ஞாயிறு, 16 டிசம்பர், 2012

பணிவு! /65/ 2.12.2012/

பணிவு! /65/ 2.12.2012/ தாழ்வு, அடக்கம், பணிவு ஒருவருக்கு அமையும்போதுதான் பக்தியின் முழுமை தன்மை பூர்த்தியாகும். ‘மழைத்தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. அது பள்ளமான இடம் நோக்கியே ஓடும். அதுபோல், இறைவன் அருள் தற்பெருமை, கர்வம் உள்ளவர்கள் மனதில் தங்கி நிற்பதில்லை. அது பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி இருக்கும்’ என்கிறார் பரம்மஹம்சர். எல்லாருக்கும் பணிவு வேண்டும் என்பதை ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்றும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்கிறார் வள்ளுவர். அடக்கமாக இருப்பது ஒரு மேம்பட்டத் தன்மை. பணிவின் அடுத்த நிலைதான் சரணடைதல். இது மிக உன்னத நிலை.பரஸ்பரம் நிகழக்கூடியது. முழுவதுமாக புரிந்து கொண்ட நிலையில் தான் இது சாத்தியம். நாம் இறைவனிடம் சரணடையும் போதுதான் இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும். சரணடைதலில் முழுமைப்புரியும். உண்மை மலரும். அன்பு பொங்கும். பயம் காணாமல் போகும். தந்திரம் தொலையும். தர்க்கம் மறையும். சின்னக்கதை: மன்னர்அசோகர் தம் எதிரே ஒரு துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். சட்டென்று அவர் காலில் விழுந்தார். ‘மாமன்னர், ஒரு பரதேசியின் காலில் விழுவதா?’ என்று வருத்தபட்ட தளபதி, இது பற்றி மன்னரிடம் கேட்டார். அதற்கு மன்னர், ‘ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே கொண்டு வா அதில் உனக்கான பதில் உள்ளது’ என்றார். மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் வாங்கிச் சென்றார். மனிதத் தலையைக் கண்டவர்கள் முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை. தளபதி விவரங்களை மன்னரிடம் சொன்னார். மனிதத் தலையை யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார். இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை. இப்போது மன்னர் சொன்னார்,“தளபதியே, மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது. இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு தெரிகிறது.ஆனால், உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளின் பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்றார் மன்னர். பணிவின் மேன்மையை தளபதி புரிந்துகொண்டார். பணிவுதான் பக்தியின் தொடக்கம். பணிவு இல்லாவிட்டால் பக்தி மட்டுமல்ல;கணவன் மனைவி, பெற்றோர், பிள்ளைகள், அதிகாரிகள் இடையே இருக்கும் உறவுகள்கூட நம்மை விட்டு கொஞ்சம் தள்ளி செல்லும் அல்லது விலகிவிடும். -தேவராஜன். ***************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக