ஞாயிறு, 16 டிசம்பர், 2012

செல்வம் சினிமா மாதிரி/ 60/ 28.10.2012

செல்வம் சினிமா மாதிரி/ 60/ 28.10.2012 நாம் சேர்த்து வைக்கும்செல்வம் நிலையானது அல்ல. அது வரும், இருக்கும், போகும். செல்வம் இருக்கும் போதே அதை நல்வழிகளில் செலவிட வேண்டும். ‘கூத்தாட்ட அவை குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளிந்த அற்று’ இது வள்ளுவர் கணிப்பு. கூத்தாடும் நாடக கொட்டகையில் உள்ள கூட்டம் போல் செல்வம் வரும், போகும், அழியும் அல்லது கை விட்டு போய் விடும் என்கிறார் வள்ளுவர். சினிமா தியேட்டருக்கு வரும் கூட்டம், படம் ஆரம்பிக்கும் முன்னால். கொஞ்சம் கொஞ்சமாய் வரும். படம் முடிந்தவுடன் மொத்தமாய் போய் விடும். அது போல், செல்வம் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாய் வரும். போகும் போது மொத்தமாய் போய் விடும். சினிமா தியேட்டருக்கு வரும் கூட்டத்திற்கு, வரும் போது ஒரு ஆவல் இருக்கும், படத்தை பார்க்கும் போது ஒரு சுவை இருக்கும், படம் முடிந்து போகும் போது, ஒரு சோர்வு இருக்கும். அது போல், செல்வம் வரும்போது ஒரு சுகம், அதை அனுபவிக்கும் போது ஒரு சுகம். அது விட்டு போகும் போது ஒரு சோர்வு இருக்கும். கூத்தாட்ட அவை எனில் அது அங்கு உள்ள நடிகர்கள், அந்த மேடை அலங்காரம், வேடம் என்று எல்லாவற்றையும் குறிக்கும். நாடக மேடையில் எல்லாமே பொய் தானே. கதா பாத்திரங்களும், வேடங்களும், மேடை அமைப்பும் எல்லாமே உண்மை போல் தெரியும், ஆனால் உண்மை அல்ல. அது போல் செல்வமும் உண்மை போல் தெரிந்தாலும், உண்மை அல்ல. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு குட்டி கதை : தாங்க முடியாத வெயிலில் ஒருவன் களைத்தபடி நடந்து கொண்டிருந்தான். சாலை ஓரத்தில் ஒரு மரம். அதன் நிழலில் ஒதுங்கி நின்றபோது அங்கே ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான். நண்பர்களே! வேலிக்கு அருகில் ஓர் கிணறு இருக்கிறது. தாகமாக இருந்தால் வந்து பருகவும் என்று எழுதி இருந்தது. ஓடிச் சென்று தண்ணீரைக் குடித்தபோது, இன்னொரு வாசகத்தைப் பார்த்தான். களைப்பாக இருந்தால் அதோ அருகில் இருக்கும் மரக்கட்டிலில் ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தபோது அங்கே ஒரு வாசகம்எழுதி இருந்தது. பசியாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் கூடையில் பழங்கள் இருக்கின்றன எடுத்து சாப்பிடுங்கள். சாப்பிட்டபோது அங்கு ஒருவர் வந்தார். ‘நீர் பயன்படுத்தாவிட்டால் நீர் அசுத்தமடைந்துவிடும். படுக்காவிட்டால் கட்டிலில் துõசி படிந்துவிடும். நிறைய காய்க்கும் பழங்களை யாராவது சாப்பிடாவிட்டால் காய்த்த மரத்திற்கு பெருமையில்லை’என்றார். தன் கிணற்றில் குளிக்கவிடாது, தன் கட்டிலில் படுக்க விடாது, தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது வாழும் மனிதனாக ஒருவன் இருந்தால் அவனைப் படைத்ததற்காக கடவுள் வருத்தப்படுவார். - தேவராஜன் *************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக