ஞாயிறு, 16 டிசம்பர், 2012

பிரம்மார்ப்பணம்/61/4.11.12/

பிரம்மார்ப்பணம்/61/4.11.12/ ‘எதை செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானம் செய்கிறாயோ அவற்றை எல்லாம் எனக்கு அர்ப்பணம் செய். இதனால், புண்ணிய, பாவங்களிலிருந்து நீ விடுபடுவாய்’ என்கிறார் பகவான். அதாவது,நாம் செய்யும் காரியங்களை எல்லாம் பகவானுக்கு அர்ப்பணமாக செய்வது பிரம்மார்ப்பணம். பிரம்மார்ப்பணம் என்பது முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் முதல்படி. முதல்படியில் ஏறுவது எளிது அல்லவா? இறைவனுக்கு நாம் அன்புடன், ஆசையுடன், ஆர்வத்துடன் எதை சமர்ப்பித்தாலும் அதை உள்ளன்போடு இறைவன் ஏற்றுக்கொள்கிறார். அது மட்டும் உண்மை. ’எவன் பக்தியுடன் ஒரு பச்சிலையோ, புஷ்பமோ, தீர்த்தமோ சமர்ப்பிக்கிறானோ அவற்றை எல்லாம் உள்ளன்புடன், பிரியமாய் நான் ஏற்கிறேன்’ . என்கிறார் கீதையில் பகவான். அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. குசேலர் பக்தியுடன் தந்த ஒருபிடி அவல், திரவுபதி தந்த ஒரு சிட்டிகை கீரை, கஜேந்திரன் துதிக்கையால் எடுத்து அளித்த புஷ்பம், சபரி அளித்த பழம் என இப்படி பக்தியுடன் வழங்கப்பட்ட எளிய பொருள்களை இறைவன் ஏற்றுக்கொண்டான் என்பதற்கு ஆதார பட்டியல் நீளும். இறைவன் நம்மிடமிருத்து பெரிதாக எந்தப் பொருளையோ, கஷ்டமான காரியத்தையோ எதிர் பார்ப்பதில்லை. ஆகையால் நாம் உடலாலோ, மனதாலோ, வாக்காலோ, தர்ம செயல்களாலோ, பக்தியினாலோ, இயற்கை வசப்பட்டு சுவபாவத்தாலோ எது எதைச் செய்கிறோமோ அது எல்லாவற்றையும் இறைவனுக்கே என அர்ப்பணிக்க வேண்டும். இப்படி நாம் நாளும் செய்கின்ற சின்ன சின்ன அர்ப்பணங்கள் நமக்கும் இறைவனுக்குமான உறவை வலுப்படுத்திக்கொண்டே இருக்கும். ஒரு சிறு கம்பி கிடைத்தால் கூட அதைப் பற்றிக் கொண்டு மின்சார சக்தி அதன் வழியாக எளிதில் பாய்ந்து செல்வது போல, இறைவனின் அருளும் நாம் செய்கின்ற சிறு அர்ப்பணப் பொருள் வழியே நம்மிடம் பாய்கிறது. ‘எவன் என்னை எங்கும் பார்க்கிறானோ, என்னிடத்தில் எல்லாவற்றையும் பார்க்கிறானோ, அவனுக்கு நான் காணாமல் போவதில்லை. அவனும் எனக்கு காணாமல் போவதில்லை. அவன் எந்த நிலையில் இருந்தாலும், எத்தொழிலைப் புரிந்தாலும் என்னிடத்திலே இருப்பான்.’ என்று கீதையில் பகவான் உறுதியளித்திருக்கிறார். ஆதலால், நம்பிக்கையோடு ஒவ்வொரு பொழுதையும் பகவானுக்காக அர்ப்பணம் செய்துவருவோம். நம் அன்றாடம் செய்கின்ற கடமையில் உண்மையுடன் சிரத்தையுடன் இருப்போம். இறைவனின் ஆசி கிடைக்கும் வரை பொறுத்திருப்போம். நம்பினார் கெடுவதில்லை. நிச்சயம் நல்லதே நடக்கும்! - தேவராஜன். **************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக