ஞாயிறு, 16 டிசம்பர், 2012

இந்து சமயத்தின் இருகண்கள்!/66//9.12.2012/

இந்து சமயத்தின் இருகண்கள்!/66//9.12.2012/ சைவம், வைணவம் இந்து சமயத்தின் இருகண்கள். இரு கண்கள் என்றாலும் பார்க்கும் காட்சி ஒன்றுதானே! அதுபோல சைவம், வைணவம் இதில் எவ்வழி, எந்நெறி பின்பற்றினாலும் இறுதியில் உணரப்படுவது இறைவனையே! இப்போதெல்லாம் சைவம் என்ற உயர்வான, உன்னதமான பொருள் தரும் சொல் சாதாரண சாப்பாட்டு விஷயத்திற்கு சொல்லும் சூழ்நிலைக்கு வந்துவிட்டது. சைவம் என்றால் மீன், இறைச்சி போன்ற புலால் உணவை உண்ணாது இருத்தலுக்கு அர்த்தமாகிவிட்டது. அசைவம் என்றால் புலால் உணவைப் புசிப்பவருக்கு அர்த்தமாகிவிட்டது. உண்மையில் சைவம் என்பதின் பொருள் மிக நுட்பமானது; புனிதமானது; மேன்மையானது. அதன் தத்துவம், நெறிகள் மனிதரை செம்மைப்படுத்தி, மேன்மைப்படுத்தி, இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லக்கூடியது. ‘தவம் செய் சாதி’ எனச் சைவர்களை குறிப்பிடும் சமயகருத்தும் உண்டு. ‘இன்னா சொல்லும், இன்னா செய்யாமையும் சைவவழி’ என்பதை வள்ளுவர் குறள்வழி விளக்குகிறார். சைவன் எனப்பட்டவன் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாது வாழ்பவன் என்னும் தத்துவத்தைக் கடைப்பிடிப்பதற்காகவே புலால் உண்ணாமை சைவத்தின் அடிப்படை விதியாக இருக்கிறது. வாழ்வு மயக்கம் தரும் தன்மையானது. வறுமை சிறுமைகளைச் செய்விக்கும் போக்குடையது. இவற்றிலிருந்து தப்புவதற்கு இறைவன் அருள் வேண்டும். சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல் சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல் சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீங்குதல் சைவம் சிவானந்தம் சாயுச்சியமே சைவம் என்பது ஒரு மனிதன் நற்குணத்தையும் சிவத்தை தொடர்புறும் நிலையும் குறிக்கும். சைவம் என்பது இறைவன் என்பவன் ஒன்றாகவும், வேறாகவும் தன்அகத்தில் இருப்பவராகவும் உணர்ந்து, தன் செயல் எல்லாம் அவனால் செய்விக்கப்படுகிறது என இறைவனில் சாரும் நிலையாகும். இந்த நிலையை அடைகையில் சிவம் என்பது ஆதிமூலம். அதனை உணரத்தான் முடியும். விளக்க முடியாது என்பது தெளிவாகும். சைவத்தால் இந்த அனுபவத்தை பெறும்நிலையில் சைவம் சிவானந்தம் தரும் வழியாகிறது. சாயுச்சியம் என்னும் இறைவனுக்கு மிகநெருக்கமாக, அவன் திருத்தாள் தலையாக அவனில் நிலைபெறும் தன்மையை அளிக்கிறது என்பது திருமூலரின் விளக்கம். ஞானநுõல்ஓதல், ஓதுவித்தல், நல்பொருளைக் கேட்டல், அதை பிறரையும் கேட்க செய்தல், தான் கேட்டதை ஆழ்ந்து சிந்தித்தல் இவை ஐந்தும் சைவன் தினமும் பின்பற்ற வேண்டிய இறைப்பணிகளாகும். சைவம் எனும் சொல் இறைவனை நோக்கி நாம் செல்கின்ற பயணத்துக்கான வழிகாட்டி என்ற பொருளாக எடுத்துக்கொண்டு வாழ்வதுதான் ஒரு பக்தனின் கடமையாக இருக்க வேண்டும். புலால் சாப்பிடாதவர்கள் எல்லாம் சைவர் என்று குறிப்பது சமயம் சார்ந்த பொருள் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்! - தேவராஜன். **********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக