ஞாயிறு, 16 டிசம்பர், 2012

நாக்கினால் நலம் பெறலாம்!/67/16.12.2012/

நாக்கினால் நலம் பெறலாம்!/67/16.12.2012/ மனித உடலில் எலும்பில்லாத உறுப்புகளில் ஒன்று நாக்கு. கேட்பதற்கு இரு செவிகளும் பார்ப்பதற்கு இரு கண்களும் படைத்த இறைவன் பேசுவதற்கு ஒரு நாக்கைத்தான் படைத்திருக்கிறான். அந்த நாக்கினால் பேசுவதற்கு முன், ஒருதடவைக்கு பலதடவைகள் யோசித்துவிட்டு பேசவேண்டும். நாக்கினால் உலகில் பல அழிவுகளும், சச்சரவுகளும் ஏற்பட்டுள்ளன. ‘யாகவாராயினும் நா காக்க’ என்றும் ‘இனிய உளவாக இன்னாது கூறல்’ என்று எச்சரிக்கை விடுகிறார் வள்ளுவர். உலகத்தில் ஜீவராசிகளுக்குள் மனிதனுக்கு மட்டுமே பேசும் சக்தியைஆண்டவன் கொடுத்திருக்கிறான். ஆகையால் பேசும் சொற்கள் இதமாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் கருத்துள்ளதாகவும்இருக்க வேண்டும். நாவானது, சிறிய உடல் உறுப்பாக இருந்தாலும் பெருமையானவைகளை பேசும். அதேசமயம் சிறுமையையும் பேசும். சிறிய நெருப்பு, எவ்வளவு பெரிய காட்டை எரித்து அழித்துவிடுகின்றது. இந்த நாக்கும் அந்த நெருப்புக்கு சமனானதே. ஆகவே நாக்கை பயன்படுத்துவதில் கவனம் மிகத் தேவை. நாவினாலே எல்லாருக்கும் பொதுவான இறைவனை துதிக்கிறோம், வணங்குகிறோம், பாடுகிறோம். அதேநேரம் அதே நாக்கினால் மனிதர்களை சபிக்கிறோம், கண்டபடி திட்டுகிறோம். துதித்தலும், சபித்தலும் ஒரே நாக்கினால் செய்யப்படுகிறது. ஒரே நாக்கினால் நல்லதையும், கெட்டதையும் பேசுவது தகுமோ? நாக்கில் சரஸ்வதி வாசம் செய்கிறாள் என்கிறது புராணங்கள். பலர் கலையில் எழுந்தவுடன் நாக்கை சுத்தம் செய்து கடவுளை வணங்குவதற்கும்,கனிவான பேச்சுகளை பேசுவதற்கும் அவர்கள் நாக்கை பயன்படுத்துவார்கள். முனிவர்கள்,சித்தர்கள், துறவிகள் ஏன், அதித ஆற்றல் கொண்ட அறிஞர்கள் கூட நாக்கை அதிகம் பயன்படுத்துவதில்லை. நம்மில்கூட சிலர் வாரத்தில் ஒருநாள் மவுன விரதம் இருக்கிறார்கள். வாரத்தில் ஒருநாளாவது நாக்குக்கு ஓய்வு தரவேண்டும். மவுன விரதம் என்பதுகூட நாவடக்கத்திற்கான முயற்சிதான். ‘நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே’ என்கிறார் சுந்தரர். ‘நாம் மறந்திருந்தாலும், தூங்கும் போதும் கூட இறைவனுடைய திருநாமத்தை நமது நாக்கு உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும்’ என்கிறார் ஞான சம்பந்தர். நாக்கினால் நாம் நல்லதையே பேசுவோம் மற்றவர்களை காயப்படுத்தாது பேசுவோம். அறிவோடு பேசுவோம் அளவோடு பேசுவோம். நேரம் வாய்க்கும் போதெல்லாம் நாக்கினால் இறைவனின் நாமத்தை இடைவிடாது கூறுவோம். நாவில் தழும்பு ஏறும் வரை நமசிவாய மந்திரத்தை ஓதுவோம். நாக்கும் நலம் பெறும். நம்வாழ்வில் நலன்களும், நன்மைகளும் வந்து சேரும். - தேவராஜன். ***********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக