ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சாந்தம்! /63/18.11.2012/

சாந்தம்! /63/18.11.2012/ தட்சணாமூர்த்தியை குருவாக, ஞானம் போதிப்பவராக நினைத்து வணங்குவர். தென் திசையை நோக்கி,ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தட்சணாமூர்த்தியின் வடிவ அழகை தரிசிக்கும் போதெல்லாம் எனக்கு அவர் சாந்தத்தின் குறியீடாக, அமைதியின் இலக்கணமாகத்தான் தெரிகிறார். தட்சிணாமூர்த்திக்கு பேசாமல் பேசும் தெய்வம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. பேசாமல் இருப்பது என்பது மவுனம் அல்ல; அது சாந்தம்! உலக வாழ்க்கையில் ஒருவர் எதை அடைகிறாரோ இல்லையோ, சாந்தத்தை அடைந்து விட்டால் போதும். அவர் எல்லாம் அடைந்தவராக திருப்தி பெறலாம். சாந்தத்தின் முதிர்வில் இறைவனையும் புரிந்துகொள்ளலாம்! சாந்தம் என்பது சாது போல் இருக்கும். அதை எதிர்க்க எந்த சக்திக்கும் சக்தி கிடையாது. எல்லா சித்திகளும் இதனாலே கிடைக்கப்பெறும். எந்தநிலையிலும்,எந்தநேரத்திலும்பதட்டமில்லாமலும்,கோபப்படாமலும், எதற்கும் கலங்காமல், தெளிவான மனத்துடன் செயல்படுவது சாந்தத்தின் குணமாகும். வெற்றி, தோல்வி, இன்ப, துன்பத்தில் மனம் அடிமையாகாமல் இருப்பது, மனக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை கொண்டிருப்பது சாந்தத்தின் அடையாளங்கள். எதுவும்,எப்பொழுதும் நம் விருப்பப்படி எல்லாம் நடக்காது. அதுதான் உண்மையும்கூட. வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப அலைபாயும் தன்மையுடையது மனம். இந்த அலைபாயும் தன்மை, இந்த வாழ்க்கை, இந்த உலகம் பொய் என்ற உண்மை புரியவிடாமல் தடுத்துவிடும். சாந்தம் இருப்பின் மனம் புத்தியின் கட்டளைபடி செயல்படும். சாந்தம் இல்லாத மனம் புலன்களின் இழுப்புக்கு கட்டுப்பட்டு விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் வேலைசெய்யும். ஒருவர் நம்மை முட்டாள் என்று திட்டினால் உடனடியாக கோப படாமல்,அவர் யார், எதற்காக அவ்வாறு கூறினார் என்று ஆராய்ந்து, தேவைப்பட்டால் மன்னிப்பது என்ற நிலை ஏற்பட்டால், நீங்கள் சாந்தத்தை அடையும் முதல் படியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். செய்த தவறுகளுக்காக தன்னைத்தானே வருத்திக்கொள்வது, நமது சக்திக்கு மீறிய செயல்களை செய்யமுடியவில்லையே என்று குற்ற உணர்வு இல்லாமல் இருப்பது சாந்தத்தின் அடுத்தநிலை தகுதி. இந்த வாழ்க்கை, இந்த உலகம் உண்மையானது, நிலையானது என்று நினைத்தால், எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலை தினம் தினம் இருந்து கொண்டே இருக்கும். இதுவே மனதை பாழ்படுத்திவிடும். ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழு அமைதியாக இருப்பதுபோல இருக்கக்கூடிய அனுபவம் கிடைத்து விட்டால், விழித்திருக்கும் நேரத்திலும் மனம் முழுமையான சாந்தத்துடன் இருக்கும். இந்தஆனந்த நிலைதான் இறைவனுக்கு சமீபத்தில் அழைத்துச் செல்லும். சாந்தம் கொண்டு ஓரடி நீங்கள் எடுத்து வைத்தால், இறைவன் உங்களை நோக்கி நுõறடி எடுத்து வைத்து உங்களை அணைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பான். - தேவராஜன். *******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக