66//9.12.2012/ சைவம், வைணவம் இந்து சமயத்தின் இருகண்கள். இரு கண்கள் என்றாலும் பார்க்கும் காட்சி ஒன்றுதானே! அதுபோல சைவம், வைணவம் இதில் எவ்வழி, எந்நெறி பின்பற்றினாலும் இறுதியில் உணரப்படுவது இறைவனையே! இப்போதெல்லாம் சைவம் என்ற உயர்வான, உன்னதமான பொருள் தரும் சொல் சாதாரண சாப்பாட்டு விஷயத்திற்கு சொல்லும் சூழ்நிலைக்கு வந்துவிட்டது. சைவம் என்றால் மீன், இறைச்சி போன்ற புலால் உணவை உண்ணாது இருத்தலுக்கு அர்த்தமாகிவிட்டது. அசைவம் என்றால் புலால் உணவைப் புசிப்பவருக்கு அர்த்தமாகிவிட்டது. உண்மையில் சைவம் என்பதின் பொருள் மிக நுட்பமானது; புனிதமானது; மேன்மையானது. அதன் தத்துவம், நெறிகள் மனிதரை செம்மைப்படுத்தி, மேன்மைப்படுத்தி, இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லக்கூடியது. ‘தவம் செய் சாதி’ எனச் சைவர்களை குறிப்பிடும் சமயகருத்தும் உண்டு. ‘இன்னா சொல்லும், இன்னா செய்யாமையும் சைவவழி’ என்பதை வள்ளுவர் குறள்வழி விளக்குகிறார். சைவன் எனப்பட்டவன் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாது வாழ்பவன் என்னும் தத்துவத்தைக் கடைப்பிடிப்பதற்காகவே புலால் உண்ணாமை சைவத்தின் அடிப்படை விதியாக இருக்கிறது. வாழ்வு மயக்கம் தரும் தன்மையானது. வறுமை சிறுமைகளைச் செய்விக்கும் போக்குடையது. இவற்றிலிருந்து தப்புவதற்கு இறைவன் அருள் வேண்டும். சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல் சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல் சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீங்குதல் சைவம் சிவானந்தம் சாயுச்சியமே சைவம் என்பது ஒரு மனிதன் நற்குணத்தையும் சிவத்தை தொடர்புறும் நிலையும் குறிக்கும். சைவம் என்பது இறைவன் என்பவன் ஒன்றாகவும், வேறாகவும் தன்அகத்தில் இருப்பவராகவும் உணர்ந்து, தன் செயல் எல்லாம் அவனால் செய்விக்கப்படுகிறது என இறைவனில் சாரும் நிலையாகும். இந்த நிலையை அடைகையில் சிவம் என்பது ஆதிமூலம். அதனை உணரத்தான் முடியும். விளக்க முடியாது என்பது தெளிவாகும். சைவத்தால் இந்த அனுபவத்தை பெறும்நிலையில் சைவம் சிவானந்தம் தரும் வழியாகிறது. சாயுச்சியம் என்னும் இறைவனுக்கு மிகநெருக்கமாக, அவன் திருத்தாள் தலையாக அவனில் நிலைபெறும் தன்மையை அளிக்கிறது என்பது திருமூலரின் விளக்கம். ஞானநுõல்ஓதல், ஓதுவித்தல், நல்பொருளைக் கேட்டல், அதை பிறரையும் கேட்க செய்தல், தான் கேட்டதை ஆழ்ந்து சிந்தித்தல் இவை ஐந்தும் சைவன் தினமும் பின்பற்ற வேண்டிய இறைப்பணிகளாகும். சைவம் எனும் சொல் இறைவனை நோக்கி நாம் செல்கின்ற பயணத்துக்கான வழிகாட்டி என்ற பொருளாக எடுத்துக்கொண்டு வாழ்வதுதான் ஒரு பக்தனின் கடமையாக இருக்க வேண்டும். புலால் சாப்பிடாதவர்கள் எல்லாம் சைவர் என்று குறிப்பது சமயம் சார்ந்த பொருள் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்! - தேவராஜன். ******************************************************************************************************** ***************************************************************** *********************************************************************************************************** நாக்கினால் நலம் பெறலாம்!/67/16.12.2012/ மனித உடலில் எலும்பில்லாத உறுப்புகளில் ஒன்று நாக்கு. கேட்பதற்கு இரு செவிகளும் பார்ப்பதற்கு இரு கண்களும் படைத்த இறைவன் பேசுவதற்கு ஒரு நாக்கைத்தான் படைத்திருக்கிறான். அந்த நாக்கினால் பேசுவதற்கு முன், ஒருதடவைக்கு பலதடவைகள் யோசித்துவிட்டு பேசவேண்டும். நாக்கினால் உலகில் பல அழிவுகளும், சச்சரவுகளும் ஏற்பட்டுள்ளன. ‘யாகவாராயினும் நா காக்க’ என்றும் ‘இனிய உளவாக இன்னாது கூறல்’ என்று எச்சரிக்கை விடுகிறார் வள்ளுவர். உலகத்தில் ஜீவராசிகளுக்குள் மனிதனுக்கு மட்டுமே பேசும் சக்தியைஆண்டவன் கொடுத்திருக்கிறான். ஆகையால் பேசும் சொற்கள் இதமாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் கருத்துள்ளதாகவும்இருக்க வேண்டும். நாவானது, சிறிய உடல் உறுப்பாக இருந்தாலும் பெருமையானவைகளை பேசும். அதேசமயம் சிறுமையையும் பேசும். சிறிய நெருப்பு, எவ்வளவு பெரிய காட்டை எரித்து அழித்துவிடுகின்றது. இந்த நாக்கும் அந்த நெருப்புக்கு சமனானதே. ஆகவே நாக்கை பயன்படுத்துவதில் கவனம் மிகத் தேவை. நாவினாலே எல்லாருக்கும் பொதுவான இறைவனை துதிக்கிறோம், வணங்குகிறோம், பாடுகிறோம். அதேநேரம் அதே நாக்கினால் மனிதர்களை சபிக்கிறோம், கண்டபடி திட்டுகிறோம். துதித்தலும், சபித்தலும் ஒரே நாக்கினால் செய்யப்படுகிறது. ஒரே நாக்கினால் நல்லதையும், கெட்டதையும் பேசுவது தகுமோ? நாக்கில் சரஸ்வதி வாசம் செய்கிறாள் என்கிறது புராணங்கள். பலர் கலையில் எழுந்தவுடன் நாக்கை சுத்தம் செய்து கடவுளை வணங்குவதற்கும்,கனிவான பேச்சுகளை பேசுவதற்கும் அவர்கள் நாக்கை பயன்படுத்துவார்கள். முனிவர்கள்,சித்தர்கள், துறவிகள் ஏன், அதித ஆற்றல் கொண்ட அறிஞர்கள் கூட நாக்கை அதிகம் பயன்படுத்துவதில்லை. நம்மில்கூட சிலர் வாரத்தில் ஒருநாள் மவுன விரதம் இருக்கிறார்கள். வாரத்தில் ஒருநாளாவது நாக்குக்கு ஓய்வு தரவேண்டும். மவுன விரதம் என்பதுகூட நாவடக்கத்திற்கான முயற்சிதான். ‘நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே’ என்கிறார் சுந்தரர். ‘நாம் மறந்திருந்தாலும், தூங்கும் போதும் கூட இறைவனுடைய திருநாமத்தை நமது நாக்கு உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும்’ என்கிறார் ஞான சம்பந்தர். நாக்கினால் நாம் நல்லதையே பேசுவோம் மற்றவர்களை காயப்படுத்தாது பேசுவோம். அறிவோடு பேசுவோம் அளவோடு பேசுவோம். நேரம் வாய்க்கும் போதெல்லாம் நாக்கினால் இறைவனின் நாமத்தை இடைவிடாது கூறுவோம். நாவில் தழும்பு ஏறும் வரை நமசிவாய மந்திரத்தை ஓதுவோம். நாக்கும் நலம் பெறும். நம்வாழ்வில் நலன்களும், நன்மைகளும் வந்து சேரும். - தேவராஜன். ********************************************************************************************************** ******************************************************************** *********************************************************************************************************** எது பக்தி?/68/23.12.2012 ஒரு அழகான, மணம் உள்ள ஒரு மலரைப்பார்க்கிறீர்கள். உங்கள் மனதில் ஒரு சட்டென்று மகிழ்ச்சி வருகிறது இல்லையா? நீங்கள் அந்த மலரிடம் மகிழ்ச்சி கொடு என்று ஏதாவது கேட்கிறீர்களா அல்ல; அந்த மலர்தான் உங்களிடம் ஏதாவது கேட்கிறதா? எதுவும் இல்லையே!< அது போலதான் பக்தியும். அது உணர்வுபூர்வமானது. உங்களுக்கு மலரைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு போல பக்தியிலும் அதே உணர்வு ஏற்பட வேண்டும். அதுதான் பக்தி! பக்தி என்பது எங்கிருந்தாலும், ஒரு மலர் போல் அதன் மணத்தைப் பரப்பக் கூடியது. ஒரு பூவை எடுத்து எங்கு வைத்தாலும் அது நறுமணத்தை அதைச் சுற்றி உள்ள இடங்களில் பரப்புகிறது. மல்லிகைப் பூவை சமையல் அறையில் வைத்தாலும், குளியல் அறையில் வைத்தாலும் தன் மணத்தைத் தரும். அந்தப் பூ நான் என் நறுமணத்தை இங்கு தான் தருவேன், இங்கே தர மாட்டேன் என்று சொல்லி மறுப்பதில்லை. அதே போல் நீங்கள் பக்தியை எதன் மேல் வைத்தாலும் அது அங்கு பரவும். நன்கு மலர்ந்து அதற்கான பலனைத் தரும். பக்தி என்பது நம்பிக்கை. அதாவது முழுமையான நம்பிக்கை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது. பக்தி செய்வது என்பது ஒரு சிறு குழந்தையின் செயல் போல இருக்க வேண்டும். குழந்தையை விட்டுவிட்டு அதன் அம்மா அடுத்த அறைக்குச் சென்றால்கூட, அம்மாவைத் தேடிக்கொண்டு ஏங்கித் தவிக்கும். ஏதாவது பயம், ஆபத்து என்றால் உடனே அம்மாவிடம் போய் அண்டிக்கொள்ளும். தாயிடம் அதற்கு இருப்பது, கேள்வி கேட்காத நம்பிக்கை. அதே போன்ற நம்பிக்கைதான் நமக்கு இறைவனிடம் வரவேண்டும்.< திரவுபதியை துச்சாதனன் மானபங்கம் செய்தபோது, திரவுபதியின் வெகுநேர வேண்டுதலுக்குப் பின்னர்தான் கிருஷ்ணர் புடவை தந்தார். பின்பு ஒருநாள் கிருஷ்ணரிடம், “நான் வேண்டியவுடன் ஏன் உடனே வரவில்லை? என்று திரவுபதி கேட்டாள். அதற்கு கிருஷ்ணர், “துச்சாதனன் புடைவையை இழுத்தபோது நீயும் உன் இரண்டு கைகளாலும் உன் புடவையை இறுகப் பற்றியபடிதானே என்னை அழைத்தாய். நீயே உன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உனக்கு இருந்ததால் நான் வரவில்லை. பின் ஒரு கையினால் புடவையை பிடித்துக்கொண்டு ஒரு கையினால் என்னை அழைத்தாய். அப்பொழுதும் முழு நம்பிக்கை என் மீது உனக்கு வரவில்லை. அதன்பின் உன்னால் முடியாதென முடிவுசெய்து, என் மீது முழு நம்பிக்கை வைத்து புடவையைப் பற்றிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, இரு கைகளையும் துõக்கி என்னை அழைக்கவே நான் வந்தேன் என்றார். குழந்தைக்கு அம்மாவிடம் உள்ள நம்பிக்கை மாதிரி பக்திக்கு முழுமையான நம்பிக்கை வேண்டும்<. -தேவராஜன். ********************************************************************************************************** ***************************************************************** ******************************************************************************************************** பிரார்த்தனைகள் பலவிதம்/70/ 7.1.2013/ ஒருவரைப் பற்றி தவறாக எண்ணி விடுகிறோம்; ஒருவரை கடுமையாக பேசி விடுகிறோம்; யாரோ ஒருவருக்கோ ஒரு ஜீவனுக்கோ இம்சை செய்து விடுகிறோம். இப்படி ஏதாவது ஒன்றை தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது ஒரு பாவத்தை செய்து விடுகிறோம். இதன் காரணமாக மனிதர்களிடம் சில பாவங்கள், தோஷங்கள் இருக்கின்றன. இப்படி பட்டவர்கள் தங்கள் பாவத்தை, தவறுகளை மன்னிக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கும் கருணை காட்டுகிறான் இறைவன்! எப்படியாவது மனிதன் திருந்தி, பக்தி செய்து, தன்னை வந்தடையட்டும் என்பது இறைவனின் சித்தம். எல்லாருக்கும் பிரார்த்தனைகளால் பிரச்னைகளோ, துன்பங்களோ முற்றிலுமாக தீர்ந்துவிடுகிறதா? ஒரு கஷ்டம் போனாலும் இன்னொரு கஷ்டம் என்று சங்கிலி தொடர் போல வாழ்க்கையில் வந்து கொண்டேதான் இருக்கும். ஆகையால், கஷ்டங்கள் நிவிருத்தியாக பிரார்த்தனை பண்ணுவதற்கு முடிவே கிடையாது. அது வேண்டும் இதுவேண்டும் என்று இறைவனிடம் கேட்பது சரியா? அப்படி கேட்டால், நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்றாகாதா? அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோமே! வேண்டுதல் வேண்டாமை எல்லாம் சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சாத்தியமில்லை. இதை தா, பக்தி செய்கிறேன். அதை நிறைவேற்று பிரார்த்தனை செய்கிறேன் என்று ஒரு வியாபாரம் போல செய்யப்படுகிறது பக்தி. இது தவறு என்று பக்தனுக்குப் புரியும் வரையில் இப்படியான பக்தியாவது தொடர்வதுதான் நல்லது. ஆனால், ‘இப்படிப்பட்ட பிரார்த்தனையால், நம்முடைய மனச்சுமை தற்காலிகமாகவாவது இலேசாகி, கொஞ்சம் சாந்தி பிறக்கிறது. நாமாகவே எல்லாம் சாதித்து விட முடியும் என்ற அகங்காரத்தை விட்டு ஈஸ்வரனிடம் யாசிக்கிற அளவுக்கு எளிமை பெறுகிறோமே, அதுவும் நல்லது தான்.’ என்கிறார் காஞ்சி பெரியவர். உலகில் ஜீவராசிகள் படைக்கப்பட்டதிலிருந்து படிப்படியாக பல ஜீவன்களை அடைந்து, இப்பொழுது பெறும் பேற்றை எய்தற்குறிய மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இந்த உயர் பிறவியை, மறு ஜென்மம் எடுக்க வேண்டியிருந்தால் காப்பாற்றிக்கொள்ளவும் அல்லது இதை விட மேன்மையான பதவியை, அதாவது பிறப்பில்லாமையை அடைவதற்கான வழிமுறைகளில் நம் காலத்தை செலவிடுவதுதான் நாம் இந்த மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கமாகும். அந்த நோக்கம் வெற்றி பெற உதவும் கருவிதான் பிரார்த்தனைகள். இறைவனிடத்தில் வைக்கும் பக்தி. இந்த அனுபவம் ஒரு பக்தனுக்கு ஏற்படும்போது அவனுடைய பிரார்த்தனை எல்லாம்‘ எல்லோரும் இன்புற்றிருக்க அல்லால் வேறொன்றும் அறியேன் பராபரமே!’ என்றுதான் இருக்கும். - தேவராஜன். **************************************************************************************************** ********************************************************************* *********************************************************************************************************** பற்று விடல்!/69/ 30.12.2012 பற்று விடல்! சிறு வயதில் ஆசை ஆசையாக மணல் வீடு கட்டி, விளையாடி விட்டு பிறகு அதை காலால் எட்டி உதைத்துவிட்டு வந்தவர்கள்தான், இப்போது பொருட்கள் மீதும் மனிதர்கள் மீதும் பற்று வைத்து கவலைப்படுகிறோம். வாழ்க்கையில் விரும்பாதது வந்தாலும் துன்பம். விரும்பியது விலகினாலும் துன்பம். விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ அல்லது கிடைக்காதோ என்ற நினைப்பில் வரும் துன்பம்தான் அதிகம். இவை எல்லாம் ஒன்றின் மீது கொண்ட பற்று காரணமாக வரும் தொல்லை. இரண்டு மணி நேர ரயில்பயணத்தில் இது எனது இடம்; அது உனது இடம் என்று சண்டை போட்டு, அது ஓய்வதற்குள் சேருமிடம் வந்துவிடுகிறது. வாழ்க்கையிலும் இப்படித்தான்! வாழும் சிறிது காலத்துக்குள், இது எனது நிலம், அது உனது நிலம் என்று சண்டை. இப்படி நமது துன்பத்துக்கு வகை வகையான காரணமாக இருப்பது பற்று வைப்பதுதான். அன்புக்கும் பற்றுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. பறவையின் மீது பற்று கொண்டவன். அதை கூண்டில் அடைக்கிறான். அதை மகிழ்விப்பதாக எண்ணி அதன் சுதந்திரத்தைத் தடுக்கிறான். அதே பறவையின் மீது அன்பு செலுத்துபவன் அது ஆகாயத்தில் பறப்பதை ஆனந்தமாக வேடிக்கை பார்க்கிறான். இது போன்று உலகப் பற்றில் இருப்பவனுக்கு கடவுளைப் பற்றிக்கொள்ள நேரமில்லை. ஆனால், பற்றற்றவன், கடவுளை பற்றிக் கொண்டு, கடவுளை எங்கும் காணும் அனுபவம் கண்டு, உலகப் பற்றை நீக்கி விடுகிறான். கணவன், மனைவி, பிள்ளைகள், பெண்கள் என்று மனிதர்களில் தொடங்கி ஆடு, மாடு, வீடு, செல்பேசி என்று எத்தனை ‘பற்றுக்கள்’ நமக்கு! நமக்கு எது நல்லது என்பதை கடவுள் அறிவார். நமது கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் அவர் அறிவார்; நமக்கோ கடந்த வந்த பாதை தெரியும். இப்போது நடப்பது தெரியும்; நாளை என்பது பெரிய கேள்விக்குறி தான். இப்படி இருக்கையில் எல்லாம் அறிந்த கடவுளைப் பற்றாமல் எதை எதையோ பற்றுகிறோம். இந்த உலகில் நாம் பற்றியிருப்பவை நம்மைக் கைவிடலாம்; நமது வாழ்க்கையை முழுவதும் அறிந்த கடவுள் நம்மைக் கைவிடமாட்டார். கடவுள் தான் நம் பலம். கடவுள் தான் நம் கவசம். அவரிடம் பற்று வைப்பதுதான் உண்மையான பற்று. அவரிடம் எதற்காகப் பற்று வைப்பது என்பதை வள்ளுவர் மிகஅழகாக சொல்கிறார்: பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றை பற்றுக பற்று விடல். பற்றுக - பிடித்துக் கொள்ளுங்கள் பற்றற்றான் பற்றினை - பற்றில்லாத கடவுளின் திருவடிகளை அப்பற்றினை - அந்தத் திருவடிகளை பற்றுக -கெட்டியாகப் பற்றுங்கள் பற்று விடல் - தேவை இல்லாத ‘பற்று’க்களை விடுவதற்காக. - தேவராஜன். **************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக